Thursday, April 30, 2026

இக் கரையே இச்சை

 இக் கரையே இச்சை


இக் கரையில் பச்சை குறைவாய்த் தோன்றும் 

   " ஈரப்பசை "அதுவோ இங்கு தான் அதிகம் 


"விக்கல்" வர இக்கரையில் உடன் மருத்துவம்

   விஷமானாலும் அங்கே செய்யணும் தவம் 

   

" அக்கறை " இக்கரையில் அதிகம் அதிகம் 

   அதுவே சில நேரம் ஆகும் "உபத்திரவம்" 


சர்க்கரை, உப்பு என இன்னும் பல இங்காம் 

   சப்பெனும் வெண்பனி மட்டுமே  அங்காம்


பக்கத்து வீட்டார் யார் அங்கே தெரியாதாம் 

   பத்து கிலோமீட்டர் இங்கே தெரிவாராம்


துக்கம், மகிழ்ச்சி என இரண்டுக்கும் ஆடுவார்

   துப்பாக்கியால் மழலை அப்பாவிகளைச் சுடார் 


சுக்கு காபி முதல் சூப்பர் ஸ்டார் வரை இங்கு 

   சோளப் பொறி முதல் சோலாப் பூரி வேறெங்கு?


மக்களாட்சியில் பெண் தலைமை (Presidency) இங்காம் முதலில் 

   மயக்கும் அமெரிக்காவில் இன்னுமது கனவில்.


__. குத்தனூர் சேஷுதாஸ் 30/4/2026

Wednesday, April 29, 2026

பயணம் தந்த பாடம்

 பயணம் தந்த பாடம்


வெளிநாடுகளில் பெரும் பணம் கொடுத்து மட்டுமே அனுபவிக்க முடியும் என்று நாம் நினைக்கும் “Luxury” வாழ்க்கை,

இங்கே… நம் வீட்டு வாசலிலேயே அமைதியாகக் காத்திருக்கிறது.


நாம் அன்றாடம் இயல்பாக அனுபவிக்கும் வசதிகள்—

உலகின் பல பகுதிகளில், ஆடம்பரமாக மதிக்கப்படுகின்றன.


அந்த எளிமையின் அழகை சற்றே நின்று உணர்ந்தால்,

இந்திய வாழ்க்கையின் அருமை நமக்கே புதிதாகத் தோன்றும்…


அந்த அழகான உண்மைகள்:


1. காலை 7 மணிக்குள் வீட்டு வாசலில் விழும் செய்தித்தாள்

இது ஒரு சேவை அல்ல… ஒவ்வொரு நாளும் நம்மை வரவேற்கும் ஒரு பழக்கம்.


2. ₹500க்குள் நூற்றுக்கணக்கான டிவி சேனல்கள், மலிவான OTT பொழுதுபோக்கு இங்கே செலவே இல்லை… அது வாழ்க்கையின் ஓர் இயல்பு.


3. மாதம் ₹300க்கு அதிவேக 5G

இது வெறும் இணையம் அல்ல…

தூரத்தை நெருக்கமாக்கும் உறவுகளின் பாலம்.


4. உலகத் தரத்தில் விளங்கும் நவீன விமான நிலையங்கள்

அவற்றின் ஒவ்வொரு மூலையும், வளர்ந்துவரும் இந்தியாவின் பெருமையைச் சொல்லுகிறது.


5. 10–20 நிமிடங்களில் வீட்டு வாசலில் அத்தியாவசிய பொருட்கள்

உணவு, மருந்து, காய்கறி…

இது டெலிவரி அல்ல…

நமக்காக காத்திருக்கும் ஒரு அன்பான அணைப்பு.


6. நீண்ட காத்திருப்பு இல்லாத மருத்துவ ஆலோசனை

பல நேரங்களில் அதே நாளில்…

அருகில் இருக்கும் பாதுகாப்பு உணர்வு.


7. வீட்டிற்கே வரும் மருத்துவ பரிசோதனைகள்

குறைந்த செலவில், அதிக அக்கறையுடன்…

நலம் என்பது இங்கே ஒரு செல்வம் அல்ல, ஒரு உரிமை.


8. வாசலிலேயே துவைக்கும், இஸ்திரி செய்யும் சேவைகள்

வெளிநாடுகளில் ஆடம்பரம்…

இங்கே, வாழ்க்கையின் ஓர் அங்கம்.


9. வீட்டு உதவியாளர், சமையல்காரர், டிரைவர்

அவர்கள் வேலைக்காரர்கள் அல்ல…

நம் வாழ்க்கையை எளிதாக்கும் மனிதர்கள்.


10. காலை விடியற்காலையில் வந்து சேரும் பால்

ஒரு சின்ன விஷயம்…

ஆனால் ஒரு நாள் முழுவதையும் இனிமையாக்கும் தொடக்கம்.


11. ஹோட்டல்களில் இலவச குடிநீர், மலிவான பாட்டில் தண்ணீர்

சிறிய விஷயங்களிலும், ஒரு பெரிய மனிதநேயம்.


12. ₹5 முதல் எந்தத் தொகையையும் உடனடியாக செலுத்தும் UPI

இது டெக்னாலஜி அல்ல…

நம்பிக்கை, எளிமை, வேகத்தின் சங்கமம்.


13. சிறிய விஷயங்களுக்கு வழக்குகள் குறைவு

உறவுகள் இன்னும் சட்டங்களை விட மேலானவை.


14. கடும் போட்டியைத் தாண்டி மனிதநேயம்

வாழ்க்கை இங்கே வெற்றிக்காக மட்டுமல்ல…

வாழ்வதற்காக.


இந்தியா முழுமையான நாடு அல்ல…

குறைபாடுகள் உள்ளன, அது உண்மை.


ஆனால்,

மலிவு. வசதி. இணைப்பு. மனிதநேயம்

இந்த நான்கும் சேர்ந்தால்,

ஒரு அற்புதமான அமைதி பிறக்கிறது.


இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல…

இது ஒரு உணர்வு.

இது ஒரு நிம்மதி.

இது ஒரு அன்பான தாயின் மடி.


வெளியே சென்று திரும்பும்

போதுதான் புரிகிறது

இங்கே பிறந்து

இங்கே வாழ்வது…

எவ்வளவு பெரிய பாக்கியம் என்று…


வாழ்க்கையை உண்மையாக நேசிக்க கற்றுத்தரும் நிலம்… இந்தியா.

Tuesday, April 28, 2026

தமிழ்த்தாத்தா நினைவேந்தல் - ஏப்28

ஏப்28 ~

தமிழ்த்தாத்தா நினைவேந்தல்

■◆■◆■◆■◆■◆■◆■◆■


அடுப்பெரிக்க,

போகித் தீயிலிட,

கரையான் அரிக்க,

ஈரத்தில் மக்கிப் போக

மட்டும் பயன்பட்ட

தமிழ் பேரிலக்கிய

ஓலைச் சுவடிகளைச்

சோர்வுறாது

நாடித் தேடி ஓடியோடி 

சேகரித்து,

அயராது

அவற்றை அச்சேற்றி

தமிழன்னைக்கு

அளப்பரிய சேவை செய்த

தமிழ்த் தாத்தா

உ.வே. சாமிநாத ஐயர்

இப்பூவுலகை நீத்த

தினமின்று!


அவர்தம் 

நினைவேந்துவோம்!

அவர்தம் 

சேவையைப் போற்ற

வணங்கி மகிழ்வோம்!!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி 

Monday, April 27, 2026

மானுடம் சுமக்க வரவாய்

 மானுடத்தை பிரிக்கும் அகந்தை  சுவராய் வீழாமல், உறவை இணைக்கும் தமிழ் பாலங்களாக எழுவோம்


வேர்கள் பின்னி நெஞ்சம் நிமிர்த்தி

நீர் மேல் வரைந்த கோலமே!


மூங்கிலும் கொடிகளும் கூடித் தழுவி

மனிதன் காற்றாய் கடந்த காலமே!


கல்லின் நெஞ்சில் காலால் மிதித்து

காலம் பதித்த கனவு கட்டிலே!


இரும்புக் கயிறுகள் இழுத்து பிடிக்க

பிரிவை பிணைத்த இதய தொட்டிலே!


நாலும் தெரிந்து ஞாலம் செழிக்க 

ஞானம் தந்த கேள்வியின் பதிலே!


சாவை தவிர்த்து மருத்துவம்  செய்ய 

சேவை புரிந்த  தீவுக்கான தீர்வே!


ஊரையும் ஊரையும் ஒன்றாய் இணைத்து

ஏரையும் தேரில் ஏற்றிய இதயமே!


நாகரிகம் நகர்ந்த நெடுந்தொடர் வழியே!

மலையும் மடுவும் மணந்த உறவே!


இன்றையும் நாளையையும் சுமக்கும் நேற்றே!

உலகத்தின் உயரத்தை உணர்த்திய சிகரமே!


சாலையின் நெரிசல் சன்னமாய் குறைய

சக்கரச் சுழற்சி நிற்காமல் சுழல


வாணிப வெள்ளம் வற்றாமல் பெருக 

கரைகள் இரண்டும் கரங்கள் கோர்க்க


மேகத்தை வழித்து இமைகள் தீட்ட

நட்சத்திரம் கொய்து நெஞ்சில் பூட்ட


சிறகின்றி வானம் சட்டென தொட

வருவாய் மானுடம் சுமக்க வரவாய்!

*புத்தனும் புறாக்களும்*

 ••••••••••••••••••••••••••••••••••••

*புத்தனும் புறாக்களும்* 

••••••••••••••••••••••••••••••••••••


போர் மேகங்கள் சூழ்ந்த நிலையில் 

உலக அமைதியோ

தடுமாறி தத்தளிக்க 


ஆசையை துறக்கச் சொல்லியும் 

அன்பை வளர்க்கச் சொல்லியும் 


உலகோருக்கு போதித்த 

புத்தனைச் சுற்றி

அமைதியின் சின்னமாம் வெண்புறாக்கள் 


படபடத்து சிறகடித்து சுற்றிச் சுற்றி பறந்து வந்து 

ஓலமிட்டு அலறுகின்றன அமைதி வேண்டி கதறுகின்றன


வல்லூறுகள் காதில் விழுந்திடுமா?

உலக அமைதியும் திரும்பிடுமா!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

பயணங்கள் முடிவதில்லை…(14)

 பாகம் 14

பயணங்கள் முடிவதில்லை…


*அமெரிக்கப் பாலைவன இரவின் மடியில் தொடங்கிய ஒரு மறக்க முடியாத பயணம்…*

Phoenix விமான நிலையத்தில் காலடி வைத்த நொடியிலேயே, இந்தப் பயணம் ஒரு அற்புதமான அனுபவமாக மாறப் போகிறது என்பதை உள்ளுணர்வு சொல்லியது. நேரத்தை வீணாக்காமல், முன்பே பதிவு செய்திருந்த rental car-ஐ எடுக்கச் சென்றோம்.

அது ஒரு சாதாரண parking lot அல்ல…

ஒரு பெரிய உலகம்!

சுமார் 300 கார்கள் அமைதியாக வரிசையில் நின்று கொண்டிருந்த அந்த இடம், *இடப் பற்றாக்குறை* என்ற வார்த்தையே தெரியாத அமெரிக்காவின் பிரம்மாண்டத்தை உணர்த்தியது. எங்களுக்கு கிடைத்தது வெறும் 3000 மைல்கள் மட்டுமே ஓடிய, பளபளப்பான புதிய Santa Fe. அது பொறுமையுடன் எங்களுக்காகக் காத்திருந்த ஒரு உண்மையான பயணத் தோழன்.

Phoenix நகரின் விளக்குகள் பின்னால் மெதுவாக மறையத் தொடங்கின. I-17 வடக்கு நோக்கிச் செல்லும் அந்த அகலமான நெடுஞ்சாலை,

சுற்றிலும் அடர்ந்த இருள்.

நேராக நீண்டு செல்லும் சாலை.

வழியில் வாகனங்கள் மிகவும் குறைவு. *( இல்லை என்றே கூறலாம்)*

*ஒரு கட்டத்தில் மொபைல் சிக்னல் கூட முழுமையாக மறைந்துவிட்டது.*

ஆனால் அந்த அமைதி எங்களுக்கு எந்தக் குறைபாடாகவும் தோன்றவில்லை.

மாறாக, *அந்த தூய அமைதியே இந்தப் பயணத்தின் மிகப் பெரிய வரமாக இருந்தது.*


I-17 வழியாக முன்னேறியபோது, சாலை மெதுவாக ஏறத் தொடங்கியது. Black Canyon City-ஐத் தாண்டியதும், நிலப்பரப்பு உயர்ந்து கொண்டே சென்றது. காரின் ஹெட்லைட்களின் ஒளி மட்டுமே இருளில் வழிகாட்டியாக இருந்தது. 65–70 மைல் வேகத்தில், முழு விழிப்புணர்வுடனும் கட்டுப்பாட்டுடனும் பயணித்தோம்.

சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு, Flagstaff அருகே வந்தபோது…

அரிசோனாவின் மற்றொரு முகம் எங்களுக்காகக் காத்திருந்தது.

மரங்கள் நிறைந்த பசுமை.

குளிர்ந்த, உறைக்கும் காற்று.

சில இடங்களில் வெள்ளைப் பனித் தடங்கள் காணப்பட்டன.

*இது அதே Arizona தானா?* என்று ஒரு ஆச்சரியக் கேள்வி எழுந்தது.

அப்போது தான் Texas to Houston பயணத்தின் நினைவு மனதில் எழுந்தது. அங்கு ஒவ்வொரு 100-120 கிலோமீட்டர் இடைவெளியிலும் rest room வசதிகள் அழகாக இருந்தன. ஆனால் இங்கு *Flagstaff-இன் உயரமான, குளிரான பகுதியில் அப்படிப்பட்ட எளிதான வசதிகள் கண்ணில் படவில்லை.* அந்த வித்தியாசம் மனதில் ஒரு சிறிய ஒப்பீட்டை ஏற்படுத்தியது *அதே அமெரிக்கா தான், ஆனால் ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான சவால்களுடன் இருக்கிறது என்பதை உணர்த்தியது.*

பாலைவனத்தின் நடுவே ஒரு குளிர்ந்த மலைநாடு!

காரை விட்டு இறங்க முயன்றபோது, இரத்தத்தை உறையவைக்கும் குளிர் உடலைத் தாக்கியது. உயர்ந்த வெள்ளைப் பனி மலைகள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தன. அந்தக் குளிரின் தீவிரம் காரணமாக வெளியே நீண்ட நேரம் நிற்க முடியவில்லை.

Flagstaff-ஐத் தாண்டி, US-89 வழியாக Page நோக்கி திரும்பினோம். இரவு

சுற்றிலும் சிவப்பு பாறைகள் இருளில் அவை நிழல்களாகவே தெரிந்தாலும், அவற்றின் பிரம்மாண்டமும் அழகும் கற்பனையில் முழுமையாக உருவெடுத்தது.

இரவு 1 மணிக்கு மேல் Page நகரத்தை அடைந்தோம்.

Lake Powell அருகே சென்றபோது, *இருளுக்குள் கூட அந்த பிரம்மாண்டமான நீர்நிலையின் இருப்பை உணர முடிந்தது.*

சிறிய நகர விளக்குகள் எங்களுக்கு ஒரு அமைதியான, இதமான வரவேற்பு கொடுத்தன.

5 மணி நேரத்திற்கும் மேலான இரவுப் பயணம்…

ஆனால் *சோர்வைவிட மனநிறைவும், உள்ளார்ந்த மகிழ்ச்சியும் பல மடங்கு அதிகம்.*

Airbnb எங்களை அன்புடன் வரவேற்றது.

மறுநாள் காலை…

*இயற்கையின் அதிசயங்களுடன் நேருக்கு நேர் சந்திப்பு!*

காலை வெளிச்சத்தில் அந்தப் பயணம் இன்னும் பிரம்மாண்டமாகவும், வண்ணமயமாகவும் மாறியது. உலகப் புகழ்பெற்ற Horseshoe Bend எங்களை அழகாக எதிர்கொண்டது.

மேலிருந்து கீழே பார்த்த அந்தக் காட்சி…

*ஒரு உயிருள்ள இயற்கை ஓவியம்!*

குதிரை நகம் போல அழகாக வளைந்து ஓடும் Colorado River.

சுமார் 1000 அடி ஆழம்.

கோடான கோடி ஆண்டுகளாக இயற்கை வடிவமைத்த அற்புதமான கலைப்பொக்கிஷம்.

அங்கே நின்ற அந்த நொடியில், நேரம் நின்றுவிட்டது போல உணர்ந்தோம்.

*இந்தப் பயணம் வெறுமனே ஒரு இடத்தைப் பார்ப்பதற்கானது அல்ல.*

அமைதியை உணர்வதற்கு…

இயற்கையின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்வதற்கு…

மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதைத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்வதற்கு…

*இரவுப் பயணம் தனித்துவமான அழகைக் கொடுத்தது.*

*ஆனால் பகல் பயணம் அதன் முழு நிறங்களையும், உயிரையும் வெளிப்படுத்தியது.*

சில நேரங்களில், நாம் செல்லும் இடம் மட்டுமல்ல…

அங்கு செல்லும் பாதையே நம்முடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டது.

*Horseshoe Bend ஒரு சாதாரண சுற்றுலா இடம் அல்ல.*

*அது காலம், இயற்கை, அமைதி இந்த மூன்றின் புனிதமான சங்கமம்.*

ஒரு முறை பார்த்தால் போதும்.

அது வெறும் நினைவில் மட்டும் தங்குவதில்லை…

எப்போதும் நம்முடன் வாழும்.

ஒவ்வொரு மலையும், ஒவ்வொரு பாறையும் தன்னுடைய கதையைச் சொன்னது.

சூரியன் அவற்றின் மீது விழும்போது, அந்த *சிவப்பு நிறம் தீ போலப் பளபளத்து,* மனதைப் பறிகொடுக்கச் செய்தது.

இங்கிருந்து US-89 வழியாக 8–10 கி.மீ. சுமார் 10–15 நிமிட டிரைவ் தொலைவில் உள்ளது Glen Canyon Dam.

இது Colorado River மீது கட்டப்பட்ட மிகப் பெரிய அணை.

இதன் மூலமாக உருவானது தான் பிரபலமான Lake Powell.

சுமார் 710 அடி உயரம் (216 மீட்டர்).

மேலிருந்து பார்க்கும் காட்சி மனதை அதிர வைக்கிறது.

ஒரு பக்கம் அழகான நீல நிறத்தில் பரந்து கிடக்கும் Lake Powell.

மறுபக்கம் ஆழமான canyon-க்குள் வேகமாகப் பாயும் Colorado River.

*ஒரே இடத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள்!*

சிறிய நடைபயணம், முழு அணையும் அற்புதமாகத் தெரிகிறது. *(இன்று வரை நான் நம் கல்லணை ஐ பார்த்ததில்லை 🤩)*

US-89 பாலத்தின் மேலிருந்து அணையை முழுமையாக ரசிக்க முடிகிறது. புகைப்படங்கள் எடுப்பதற்கு ஒரு சிறந்த இடம்.

Visitor Center-ல் (சில நேரங்களில் திறந்திருக்கும்) அணையின் வரலாறு, கட்டுமான சுவாரஸ்யங்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கிறது)

அங்குள்ள அருங்காட்சியகத்தில் நாங்கள் நின்ற ஒரு சிறிய மூலையில், ஒரு சாதாரண விளக்கப் பலகைக்கு அருகில் இருந்த interactive exhibit எங்களை மிகவும் உலுக்கியது.

*Lake Powell மற்றும் Colorado River-இன் நீர் பயன்பாட்டை எளிமையான, விளையாட்டு போன்ற மாடல் மூலம் விளக்கியிருந்தார்கள்.* நகரங்கள், விவசாயம், தொழில்கள் அனைத்தும் இந்த நீரின் மீது எவ்வளவு சார்ந்திருக்கின்றன என்பதை அழகாகக் காட்டியது.

“Low”, “Average”, “High” நீர்வரத்து ஆண்டுகளை slider மூலம் அனுபவபூர்வமாக உணர முடிந்தது. குழந்தைகள் கூட ஆர்வமாக விளையாடும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததால் அதன் பின்னால் இருந்த செய்தி அவர்களிடமும்

*ஒவ்வொரு துளி நீரும் மதிப்புமிக்கது.அதைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு* என்ற செய்தியை எடுத்துச்செல்கிறது.

பயணத்திற்கான முக்கிய குறிப்புகள்:

•  வெப்பம் மிக அதிகம். எனவே காலை அல்லது மாலை நேரம் சிறந்தது.

•  காற்று சில சமயங்களில் மிகவும் வேகமாக வீசுகிறது. கவனமாக நிற்க வேண்டும்.

•  பாதுகாப்பு வேலிகள் சில இடங்களில் குறைவாகவே உள்ளன. குழந்தைகளுடன் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

•  இரவுப் பயணத்தில் Flagstaff போன்ற உயரமான, குளிரான பகுதிகளில் rest room வசதிகள் Texas to Houston பயணத்தைப் போல ஒவ்வொரு 100-120 கி.மீ. இடைவெளியில் எளிதாகக் கிடைக்காது. எனவே முன்கூட்டியே திட்டமிட்டு, தேவையான இடங்களில் நிறுத்தி ஓய்வு எடுக்கவும். குளிர் அதிகமாக இருக்கும் என்பதால், சூடான உடைகள் அவசியம்.

இந்தப் பயணம் எங்களுக்கு கொடுத்தது வெறும் நினைவுகள் அல்ல…

*இயற்கையின் பெருமை, அமைதியின் அழகு, மனிதனின் சிறுமை, நீரின் முக்கியத்துவம் இவை அனைத்தையும் உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்த ஒரு அற்புதமான அனுபவம்.*

ஒரு முறை சென்றால் போதும்…

அந்தப் பாலைவன இரவும், Horseshoe Bend-இன் வளைவும், Glen Canyon Dam-இன் பிரம்மாண்டமும், நம்  உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

Saturday, April 25, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (18) - *அரங்கேற்றக் காதை* *தண்ணுமை, யாழிசை, குழலிசை விவரணங்கள்*

 •••••••••••••••••••••••••••••••


*{18} சிலம்பொடு ஒரு பயணம்*


*அரங்கேற்றக் காதை*


*தண்ணுமை, யாழிசை, குழலிசை விவரணங்கள்* 


•••••••••••••••••••••••••••••••


மாதவியின் ஆசான் பற்றி 

மகிழ்வுடன் தொடர்கிறார் 

இளவரசு பட்டம் துறந்து 

குணவாயிற் கோட்டம் ஏகிய 

இளங்கோ அடிகள். 


*ஆடல் பாடல் இசையே தமிழே பண்ணே பாணி தூக்கே முடமே....*


*....யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை...*


*... அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும்* 


அதாவது ஆட்டம் பாட்டு இன்னிசை தமிழ் பெண் தாளம் சுரவரிசை குறை நிறை பன்னடைவு திசை சொல் வழக்கு எனும் அனைத்திலும் தெளிந்த ஞானம் இருந்தவன் 


நடனத்திற்கான தாளக்கட்டுடன் யாழும் குழலும் ஒத்து ஒருங்கிணைந்து இசைக்க கற்றவன் 


மத்தள வாசிப்பை செயற்பட இயக்கி பாட்டும் இசையும் நடனத்தை மீறும் இசையாக இல்லாமலும் தாழ்ந்து போகாமலும் பார்த்துக் கொள்ளும் இசைஞானமுள்ள *மத்தள வித்தகன்.*


மேலும் தொடர்கிறார்,


*சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன்..*

" இசைக்குழலோன்

(இசை நூல்கள் வகுத்துள்ள முறையில் இசை கொள்ளும் எழுத்துகள் மேல் வல்லொற்று வருமாயின் அதனை மெல்லொற்று போல இசைக்கும் சித்திரப் புணர்ப்பை உணர்ந்தவன்)


*இன்புற இயக்கி இசைபட வைத்து.... ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக வழுஇன்று இசைக்கும் குழலோன் தானும்*


(வேய்ங்குழல் இசைக்கையில் தாளம் தவறாது இசைக்கும் வித்தை காரன். யாழிசைக்கும் மத்தள இசைக்கும் ஏற்ப தன் குரல் வாசிப்பை கூட்டாமலும் குறைக்காமலும் இசை பாடலில் கற்பனைகளை கோடிட்டு காட்டும் திறமை வாய்ந்தவன். சுட்டுவிரல் முதலாக துளைகளை விட்டுப் பிடிக்கும் ஆரோகணமும் - சிறு விரல் முதலாக துளை விட்டுப் பிடிக்கும் அவரோகணமும், ஏழிசையும், ஏழு சுரமும் கைவரப் பெற்று சொல் சுத்தமாக வாசிக்கும் குழல் இசையில் *வேய்ங்குழல் வேந்தன்*)


இதற்கு மேலும் கூறுவது என்ன பார்ப்போம்: 


*ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி... தாரபாகமும்... குரலின் பாகமும்.. கைக்கிளை ஒழித்த பாகமும்... செம்பாலை ஆயது.. அரும்பாலை எனக் குரல் குரலாக தற்கிழமை தெரிந்தபின்...*


(குழல் பற்றி கூறுகையில் ஏழிசை ஏழு சுரம் என விவரித்தவர், இப்பகுதியில் யாழின் இசை நரம்புகளை மீட்டி இசைக்கும் முறையையும் - பல்வேறு வகை பண்கள் நுட்பம் பற்றியும் விளக்குகிறார்.

ஏழு ஏழு என்று இரண்டு ஏழாக அமைந்த இசை பாடல்களில் செம்பாலை படுமழை செவ்வழி பாலை அரும்பாலை கோடி பாலை விளரிப்பாலை மேற்பாலை எனும் ஏழு பாலைகளை மட்டும் இணை நரம்புகளுடன் இசைக்க வல்லான்.)


*யாழ்மேற் பாலை இடமுறை மெலியக் குழல்மேற் கோடி வலமுறை மெலிய வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன், எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது*


(யாழில் அரும்பாலை தன் இட முறை மெலியவும், குழலில் கோடிப்பாலை தன் வலமுறை மெலியவும், இப்படியாக வலிவும் மெலிவும் சமமாக அமையவும், நரம்புகளின் அடைவுகள் சிறிதும் கெடாமலும் பண் நீர்மை எதுவும் குறைவுபடாமல் எல்லாம் சீராக சிறப்பாக அமைந்திருக்கும் படி யாழ் நரம்புகளை பிணைத்து இணைத்து இன்னிசை மீட்ட வல்ல *யாழ் இசை வல்லான்*


இப்படியெல்லாம் சொல்லிவிட்டு ஆட அரங்கம் பற்றி துவக்குகிறார் நம் சமண அடிகள். 


தொடர்வோம் நம் மழலை கவி மோகன் ஐயா அவர்களுடன்: 


ஐயா,

அரங்கேற்றக்காதையில்  காவியத்தின் இரண்டாம் கதாநாயகி மாதவியின், பிறவி இரகசியமும்,  முறையாக, கற்ற ஆட்டத்திறன், கற்பித்த ஆசானின் சிறப்புகள் எனப்பல அருமையான விவரணங்களின் சுவையை இரசித்தபடி பயணித்து வந்தோம். 

ஆசான் சகலகலா வல்லவராக உள்ள ஒருவரா இல்லை ஆசானோடு மற்ற பல கலை விற்பன்னர்களும் ஒருங்கிணைந்த அரங்கேற்ற நிகழ்ச்சியா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. முனைவர் பட்டம் வாங்க முனைவோர் செய்ய வேண்டிய ஆராய்ச்சி அது. நாங்கள் சக பயணிகள் இருவரும்,அடிகளின் தமிழ் அடிகளை இரசித்து எஙகள் கண்ணோட்டத்தில் மனதுக்கு" நச்" என்று

பட்டதைப் பட்டபடி, பட்டவர்த்தனமாகப் பதிவிடுகிறோம். 


இந்த பயணத்தில் நாம்                   "தண்ணுமை  அரும் தொழில் முதல்வன்", "இசைக்குழலோன்", "யாழ் இசை வல்லான்" , "யாழ்ப்புலமையோன்" போன்ற 

கலை வல்லுனர்களின் திறமைகள் , சிறப்புகள் பற்றி இப்பயணத்தில் காண நேருகிறது. 


ஐயா, தாங்கள் மிக மிக விரிவாக இச்சிறப்புகளை , தங்கள் பார்வையில் கண்டபடி பதிவிட்டீர். பல விடயங்கள்  நடன, இசைக் கலைகளுக்கு உரிய கலைச்சொற்கள். அவை பற்றித்தாங்கள விரிவாகவே பதிவிட்டீர்கள் . "திரும்பத் திரும்ப கூறுதல்"  என்ற பிழை தவிர்த்து என் பார்வையில் பட்டவைகளை, மனதைத் தொட்டவைகளைப் பற்றி முடிந்த அளவுக்கு, கருத்திடுகிறேன்.


ஓர் ஆசானா, பலர் சேர்ந்த கூட்டிசையா என்ற போது, திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர்திலகம் 

"பாட்டும் நானே, பாவமும் நானே" பாடலின்போது , அவரே பாடகராகவும், மற்ற பக்க வாத்தியங்களை வாசிப்பவராகவும் காட்டும் காட்சி 

நினைவுக்கு வந்தது.


எப்படி இருந்தால் என்ன? 


நாமறிய வேண்டியது, ஒவ்வொரு  வாத்தியக் கருவிகளின்/, நாட்டிய இசைக் கலைகளின் சிறப்புகளை முடிந்த அளவுக்கு எளிதாகப் புரிந்து, அறிந்து மகிழ்வது/ இரசிப்பது.


" தண்ணுமை" என்பது தோலால் ஆன மத்தளம் போன்ற ஆனால் மத்தளத்துக்கு முன்னோடியான இசைக்கருவி. முழவு, முழவம்  என்ற பெயர்களும்உண்டு.

" முடமே"-முடம் என்பது நாட்டுப்புறக் கொட்டு பாணியில் தட்டும் தாள முறை அல்லது கையின் விரல்களை மடக்கி, நகத்தால் தட்டி இசையை எழுப்பும் நுட்பமான தாளக் கருவி

"தேசிகம்" என்பது தேசத்தில், அதாவது அப்போதைய வழக்கத்தில் இருந்த, மக்களுக்குப் பிடித்தமான நடன மற்றும் இசை மரபைக் குறிக்கும்.

"கூர்உகிர் கரணம்"  -கூர்மையான நகங்களைக் (உகிர் - நகம்) கொண்டு, யாழ் போன்ற இசைக் கருவிகளை நுணுக்கமாக இசைக்கும் முறை.

சித்திரக் கரணம்-ஆடல் அல்லது இசை அமைப்பில் சிதைவு (தவறு) இல்லாமல், மிக நேர்த்தியாகவும் அழகாகவும் (சித்திரம் போல) இயக்கும் நுட்பமான முறை.

கூடை நிலம், வார நிலம் என்பன இசையின் நடை வகைகள் . தண்ணுமைக் கலைஞன் ஒரு நடையின் போது மிகுத்தும், மற்றொரு நடையின்போது குறைத்தும் வாசிக்க வேண்டும்-

"ஆக்கமும் அடக்கமும் மீத்திறம் மேம்படாமல்" - அழகு, ஆடல், பாடல் என்ற ஆக்கமும் அடக்கம், சீர்மையும் சேர்ந்த மாதவியின் இசையுடன் கூடிய நாட்டிய நிகழ்வில் முன்பாட்டு, பின்பாட்டு, யாழிசை இவற்றை ஒட்டி தாள வாத்தியத்தை இயக்குவது தண்ணுமைக் கலைஞனாம்.


அடுத்துக் குழலோன்- புல்லாங்குழல்  வாசிப்பில் விற்பன்னர்.

இவர் "சித்திர வஞ்சனையின் புல்லிய அறிந்த" -வராம். அதாவது, , சித்திர வஞ்சனை எனப்படும் வல்லினம், மெல்லினம், பண்அமைதி போன்ற நுட்பங்களை  துல்லியமாக உணர்ந்து முழவு, , யாழ் , வாய்ப்பாட்டு இவற்றுக்குத் தக்கபடி  இணைந்து வேய்ங்குழல் இசைப்பவராம்.

"ஈர நிலத்தில் எழுத்து எழுத்தாக , துல்லியமாக எழுதுவது போல, " வழு இன்றி இசைக்கும் குழலோன்" இவர்.

அடுத்து, அட !

"யாழ்ப் புலமையோன்". 

யாழ் நரம்புகளால் ஆனது. ஐவகை நன்னிலங்களுக்கும் தனிப்பட்ட யாழ்களும் , வாசிக்கும் பண்களும் உண்டாம். பூம்புகார் நகரம் மருதம், நெய்தல் நிலங்களில் பரந்து விரிந்த நகராதலால் இந்நிலங்களுக்கேற்ற பண்களை வாய்ப்பாட்டுடன் யாழும், குழலும் இசைந்து  முழவன் தாளகதியில் மாதவி எனும் அழகு மகள் அழகுப் பெட்டகமாக  ஆடும் நாட்டியத்தைக் காண ஆவலை அதிகரிக்க வைக்கிறாரே இந்த சமணத்துறவி!


பலவித பண்களை யாழில் மீட்ட வல்லான் இந்த யாழ்ப்பாணன்!யாழ் வகைகள், யாழ்ப்பண்கள், பண் இலக்கணங்கள் என  பல நுட்பங்கள் பற்றி, விரிவாக கூறுகிறார் அடிகள். 

ஐயா  ,நீரும் மிக அருமையாக இவற்றின் நுட்பங்களை விவரித்தீர். நானோ " யாழினிது எனக்கூறும் மழலை! 


வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்

பொலியக் கோத்த புலமையோன்" என்பதில் இருந்து,  இவன் அதிக, குறைந்த சமநிலை ஒலிகளை ஒருங்கணைக்கும் திறமையாளன் என அறிகிறோம்; வணங்குகிறோம்

கலைஞர்கள் யாவரும் அறிமுகம் ஆகிவிட்டார்கள்.


ஆடும்அரங்கம் எவ்வாறு அமைக்கப்பட்டது, ?  


ஆட வல்லாள் ஆடப் போகும் அரங்கு கோணலாகவா இருக்கும்?! 

அடிகள் அரங்கின் அடியளவுகள் முதற்கொண்டு , திரைகள், ஒளி அமைப்பு என அசத்தப் போகிறார். 

நம் பயணம் தொடரும்......


*குறிப்பு:*

 இப்பகுதியின் பதவுரை பார்க்கையில் இரண்டு குறிப்புகளை தரவேண்டிய அவசியம் உள்ளது. 


1. இளங்கோ அடிகளின் வரிகளுக்கு விளக்கம் சொல்ல வரும் பல்வேறு நூலாசிரியர்கள் நீண்ட நெடிய விளக்கங்களை கொடுத்துள்ளனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் இவை ஏழிசை. ஆ. ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ (உயிர் எழுத்துக்களின் நெடில்கள்) இவை ஏழு சுரம். இது போன்ற எண்ணற்ற குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பட்டியலிடுவது பயணத்தின் வேகத்தை தடைப்படுத்தும். 


2. மிக முக்கியமாக சிலப்பதிகாரத்திற்கு பல உரை எழுதிய ஆசிரியர்களில் ஒரு சிலர் மாதவி க்கு ஒரே நடன ஆசான் அத்தனை திறமைகளையும் பெற்றிருந்தான் என பொருள் படும்படி எழுதியுள்ளனர். வேறு சில நூலாசிரியர்கள் ஆடல் கலையின் ஆசான், இசையில் வல்லவன், நூலறிப்புலவன், மத்தள வித்தகன், வேய்ங்குழல் வேந்தன், யாழிசை வல்லவன் ஆகியோர் தனித் தனி நபர்கள் எனக் கூறுகின்றனர். இதன் மீது எனக்கும் மழலைக்கவி  மோகன் ஐயா அவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடந்தது. எங்கள் பார்வையில் இருப்பதை பதிவு செய்வோம்.  முடிவு எடுப்பதை வாசகர்களிடம் விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தோம். விருப்பமுள்ளோர் இக்காப்பியக் கடலில் மூழ்கி முத்து எடுத்து எங்களுக்கு உதவுங்களேன்.

Thursday, April 23, 2026

உலகப் புத்தகத் தினத்தில்...

 "ஒருவர் தனது வாழ்நாளில் பத்தாயிரம் மைல்கள் நடக்க வேண்டும்.

பத்தாயிரம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அதுவே ஒருவரது முழுமையான வாழ்க்கை" என்கிறது சீனப் பழமொழி.


ஒரு நல்ல வாசகராக, கதை சொல்லியாக, எழுத்தாளராக, ஓவியராக என பன்முக செயல்பாடுகளை இந்த வாசிப்பு எனும் மந்திரம் மாயாஜாலம் செய்கிறது.


உலகப் புத்தகத் தினத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான செய்திகள்...


ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி 'உலக புத்தக தினம்' மற்றும் 'காப்புரிமை தினம்' கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, காப்புரிமை போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.


" உலகின் முதல் அச்சுப்புத்தகமாக கருதப்படுவது ' டயமண்ட் சூத்ரா எனப்படும் பெளத்த நூலாகும். சீனாவில் கையால் செய்யப்பட்ட அச்சாக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதினாறு அடி நீளமுள்ள இந்தச் சுருள் வடிவ நூல் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.


இந்த நூல் 868 ஆம் ஆண்டில் கெளதம புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவரான சுபூதி அவர்களோடு கெளதம புத்தர் உரையாடிய ஞானமொழிகளின் தொகுப்பே இந்நூல்.


அடுத்து தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் "பிரதாப முதலியார் சரித்திரம்." இது 1876 ல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டதாகும்.


அடுத்து வ.வே.சு. ஐயரின் " குளத்தங்கரை அரசமரம்" கதைதான் தமிழின் முதல் சிறுகதை.


உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள விவிலியம், பைபிள்க்கு அடுத்து மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


அச்சில் வெளியான முதல் தமிழ்ப் புத்தகம் 'திருமறைச் சிற்றேடு' என்னும் மதநூலாகும். 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இந்நூல் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.


மாணவர்களின் வாசிப்பை வலுப்படுத்த  தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் "இளம் வாசகர் வட்டம்" என்னும் அமைப்பு.

இவ் வாசகர் வட்டம் நூலகத்தை மேம்படுத்துதல், படைப்பாற்றலை வளர்த்தல், நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்குதல் என நடைபெறுகிறது. 

பாராட்டப்பட வேண்டிய விசயம்.


ஆனால் இதன் செயல்பாடுகள் ஆசிரியர்களைப் பொறுத்து சில பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அது போல மாதம் ஒரு முறை இலக்கிய கூட்டங்கள் பள்ளிகளில் நடைபெறுகிறது.


இதுவும் சில பள்ளிகளில் மட்டுமே. 

பரவலாக்கப் படவேண்டும் என்பதே வாசிப்பை நேசிக்கக் கூடிய அனைவரின்  அக்கறையும், ஆதங்கமும். 


வாசிப்பை நேசித்து, அறிவை விசாலமாக்கி, சமூகத்தைக்  கற்று, சமத்துவத்தை நோக்கி பயணிப்பதே ஏப்ரல் - 23 உலகப் புத்தகத் தினத்தில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி.


உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள்..


 - ஷங்கர்

Wednesday, April 22, 2026

அன்பு தழைக்கட்டும் கருணை பெருகட்டும்

 ••••••••••••••••••••••••••••••••

அன்பு தழைக்கட்டும் கருணை பெருகட்டும் 

••••••••••••••••••••••••••••••••


இன்றிருப்பார் 

நாளை இல்லை என்றிருக்கும் 

உலகம் இது 


நன்று பல 

நாமும் செய்து 

நானிலத்தே 

வாழ்ந்து வந்தால் 


குன்று போல் 

உயர்ந்து நிற்போம்

என்றும் உலகம் 

வணங்கி நிற்கும் 


கன்று ஈந்த 

பசு போல 

பலரும் நம்மை வணங்கிடுவர் 


இன்றே நாமும் 

முடிவெடுப்போம் 

நன்றே செய்து வாழ்ந்திடுவோம். 


உங்கள் தோழன் ஸ்ரீவி

Tuesday, April 21, 2026

உலக மொழிகள் பற்றிய ஒரு ஆய்வு

 உலக மொழிகள் பற்றிய ஒரு ஆய்வு 


மனித இனப் பரிணாம வளர்ச்சியின் சிறப்புகளுள் ஒன்று மொழி.


உலகில் பல மொழிகள் உள்ளன. இவற்றுள் சில மொழிகள் மட்டுமே பேச்சு வடிவம், எழுத்து வடிவம் ஆகிய இரண்டையும் பெற்றுள்ளன.


உலக மொழிகளுள் பலவற்றுள் இலக்கண, இலக்கியவளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே. 


உலகெங்கும் பேசப்படும் மொழிகள் -19,000


இந்தியாவில் மட்டும் பேசப்படும்

மொழிகள் -6000


ஆனால் உலகிலேயே

எழுத்தும்,

இலக்கணமும்,

இலக்கியமும், வயது மூப்பும், தொன்மையும், இளமையும் மற்றும்

நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட செம்மொழிகள் ஆறு மொழிகள்தான்.


அவை


1.தமிழ்: 

  Thamizh

மிகத் தொன்மையான,

இலக்கிய நயம்கொண்ட,

எழுத்துவடிவம் கொண்ட இன்றுவரை வாழும் ஒரே செம்மொழி.

உலகின் மூத்த மொழியும் இதுவே.


2.சமஸ்கிருதம்:

Sanskrit 

இந்திய துணைக்கண்டத்தின், தமிழுக்கு அடுத்த

தொன்மையான இலக்கிய மொழி.தற்போது

பேச்சுவழக்கில் இல்லை.


3.சீனம் (Chinese):

பழமையான கலாச்சாரம் மற்றும் எழுத்துவடிவம் கொண்டது.


 4.கிரேக்கம் (Greek):

ஐரோப்பிய இலக்கியம் மற்றும் தத்துவத்தின் அடிப்படை மொழி.


 5.இலத்தீன் (Latin): 

ரோமானிய பேரரசின் மொழி (தற்போது வழக்கத்தில் குறைவு).


 6.ஹீப்ரு ( Hebrew/எபிரேயம்): இஸ்ரேலின் தொன்மையான, புத்துயிர் பெற்ற மொழி. 


இவை ஆறும் உலக மொழி அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட செம்மொழிகள் (Classical languages) ஆகும்.


இவை தொடர்ச்சியான மரபு மற்றும் உயர்தர இலக்கியத் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை. இவற்றுள் சமஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகள் பெரும்பாலும் இலக்கிய மற்றும் சமய வழக்குகளில் மட்டுமே உள்ளன, மற்றவை பேச்சு வழக்கிலும் உள்ளன. 


தமிழ் மொழி 2500 ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் இருக்கும் செம்மொழியாகக் கருதப்படுகிறது.


தமிழ், கிரேக்கம், ஹீப்ரு மற்றும் சீனம் ஆகியவை மில்லியன் கணக்கான மக்களால் இன்றும் பேசப்படும் உயிர்ப்புள்ள செம்மொழிகளாக உள்ளன.


இவற்றிலும் தொடர்ச்சியோடு கூடிய இளமையும்,செழுமையும்,மேன்மை கொண்ட பேச்சி மொழிகள் தமிழும் சீனமும் மட்டுமே.


இவ் இரண்டிலும்

தமிழ் இலக்கியங்கள் இனிமையானவை. ஓசை இனிமை, சொல் இனிமை, பொருள் இனிமை கொண்டவை. 


பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீங்கி விட்டன. அவை பேச்சு வழக்கில் கூட இல்லை.


ஆனால், தமிழ்மொழியின் பண்பாடு, சிறப்பு அழியாமல் இன்றளவும் காக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் தமிழ் மொழியின் கட்டமைப்பு ஆகும்.


பொதுவாக செம்மொழி தகுதி பெறுவதற்கு 11 கூறுகள் உள்ளது.அவையாவன ...


1.தொன்மை

2.தனித்தன்மை

3.பொதுமைப்பண்பு

4.நடுவு நிலைமை

5.தாய்மைப் பண்பு

6.கலை பண்பாட்டுத் தன்மை

7.தனித்து இயங்கும் தன்மை

8.இலக்கண, இலக்கிய வளம்

9.கலை இலக்கியத்தன்மை

10.உயா்சிந்தனை

11.மொழிக் கோட்பாடு


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பண்புகளும் தமிழுக்கு உண்டு.


தமிழை புலவா்களும், மன்னா்களும் வளா்த்தாலும் அவா்கள் மறைந்த போதிலும் தமிழ் மொழி இன்னும் காப்பற்றப்பட்டு வருகிறது.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் தமிழில் உள்ளது.


இதன் வாயிலாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பதை உணர முடிகிறது.


தமிழ் செம்மொழி என உணா்ந்திய தமிழறிஞா்களுள் குறிப்பிடத்தக்கவா்கள். பாிதிமாற்கலைஞா், பாவாணா், காா்டுவெல் போன்ற பலா் ஆவா்.


இவ்வகையில் பல அறிஞா்கள் தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனா்.


இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக செம்மொழி அந்தஸ்து பெற்ற முதல் மொழி தமிழ் ஆகும். (2004-ல் அறிவிக்கப்பட்டது). 


 *அக்ரி சா.இராஜா முகமது

பாவேந்தர் பாரதிதாசன் நினைவுதினம்

 பாவேந்தர் பாரதிதாசன் நினைவுதினம் 

ஏப்ரல் 21.(1891 - 1964)


தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்,

‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். 


பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள்.


தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். 


பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.


பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார்.


அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர்  பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.


1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது


2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.


தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

பயணங்கள் முடிவதில்லை…- பயணக் கட்டுரை(13)

 பாகம் 13

பயணங்கள் முடிவதில்லை…


டெக்சாஸில் இந்தப் பயணம் நிறைவுறும் என்று நினைத்திருந்தேன், ஆனால் கலிபோர்னியாவில் இருந்த உறவுகளின் அன்பு அந்த முடிவை மாற்றியது. சுற்றுலா நோக்கம் இல்லை என்று தொடங்கிய இந்த பயணம், இன்னொரு அமெரிக்கப் பயணமாக விரிந்தது. 


டெக்சாஸ் நெடுஞ்சாலைகள்

அரிசோனா பாலைவனம்

லாஸ் வேகாஸ் இரவுக் காட்சி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் கடலும்

Big Sur இயற்கை வளம்

சான் பிரான்சிஸ்கோ நகர அழகு


4 மாநிலங்கள்

2 வாரங்கள்


என்ற திட்டத்துடன் Dallas விமான நிலையத்தை அடைந்தோம். அது ஒரு சாதாரண கட்டமைப்பு அல்ல என்பதே முதல் உணர்வு. பயணியை மையமாகக் கொண்ட அதன் வட்ட வடிவமைப்பு, terminals அனைத்தையும் அரை வட்டமாக அமைத்து, பயணிகள் நேரடியாக gate அருகிலேயே இறங்கும் வசதியை வழங்குகிறது. 

Skylink என்ற தானியங்கி ரயில், சில நிமிடங்களில் terminal மாற்றத்தை எளிதாக்கி, பெரிய விமான நிலையமாயினும் ஒரு சுலபமான அனுபவத்தை உருவாக்குகிறது. 

விமானம் ஓடும் போது நமக்குக் கீழே வாகனங்கள் செல்லுகிறது. பாலத்தின் மேல் விமானம்  நகர்வதைப் பார்த்த அனுபவம் வியப்பூட்டியது, ( பலமுறை கனொளிகளாக பார்த்ததுண்டு) அது runway அல்ல 

Taxiway bridge என்பது விமானங்கள் runway-க்கு செல்லும் பாதை சாலைகளுக்கு மேல் பாலமாக அமைக்கப்பட்ட ஒரு தீர்வு. இந்த வகை அமைப்பு இந்தியாவில் அரிது, 

Indira Gandhi International Airport மற்றும் 

Kempegowda International Airport போன்ற இடங்களில் tunnels மற்றும் நிலை வேறுபாட்டு அமைப்புகள் இருந்தாலும், அமெரிக்காவில் உள்ளது போல வெளிப்படையான plane-over-road அமைப்பு மிகக் குறைவு.


பின்னர் Denver விமான நிலையத்தை அடைந்தோம். அது ஒரு airport மட்டும் அல்ல, அனுபவமும் மர்மமும் கலந்த ஒரு உலகம். உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட விமான நிலையங்களில் ஒன்றான இது, விரிவான runway அமைப்புகளாலும், பனிமலை போன்ற கூரை வடிவத்தாலும் தனித்துவம் பெறுகிறது; உள்ளே சென்றவுடன் ஒரு பெரிய மாநாட்டு மையத்தில் இருப்பது போன்ற உணர்வு உருவாகிறது. விமான நிலையம் முழுவதும் காணப்படும் murals, போர், அழிவு, அமைதி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன; சிலர் அவை உலக முடிவை குறிப்பதாக கருதுகின்றனர். வடிவமைத்த கலைஞர் மனித சமூகம் அழிவிலிருந்து அமைதிக்குச் செல்லும் பயணத்தைச் சொல்வதாகும் என்கிறார். 


இது கட்டப்பட்ட காலத்திலிருந்தே ஒரு சாதாரண infrastructure திட்டமல்ல என்ற எண்ணம் பலருக்கு தோன்றியது, அதனால் பல கதைகள் உலாவருகின்றன.


New World Airport Commission

Dedication stone-ல் காணப்படும் இந்த பெயர், சிலருக்கு New World Order மற்றும் ரகசிய அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகிறது; ஆனால் அது ஒரு கட்டுமான அமைப்பின் பெயர் மட்டுமே என அதிகாரப்பூர்வ விளக்கம் கூறுகிறது.


கீழே உள்ள சுரங்கங்கள் உண்மையில் என்ன?

அங்கு பெரிய underground tunnel network உள்ளது; அது baggage மற்றும் logistics பயன்பாட்டிற்காக இருந்தாலும், சிலர் அதை bunker, underground city அல்லது military base என கூறுகிறார்கள்.


Leo Tanguma உருவாக்கிய படங்களில் gas mask அணிந்த வீரர்கள், குழந்தைகள் மரணம், தீப்பற்றிய நகரங்கள் போன்ற காட்சிகள் உள்ளதால், சிலர் அதை உலக அழிவை முன்கூட்டியே காட்டுவது என நினைக்கிறார்கள்; ஆனால் கலைஞர் அதை “போர்→அழிவு →அமைதி” எனும் மனிதகுலத்தின் மாற்றப் பயணமாக விளக்குகிறார்.


Blucifer என்னும் நீல குதிரை சிலையின் பின்னணி என்ன?

32 அடி உயரத்தில் சிவப்பு கண்களுடன் இருக்கும் இந்த சிலையை உருவாக்கிய Luis Jiménez, அதை உருவாக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தது அதன் மீது மர்ம உணர்வை அதிகரித்துள்ளது; இதனால் சிலர் அதை cursed அல்லது evil symbol என கருதுகின்றனர்.


Runway ஐ மேலிருந்து பார்க்கும்போது அதன் வடிவம் சிலருக்கு swastika போல தோன்றுவதால் சிலர் அதனை Nazi குறியீடு அல்லது மறைமுக சிந்தனை என்று கூறுகிறார்கள். ஆனால் அது காற்றின் திசை மற்றும் விமான இயக்கத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதே என்று மறுக்கப்படுகிறது. 


இந்த அனைத்துக்கும் பொதுவான உண்மை என்னவெனில், உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை; கற்பனை, ஒற்றுமை, மற்றும் மனித மனத்தின் அறியாததை நோக்கிய ஈர்ப்பே இந்த கதைகளின் அடிப்படை. Denver விமான நிலையம் இதற்கான விளக்கங்களை பலமுறை வழங்கியுள்ளது. இறுதியில், அது ஒரு விமான நிலையம் மட்டுமல்ல; பொறியியல் திறமை, 

கலை வெளிப்பாடு, 

மனித கற்பனை 

ஆகிய மூன்றும் ஒன்றாக கலந்து உருவான ஒரு  வித்தியாசமான மர்ம அனுபவம்.

அரிசோனாவில் தொடருவோம்…

Monday, April 20, 2026

*தன் கையே தனக்குதவி*

 ••••••••••••••••••••••••••••••

*தன் கையே தனக்குதவி*

••••••••••••••••••••••••••••••


வயது முதிர்ந்து நடையும் தளர்ந்து 

வாழ்க்கைப் பயண களைப்பும் மிகுந்து 

ஊன்றுகோலே மூன்றாம் காலாய் 

ஆன நிலையிலும் மனம் தளராது 


உச்சி வெயில் மண்டையைப் பிளக்க 

உடம்பில் வியர்வை ஆறாய்ப் பெருக 

ஆளை அசத்தும் வெயிலிலே 

சாலை நடுவே போவது யார்? 


யாரையும் நம்பி வாழ்ந்திடாமல் 

ஊரார் உதவியை வேண்டிடாமல் 

கார்கள் ஓடும் வீதியிலே 

பழங்கள் விற்று வாழ்ந்திடுவார்! 


விதியின் மேலே பழியைப் போட்டு 

விட்டு விலகிய உறவினைத் தூற்றி 

இரந்துண்டு வாழ்ந்திடாமல் 

கடுமையாக உழைத்திடுவார்! 


உள்ள உறுதி இருந்திட்டால் 

உடலின் தளர்ச்சி 

பொருட்டல்ல 

கள்ள கபடம்  

செய்து வாழ்தல் 

வாழ்வியல் கூறும் நெறி அல்ல. 


உடல்நிலை தளர்ந்தும் 

உள்ளம் தளரா 

உழைப்பாளியை 

நாமும் வணங்கிப் போற்றிடுவோம் 

நாளும் நாளும் புகழ்ந்திடுவோம்! 


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Saturday, April 18, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {17} *அரங்கேற்றக் காதை* *நடன ஆசானின் பெருமைகள்*

 •••••••••••••••••••••••••••••••


*{17} சிலம்பொடு ஒரு பயணம்*


*அரங்கேற்றக் காதை*


*நடன ஆசானின் பெருமைகள்*


•••••••••••••••••••••••••••••••


ஏற்கனவே நாம் கூறியது போல் சிலம்பின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான மாதவி பற்றி 


மிகச் சில வரிகளில் அறிமுகம் செய்த 

சமண அடிகளான நூலாசிரியர் 

கலையின் வித்தகன் நடன ஆசான் பற்றி 

அடுக்கடுக்காய் புகழுரை கூறி 

ஆசானின் திறமைகளை விளக்குகிறார் 

 

இசையினில் வல்லவன், 

நூலறி புலவன், மத்தள வித்தகன், வேங்குழல் வேந்தன், யாழிசை வல்லவன் என ஆசான் பற்றி 

82 வரிகளை 

ஒதுக்கி புகழ்ந்து எழுதி இருக்கிறார். 


மாதவி இல்லையேல் சிலம்பு இல்லை. 

அவளைப் பற்றிய அறிமுகம் பத்தே வரிகளில். 

அவள் ஆசான் பற்றிய வர்ணனையோ 82 வரிகளில்.


ஆசானின் அறிமுகத்தை சென்ற பதிவில் பார்த்தோம். அவரைப் பற்றி  அடிகள் மேலும் கூறுவதை இப்போது பார்ப்போம்:


*யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குறல் தன்னுமை ஆடலுடன் இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து..*


*... தேசிகத் திருவின் ஓசை எல்லாம்...*


*... வசை அறு  கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையொன் தானும்*


(யாழிசையும், குழலிசையும், தாள லயத்தோடு கூடிய வாய்ப் பாட்டும், இனிய - மெல்லிய ஒலி எழுப்பும் மத்தள இசையையும், ஆடும் ஆடலுக்கும் - பாடும் பாடலுக்கும் ஏற்ப ஒருங்கிணைந்து வாசிக்கும் திறன் உடையவன்)


என்பதாக *இசையில் வல்லவன்* எனப் புகழ்வதோடு, 


*தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி வேத்து இயல் பொது இயல் என்று ,இரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைபிடித்து...*


(தமிழ் மொழியின் சிறப்பெல்லாம் அறிந்தவனாகி, வேத்து இயல் பொது இயல் என்ற கூத்தின் இருவகைகளையும் விளக்கும் நாட்டியக்கலை நூல் கூறும் நுணுக்கங்களை எல்லாம் நன்றாக பின்பற்றி)


*வக்கரைத் திட்டத்தை உணர்ந்து... வசை மொழி அறிந்து..*


(சுர வரிசைகளை நன்குணர்ந்து ஆலாபனை -வக்கரி - செய்கையில், அதில் பிறழ்வு வராமல் அதாவது அபசுரம் வராமல்)


*நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும்*


(நாவன்மை நிறைந்த *நூலறி புலவன்* எனக் கூறுகிறார்) 


இசைஞானத்தோடு நூல் அறிவும் மிக்கவன் அந்த ஆசான் எனக் கூறுவதோடு இன்னும் தொடர்கிறார் அடிகள். நாமும் அவரை அடுத்த பதிவில் தொடர்வோம். 


இப்போது மழலைக் கவியை சந்திப்போம்:


ஐயா, 

முன்பே கூறினேன், ஒரு சிறந்த நடனமணியின் நாட்டியச்சிறப்பு அவரது குருவின் பாணி அல்லது பத்ததியால்  அறியப்படுகிறது என்று. மாதவி அத்தகைய ஆசானைப் பெற்ற பேறு பெற்றவள். 


இந்த ஆசான் அக்காலத்தில் பெரும் புகழுடன் திகழ்ந்து இருக்கவேண்டும். அதனால் பெயரைக்குறிப்பிடாமல், *ஆடல் ஆசான்* என்றாலே ஊரும் உலகமும் அறியும் என்று அடிகள் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை போலும்.


இக்காலத்தில் இசை அமைப்பாளர், ஏற்பட்டாளர் மற்றும்இசை இயக்குனர், நடனம் அதற்கு ஏற்ற இசை,  வாய்ப்பாட்டு, பக்க வாத்தியங்கள், எனப்பல அங்கங்களை ஒருங்கிணைக்க குறைந்தது மூவர் தேவைப்படுகிறார்கள். 


இந்த இசை ஆசானோ தான் ஒருவராக,மூன்று வித அங்கங்களையும் சரிவர ,சரி சமமாக அமைப்பதில் வல்லுனர்.


இசை வாய்ப்பாட்டில்,

*"கட்டை" ( pitch)* சுருதிகள், பாடுபவரின்" மிடறும்" (தொண்டையைப்) பொருத்தது.  அவற்றை ஒட்டி, கூட "யாழும், குழலும் இன்னிசை சேர்க்க, "தாழ்குரல் " எழுப்பும் "தண்ணுமை " யோடு 

இந்த இசையைக் கூத்திற்கு ஏற்றபடி பொருத்துவதில் வல்லவர்.


*"தேசிகத் திருவின் ஓசை எல்லாம் ஆசு இன்று உணர்ந்த அறிவினன்."* அஃதாவது, பல்வேறு இசை மரபுகளை, பண்களைப்பொருள்அறிந்து பிழை இன்றிக் கற்பிக்கும் ஆசான்.


எவ்வகையிலும்" *அசையா மரபின் இசையோன்"* ஆக விளங்கிய இசைவாணர்.


இவர் இக்காலத்தில் தாளத்தோடு நட்டுவாங்கம் செய்யும் நட்டுவனார்  போன்றவர் ஆவார்.நட்டுவாங்கமே தாள ஜதியோடு நடனக்கலைஞரை ஆசான் வழி நடத்துவது அன்றோ!


சரி யார் பாட்டுக்கு   நட்டுவாங்கம்?


*"நன்னூல் புலவன்"* பாட்டுக்கு.


இவர் வேத்தியல்- அரசவை முன் ஆடும் கூத்து, பொதுவியல்- பொதுமக்கள் முன் ஆடும் கூத்து இவற்றை நன்கு அறிந்தவர். 


வக்காணம் அதாவது ஆலாபனை செய்யக்கூடிய பண்ணின் முறைகளை-"இசையோன் ( இசை ஆசான்) வக்கிரித்திட்டங்களை"

கருத்தில் கொண்டு , தமிழர் யாவரும் அறியும்படி வசைச்சொற்களைத் தவிர்த்து,

பாட்டை இயற்றுபவர்.

*"வக்கிரித்திட்டம்"*. -

இது ஆளத்தி (இசைக்கலை) எனப்படும் பாடும் முறையை பதினாறு வகையாகப் பிரித்து, விரிவாகப் பாடுவதற்கான திட்டமிடலைக் குறிக்கிறது.


*"நாத்தொலைவு"*- பாட்டில் குற்றம் இல்லாத சொற்களை,

அமைக்கும் சொற்சிற்பி.


அடுத்து *தண்ணுமை முதல்வன்*, *குழலோன்*


நடன ஆசானின் இன்னும் சில பெருமைகளை சந்திக்க உள்ளோம் , அரசர் வந்து நடனம் அரங்கேறும் முன்!


நீண்ட நெடும்பயணம்!

ஆனால் அடிகளின் தீந்தமிழ் பாக்களை, சுவைத்தபடி செல்கையில், இந்த பயணம் பல காத தூரம் செல்ல இருப்பினும், காவியக் காதைகளின் சிறப்புகள், நம்மை உந்துவிக்கின்றன.


*பயணம் தொடரும்*

*பள்ளி நாட்களில் மிகவும் பிடித்தது எது!*

 ••••••••••••••••••••••••••••••

*பள்ளி நாட்களில் மிகவும் பிடித்தது எது!*

••••••••••••••••••••••••••••••


பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்தது உணவு இடைவேளை நேரமே! 


அவரவர் உணவை பிறரோடு பகிர்ந்து உண்ணும் நேரம் அது! 


கீதாவின் தயிர் சாதம் 

ராமுவின் பரோட்டா- குருமா 

சீனுவின் சாம்பார் சாதம் 

ஆல்பர்ட்டின் இட்லி- காரக்குழம்பு 

முஸ்தபாவின் பூரிக் கிழங்கு 


என எல்லாவற்றிலும் பங்கு கிடைக்கும் 

உணவு கொண்டு வராத 

மீனாவின் வயிறும் நிச்சயம் நிரம்பும். 


*பகுத்துண்ணும் இனிய பண்பு அங்கே தான் தொடக்கம்*


உணவுப் பாத்திரங்களை கழுவி வெயிலில் காய வைத்து விட்டு தொடங்கிடும் ஆட்டம் பாட்டம்.


எப்போதும் கலைச்செல்விக்கு குழாயில் பாத்திரங்கள் கழுவிய பின்  ஓடிவரும் நீரை செடிப்பக்கம் கால்வாய் போல இழுத்து விடுவது மிகவும் பிடிக்கும்.


அதனைச் செய்யாமல் அவள் இருந்ததே இல்லை. 


*வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்* என்னும் வள்ளலாரின் வழித்தோன்றல் அவள். 

*இயற்கையை நேசித்தல் என்பதை கற்பித்த நேரம் அது*


பிற பிள்ளைகளுக்கு வேறு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்:


பாண்டி ஒரு பக்கம் பதவிசாய் நடக்கும்.

நொண்டி ஆடி மகிழ

ஒரு கூட்டம் இருக்கும். 

மரத்தடி நிழலில் கோலி விளையாடுவர் சிலர்.

மரத்தடியில் அமர்ந்து கதை பேசுவர் சிலர். 

ஒளிந்து பிடித்து விளையாடுவோர் உண்டு..

ஓடி ஆடி தாவிக் குதித்து கூவிடுவோர்  உண்டு.


*உடல்நலம் பேண் - உற்சாகமாய் இரு* என சொல்லிக்கொடுத்த நேரம் அது.


பள்ளிவாயில் வெளியே 

பிளாட்பாரக் கடை விரித்த 

பாட்டியம்மா கடைதனிலே 

எலந்த பழம், 

சீனி மிட்டாய், 

தேன் மிட்டாய், 

கமர்கட்டு 

வாங்கி தின்போர் உண்டு. 


ஐஸ் அண்ணாச்சி கடையிலே 

குடை ஐஸ் வாங்கி ரசித்து சாப்பிடுவோர் உண்டு. 

ஐஸ்ப்ருட்டு வாங்கி கையில் இருந்து அது ஒழுகி முழங்கை வரையில் வழிந்து வர வேகமாய் அதனை சுவைக்கும் பலரும் அங்கு உண்டு.


*வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியை ஒளித்து வைத்திருக்கும்.  அதனைக் கண்டுபிடித்து மகிழ்வோடு வாழ்* எனும் மந்திரத்தை சொல்லிக் கொடுத்த நேரம் அது.


மதிய வகுப்பு துவங்குவதற்கு ஸ்கூல் பெல் அடிக்கும் வரையில், கொண்டாட்டம்தான்..

குதூகலந்தான்.. குதியாட்டம் தான்... ஆனந்தமோ ஆனந்தம் தான்..


பள்ளிக்கூட வகுப்புகள் சொல்லிக் கொடுத்தது படிப்பறிவு.


உணவு இடைவேளை நேரம் சொல்லிக் கொடுத்தது பட்டறிவு.


உணவு இடைவேளை நேரமே *அனுபவம் எனும் ஆசான்* நம்முடன் பயணிக்க துவங்கும் பட்டறை ஆகும். 


ஆதலால், 



*பள்ளிக் காலங்களில் எனக்குப் பிடித்தது உணவு இடைவேளை நேரமே*


அதை இப்போது நினைத்தாலும், நீங்குது என் மன பாரமே


*உங்கள் தோழன் ஸ்ரீவி*


------------------------------------

எங்கள் பள்ளி 


பள்ளிக் கல்வி அரசுப் பள்ளியில் வேண்டும் 

   பாட்டன் மொழியாம் தீந்தமிழே  ஒலிக்கும் 


துள்ளி விளையாட  பூஞ்சோலை பள்ளி 

   துரத்தித் துரத்திப் பிடிப்பாள் "வள்ளி" 


கிள்ளி அழ வைப்பாள் "தமிழ்ச் செல்வி" 

   கிச்சுகிச்சு மூட்டி நகைப்பாள் "அல்லி" 


உள்ளங்கையில் வைப்பாள் மிட்டாய் "மேரி"

   உரித்த வேர்க்கடலை தருவான் நல் "பாரி"


அள்ளிப் பிசைந்த பெரும் சோறுருண்டை

   அடைக்க அம்மா வர முடியாக் கோட்டை 


புள்ளிமான் என்று அறியப்படும் "ரேஷம்"

   புளியம்பழம் தந்து பல்பம் பண்டமாற்றம்


கள்ளமறியாத "பவுனு" அவள் புன்னகை 

   கால்தூசே இரும்பு லாக்கரின் (locker) பொன்னகை


குள்ளக் "குப்பன்" வந்தால் வகுப்பே குதிக்கும் 

   குதூகலம் தொற்றிக் கொளும் எல்லார்க்கும்.


" இவையும், இன்னும் பலவாம் எங்கள் பள்ளி " 


__. குத்தனூர் சேஷுதாஸ் 17/4/2026


================================


Wednesday, April 15, 2026

டெக்சாஸின் கெளபாய் ஆத்மாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வரலாற்று ரத்தினம் - பயணக் கட்டுரை ( 13)

 பாகம் 13

பயணங்கள் முடிவதில்லை…

டெக்சாஸின் கெளபாய் ஆத்மாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வரலாற்று ரத்தினம்


டல்லாஸிலிருந்து (Dallas) வடக்கு நோக்கி சுமார் 30–40 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ள Fort Worth Stockyards என்னை நேரடியாக 19ஆம் நூற்றாண்டின் பழைய மேற்கத்திய (Wild West) காலத்திற்கு கொண்டு சென்றது. இந்த வரலாற்று மாவட்டத்தில், காலத்தின் தடயங்கள் உயிர்ப்புடன் சுவாசிப்பதை உணர முடிந்தது. பழைய மரக்கட்டிடங்கள், தோல் பூட்ஸ் மற்றும் கெளபாய் தொப்பிகளின் வாசனை, தெருக்களில் ஒலிக்கும் நாட்டுப்புற இசை, இவை அனைத்தும் டெக்சாஸின் உண்மையான ஆத்மாவை நேரில் உணரச் செய்தன.


1800களின் பிற்பகுதியில், Fort Worth நகரம், புகழ்பெற்ற சிஷோம் பாதை வழியாக மாடுகளை வடக்கு நோக்கி ஓட்டிச் செல்லும் பெரும் பயணங்களின் முக்கிய மையமாக விளங்கியது. லட்சக்கணக்கான நீண்ட கொம்புகளைக் கொண்ட டெக்சாஸ் மாடுகள் இங்கு வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருந்ததால், “மாட்டு நகரம்” (Cowtown) என்ற பெயரைப் பெற்றது. இரயில் பாதை வந்தபின், இந்த இடம் அமெரிக்காவின் மிகப்பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்தது.


இன்றும் இந்தப் பகுதி தேசிய வரலாற்றுப் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. Stockyards Museum மற்றும் பழைய Livestock Exchange Building போன்ற இடங்கள், அந்தக் காலத்து மாட்டுச் சந்தையின் கதைகளை உயிரோடு விவரிக்கின்றன. இது ஒரு உயிருள்ள அருங்காட்சியகம் மட்டுமல்ல; இன்னும் துடிப்புடன் இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியம்.


இந்த இடத்தின் இதயம் “Fort Worth Herd” எனப்படும் தினசரி மாட்டு ஊர்வலமே. ஒவ்வொரு நாளும் காலை 11:30 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் (வானிலை அனுமதிக்கும் பட்சத்தில்; சில பண்டிகை நாட்களைத் தவிர), நீண்ட கொம்புகளைக் கொண்ட பிரம்மாண்டமான மாடுகள் East Exchange Avenue வழியாக ஒரே வரிசையில் நகர்கின்றன. பாரம்பரிய உடையில் கெளபாய்கள் குதிரையில் அமர்ந்து அவற்றை வழிநடத்தும் காட்சி, சில நிமிடங்களில் முடிந்தாலும் மனதில் இன்றும்  நிலைத்திருக்கிறது. குதிரைகளின் குளம்படி ஒலி, கெளபாய்களின் உற்சாகக் குரல் அனைத்தும் காலத்தைத் தாண்டி பயணம் செய்யும் உணர்வை தருகின்றன. உலகில் தினமும் இருமுறை நடைபெறும் ஒரே மாட்டு ஊர்வலம் இதுவே என்பது இதன் தனிச்சிறப்பு.


மாடுகளின் பிரம்மாண்டமான கொம்புகள் கண்ணைக் கவர்ந்தாலும், என் மனதில் வேறு ஒரு உணர்வு எழுந்தது.


நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் எப்போதும் 20–30 மாடுகள் இருந்தன. அவற்றை கொட்டகையில் கட்டி, வைக்கோலை கவனையில் வைத்து உணவளிப்போம். அந்தச் சிறிய கொம்புகளே ஒன்றோடொன்று சிக்கி, மாடுகள் தவிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம் மனதில் இருந்தபடியே, இங்கே இவ்வளவு நீண்ட  நீளமான கொம்புகளுடன் நிற்கும் மாடுகளைப் பார்த்தபோது, அவற்றின் நிலையை நினைத்து ஒரு பரிதாப உணர்வு மனதில் தோன்றியது.


அதே நேரத்தில், இவ்வகை மாடுகளை Space Center Houston அருகிலுள்ள பரந்த நிலப்பரப்புகளிலும் வளர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவற்றிற்கு விரிந்த வெளி கிடைப்பதால், இயல்பான இயக்கத்துடன் சுதந்திரமாக வாழும் சூழல் கிடைக்கிறது.


ஸ்டாக்யார்ட்ஸில் நடைபயணம் செய்யும்போது, இருபுறமும் அசல் கெளபாய் தொப்பிகள், தோல் பூட்ஸ், பழைய சலூன் பார் அமைப்புகள் அனைத்தும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. Cowtown Coliseum-இல் நடைபெறும் Stockyards Championship Rodeoவில் காளை ஏறுதல், குதிரைச் சவாரி, கயிறு வீசி மாடு பிடித்தல் போன்ற உண்மையான கெளபாய் திறமைகள் நேரில் காணக்கிடைக்கின்றன. இது வெறும் காட்சி அல்ல; டெக்சாஸின் உழைப்பும் துணிச்சலும் கலந்த வாழ்க்கை முறையின் உயிரோட்டமான வெளிப்பாடு.


Texas Cowboy Hall of Fame மற்றும் Stockyards Museum ஆகிய இடங்களில் புகழ்பெற்ற கெளபாய்களின் கதைகளையும், மாட்டுப் பயணங்களின் வரலாறையும் ஆழமாக அறிய முடிகிறது.


பழமையான மார்க்கெட் பகுதியில், உண்மையான மேற்கத்திய பாணி பொருட்களான:

கெளபாய் பூட்ஸ், தொப்பிகள், தோல் பெல்ட்கள், ஜாக்கெட்டுகள், குதிரை உபகரணங்கள் வாங்கலாம்.


Billy Bob’s Texas போன்ற இடங்களில் நாட்டுப்புற இசை ஒலிக்கிறது. இரவு நேரத்தில் பழைய கட்டிடங்களில் ஒலிக்கும் நேரடி இசையும், வரிசை நடனமும் (Line Dancing) டெக்சாஸின் இரவு வாழ்க்கையின் சாராம்சத்தை உணரச் செய்கின்றன.


புகை வாட்டிய இறைச்சி, சுவையான ஸ்டேக், தெற்கு மண்டல உணவுகள் ஆகியவை இங்கு சிறப்பாகக் கிடைக்கின்றன. Cattlemen’s Steak House, Joe T. Garcia’s போன்ற உணவகங்கள் பழைய மேற்கத்திய அனுபவத்துடன் சேர்த்து உணவை வழங்குகின்றன.


ஒரு நாள் முழுவதும் இங்கு செலவழித்தால், வரலாறு, பொழுதுபோக்கு, ஷாப்பிங், உணவு என எல்லாம் ஒரே இடத்தில் சங்கமித்து மறக்க முடியாத அனுபவத்தைத் தருகிறது.


இது ஒரு “அருங்காட்சியகம்” போன்ற அமைதியான இடம் அல்ல. இங்கு வரலாறு இன்னும் உயிருடன் இருக்கிறது. உண்மையான கெளபாய் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுபவமாக்கும் இடம் இது.


பயண முன்னெடுப்பு குறிப்புகள்:

* காலையில் சீக்கிரம் சென்று மாட்டு ஊர்வலத்தைப் பார்ப்ப்து நன்று. கூட்டம் அதிகமாகும் முன் நல்ல இடம் கிடைக்கும்.

* ⁠நிறைய நடக்க வேண்டியிருப்பதால், வசதியான காலணிகள் அவசியம்.

* மாலை நேரம் மிகவும் உற்சாகமாக இருக்கும்; ரோடியோ அல்லது நேரடி இசையைத் தவறவிடக்கூடாது.

* வானிலை காரணமாக மாட்டு ஊர்வலம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், முன்பே தகவல் சரிபார்த்துக்கொள்ளுதல் நன்று.

வரலாறு இங்கு வெறும் பக்கங்களில் அல்ல, தெருக்களில் நடக்கிறது.

Tuesday, April 14, 2026

*மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை!!!*

 *மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை!!!*


*ஆசிரியர்:*

நாம் ஏன் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தில் இணைய வேண்டும்? அவர்கள் என்ன செய்கிறார்கள்?

*மாணவன்:*

ஹ்ம்ம்… தமிழை வளர்க்கத்தான்…

*ஆசிரியர்:*

(சிரித்தபடி, சிறிது கிண்டலுடன்)

ஹ்ம்ம்… “செம்மொழி”ன்னு சொல்கிறோம்… அதை நாம் வளர்க்கப் போகிறோமா?

*மாணவன்:*

ஹ்ம்ம்… ல்ல ல்ல… தமில சாகாம காப்பாத்தரத்துக்கு…

*ஆசிரியர்:*

(சிரிப்பை அடக்கிக்கொண்டு)

ஐயோ! நீ பேசாமல் இருந்தாலே போதும்… தமிழுக்கு ஒன்றும் ஆகாது!

*மாணவன்:*

அப்போ எதுக்குத்தான் எல்லாரும் சேரணுன்னு நீயே சொல்லு வாத்தியாரே!

*ஆசிரியர்:*

(அமைதியான குரலில்)

அப்படிக் கேள்… ஒரு விளக்கு அணையக்கூடாதென்று… அதை ஒரு குடத்துக்குள் வைத்தால்…

அதன் வெளிச்சம் யாருக்காவது பயன் தருமா?

*மாணவன்:*

(உடனே)

தராது!

*ஆசிரியர்:*

அதே விளக்கை கண்ணாடியால் மூடினால்?

*மாணவன்:*

அட ஆமாம்! இப்ப வெளிச்சம் நல்லா தெரியும்!

*ஆசிரியர்:*

அதில் ஒரு பிரதிபலிப்பானையும் வைத்தால்?

*மாணவன்:*

பிரதிபலிப்பானா? அதென்ன?

*ஆசிரியர்:*

(சிரித்தபடி)

அதான்… *Reflector!*

*மாணவன்:*

(மிகுந்த உற்சாகத்தில்)

ஐயா! அருமை! இப்ப அந்த வெளிச்சம் பலருக்கும் பயன் படும்!

*அருமை! அற்புதம்! உன்னதம்!*

*ஆசிரியர்:*

பார்த்தாயா… *இப்போது நீயே எவ்வளவு அழகான தமிழில் பேசுகிறாய்!*

*இதைத்தான் மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் செய்கிறது!*

*மாணவன்:*

இன்னும் கொஞ்சம் புரியும்படி சொல்லுங்கள் ஐயா…

*ஆசிரியர்:*

அவர்கள் யாரையும் புதிதாக உருவாக்குவதில்லை… ஆனால்,

திறமை இருந்தும் முடங்கி இருப்பவர்களை… வாய்ப்பு இல்லாமல் மறைந்து இருப்பவர்களை…கண்டுபிடித்து…

*பயிற்சி* என்ற *பிரதிபலிப்பானால்…*

அவர்களின் *ஒளியை…*

*உலகமே உணருமாறு செய்கிறார்கள்!* 

*மாணவன்:*

ஆகா ஆகா! இந்த வாய்ப்பு இவ்வளவு நாள் தெரியாம போயிடுச்சே! 😱

நான் இவ்வளவு நாள் எங்க இருந்தேனோ!

*ஆசிரியர்:*

*அறிவுக்கு வழி தெரியும் தருணம் தாமதமாக வந்தாலும் அது வீணாகாது…*

*மாணவன்:*

(உற்சாகமாக)

ஐயா! இப்போ நான் என்ன செய்யணும்? *எப்படி சேரணும்?*

*ஆசிரியர்:*

தெளிவாக, இப்போது உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது…

ஒரு *1200 ரூபாய் Google Pay* செய்து… அதன் திரைப்பிடிப்பை எடுத்து…

*உன் பெயரையும்…* *கதவிலக்கத்தையும் சேர்த்து…*

*அவர்களது நிதிச்செயலாளருக்கு அனுப்பு…*

மீதியெல்லாம்… அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்!

*மாணவன்:*

ஐயா! நிச்சயமாக நான் சேர்றேன்!

நானும் அந்த *ஒளியில் ஒரு சிறு தீபமாவேன்!*

*ஆசிரியர்:*

*ஒளி பகிர்ந்தால் தான் பெருகும்…*

*வாருங்கள், அனைவரும் தமிழ்ச்சங்கத்தில் சேரலாம்.*

புத்தாண்டே வருக ! வருக !!

 புத்தாண்டே வருக ! வருக !!


சித்திரை வரட்டும், தமிழ்ப் புத்தாண்டு மலரட்டும் 

   சிந்தனையின் நேர்மறைச் சிறகுகள் விரியட்டும்


பத்தரை மாற்றுப் பொன் பழையபடி இறங்கட்டும்

   பாரதி நம் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஏறட்டும் 


புத்தகம் வாசித்தல் புதுப் பொலிவு பெறட்டும் 

   போர் அது முடியட்டும், புது வாழ்வு சிறக்கட்டும் 


வித்துக்களாய் நிலத்தில் விழுவன முளைக்கட்டும்

   விளைநிலம் செழிக்க, *விராலதில் திளைக்கட்டும்


இத் தரை தகிக்க வைக்கும் வெப்ப அலை ஓயட்டும்

   இளமையைச் சீரழிக்கும் போதையது தீயட்டும் 


பத்து ரூபாய் உணவால் பாழ் பசியும் போகட்டும்

   பயிற்று மொழியாகத் தாய்மொழியே ஆகட்டும் 


குத்தனூர் குயில்கள் எலாம் குறுந்தொகை கூவட்டும் 

   கொஞ்சு தமிழ் அதிலேயே பிஞ்சுகள் பேசட்டும் 


இத்தனையும் இன்னும் பல நன்மைகள் நிகழட்டும் 

   ஈடிலாத பாரதமாம்! என அகிலம் புகழட்டும். 


* விரால் -- நன்னீர் மீன் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/4/2026

தெரிந்துகொள்க!!தெளிந்துகொள்க!!!

 தெரிந்துகொள்க!!தெளிந்துகொள்க!!!


மனிதா!!


என்னைப் போன்றே- உன்னை நீயும் 


அவ்வப்போது புதுப்பித்துக்கொள்!!


காலம் உன்னை கைவிடாமல் 


கைகோர்த்து இட்டுச் செல்லும்!!!


இப்படிக்கு

மரம்

Monday, April 13, 2026

மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் உங்களை வரவேற்கிறது

 *மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் உங்களை வரவேற்கிறது*


*நீங்கள் ஏன் மகாகவி பாரதிச் சங்கத்தின் உறுப்பினராக வேண்டும்? தவறாமல் இந்தப் பதிவை படியுங்கள்!. நல்ல முடிவினை எடுங்கள்!!*


கடந்த மூன்று ஆண்டுகளாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் நமது பூர்வா குடி வாசிகளுக்கு மேடை தருவதில் முன்னணியில் நிற்கிறது. எப்படி என்று தெரிய வேண்டுமா! இதுவரை நாம் நடத்திய நிகழ்ச்சிகளை சிறிது பின்னோக்கிப் பார்ப்போம்: 


*மெல்லிசை நிகழ்ச்சிகள்/பாடல்கள்*: 50க்கும் அதிகமான பூர்வா மக்கள் முறையாக பயிற்சி கொடுக்கப்பட்டு மேடை ஏறி பாடியுள்ளனர். 


*பட்டிமன்றங்கள்*: இதுவரை ஐந்து

நடந்துள்ளன. அவற்றில் 35 க்கும் அதிகமானோர் முறையான பயிற்சிக்குப் பின் மேடை ஏறி தங்கள் திறமைகளை நிரூபித்துள்ளனர். 


*பேச்சரங்கம்*: பேச்சரங்க நிகழ்ச்சிகளில் 20க்கும் மேற்பட்ட பெரியவர்களும் 30-க்கும் அதிகமான சிறார்களும் பங்கேற்று சிறப்பித்து உள்ளனர். 


*சொல்வேந்தர் மன்றம்*: பட்டிமன்ற/ பேச்சரங்க பேச்சாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவிடவும் முறையான பயிற்சி கொடுத்திடவும் சொல்வேந்தர் மன்றம் பல வாரங்கள் தொடர்ந்து நடத்தப் பட்டது.


*கவியரங்கம்* இதுவரை நடைபெற்ற நான்கு கவியரங்கங்களில் 30க்கும் அதிகமான கவிஞர்கள் தங்கள் கவிதைகளை படைத்து அளித்துள்ளனர்.  இதில் குறிப்பிடத்தக்கது *ழகரக் கவியரங்கம்*


*மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள்* 3 வருடங்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன


*நாடகம் / திரை நாடகங்கள் (telefilms)*: இதுவரையில் இரு நாடகங்கள் அரங்கேற்றப் பட்டுள்ளன. இரு திரை நாடகங்கள் (குறும்படங்கள்) எடுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ஒரு தொடர் திரைநாடகம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இவற்றின் நாடக ஆசிரியர்கள், இயக்குனர் உதவி இயக்குனர் கேமரா முதற்கொண்டு பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்கள் நமது உறுப்பினர்களே.


*தமிழர் பெருமையை பறைசாற்றும் சிலம்பம் வில்லுப்பாட்டு பாரம்பரிய விளையாட்டுகள்* நடத்தப் பட்டுள்ளன 


*பாடல் நிகழ்ச்சிகளும் பாரம்பரிய உடை அணிவகுப்பும்* மகளிருக்காக நடத்தப்பட்டுள்ளன


இளைஞர்களை கவரும் வகையில் *பாரதி கிரிக்கெட் போட்டி* சிறப்பாக நடத்தப்பட்டது அதில் 14 அணிகள் கலந்து கொண்டன. இரண்டாவது போட்டி மே மாதம் நடத்த திட்டம் தயாராக உள்ளது. 


• இதுவரை நமது புலனக் குறிப்பில் தங்கள் படைப்புகளை பகிர்ந்து வந்தவர்கள் பலரின் படைப்புகளை தொகுத்து இரண்டு முறை கையேடுகள் வெளியிடப் பட்டுள்ளன. *ழகர கவியரங்க* கவிதைகளை ஒரு நூலாக கொணர்ந்திருக்கிறோம். நம்முடைய கவிஞர்கள் கதாசிரியர்கள் எழுதிய நூல்கள் நமது மேடைகளில் வெளியிடப்பட்டுள்ளன இதுவரையில் *மூன்று நூலாசிரியர்கள்* நம்மிடையே உருவாகியுள்ளனர். அதற்கு நம் தமிழ்ச் சங்கம் வழிகாட்டி உள்ளது. 


• செஞ்சி தமிழ்ச்சங்கம், தமிழ்க் கூடல் போன்ற மேடைகளில் நமது பேச்சாளர்கள் நமது சங்கத்தின் பெருமையை நிலைநாட்டி உள்ளார்கள். 


• கல்ப விருக்ஷா எனும் பள்ளியின் மேடையில் நமது சங்கச் செயலர் மலர்விழியின் மைந்தன் - இளம் திறமையாளன் கௌசலேஸ் இரண்டு முறை கௌரவ விருந்தினராக வர வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட நிகழ்வு நமது சங்க மணி மகுடத்தில் ஒரு வைரமாக ஒளிருகிறது.


• நமது பூர்வாவின் நலச்சங்கம் நடத்திய பொங்கல் நிகழ்ச்சியில் நமது சங்கத்தின் பட்டிமன்ற குழு மேடை ஏறி மிகச் சிறப்பான பட்டிமன்றத்தை நடத்தி அனைவரையும் மகிழ்வித்து அவர்களின் பாராட்டுகளை பெற்று இருக்கிறது.    


• மாதம் இருமுறை வாசித்தலை ஊக்குவிக்க *வாசிப்பு அரங்கம்* நடத்தப்பட்டு வருகின்றன. கதைகள் படிக்கப்பட்டு அதன் மீது கலந்துரையாடல் நடக்கிறது   


 • *இலக்கண வகுப்பு* மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது


நமது நிகழ்ச்சிகள் அனைத்தும் நமது *யூ ட்யூப் (youtube) சேனலில்* பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு *பட வரிக் குழு (Instagram)* துவக்கப்பட்டு, அதில் சிறு காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன. நமக்கென ஒரு *வலைப்பதிவு தளமும் (blogspot)* உருவாக்கப்பட்டு அனைத்து படைப்புகளும் அதில் பகிரப்படுகின்றன


நமது சாதனை பட்டியலில் நீளம் இன்னும் அதிகம்.

சில முக்கிய விடயங்களை மட்டும் இங்கு நாங்கள் பட்டியலிட்டு இருக்கிறோம்.


உங்கள் இடையேயும் திறமைகள் பல ஒளிந்து இருக்கும். ஆர்வமும் நிறைய இருக்கும். நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ உங்கள் இல்லத்துப் பிள்ளைகளோ இதைப்போல பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டுமா? 


*உடனே நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தில் உறுப்பினராக இணையுங்கள்*

முருகதாஸ் ஐயா ! (இரங்கல்)

முருகதாஸ் ஐயா ! (இரங்கல்)


முருகதாஸ் என்னும் அங்கி அது கழன்றது

   மோக்ஷம் அழைத்தது, ஆன்மா நுழைந்தது 


கருவில் திருவுடையாரைக் கையால் எண்ணலாம் 

   கடலின் நல் முத்தாக அங்கங்கே மின்னலாம் 


வருவார், போவார் உலகில் எண்ணிறந்த ஒன்று 

   வாழ்வார் மனதில் சிலரே நீரும் அதிலொன்று 

   

தருவின் கீழ் கோயில்கள் என்ற உம் எண்ணம் 

   தந்திமுகன், அனுமன் சன்னதிகள் கண் முன்னம் 


திருவிழா, பண்டிகை ஒன்றும் விடவில்லை 

   திறமையாக முன்னின்று நடத்தினீர் ஐயமிலை 


உரிமைக்கும் குரல் கொடுத்தீர் அவ்வப்போது 

   உம் அகராதியில் இலாதது "முடியாது" என்பது 


பெருமையாம் எம்மிடையே நீர் வாழ்ந்தது 

   பொதுப்பணியும் நீர் இலாமல் அன்றேது ?


கருமமே கண்ணான முருகதாஸ் ஐயா!

   கால அலை அழிக்காத கோலம் நீர் ஐயா!


__. குத்தனூர் சேஷுதாஸ் 3/4/2026

12.4.26 ஞாயிறு மாலை நடந்த பொதுக்குழுவின் விவரணம்

 *12.4.26 ஞாயிறு மாலை நடந்த பொதுக்குழுவின் விவரணம்*


12 ஏப்ரல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணிக்கு நமது பொதுக்குழு ஜாமிங் ரூமில் நடந்தேறியது. தமிழ்ப் பண்ணுடன் துவங்கிய பொதுக்குழுவில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலை வைத்து கலந்தாலோசனைகள் நடத்தப் பட்டன.:


• தமிழ்த் தாய் வாழ்த்து 

• வரவேற்புரை 

• தலைமையுரை   

• உறுப்பினர் நேரம் 

• தொகுப்புரை 

• நன்றியுரை 

• நாட்டுப் பண் 


தமிழ்ச் சங்க செயலர் திருமதி. மலர்விழி வரவேற்புரை நல்கினார். 


பின்னர் தலைவர் ஸ்ரீவி அவர்கள் கடந்த ஓராண்டில் நாம் நடத்திய நிகழ்ச்சிகள் பற்றியும் நிர்வாகிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களின் அயராத உழைப்பினால் நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக அமைந்ததையும் மேலும் நமது நிகழ்ச்சிகள் செழுமையுட உறுப்பினர்களின் ஆலோசனைகளையும் கேட்டு உரையாற்றினார். 


நமது தமிழ்ச் சங்கத்தின் முன்னெடுப்புகளில் முக்கியமான வாசிப்பு அரங்கில் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருவதில்லை என்கின்ற கருத்துக்கு பற்பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன: 


• *வாசிப்பு வட்டம்* என்பது இலக்கிய ரீதியான விடயம் என்று கருதி அதிக நபர்கள் வருவதில்லை என்ற கருத்தின் அடிப்படையில் *கதை படிக்கலாம் - கலந்துரையாடலாம்* என்கின்ற தலைப்பில் அவற்றை நடத்தலாம் என்கின்ற ஆலோசனை கூறப் பட்டது. அது ஏற்கப் பட்டது. 


• வாசிப்பு வட்ட அமர்வுகளில் ஒலி வாங்கி (மைக்) பயன்படுத்தினால் பலருக்கும் உதவிகரமாக இருக்கும் என்கின்ற ஆலோசனை ஏற்கப் பட்டது.


• வாசிப்பு அரங்கு அமர்வுகளில் வருவோர் எண்ணிக்கை அதிகரிக்க அதனை இன்னும் சுவை மிக்கதாக மாற்றிட நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும் என்கின்ற கருத்தும் வலியுறுத்தப் பட்டது.


• ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்காகவும் கலந்து கொள்ளும் அனைவருக்காகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் கலந்து கொள்வோர் எண்ணிக்கை அதிகமாகும் என்ற ஆலோசனையில் வருடம் ஒருமுறை ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் நாம் அப்படித்தான் நடத்தி வருகிறோம் எனவும் அது தொடரும் எனவும் விளக்கம் அளிக்கப் பட்டது


• நமது பூர்வாவில் நிறைய கர்நாடக இசை ரசிகர்கள் இருப்பதால் அதற்காகவென தனியே ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்கின்ற ஆலோசனை திரு பிச்சைமணி அவர்களால் முன்வைக்கப் பட்டது. நமது சங்க சட்ட விதிகள் வழிகாட்டுதல் படி ஆன்மீகம் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதாலும் கர்நாடக இசையில் அநேகமாக ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயங்கள் மட்டுமே இருப்பதாலும் சிக்கல்கள் எழலாம். அதனைத் தவிர்க்க நாம் கர்நாடக இசை நடத்துவதற்காக முயற்சி எடுக்கும் பொழுது பாரதியார் பாடல்களையோ அல்லது நமது குழுவில் வருகின்ற பல்வேறு படைப்புகளையோ மட்டுமே கர்நாடக இசை நிகழ்ச்சி ஒன்றில் நடத்தலாம். அதற்கு திருமதி விஜயலட்சுமி பாலாஜி முன் கை எடுக்கலாம் என்கின்ற விளக்கம் நமது நிதிச் செயலரால் அளிக்கப்பட்டது. 


• *உறுப்பினர் சேர்க்கை:* நமது சங்கத்தில் அதிக உறுப்பினர் இணையும் வகையில் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 துவங்கி ஒரு வாரம் *உறுப்பினர் சேர்க்கை வாரம்* நடத்தலாம் என்கின்ற ஆலோசனை திரு பிச்சைமணி அவர்களால் முன்மொழியப் பட்டது.  அது ஏற்கப்பட்டது. மேலும், அதற்காக படவரிக் குழுவில் ஒரு சிறு காணொளியை நமது தொழில்நுட்பக் குழு உருவாக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.


• நம் உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர் சேர்க்கைக்கு உதவும் வகையில் அவரவர்கள் இருக்கும் புலனக் குழுக்களில் அதனை பிரபலப்படுத்தலாம் என்கின்ற ஆலோசனையும் இப்பொழுது இருக்கும் உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருப்பின் அவர்களுடன் உரையாடி உடனே சந்தா செலுத்த வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப் பட்டது 


• அதிக நபர்களை சென்றடையும் வகையில் ஒரு சிறு சுற்றறிக்கை ஒன்றைத் தயார் செய்யலாம் என்கின்ற ஆலோசனை திரு. சண்முகசுந்தரம் அவர்களால் முன் வைக்கப்பட்டது. 


• பூர்வா குடி வாசிகளுடன் தொடர்பில் இருக்க *காலாண்டு மின்னிதழ் ( digital quarterly journal)* ஒன்றை நாம் நடத்த வேண்டும் என்கின்ற ஆலோசனையும் அவரால் முன்வைக்கப் பட்டது. அந்த ஆலோசனை ஏற்கப் பட்டு, அதற்கு பொறுப்பாளர்களாக திரு. சண்முகசுந்தரம் மற்றும் திருமதி. தேவி அருண் இருப்பார்கள் எனவும் அவர்களுக்கு உதவியாக நமது தொழில்நுட்பக் குழு செயல்படும் என்றும் முடிவெடுக்கப் பட்டது. 


• பலரை சென்று அடையும் வகையில் நமது விளம்பரம் ஒன்றினை மை கேட் செயலியில் நாம் வெளியிடலாம் என்கின்ற ஆலோசனை திரு. சீனிவாசன் அவர்களால் முன்மொழியப் பட்டது. நமது ஆண்டு விழாவை ஒட்டி அதனை அமல் படுத்துவோம் என்று உறுதி அளிக்கப்பட்டது. 


இவற்றோடு கலந்துரையாடல் ஆலோசனைகள் முடிவுற்றன.


திரு. லட்சுமி நாராயணன் நன்றியுரை கூறினார். 


பின், நாட்டுப்பண் இசைக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது. 


*நன்றி*:

• ஞாயிற்றுக்கிழமை ஆன போதும் சங்கத்தின்பால் உள்ள ஈடுபாட்டின் காரணமாக கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி🙏


• கலந்து கொண்ட அனைவருக்கும் சுவையான சுண்டல் வழங்கிட தன் உழைப்பை செலுத்தி உதவி செய்த திருமதி மல்லிகாமணி அவர்களுக்கும் நம் நன்றி🙏


• கடைசி நிமிட முடிவு என்றாலும் உடனே வேகமாக சென்று அனைவருக்கும் தேநீர் வழங்க ஏற்பாடு செய்த திரு. வெ. நாகராஜன் ஐயா அவர்களுக்கும் நம் நன்றி🙏


• 'ஒரு போன் செய்தால் போதும் உடனே வரும்' என்கிற ரீதியில் சுண்டல் வழங்க தொன்னையை போன் செய்து உடனே வரவழைத்த திரு பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நம் நன்றி🙏


• பல்வேறு ஆலோசனைகளை வழங்கி நம் சங்க செயல்பாடு மேலும் செழுமை அடைய உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்🙏


• தாம் வர இயலாத காரணத்தை குழுவிலும் தனிப்பட்ட செய்தியாகவும் அனுப்பிய அத்தனை தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள்🙏

Sunday, April 12, 2026

சர்வதேச சாலையோரச் சிறார் தினத்தில் (12, ஏப்ரல்)...

 சர்வதேச சாலையோரச் சிறார் தினத்தில் (12, ஏப்ரல்)...


விசும்பு அதுவே மேலிருக்கும் கூரை

   விரிந்த பாயோ வெறும் கட்டாந்தரை


பசி அதுவோ நாளும் பழகிய ஒன்று 

   பச்சைத் தண்ணீரே வயிறு நிறை சோறு 


வசிக்க ஒரு வீடும் வெறும் பகற்கனவு

   வந்திடும் பண்டிகை ஒன்றும் தெரியாது 


கொசுவும், ஈயும் உடன் வாழும் உறவுகள் 

   கொள்ளை நோய்களால் நாளும் பிரிவுகள் 


உசுரு இவர்களுக்கு இல்லை வெல்லம் 

   உசுரோடு இருந்தாலே போதும்  நாளும் 


*நிசியில் சிறுமியர்க்கு பாலியல் தொல்லை 

   நேர்ந்தது அறியும் முன் வயிற்றில் பிள்ளை


திசையின்றித் தத்தளிக்கும்  இந்த நாவாய்கள் 

   தெருவோரம் காணலாம் பரிதாபச் சேய்கள்


இசைக்கக் காத்திருக்கும் இவர்கள் மூங்கில் 

   இவரில் துளையிட்டு யார் செய்வார் புல்லாங்குழல்?


*நிசி -- இரவு


__. குத்தனூர் சேஷுதாஸ் 12/4/2026

Saturday, April 11, 2026

சிலம்பொடு ஒரு பயணம் - {16} *அரங்கேற்றக் காதை* *மாதவி அறிமுகம்*

 •••••••••••••••••••••••••••••••


*{16} சிலம்பொடு ஒரு பயணம்*


*அரங்கேற்றக் காதை*


*மாதவி அறிமுகம்*


•••••••••••••••••••••••••••••••


நம் பயணத்தில் இரண்டு காதங்கள் கடந்து மூன்றாவது காதம் அதில் அடி எடுத்து வைக்கிறோம்.

அதாவது மூன்றாவது காதைக்குப் போகிறோம்.


மூன்றாவது காதையில்தான் சிலம்பின் இன்னொரு நாயகி ஆடும் பொன் மயிலாள் மாதவி அறிமுகமாகிறாள். 

அவளுடன் அவளின் ஆடல் ஆசானும் அறிமுகம் ஆகிறான். 


அக்காலத்தில் ஆசான்களுக்கு கிடைத்த அதிக மரியாதை, 

சமூகத்தின் உயரிய நிலையில் அவர்களை வைத்திட்ட சமூகவியல் நிலை சமண அடிகளின் வரிகளில் மிளிர்கிறது.


மாதவியின் அறிமுகம் பத்தே வரிகளில் அடங்கி விடுகிறது. ஆயின், ஆடல் அரசன் பற்றி 85 வரிகளில் விரிவாக விளக்குகிறார் அடிகள். 


*தெய்வமால் வரை திருமணி அருள எய்திய சாபத்து*


பொதிகை மலை உச்சியில் தவம் செய்து வாழ்ந்த அகத்திய பெருமுனி இட்ட சாபத்தால் 


*இந்திர சிறுவனோடு தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய.... வானவர் மகளிர்..*


தேவேந்திரன் மகன் சயந்தனும் தேவர் உலக நடனமாது ஊர்வசியும் மண்ணுலகில் வேணுவாகவும் அதாவது மூங்கில் ஆகவும், (புல்லாங்குழல் எனக் கொள்க) மாதவியாகவும் வந்து பிறந்தனர். 


அதாவது ஆடல் கலையில் வல்ல மாதவி தன் ஆடல் திறமையால் கோவலனை மட்டுமல்ல, இந்த உலகையே மயக்கினாள் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் தேவ உலகத்தையே தன் ஆடலால் மயக்கிய ஊர்வசிதானே மண்ணில் மாதவியாய் பிறந்திட்டாள்.


இப்படி அறிமுகமாகும் மாதவி பற்றிய அடிகளின் வரிகள் இதோ: 


*பிறப்பில் குன்றா பெருந்தோள் மடந்தை தாது அவிழ் புரி குழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல் ஏழாண்டு இயற்றி ஓர் ஈராண்டில்* 


ஆடல், பாடல், அழகுருவம் என்ற மூன்றில் ஒன்றிலும் குறையா குடிப் பெருமை குன்றா குலக்கொடி மாதவியை அவள் தாய் சித்திராபதி ஏழு ஆண்டுகள் ஆடற்கலை பயிலச் செய்தாள். பின்னர் மாதவியை அவளது பன்னிரெண்டாவது வயதில் ஆடல் அரங்கில் அரங்கேற்றினாள்.


இப்பொழுது ஆடல் ஆசான் அறிமுகம் ஆகிறான். அள்ள அள்ளக் குறையாத சொல்லெடுத்து அவனி முழுதும் மகிழும் வகையில் இளங்கோவடிகள் அடுக்கடுக்காய் அவன் பெருமையை விளக்குகிறார்: 


*இருவகை கூற்றின் இலக்கணம் அறிந்து பல வகை கூத்தும் விளக்கினிற் புணர்த்து*


(அறம் - புறம் எனும் இருவகையான நாட்டியத்தின் விதிமுறைகளையும் சாந்தி கூத்து, வசைக் கூத்து எனும் பலவகை கூத்து முறைகளையும் நன்கு அறிந்தவன்.)


*ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்*


*பிண்டியும் பிணையலும் எழிற் கையும் தொழிற்கையும் கொண்ட வகை அறிந்து கூத்து*


(கூத்து முறைகளான சாதி, விருத்தி சுவை, குறிப்பு, சத்துவம், அபிநயம், சொல், சொல் வகை, வண்ணம், வரி, சந்தி, சேதம் எனும் இலக்கண நுட்பம் நன்கு அறிந்தவன்.)


மேலும் தொடர்கிறார்: 


*வாரம் செய்த கை கூடையில் கலைதலும், பிண்டி செய்த கை ஆடலில் கலைதலும், ஆடல் செய்த கை பிண்டியில் கலைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி*


(அவன் நடனம் ஆடும் போது பிண்டி, பிணையல், எழில் கை, தொழிற்கை எனும் நாட்டிய முத்திரைகள் பதிக்கும்  ஞானம் உள்ளவன். நடன முத்திரை பதிக்கும்போதும் குவிந்த கை இரட்டைக் கை, ஒற்றைக் கை இருகை காட்டும் அவிநயம், பாடல் குறிப்புகளுக்கு ஏற்ப வடிவம் காட்டும் முத்திரைகளோடு, குரவைக் கூத்து, வரிப்பாடல் கூத்து எனும் அவிநயங்கள் சிறக்க செய்வதிலும் மேதை).


இதற்கு மேலும் அவன் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகிறார்.  அதனை அடுத்த பதிவில் பார்ப்போம். இப்போது மழலைக்கவி என்ன சொல்கிறார் என பார்ப்போம்:


ஐயா, 

தாங்கள் அரங்கேற்றக் காதையில் பிரவேசித்து, மாதவி என்னும் ஆடவல்லாள் மற்றும் அவள்தம் ஆசான், நடனக்கலை விவரங்கள் பற்றி , இளவல் அடிகளின் அடி தொடர்ந்து , கருத்திட்டு பகிர்ந்தீர்.


சக பயணி நான் என் கருத்துகளை, அரங்கேற்றுகிறேன்.


அரங்கேற்றம்- மாதவி  , ஆசான் ஆசியுடன் முதல் முதலாக அரங்கம் ஏறி அறிமுகமாகும் காதை. 

பார்வையாளர்கள்?கோவலனோடு, நாமும்தான்.

அவன் பார்வை வேறு நம்பார்வை வேறு. நாம் நல்லாசான் பயிற்றுவித்த ஆடல்மகளின் ஆட்ட சிறப்புகளைக் காண உள்ளோம்.


மன்னர்   (கரிகால் பெருவளத்தான்  என்கின்றனர் ஆராய்ச்சியாளர்) கூட அமர்ந்து காணும்பேறு நமக்கு!


ஊழ்வினை காரணமாக, தேவலோக ஊர்வசி இப்பிறப்பில் மாதவியாகப் பிறந்தாள் என்கிறார் அடிகள். 

ஊழ்வினை இக்காப்பியப் பாத்திரங்களோடு பின்னிப் பிணைந்தது போலும். 


தேவ உலக ஊர்வசியின் அழகை இவ்வுலகில் கொண்டு பிறந்த மாதவி, ஊர் வாசிகள் மெச்சும் அழகு படைத்தவள் என்பதில் என்ன வியப்பு!


ஆடல் -நல்ல ஆசானிடம் முறையாகப் பயின்றவள். ஐந்து வயதிலிருந்து   பன்னிரெண்டு வயது வரை ஏழு ஆண்டுகள் ஆசானிடம் நடனக்கலை பயின்றவள், அவர் பாதங்களைத்தொட்டுக் கும்பிட்டு.

இனிமையாகப் பாடுபவள். இயற்கை அழகோடு ஒப்பனை செய்துகொண்டும் அழகுக்கு அழகு சேர்ப்பவள். 


வயது பன்னிரண்டு- மங்கை!- நம் கண்ணகியைப் போல்.


மாதவியின் அழகு அடவு (நடன அசைவு) கூடியது. கண்ணகியின் அழகு அமைதி நிறைந்தது. குத்து விளக்கும், தெரு விளக்கும் போல.


ஆடல் ஆசான்:


கற்பித்த  ஆசான் - *"ஆடற்கு அமைந்தஆசான்"*


பாணி, பாங்கு, பாடல் இவற்றில் கரைகண்டவர்; நன்கு கற்பிப்பவர்.


பாணி  என்பது கற்பித்தவரின் பெருமை பேசும். இக்காலத்திலும் வழுவூர் ராமையா பிள்ளை, பந்நல்லூர் எனப்பாணிகள் , கற்பித்தவரை , சிறப்பிக்கின்றன அன்றோ?!


இவர் பாணி, *"சூழ் கடல் மன்னற்குக் காட்ட வேண்டி,"* மாதவியின் அரங்கேற்றம் அமையும் அளவுக்கு ஏற்றம் வாய்ந்தது.


ஐயா, தாங்கள், கூத்து வகைகள், முறைகள், நாட்டிய முத்திரைகள்பற்றி  நன்கு விவரித்தீர்.


நான் சில " கலைச்சொற்கள" பற்றி படித்து  அறிந்ததைப்பகிர்கிறேன்.


பிண்டி:

இரண்டு கைகளையும் வெவ்வேறு வகையாக ஆட்டிக் காட்டுதல்

பிணையல்:

இரண்டு கைளையும் ஒன்று போல் ஆட்டிக்காட்டுதல் .

கூடை  -,ஒற்றைக்கை அபினயம்

வாரம் - இரட்டைக்கை, பின்னல்அசைவுகளைக் குறிப்பது


ஆசானின்  தகைமைத்திறன்:

பல வகையான கூத்துகளை அறிந்து வேண்டியவற்றை விலக்கி, வேண்டியவற்றை இணைத்துக்கொள்ளும் முறைமை தெரிந்திருக்க வேண்டும். 


11 வகையான ஆடல், வாயில் பாடும் இசைப்பாட்டு, தாளக் கொட்டு ஆகியவற்றை இலக்கணப் பாங்கு, இலக்கியப் பாங்கு ஆகியவற்றோடு அறிந்திருக்க வேண்டும். 


ஆடும் பாங்கு, பாடும் பாங்கு, தாளம் கொட்டும் பாங்கு, இசை கூட்டும் பாங்கு ஆகியவற்றைச் சொல்லித்தரத்தக்க அழகிய  அசைவுகளைக் காட்டும் எழில்

வேண்டும்

கூடை செய்த கை வாரம் செய்யக்கூடாது வாரம் செய்த கை கூடல் செய்யக்கூடாது .

ஆடலுக்கு உரிய இது போன்ற பாங்குகளை ஆடல்-ஆசிரியன் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்தவர் மாதவியின் ஆடலுக்கு என அமைந்த ஆசான்.


கூத்து வகைகள், நாட்டிய முத்திரைகள் என்பவை மிக விரிவாக நம் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நம்பயணத்தில் அவற்றை  விவரித்தால் " கொள்வார்" இல்லாது போகலாம். 

விவரம் வேண்டுவோர் சிதம்பரம் நடராசர் 

கோவிலில் 108 கரணங்களை( நாட்டிய அசைவுகளை) சிற்பமாக,காணலாம் , வழிவகாட்டியின் துணையோடு.

பிற்காலச்சோழர்கள், ( 10 ஆம் நூற்றாண்டு) முந்தி இருந்த  சோழர்களுக்கு( 2 ஆம் நூற்றாண்டு) செலுத்தும் அஞ்சலியோ, சிற்ப 

வடிவில்?! நடன அரங்கேற்றம் கண்டு ரசிக்க வசதியாக அமர்ந்து  உள்ளோம், ஆவலோடு, எதிர்பார்ப்புகளோடு.


*பயணம் தொடரும்*

Wednesday, April 8, 2026

ஹூஸ்டனிலிருந்து வந்த மறுநாள்- பயணக் கட்டுரை( 12)

 பாகம் 12

பயணங்கள் முடிவதில்லை…


ஹூஸ்டனிலிருந்து வந்த மறுநாள்…

இந்தியாவிலிருந்து புதிதாக வந்திருந்த நாங்கள் மூவரும் மட்டுமே அந்த வீட்டில் தனியாக விடப்பட்டிருந்தோம். டெக்சாஸ் துப்பாக்கி மாநிலம்… “கதவை யார் என்று பார்த்த பிறகே திறக்கவும். ஜன்னல் திரைகளை எப்போதும் மூடியே வைத்திருங்கள்” என்ற அறிவுரைகள் எங்களைச் சற்று பதட்டப்படுத்தியிருந்தன. பயணத்தில் எல்லாமே புதிது. எல்லாமே சற்று பயமாகவும் இருந்தது.

மாலை நேர நடைபயிற்ச்சிக்காக வெளியே சென்றோம். ஜார்ஜ் புஷ் டர்ன்பைக் சாலையில், திடீரென 3-4 போலீஸ் வாகனங்கள் சைரன் ஒலியுடன் பறந்து சென்றன. அந்த வேகம், அந்தக் கூர்மையான ஒலி… இதயம் துடித்தது. “என்ன நடக்கிறது இங்கே?” என்ற கேள்வியுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, வேகமாக வீட்டுக்குத் திரும்பினோம்.

வீட்டுக்குள் நுழைந்ததும், அமைதியை உடைத்துக் கொண்டு தொலைக்காட்சியும், எங்கள் கைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலிக்கத் தொடங்கின. ரோமிங் வசதி இல்லாத போனில் கூட, திடீரென ஒரு பயங்கரமான அலாரம் ஒலி எழுந்தது. திரையில் பளிச்சென்று மின்னிய அறிவிப்பு:

AMBER எச்சரிக்கை, குழந்தை கடத்தல் அவசர நிலை

ஒரு குழந்தை கடத்தப்பட்டிருக்கிறது.

அந்தச் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்நிய நாட்டில், ரோமிங் இல்லாத போனில் இப்படி ஒரு எச்சரிக்கை எப்படி வந்தது? அந்த ஒலியின் தீவிரமும், அதன் திடீர் தன்மையும் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்திருக்கிறது. அந்த ஒரு தருணத்தில், அமெரிக்காவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் வலிமையையும், வேகத்தையும் நேரடியாக உணர்ந்தேன்.

AMBER எச்சரிக்கை , ஒரு சிறுமியின் பெயரில் உருவான உயிர்காக்கும் அமைப்பு

1996-ம் ஆண்டு. டெக்சாஸ் மாநிலத்தில் ஆம்பர் ஹேகர்மேன் என்ற 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்தச் சோகத்திலிருந்து பிறந்ததுதான் இந்த AMBER எச்சரிக்கை முறை.

(America’s Missing: Broadcast Emergency Response) அமெரிக்காவின் காணாமல் போனவர்களுக்கான ஒளிபரப்பு அவசரப் பதில் என்ற வார்த்தைகளின் முதல் எழுத்துக்களின் சுருக்கமே AMBER.

ஒரு குழந்தை கடத்தப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்திய உடனேயே இந்த எச்சரிக்கை வெளியிடப்படுகிறது. நோக்கம் குழந்தையை விரைவாகக் கண்டுபிடித்து, உயிருடன் மீட்பது ஒன்றே. சமூகமே ஒன்றிணைந்து தேடும் ஒரு பெரிய இயக்கம் இது.

எச்சரிக்கை எப்படி எல்லோருக்கும் சென்றடைகிறது?

மொபைல் போன்கள்: வயர்லெஸ் அவசர எச்சரிக்கை (WEA) மூலம். அருகிலுள்ள செல் டவர்களிலிருந்து ஒளிபரப்பு செய்யப்படும். ரோமிங் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து போன்களுக்கும் உடனடியாகச் செல்லும்.

•  தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்கள்

•  நெடுஞ்சாலைகளில் உள்ள பெரிய மின்னணு பலகைகள்

•  சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஆப்-கள்

எச்சரிக்கையில் குழந்தையின், வயது, உடை விவரம், கடத்துபவரின் தோற்றம், வாகனத்தின் நிறம், எண் அனைத்தும் தெளிவாக இருக்கும். ஒவ்வொரு கண்ணும் விழித்திருக்கட்டும் என்பதே செய்தியின் சாரம்.

போனில் ரோமிங் இல்லாதபோதும் அந்த எச்சரிக்கை வந்ததற்குக் காரணம் இந்த செல் ஒளிபரப்பு தொழில்நுட்பம்தான். இது தனிப்பட்ட SMS அல்ல. ஒரு முழுப் பகுதியில் உள்ள அனைத்து போன்களுக்கும் ஒரே நேரத்தில் செல்லும் அமைப்பு. அதனால்தான் வெளிநாட்டுப் பயணிகளான நாங்களும் அந்த எச்சரிக்கையை உணர முடிந்தது.


அந்த AMBER எச்சரிக்கையைப் பார்த்த பிறகு, என் மனதில் இந்தியா பற்றிய எண்ணங்கள் அலைமோதின. நம்முடைய நாட்டிலும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடூரச் சம்பவங்கள் இன்றும் தொடர்கின்றன. 2012-ம் ஆண்டு டெல்லி நிர்பயா வழக்கு நாட்டையே உலுக்கியது. இன்றும் பல மாநிலங்களில் குழந்தை கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், காணாமல் போகும் சம்பவங்கள் இடைவிடாமல் நடக்கின்றன.

அமெரிக்காவைப் போலவே, இந்தியாவிலும் ஒரு தேசிய அளவிலான குழந்தை கடத்தல் எச்சரிக்கை அமைப்பு வலுவாக அமல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது.


இந்தியாவில் ஏற்கனவே சில மாநிலங்களில் சில முயற்சிகள் உள்ளன. ஆனால் அது இன்னும் தேசிய அளவில், தொழில்நுட்ப ரீதியாக முழுமையான, வலுவான அமைப்பாக உருவாகவில்லை. ஒரு சிறிய தகவல் கூட ஒரு குழந்தையின் உயிரை மீட்கும் சக்தி வாய்ந்தது.


 அந்த மாலை நடைபயணம் வெறும் உடற்பயிற்சியாக முடியவில்லை. அது எனக்கு ஒரு ஆழமான பாடத்தை கற்றுக் கொடுத்தது, சமூக ஒற்றுமையின் வலிமை.

ஒரு குழந்தை ஆபத்தில் இருக்கும்போது, அந்நியர்கள் கூட ஒன்றிணைந்து தேடுகிறார்கள். போலீஸ், ஊடகம், பொதுமக்கள் அனைவரும் ஒரே இலக்கில் செயல்படுகிறார்கள். அந்த AMBER எச்சரிக்கை ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது ஒரு அலாரம் மட்டுமல்ல… அது ஒரு அழைப்பு:

நீயும் பார்த்துக் கொள். நீயும் உதவி செய்.


ஒரு சிறிய எச்சரிக்கை… ஒரு உயிரை காப்பாற்றலாம்.

இந்தப் பயணம் எனக்கு அளித்த மிகப் பெரிய பரிசு மனிதாபிமானத்தின் அழகை நேரில் காணும் வாய்ப்பு. அடுத்த முறை எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் மக்களின் பாதுகாப்பு அமைப்புகளை மிகுந்த மரியாதையுடனும், பாராட்டுடனும் பார்ப்பேன்.

Sunday, April 5, 2026

பலூன் விற்கும் சிறுவன்

 •••••••••••••~

பலூன் விற்கும் சிறுவன் 

•••••••••••••~


நெஞ்சினில் 

வண்ண வண்ணக் கனவுகள்


கையினில் 

வண்ண வண்ண 

பலூன்கள் 


ஆனால் 

வாழ்க்கை மட்டும் 

இருளாய் 


உங்கள் தோழன் ஸ்ரீவி

Saturday, April 4, 2026

சிலம்பொடு ஒரு பயணம்-{15}-இன்பமான இல்லறமும் தனிக் குடித்தனமும்

 •••••••••••••••••••••••••••••••


*{15} சிலம்பொடு ஒரு பயணம்*


*மனை அறம் படுத்த காதை*


*இன்பமான இல்லறமும் தனிக் குடித்தனமும்*

•••••••••••••••••••••••••••••••


பித்தன் சூடிய பிறையே நுதலாம்

காமன் எடுத்த வில்லே புருவமாம் 

என கண்ணகி நல்லாளைப் புகழத் துவங்கி 


மஞ்ஞையின் சாயலான மங்கை

கொண்டிருந்தாள் அன்ன நடை 

கிளி யாழ் குழல் ஒத்த பேச்சு என வானளாவ புகழ்ந்ததோடு நில்லாது, அவளது அலங்காரத்தை - ஆடை அணிகளைப் பார்த்து

மேலும் தொடர்கிறான் கோவலன்: 


*மறு இல் மங்கல அணியே அன்றியும் பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல்*


(இயற்கை வழங்கிய மங்கல அணி எனும் நிறை அழகு உன்னிடம் இருக்க பிற அணி மணிகளை ஏன் வீணாக பூட்டுகின்றனர்!)


 *பல் இரும் கூந்தல் சின்மலர் அன்றியும், எல் அவிழ் மாலையோடு என் உற்றனர் கொல்*


(உன் பன்வகை கூந்தலில் சிறு அழகிய மலர்களைச் சூடினால் போதாதோ..! ஏன் வீணாகப் பெரிய மாலைகளை சூட்டுகின்றனர்!)


*சிறுகு இடை வருந்தவும்* 

அதாவது அணிகலன்கள் ஆடை ஆபரணங்கள் பெரிய மாலைகள் எல்லாவற்றின் எடையையும் அவளது சிறிய இடை தாங்குமா என வேறு வருந்துகிறான். 


அத்தோடு நின்றானா! காதல் வயப்பட்டு மதி மயங்கித் தொடர்கிறான் விடாது: 


*மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! அரும் பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே!*


என புகழ்ந்து மகிழ்கிறான். இவ்வரிகளைப் படிக்கும் கால், வாசகர்கள் செவிகளில் இவ் வரிகள் இன்பமாய் ரீங்காரமிடும். காரணம், பூம்புகார் எனும் திரைப்படத்தில் வரும் "பொன்னாள் இது போலே" - எனும் திரை இசைப் பாடலே. இளங்கோ அடிகளின் இவ் வைர வரிகள் டி. எம். சௌந்தரராஜன் குரலில் நம் செவிகளில் ஒலிப்பது இயற்கையே. 


(இவ்விடத்தில் எனக்கு ஓர் ஐயம். வலம்புரி சங்கு உண்டு! வலம்புரி முத்து உண்டா?)


இதோடும் அவன் நிற்கவில்லை! இன்னும் புகழ்கிறான் பாருங்கள் :


*மலை இடைப்  பிறவா மணியே அலை இடைப் பிறவா அமிழ்தே யாழிடைப் பிறவா இசையே*


என்று வர்ணனை மழையில் கண்ணகியை நனைவிக்கிறான். அடிகளும் தன் சொல்லாட்சியால் படிப்போர் மனங்களை மகிழ்விக்கிறார்! 


இப்படி ஆடிப் பாடி காதலில் மூழ்கி திளைத்து மகிழ்ந்திருக்கும் வேளையிலே, அவர்தம் இல்லறத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கிறது. என்ன அது?


*வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி*


(நீண்டு வளர்ந்த நெடுங் கூந்தலும் போற்றுதலுக்குரிய உயர் பண்புகளும் கொண்ட கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி) 


*கேண்மையோடு அறப்பரிசாரமும் விருந்து புறந்தரும் பெருந்தண் வாழ்க்கையும்*


(அறநெறி உணர்ந்த சான்றோரை ஆதரித்துப் போற்றுதல் விருந்தென வந்தவருக்கு உண்டி கொடுத்து உபசரித்தல் ஆகிய இல்லற தர்மங்கள். இல்லறம் எப்படி நல்லறம் ஆகும் என்பதை இவ் வரிகளில் அடிகள் தெள்ளன விளக்குகிறார். இல்வாழ்க்கை இந்த அறங்களோடு இருப்பின் அந்த இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பது தமிழ்ச் சமூகம் உயர்த்திப்பிடித்த சமூகவியல் கோட்பாடு) 


*ஒரு தனிப் புணர்க்க*


(தனிக்குடித்தனம் வைக்கிறாள். ஒருவேளை இது நடவாது இருந்திருந்தால், கோவலன் தடுமாறி - தடம் மாறிப் போகாமல் இருந்திருப்பானோ!?) 


அவ்வாறு தனிக் குடித்தனம் வைக்கப் பட்ட பின், 

கோவலனும் கண்ணகியும் 


*தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர் போல் நின்று*

 

(இல்லற வாழ்வில் இன்பம் பெருகி ஓட, காமனும் ரதியும் போல, அழகு நலம் கெடாத இல்லற இன்பத்தை இடையறாது துய்த்து மகிழ்ந்திருந்தனர்.  அதாவது, நிலையற்ற உலக வாழ்வினில், யாக்கை உள்ள போதே வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் என்கின்ற பெரும் அவாவுடன் வாழ்ந்தனராம்)


இன்பத்தைச் சுவைத்து வாழ்ந்தனர் என்று விவரிக்கையில் *நிலையாமை*  என்ற சொற்றொடரை உள்ளே நுழைத்து, கோவலனுக்கு நேரப் போகும் துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறார் இவ்விடத்திலும் அடிகள்.


தற்போது மழலைக் கவியின் பார்வை:


ஐயா,


இன்றைய பயணத்தில் கண்ணகி உடனுறை கோவலன் தம்பதியினரின்

இன்பமான இல்லறம் மற்றும் தனிக்குடித்தனம்  தாங்கள் கண்ட விதம் பகிர்ந்தீர்.

என்பார்வையில் கண்டு உங்களுடன் பகிர விழைகிறேன்.


இல்லறம், குடித்தனம் இரண்டும் ஒன்றா ? அல்லது வெவ்வேறா?

இல்லறம் என்பது வாழ்வியலின் அறம் சார்ந்த கொள்கை, குடித்தனம் என்பது அந்த வாழ்க்கையை நடைமுறையில் நடத்தும் செயல்முறை எனக் கொள்ளலாம்.

அறக் கோட்பாடுகள் இல்லறத்தை வரையறுத்துக் கூற அந்த கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடைமுறையில் செயல் படுத்துவதே குடித்தனம்.


உயர்ந்த மாளிகையின் உச்சி மாடம் ஒன்றில் கோவலன் தன் அன்பு மனைவி கண்ணகியின் எழிலைப் பலவாறு புகழ்ந்த பின்னர் அவளது பாங்கு, நடை, பேச்சு என அணு அணுவாக அனுபவித்துப் போற்றும் காட்சிகளைக் கண்டோம். களித்தோம். இயற்கையிலேயே அழகு வாய்க்கப் பெற்ற கண்ணகியின் ஆடை அலங்காரம் பற்றி அவன் பேசாவிட்டால் எப்படி? அவள் நாணத்தால்  பேசா மடந்தையாக இருந்தாலும், அவள்   பெண்  உள்ளம்  "நான் அழகாக இருக்கிறேனா!" என்று கேட்கத் தூண்டுவதை அறிந்தவன் போல , கோவலன் தன் வர்ணனையைத் துவங்குகிறான்.


இயற்கையோடு இணைந்த மங்கல அழகு அவளுக்கு இயல்பாகவே உள்ளதால் *"பிறிது" அணிகள் "எவன் கொல்-"* ( எதற்காகவோ)!என வியக்கிறான். இந்த அணிகளில் ஒன்றுதானே பின்னர் கண்ணகி நீதியை நிலை நாட்ட உதவும் என நினைக்கத் தோன்றுகிறது!


இவளது அளகாபாரம், பாரமான மலர்களைத் தாங்குமா? அணிகலன்களின் எடை  *"சிறுகு இடை"* யை வருத்துமோ எனப்பலப்பல எண்ணங்கள் காதல் வயப்பட்டவனுக்கு! 


*இடை "இல்லாதது போல்"* இருப்பதால் "சிறகு இடை"

 என்றானோ?!


ஐயா, அடுத்து பொன், முத்து போன்றவற்றை வைத்து அவன் அவளை " போற்றி போற்றி " என்று புகழுவதை நன்கு விவரித்தீர்.


ஓர் ஐயமும் உமக்கு உண்டாயிற்று.

வலம்புரி சங்கு உண்டு. வலம்புரி முத்து உண்டா என்று?


கவிஞர்களின் உயர்வு நவிற்சியாக, இம்முத்து இலக்கியங்களில் அறியப் படுகிறதாம். வலம்புரி சங்கே உயர்ந்தது. அதற்குள் முத்தும்இருந்தால் அருமைக்கு அருமை சேர்க்காதோ!வலம்புரி முத்தை விட குடும்பநலம் பேணும் நம் கண்ணகி உயர்ந்தவள். 

இந்தக் *"குல மாதர்கள் கொண்டாடும் குண  மாமணி"* - 

யைக் கோவலன் பலவாறாகப் போற்றுவதில் தாங்கள் அடிகளின் சொல்லாட்சி கண்டு உவகித்தீர். கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகாமல் மேலே செல்கிறேன்.


இந்த காதல் பறவைகள் அன்புச் சிறகுகளால் அணைத்து மகிழும் வாழ்வில் மேலும் இன்பம் சேர்க்கிறாள், காவிய நாயகியின் மாமியார். அட அப்படியா! ஆம் இவர்களுக்குத் தனிக் குடித்தனம் வைக்கிறார். இக்கால மருமகள்கள் ஆச்சரியப் படலாம் இதனைக் கேட்டு. ஆச்சரியம் ஆனால் உண்மை அக்காலத்தில் இது நடந்துள்ளது.


உற்றம், விருந்தினர் யாவரையும்,  இருவரும் மனையறம் வழுவாது, பெற்றோர் சொத்தை எதிர்பாராமல். தங்கள் ஈட்டும் செல்வத்தை வைத்து இல்லறம் நடத்த, மாநாய்கனின் பெருங்கிழத்தி

செய்த ஏற்பாடு! 


இன்று தனிக்குடித்தனம் செல்லத் துடிப்பவர்கள் சற்றே நின்று உள்வாங்க வேண்டிய விடயம்.


இவ்வாறு இல்லறம்அது நல்லறம் என

இருவரும், 

*"தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார்". ........ நிலையாமை கண்டவர் போல்."*


இந்த நிலையாமை என்ற எண்ணம் பின்பு வரும் துயர 

நிகழ்வுகளுக்குக்கட்டியம் கூறுகிறதா?

இல்லை , இன்று  நிச்சயம் நல்ல வாழ்வு வாழ்வோம், நாளை பற்றி யாரறிவார்  என" காமர் மனைவியெனக்  கைகலந்தனரோ"!


அடுத்து அரங்கேற்றக் காதையில் பயணிப்போம். மாதவிப் பொன் மயிலாளைக் காணும் ஆர்வம் அதிகரிக்கிறது



*இதோடு மனை அறம் படுத்த காதை நிறைவுறுகிறது. அடுத்து அரங்கேறப் போவது *அரங்கேற்றக் காதை. அதில் நாமும் மாதவி என்னும் நல்லாளோடு அரங்கேறுவோம்.*

 

!

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...