•••••••••••••••••••••••••••••••
*{17} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்றக் காதை*
*நடன ஆசானின் பெருமைகள்*
•••••••••••••••••••••••••••••••
ஏற்கனவே நாம் கூறியது போல் சிலம்பின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான மாதவி பற்றி
மிகச் சில வரிகளில் அறிமுகம் செய்த
சமண அடிகளான நூலாசிரியர்
கலையின் வித்தகன் நடன ஆசான் பற்றி
அடுக்கடுக்காய் புகழுரை கூறி
ஆசானின் திறமைகளை விளக்குகிறார்
இசையினில் வல்லவன்,
நூலறி புலவன், மத்தள வித்தகன், வேங்குழல் வேந்தன், யாழிசை வல்லவன் என ஆசான் பற்றி
82 வரிகளை
ஒதுக்கி புகழ்ந்து எழுதி இருக்கிறார்.
மாதவி இல்லையேல் சிலம்பு இல்லை.
அவளைப் பற்றிய அறிமுகம் பத்தே வரிகளில்.
அவள் ஆசான் பற்றிய வர்ணனையோ 82 வரிகளில்.
ஆசானின் அறிமுகத்தை சென்ற பதிவில் பார்த்தோம். அவரைப் பற்றி அடிகள் மேலும் கூறுவதை இப்போது பார்ப்போம்:
*யாழும் குழலும் சீரும் மிடறும் தாழ்குறல் தன்னுமை ஆடலுடன் இவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து..*
*... தேசிகத் திருவின் ஓசை எல்லாம்...*
*... வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் அசையா மரபின் இசையொன் தானும்*
(யாழிசையும், குழலிசையும், தாள லயத்தோடு கூடிய வாய்ப் பாட்டும், இனிய - மெல்லிய ஒலி எழுப்பும் மத்தள இசையையும், ஆடும் ஆடலுக்கும் - பாடும் பாடலுக்கும் ஏற்ப ஒருங்கிணைந்து வாசிக்கும் திறன் உடையவன்)
என்பதாக *இசையில் வல்லவன்* எனப் புகழ்வதோடு,
*தமிழ் முழுது அறிந்த தன்மையன் ஆகி வேத்து இயல் பொது இயல் என்று ,இரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைபிடித்து...*
(தமிழ் மொழியின் சிறப்பெல்லாம் அறிந்தவனாகி, வேத்து இயல் பொது இயல் என்ற கூத்தின் இருவகைகளையும் விளக்கும் நாட்டியக்கலை நூல் கூறும் நுணுக்கங்களை எல்லாம் நன்றாக பின்பற்றி)
*வக்கரைத் திட்டத்தை உணர்ந்து... வசை மொழி அறிந்து..*
(சுர வரிசைகளை நன்குணர்ந்து ஆலாபனை -வக்கரி - செய்கையில், அதில் பிறழ்வு வராமல் அதாவது அபசுரம் வராமல்)
*நாத் தொலைவு இல்லா நன்னூல் புலவனும்*
(நாவன்மை நிறைந்த *நூலறி புலவன்* எனக் கூறுகிறார்)
இசைஞானத்தோடு நூல் அறிவும் மிக்கவன் அந்த ஆசான் எனக் கூறுவதோடு இன்னும் தொடர்கிறார் அடிகள். நாமும் அவரை அடுத்த பதிவில் தொடர்வோம்.
இப்போது மழலைக் கவியை சந்திப்போம்:
ஐயா,
முன்பே கூறினேன், ஒரு சிறந்த நடனமணியின் நாட்டியச்சிறப்பு அவரது குருவின் பாணி அல்லது பத்ததியால் அறியப்படுகிறது என்று. மாதவி அத்தகைய ஆசானைப் பெற்ற பேறு பெற்றவள்.
இந்த ஆசான் அக்காலத்தில் பெரும் புகழுடன் திகழ்ந்து இருக்கவேண்டும். அதனால் பெயரைக்குறிப்பிடாமல், *ஆடல் ஆசான்* என்றாலே ஊரும் உலகமும் அறியும் என்று அடிகள் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை போலும்.
இக்காலத்தில் இசை அமைப்பாளர், ஏற்பட்டாளர் மற்றும்இசை இயக்குனர், நடனம் அதற்கு ஏற்ற இசை, வாய்ப்பாட்டு, பக்க வாத்தியங்கள், எனப்பல அங்கங்களை ஒருங்கிணைக்க குறைந்தது மூவர் தேவைப்படுகிறார்கள்.
இந்த இசை ஆசானோ தான் ஒருவராக,மூன்று வித அங்கங்களையும் சரிவர ,சரி சமமாக அமைப்பதில் வல்லுனர்.
இசை வாய்ப்பாட்டில்,
*"கட்டை" ( pitch)* சுருதிகள், பாடுபவரின்" மிடறும்" (தொண்டையைப்) பொருத்தது. அவற்றை ஒட்டி, கூட "யாழும், குழலும் இன்னிசை சேர்க்க, "தாழ்குரல் " எழுப்பும் "தண்ணுமை " யோடு
இந்த இசையைக் கூத்திற்கு ஏற்றபடி பொருத்துவதில் வல்லவர்.
*"தேசிகத் திருவின் ஓசை எல்லாம் ஆசு இன்று உணர்ந்த அறிவினன்."* அஃதாவது, பல்வேறு இசை மரபுகளை, பண்களைப்பொருள்அறிந்து பிழை இன்றிக் கற்பிக்கும் ஆசான்.
எவ்வகையிலும்" *அசையா மரபின் இசையோன்"* ஆக விளங்கிய இசைவாணர்.
இவர் இக்காலத்தில் தாளத்தோடு நட்டுவாங்கம் செய்யும் நட்டுவனார் போன்றவர் ஆவார்.நட்டுவாங்கமே தாள ஜதியோடு நடனக்கலைஞரை ஆசான் வழி நடத்துவது அன்றோ!
சரி யார் பாட்டுக்கு நட்டுவாங்கம்?
*"நன்னூல் புலவன்"* பாட்டுக்கு.
இவர் வேத்தியல்- அரசவை முன் ஆடும் கூத்து, பொதுவியல்- பொதுமக்கள் முன் ஆடும் கூத்து இவற்றை நன்கு அறிந்தவர்.
வக்காணம் அதாவது ஆலாபனை செய்யக்கூடிய பண்ணின் முறைகளை-"இசையோன் ( இசை ஆசான்) வக்கிரித்திட்டங்களை"
கருத்தில் கொண்டு , தமிழர் யாவரும் அறியும்படி வசைச்சொற்களைத் தவிர்த்து,
பாட்டை இயற்றுபவர்.
*"வக்கிரித்திட்டம்"*. -
இது ஆளத்தி (இசைக்கலை) எனப்படும் பாடும் முறையை பதினாறு வகையாகப் பிரித்து, விரிவாகப் பாடுவதற்கான திட்டமிடலைக் குறிக்கிறது.
*"நாத்தொலைவு"*- பாட்டில் குற்றம் இல்லாத சொற்களை,
அமைக்கும் சொற்சிற்பி.
அடுத்து *தண்ணுமை முதல்வன்*, *குழலோன்*
நடன ஆசானின் இன்னும் சில பெருமைகளை சந்திக்க உள்ளோம் , அரசர் வந்து நடனம் அரங்கேறும் முன்!
நீண்ட நெடும்பயணம்!
ஆனால் அடிகளின் தீந்தமிழ் பாக்களை, சுவைத்தபடி செல்கையில், இந்த பயணம் பல காத தூரம் செல்ல இருப்பினும், காவியக் காதைகளின் சிறப்புகள், நம்மை உந்துவிக்கின்றன.
*பயணம் தொடரும்*
No comments:
Post a Comment