நூல்: என்றும் நானறியேன்
ஆசிரியர்: அமுதவல்லி நாராயணன்
************************************************
அணிந்துரை:
மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் எனக்கு பல அரிய நல் தமிழ் உறவுகளைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒருவர், இளைய சகோதரி திருமதி. அமுதவல்லி. ‘சுழல்’ எனும் தலைப்பில் ‘ழகரக் கவியரங்க’ மேடையையும், அந்த அரங்கத்தையும் தன் கவிதையால் சுழல வைத்தவர். *வாசித்தலை நேசித்தலும், நேசித்து வாசித்தலும் நம்முள்ளே இருந்து விட்டால் நற்றமிழ் தானே வரும்* எனும் கூற்றினை மெய்ப்பித்தவர். கணினியிலே பணியென்றாலும் கன்னித் தமிழ் மேல் தீரா பற்றுக் கொண்டவர். தமிழ்ச் சேவையில் முன்னிற்பவர். இவரது இந்த *‘என்றும் நானறியேன்’* எனும் இந்த கவிதைத் தொகுப்பு நூலுக்கு என்னை அணிந்துரை எழுதிட பணித்துள்ளார். உள மகிழ்வோடு அதனைச் செய்ய சம்மதித்தேன்.
சிறந்த சொல்லாட்சியோடு *108 கவிதைகள்* புனைந்து இந்நூலை வெளியிடுகிறார். துவங்குகையில், கவிதைக்கு விளக்கமாக *‘தனித்தன்மையுடன் பூப்பதே கவிதை’* - எனத் துவங்கி அடுத்த கவிதையில் *‘மனதைத் தொட்ட வடிவெல்லாம் எனக்குக் கவிதையானது’* -என முரசடித்து கோலாகலமாய்த் துவங்குகிறார் கவிஞர்.
எல்லாருக்கும் பிடித்ததை செய்து தரும் *அம்மாவுக்கு தனக்கு எது பிடிக்கும் என்பது மறந்து போனதை* நெகிழ்ச்சியோடு மூன்றாம் கவிதை சொல்கிறது.
அதற்கு அடுத்த கவிதையோ வயிற்றில் சுமக்க முடியாது போனாலும் தோளிலும் முதுகிலும் சுமந்த பின், *வாழ் நாளெல்லாம் மனதில் சுமக்கும் தந்தையின் பாசத்தை* உணர்ச்சியோடு சொல்கிறது.
அலைபேசி உலகில் *பாட்டிகள்* பற்றி ஒரு கவிதை, கவலைகளைப் பகிர, *வாழ்க்கைக் கோலம்* எனும் கவிதையில் ‘கோலமோ அலங்கோலமோ அழிந்தாக வேண்டும் என்றுலும் வாழ்ந்துதான் தீர வேண்டும்’ - என தத்துவத்தைச் சொல்கிறது
*‘வண்ணம்’* கவிதையில் வண்ண பேதம் பார்க்கும் மனிதனை கவிஞர் சாடுகிறார். *'போனஸ்’* கவிதையிலோ வெயிலில் மழையும், மழையில் வெயிலையும் போனஸாகப் பார்த்தவர், இயற்கையை சீரழித்து மைனஸாகும் மனிதன் தொலைத்த மனிதத்தைத் தேடுகிறார்.
பூத்துக் குலுங்கும் செந்நிற மலர்கள் இவரை சிலிர்க்க வைத்ததைப் பார்க்கலாம். ரயில் நிலையத்தில் உறவுகளை நோக்கி ஓடும் குழந்தை மூலம் உறவுகள் மகிழ வைப்பதைப் படிக்கலாம்.
14-ம் கவிதை புள்ளினங்களின் ஒலியை சிதறடிக்கும் வாகனத்தின் ஒலிப்பான் ஒலியை விவரிக்கிறது. 18-ஆம் கவிதையோ கடிதங்கள் பற்றி உணர்வுகளைத் தட்டி எழுப்புகிறது. அதற்கு அடுத்த கவிதையோ கையெழுத்து பற்றிய சிந்தனைகளை கல்வெட்டு போல் பதிவேற்றி வைக்கிறது. அதிலும் *‘கையெழுத்து எப்படி இருந்தாலும் மனதின் மொழி புரிந்து விடும்* எனும் கூற்று உறவின் மேன்மையை உரக்கச் சொல்கிறது.
‘வீடென்பது’ உணர்வுகளின் பின்னல் எனப் பதிவேற்றியதோடு காலியான வீடு, நினைவுகள் பூட்டிய வீடு, திண்ணை தொலைத்த வீடு, ஊரில் வீடு, திண்ணையின் கதை என வீட்டைப் பற்றிய கவிதைகளில் ஒவ்வொருவரின் இளமைக் கால நினைவுகளையும் அசை போட வைக்கிறார் கவிஞர்.
*‘என்சொல்வேன்’* எனும் கவிதையில் பெண் குழந்தைகளுக்கு, *‘தலை நிமிர்ந்து வாழ்வோம்... தலை குனிந்து ஒதுங்கோம்!!!...”* (மூன்று ஆச்சரியக் குறிகளோடு) என ஆணித்தரமாய் அறிவுறுத்துகிறார்.
மண், மழை எனவும் பயணிக்கிறார். மரணம் எனும் தலைப்பில் முத்தான நான்கு ஹைக்கூ...
கனவு, கடமை, ஏக்கம் என எல்லாவற்றையும் நசுக்கிச் செல்லும் வாகனத்தை *‘விபத்து’* கவிதையில் பார்க்கலாம். துரத்தும் கனவுகளை, பற்பல கேள்விகளை நாமும் வாசிக்கலாம்.
சிக்னலில் பொருட்கள் விற்கும் ஏழையின் குரலாய், சாலைகளில் விளையாடவியலா சிறார்களின் குரலாய் கவிஞர் ஆதங்கம் தெறித்து வெடிக்கிறது. மருத்துவமனை பொழுதுகள், நீர்க்குமிழி கனவுகள் பற்றி உணர்ச்சியோடு பேசுகிறார்.
மனதைக் குளமாய், மாயையாய், கண்ணாடியாய் சித்தரிப்பது *‘மனம்’* எனும் கவிதை. நிராகரிக்கப் பட்ட / படாத கவிதைகளை முத்துகளோடு ஒப்பிடுகிறது *‘முத்துகளும் கவிதைகளும்’.* இதனைப் படிக்கையில் இவர் கவிதைகள் எல்லாம் நிராகரிக்கக் கூடாத, நிராகரிக்கப்பட முடியாத, நல் முத்துகளே எனும் எண்ணம் நம் மனதில் இழையோடுவது உண்மை.
காற்றை வரவழைக்க கதை பேசக் கூப்பிடுகிறார் ஒரு கவிதையில். *‘சன்னல் திறந்தால் சுதந்திரமாக நுழைந்தன காற்றும் வெளிச்சமும்’* என சிலிர்க்கிறார் வேறொரு கவிதையில்.
*“ஓசை ஒத்தப் பாக்கள்”* படைத்து அளித்துள்ளார் 72-ஆம் கவிதையில்.
77-ஆம் கவிதையிலோ காணாமல் போன காக்கை குருவி மீண்டு வர விண்ணப்பிக்கிறார்.
மழலையின் சிரிப்பு, தித்திக்கும் முத்தம், மழலை இன்பம் என குழந்தைகளைச் சுற்றிச் சுற்றி ருசியாய் ரசித்திடவே சில கவிதைகள். மனதின் அடியாழத்தில் தேங்கிக் கிடக்கும் ஏக்கங்களின் வெளிப்பாடாய் சில கவிதைகள், சமூகப் பார்வை கொண்டு பெண்ணியம் பேசும் புரட்சிக் கவிதைகள் என நூல் நெடுக மனங்கவரும் சொல்லாடல்களோடு, சிந்தனையைத் தூண்டும் கருத்தாங்களோடு, படிக்க வைக்கும் சுவாரசியத்தை அதிகரிக்கும் சொல்லாட்சி கொண்டு இந்நூலினை வடித்துக் கொடுத்துள்ள கவிஞர். அமுதவல்லி நிச்சயமாக தமிழன்னையின் பரிபூரண அருள் பெற்றவர். இவரது எழுத்துகள் இவர் வாசித்தலில் நாட்டம் கொண்டவர் என்பதை உறுதி செய்கிறது.
அதிலும் முத்தாய்ப்பாக இந்நூலின் நிறைவுக் கவிதையாக *‘என்றும் நானறியேன்’* எனும் கவிதையைப் படைத்துள்ளார். அதில் தாத்தா, பாட்டி, சின்ன அத்தை, மாமா என ஒவ்வொரு உறவுகளையும் ஒவ்வொரு பொருள் நினைவு படுத்துவதை பட்டியலிட்டு விட்டு, தன்னை நினைவுறுத்த என்ன இருக்கும் என அறியேன் என அங்கலாய்ப்போடு நூலை நிறைவு செய்கிறார்.
கவிஞர் இப்படி அங்கலாய்க்கத் தேவையில்லை என்பதை *‘என்றும் நானறியேன்’* எனும் இந்நூலே உரக்கச் சொல்கிறது. கவிஞரின் கால் தடத்தை தமிழ்ச் சமூகத்தில் கல் வெட்டாய்ப் பதிக்கிறது. தலைமுறைகள் கடந்து நிற்பது படைப்பாளியின் எழுத்துகளே! இவர் தன் தடத்தைப் பதிப்பதிலே வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
நான் அறுதியிட்டு உறுதியாகச் சொல்லிடுவேன்! அமுதவல்லி அவர்களின் கவிதைகள் நல் முத்துகளே. வெகுசீக்கிரம் இவர் நவமணிகள் கொண்ட கவிமாலை ஒன்றினை தமிழன்னைக்குச் சூடட்டும். அந்நாள் விரைவில் வந்திடட்டும். இவர் இலக்கிய உலகில் உற்சாகமாய் வெற்றி உலா வருவார் என்பதை ‘என்றென்றும் நானறிவேன்’. உறுதி செய்கிறது.
என்னையும் மதித்து இந்நூலுக்கு அணிந்துரை வழங்கச் சொன்ன கவிஞருக்கு என் நன்றிகள். சிறந்ததொரு நூலினை படைத்தளித்தமைக்கு வாழ்த்துகள்.
அன்புடன்,
*ஸ்ரீவி*
(ஜெ. ஸ்ரீவெங்கடேஷ்)
கவிஞர்,
எழுத்தாளர்,
தலைவர்,
*மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம்.*
******************************************
*கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்* எனும் பழமொழிக்கு உதாரணமாக நான் இங்கு நிற்கிறேன். அறுபது ஆண்டுகள் தமிழை ஒருபுறம் வைத்து வாழ்ந்து, இப்போது அதன் இனிமையில் மூழ்கி மகிழும் என்னைப் புத்தக விமர்சனம் எழுதச் சொன்ன தலைவரின் துணிச்சல் பாராட்டத்தக்கது.
ஒரு திரைப்படத்தில் வடிவேலு, காமெடி காட்சியொன்றில், “இசை என்றால் என்ன?” என்று கேட்டு, *குட்டும்போது கேட்கும் சத்தமும் இசையே* எனக் கூறுவார்., அதேபோல் அமுதவல்லி தன் *என்றும் நானறியேன்* கவிதைத் தொகுப்பின் முதல் கவிதையே *கவிதை* என்று தொடங்கி, ஒரே கருத்தை ஆயிரம் பேர் ஆயிரம் விதங்களில் சொன்னாலும், சொல்லாக்கத்தின் தனித்தன்மையால் *கவிதை புதுமையாகப் பூப்பதாகக் கூறுகிறார்.*
கவிதையின் இலக்கணத்தை அழகுற வரையறுத்து, *கவிதை என்று எதைச் சொல்வேன்..* என்று கேட்டு மழலையையும் மலரையும் ரசிக்கும்போது அவற்றை அன்பெனவும் அழகெனவும் உணர்பவர்கள், *தோட்டத்தில் மழலையை மலரென உருவகிக்கும்போது*
அதுவே கவிதையென மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்று முடிக்கிறார். இத்தகைய உணர்வு நயத்துடன், அமுதவல்லி தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் 108 மந்திரங்களாக (108 கவிதைகளாக) தீட்டியுள்ளார். ஒவ்வொரு கவிதையும் வாழ்வின் சுவடுகளை, உணர்ச்சிகளின் உன்னதத்தை, அன்பின் ஆழத்தைப் பிரதிபலிக்கிறது.
அமுதவல்லியின் முன்னுரையும் அறிமுகமும் இத்தொகுப்பில் தேவையற்றவையாகத் தோன்றுகின்றன, ஏனெனில் *என்றும் நானறியேன்* தன் கவிதைகளின் வழியாகத் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகிறது. இதைப் படிக்கும் வாசகர்கள், ஆசிரியரின் உள்ளத்தை, அவரது வாழ்வின் நுட்பமான தருணங்களை, அவரது சிந்தனைகளின் ஆழத்தை உணர முடிகிறது. “என்றும் நானறியேன்” என்ற தலைப்பு, தன்னைத் தேடும் பயணத்தின் அடையாளமாக இருப்பினும், இந்தத் தொகுப்பு
*அமுதவல்லியை முழுமையாக அறிந்து கொள்ள வாசகர்களுக்கு வழிகாட்டுகிறது.*
- தியாகராஜன்
*************************************************
அமுதவல்லி அவர்களே உங்கள் அருமையான " என்றும் நான் அறியேன்" கவிதை புத்தகம் பெற்றேன்
என்ன பேரு பெற்றேன்
என்றே சொல்ல வேண்டும்
கவிதை என்று எதைச் சொல்வேன் வினவினீர்கள்
விடை இதோ உங்கள் தமிழை!
தனக்கு என்ன பிடிக்கும் என்று மறந்து போன அம்மாவுக்கும்
அடுத்து வரும் தந்தை பாசம்
ஏங்குகிறேன் நானும் சமீபத்தில் இழந்ததால்
பாவம் பாட்டி அலைபேசி உலகில் மாட்டிக் கொண்டார்
பக்கத்தில் பார்த்தால் வண்ணங்களின் ஓவியம்
வீடு என்பது நினைவூட்டுகிறது பாவேந்தரின் குடும்ப விளக்கு
காலியான வீட்டுக்கு அவர் எழுதிய இருண்ட வீடு
இருந்த நினைவால் நீங்கள் பூட்டிய வீட்டில்
தொலைந்து போன திண்ணைக்காய் ஆழ்ந்த இரங்கல்
உங்களைப் போல் எனக்கும் ஓரத்தில் உறுத்தல்
நன்றிகள், சந்தித்த துரோகங்கள், செய்த தவறுகள் என
உங்கள் இணை சொல் நயம் இல்லாததால் உங்கள் வரிகள் சிலவற்றையே இங்கு சமர்ப்பிக்கிறேன்
இழப்பின் ஆழத்தில் இழுக்கும்
இரவொன்று விழுங்கக் காத்திருக்கும் தனிமையில்...
காட்சிப்பிழையாக நீண்டு தெரிகிறது வாழ்க்கை!
*என்றும் அறிந்திடுங்கள் உங்கள் கவிதையே உங்களை நினைவுறுத்தும்!!*
- ஸ்ரீவித்யா
************************************************
No comments:
Post a Comment