நூல் : கோடையிடிக்காமுவும் தொடைநடுங்கிசோமுவும்
ஆசிரியர்: ஸ்ரீவி
****************************************************************************
அணிந்துரை:
தொலைக் காட்சியில் வரும் நெடுந் தொடர்கள் என்றாலே அழுது வடியும் தொடர்களும், இயற்கைக்கு மாறான தவறான உறவுகளை சித்தரிக்கும் தொடர்களும் - இல்லை என்றால் நூற்றுக்கணக்கான எபிசோட்களைக் கடந்து வருடக் கணக்கில் அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும் ரப்பர் சீரியல் தொடர்களும்தான் என்கின்ற எண்ணம் எல்லார் மனதிலும் ஆழமாக இருக்கிறது. ஆனால், அத்தி பூத்தது போல, டிவி-யில் ஓர் அதிசயம் நடக்கும். காமெடித் தொடர்கள் டிவி-யில் வந்து ஒரு கலக்கு கலக்கும். அந்த வரிசையில்,
திரு. எஸ்.வி. சேகரின் ‘நம் குடும்பம்’ எனும் தொடர்,
திரு. கிரேசி மோகன் அவர்களின் ‘நில் கவனி கிரேசி’ எனும் தொடர்,
திரு. ஒய் ஜி மகேந்திரா அவர்கள் தயாரித்த ‘வசூல் சக்கரவர்த்தி’ எனும் நகைச்சுவைத் தொடர்,
நடிகை திருமதி. ஸ்ரீபிரியா அவர்கள் எழுதி இயக்கிய “சின்ன பாப்பா பெரிய பாப்பா” - நகைச்சுவை தொடர்,
அடடே மனோகர் எழுதிய இயக்கிய அதே பெயரிலே வந்த ‘அடடே மனோகர்’ எனும் தொடர்,
திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களது ‘துப்பறியும் சாம்பு’ தொடர்,
இயக்குனர் சிகரம் திரு. கே. பி. அவர்கள் இயக்கிய ‘வீட்டுக்கு வீடு’ எனும் தொடர்,
நான் நடித்த ‘காமெடி காலனி’ மற்றும் திருமதி. ஊர்வசியும் நானும் நடித்த “ருக்கு ருக்குமணி” எனும் தொடர்கள்,
நாகா சார் அவர்கள் இயக்கிய ‘ரமணி Vs. ரமணி’ எனும் தொடர்.
இவைகள் எல்லாம் முத்திரை பதித்த நகைச்சுவை தொடர்கள். போர் அடிக்கும் சீரியல்களை பார்த்து நொந்து போயிருந்த ரசிகர்களை மன மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய மிகப் பிரபலமான நகைச்சுவை தொடர்கள்.
ஒரு நூல் அணிந்துரையில் எதற்கு தொலைக் காட்சித் தொடர்களைப் பற்றி இவ்வளவு பெரிய பீடிகை என்ற ஓர் ஆச்சரியம் வருகிறதா! இதற்கு ஒரு காரணம் உண்டு. அலுப்பு தட்டிப் போன விஷயங்களில் கூட ஆர்வம் தரக்கூடிய ஒரே ஒரு விஷயம் நகைச்சுவையே. ஆதலால் ஒரு நகைச்சுவை புத்தகத்தைப் பற்றி அணிந்துரை வழங்கும் பொழுது இந்த முன்னுரை அவசியமாகிறது.
இனிமேல் டிவியில் நெடுந் தொடர்களாகவோ அல்லது வாராந்திரியாகவோ நகைச்சுவைத் தொடர்கள் எடுக்கலாம் என யாராவது நினைத்தார்கள் என்றால் அவர்களுக்கு திரு. ஸ்ரீவி அவர்கள் எழுதிய இந்த நகைச்சுவை நூலை நான் பரிந்துரைக்கின்றேன். அவரின் முதல் நகைச்சுவை படைப்பு மாதிரி இந்நூல் தெரியவில்லை. இவர் எழுதிய பிற படைப்புகளை நான் படித்திருக்கின்றேன் அவருடன் நெருங்கி பழகியும் வருகிறேன். அவருடைய தமிழ் ஆற்றல் என்னை வியக்க வைத்தது. ஆனால் அவர் தனது நகைச்சுவை கதைகள் மூலமாக முதன் முறையாக என்னை மிகவும் அசத்தியிருக்கிறார். நிச்சயமாக நகைச்சுவைக் கதைகள் எழுதுவதில் அவருடைய கன்னி முயற்சியாக இது தெரியவில்லை. அவர் மிகவும் ரசித்திருக்கும் *பாக்கியம் ராமசாமியின் ‘அப்புசாமி - சீதாப்பாட்டி’* தொடராகட்டும், *தேவனின் ‘துப்பறியும் சாம்பு’* தொடராகட்டும் காலத்தால் அழியாத நகைச்சுவை காவியங்கள் ஆகும். அந்த வரிசையில் எந்த விதத்திலும் சோடை போகாது, எல்லோர் வாழ்க்கையிலும் இயல்பாக நடக்கக் கூடிய இயல்பான நகைச்சுவையை மிக இயல்பாக நல்லதொரு நடையில் அனைவரும் ரசித்து மகிழக்கூடிய அளவில் அவர் எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. ஒரு டீசன்ட் டிராயிங் ரூம் ஹியூமர் *(Decent drawing room humour)* என ஆங்கிலத்தில் சொல்லக் கூடிய குடும்பத்தோடு அமர்ந்து பகிரக் கூடிய, கதைகள் பற்றி பேசக்கூடிய சிறந்த நகைச்சுவை கதைகளாக இக்கதைகள் அமைந்திருப்பது மிகச் சிறப்பு.
இந்நூலில், உடல் அமைப்பை கிண்டல் செய்யும் பாடி ஷேமிங் (body shaming) அறவே இல்லாமல், நகைச்சுவை மிகவும் தரமானதாக இருக்கிறது. இதைப் போன்ற தரமான நகைச்சுவை தொடர்கள் அதிகமாக வர வேண்டும் என்பதே என் போன்ற நகைச்சுவை ரசிகர்களின் பேரவா. அநேகமாக, பெரும்பான்மை ரசிகர்களின் அவாவும் இதுவாகத்தான் இருக்கும்.
குடும்பத்தில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் படிக்கக்கூடிய, பகிர்ந்து மகிழக் கூடிய ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நூலாக நான் *ஸ்ரீவி அவர்கள் எழுதிய ‘கோடையிடிக் காமுவும் தொடை நடுங்கி சோமுவும்’* என்கின்ற இந்த நூலை குறிப்பிடுவேன். காமு - சோமு என்கின்ற அந்த இரண்டு கதாபாத்திரங்களை ரசிக்காமல் யாருமே இருக்க முடியாது. என் நினைவு இதுபோன்ற பல இந்தி காமெடி சீரியல்கள் பக்கம் செல்கிறது. ஏஹ் ஜோ ஹை ஜிந்தகி, இதர் உதர், மிஸ்டர் அண்ட் மிஸஸ், வாக்லே கி துணியா போன்ற இந்தி காமெடி சீரியல்கள் ஒரு காலத்தில் கோலோச்சின. நான் துவக்கத்தில் பட்டியலிட்ட பற்பல தமிழ் காமெடி சீரியல்கள், தமிழ் நாட்டில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதை நாம் அறிவோம்.
*அந்த வரிசையில் இந்த நூலும் ஒரு தொலைக்காட்சித் தொடராகவோ அல்லது திரைப் படமாகவோ வரக்கூடிய அளவிற்கு இதில் சரக்கு உள்ளது.* அப்படி நடந்தால் சந்தோஷப்படக்கூடிய முதலாவது நபர் நான் தான்.
அந்த அளவிற்கு சிறப்பாக இந்நூலை ஸ்ரீவி அவர்கள் எழுதியிருக்கிறார். நகைச்சுவை வறட்சி இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில், மிகச் சிறப்பாக நகைச்சுவை எழுதக்கூடிய ஒரு நகைச்சுவை எழுத்தாளராக இவர் வந்திருப்பது நகைச்சுவைப் பட்டாளம் (comedy battallion) என சொல்லக்கூடிய நகைச்சுவை ரசிகப் பெருமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செய்தி. என்னைப் போன்ற காமெடியை ரசிக்கக் கூடிய வாசகர்களுக்கு இவரது வருகையும் இந்நூலும் ஒரு வரப் பிரசாதமே.
கதைகளைப் படிக்கும் போதே என் கண் முன்னே அந்த காட்சிகள் விசுவலாக விரிந்தன. அவ்வளவு பிரமாதமாக அவர் எழுதியிருக்கிறார். கதைகளைப் பற்றி இதற்கு மேலும் அதிகமாக நான் கூறி, கதைகளைப் படிக்காமலேயே அதைப்பற்றி ஒரு கருத்தியலை வாசகர்களிடம் உருவாக்க நான் தயாராக இல்லை. ஏனெனில் அது கதை படிப்பவர்களுக்கு ஸ்பாய்ல் - ஸ்போர்ட்டாக (spoil sport) ஆக ஆகி விடக் கூடாது. ஆனாலும் ஒன்றை நான் இங்கு வலியுறுத்தி கூற விரும்புகிறேன் எல்லார் வீட்டிலும் காமு சோமு என்கின்ற இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நிச்சயமாக இருக்கின்றார்கள். நீங்கள் படிக்கும் போதே அதை நிச்சயமாக உணருவீர்கள். மிகவும் ரசிக்கும்படியாக தினம் தினம் நமது இல்லங்களில் நடைபெறும் காட்சிகளை நகைச்சுவையாக அவர் அளித்திருப்பதோடு கதையில் ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் வைத்திருப்பது மிகவும் ரசிக்கும்படி அருமையாக இருக்கிறது. அந்த முடிவுகளும் சந்தோஷமாக அமைவது கூடுதல் சிறப்பு.
*கூடிய விரைவில் அவர் நகைச்சுவை உலகத்திற்கு ஒரு நகைச்சுவை வசனகர்த்தாவாகவோ அல்லது நகைச்சுவைத் தொடர்களுக்கு எழுதக் கூடிய கதாசிரியராகவோ அல்லது இதைப் போன்ற தரமான நகைச்சுவை நூல்களை தொடர்ந்து தரக்கூடிய ஒரு நல்ல நகைச்சுவை எழுத்தாளராகவோ கொடி கட்டி பறக்கக் கூடிய அளவிலே அவர் வலம் வருவார்* என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அவர் எழுதக் கூடிய பிற நகைச்சுவை தொடர்களையும் படிப்பதற்காக ஆவலோடு நான் காத்திருக்கிறேன்.
இதுபோலவே, அவர் எழுதியிருக்கக் கூடிய பிற நூல்களையும் நான் இங்கு பரிந்துரைக்க விரும்புகிறேன். பாரதியாரின் புதிய ஆத்திசூடியை ஒட்டி அவர் எழுதியிருக்க கூடிய “புதிய ஆத்திசூடிக் கதைகள்” (பாகம் 1 & பாகம் 2) ஆகிய இரு நூல்களும், சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய “பாரதியின் வைர வரிகள் தந்த கதைகள்” எனும் நூலும் வெளியிட்டதோடு, சென்னை பள்ளிக்கரணையில் இருக்கும் ‘மகாகவி பாரதி தமிழ் சங்க’த்தின் சார்பில் நடத்தப்பட்ட ‘ழகர கவியரங்க’த்தில் அரங்கேறிய கவிஞர்களின் பல்வேறு கவிதைகளை தொகுத்து ஒரு நூலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நூல்கள் இவை.
தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும், தமிழ் வாசிப்பை விரும்புவர்களுக்கும், நகைச்சுவை பிரியர்களுக்கும் தொடர்ந்து தனது எழுத்தால் தீனி போட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஸ்ரீவி அவர்கள் மேலும் மேலும் எல்லாப் புகழும், வளமும் பெற்று சரஸ்வதியின் ஆசியோடு தொடர்ந்து தமிழ் எழுத்து உலகில் வெற்றியோடு பயணிப்பார் என்பதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது. நல்ல நகைச்சுவை நூலை தந்தமைக்கு எனது பாராட்டுகள். அவர் மென்மேலும் வெற்றிகளைக் குவிக்க எனது வாழ்த்துக்கள். என்னை அணிந்துரை எழுத கேட்டுக் கொண்டதற்கு எனது நன்றிகள்.
பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்,
அன்புடன்,
*சாய்ராம்*
பன்முகக் கலைஞர்,
(சின்ன/பெரிய திரை) நடிகர், பாடகர்,
நிதிச் செயலர்,
*மகாகவி பாரதி தமிழ் சங்கம் - சென்னை 100.*
***************************************************************************
********************************************************************
கோடையிடிக்காமுவும் தொடைநடுங்கிசோமுவும்
---விமர்சனம்
*******************************
இன்று இந்த புத்தகத்தை கையில் எடுத்தேன்...முடித்த பின் தான் கீழே வைத்தேன். மிக சுவாரஸ்யமான நகைச்சுவை இழையோடும் கதைகள். ஆசிரியரின் கதை சொல்லும் திறன் அவரது ஒவ்வொரு புத்தகத்திலும் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. கதைகள் அனைத்தும் யதார்த்தங்களை பிரதிபலிக்கின்றன. அலை பாயும் மனதை கொசுறுகள் தூண்டிலாக மயக்கும் கதையை சொல்கின்றன. இயல்பான நடை மனதை கவர்கிறது. அணிந்துரையில் சாய்ராம் ஐயா சொன்னது போல் தொடராக (அ) திரைப்படமாக வந்தால் நிச்சயம் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். ரமணி vs ரமணி போல் கோமு-சோமுவை மனதில் ஓடவிட்டு ரசித்தேன். இயல்பான நடைக்காக நிறைய ஆங்கில வசனங்கள் இருந்தன. அவை சற்றே குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. வாசிப்பை அனுபவிப்போர் கட்டாயம் இப்புத்தகத்தை விரும்புவர். ஆசிரியரின் எழுத்துலக பயணம் மேலும் பல மைல்கல்களை அடைய வாழ்த்துகள் 💐
- அமுதவல்லி
********************************************************************
*காமு-சோமு என் பார்வை*
இந்த தொடர் உரையாடல், கதை, காமுவின் இயல்பான வாழ்க்கை, அதில் நிகழும் சில்லறை மாற்றங்கள், பின்னர் பரிணாமமாகும் வாழ்க்கை மாற்றங்களை நம்மிடம் நகைச்சுவையோடும், நுட்பமான மன ஓட்டங்களோடும் சொல்கிறது. சிறந்த கதை சொல்லல் நயங்களும் மனித உறவுகளின் உள்ளார்ந்த பரிமாணங்களும் நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
*நல்ல அம்சங்கள்:*
1. சோமுவின் உள்ளார்ந்த எண்ணங்கள் (mind voice) தனிப்பட்ட சுவையை தருகின்றன. “சோமசுந்தரா… வசமா மாட்டிக்கிட்டடா” போன்ற இடங்களில் வாசகர் நிஜமாகவே சிரிக்காமல் இருக்க முடியாது.
2. காமு-சோமு உறவின் இயல்பு மற்றும் அதன் சிக்கலான அமைப்புகள், தம்பதியினர் மனநிலை மற்றும் உரையாடல் வழியே அழகாகத் தெரிகின்றன. சிறு குறிப்பு கூட, பிணைப்பு அல்லது பிளவு உருவாக்கக்கூடியது என்பது ந்ன்கு காணப்படுகிறது.
3. நகைச்சுவை:
தொடர்ச்சியான மெல்லிய நகைச்சுவை, குறிப்பாக சோமுவின் எதிர்பாராத சந்தேகங்கள் மற்றும் தப்பிக்க முயற்சிகள் (“*ஐய்யய்யோ… செத்தாண்டா சேகரு”)* புன்னகை செய்ய வைக்கின்றன.
4. சமூகக் கிண்டல்:
ஹெர்பல் ப்ராடக்ட்ஸ், ஆர்கானிக் உணவு, யோகா, பிளாட்டினம் கார்டு போன்ற சமகால வாழ்க்கை முறைகளை வெகு நயமாக கிண்டலாகவும் விமர்சனமாகவும் நகைச்சுவையோடும் சொல்லும் விதம் மிக அருமை.
5. நேர்த்தியான பின்தள அமைப்பு:
ஹரிகதா காலட்சேபம், சுண்டல், திருப்பதி தரிசனம் போன்ற ஊடாடும் காட்சிகள் தமிழின் மதவழக்குகள் மற்றும் நினைவுக் களங்களை வரைவது போல காமுவின் வாழ்க்கையின் ஓரங்களில் ஒட்டுகின்றன.
*சிறிதளவு கவனிக்க வேண்டிய அம்சங்கள்:*
1. சில இடங்களில் வாசிப்பு நீட்டிப்பாக உணரலாம்:
திடீர் தகவல்கள் (விக்கி, இன்டஸ்ட்ரி விவரங்கள்) காமுவின் உணர்வியல் பாதையை சற்று மங்கச் செய்யும். அவற்றைக் கொஞ்சம் சுருக்கமாக சொல்லியிருந்தால் கதையின் ஓட்டத்தில் இடையூறு குறைந்திருக்குமே.
2. சில வார்த்தைகள் புழக்கச் சுவை குறைந்து போகலாம்:
“*பிளாட்டினம் கார்ட்”* போல சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதால் சற்றே புனைவு போலவும் விளம்பரக் கலப்பு போலவும் தோன்றலாம்.
*முடிவுரை:*
காமுவின் யோகா பயணம் ஒரு யோகா பயிற்சியின் புறக் கூறுகளைவிட அதன் பின்நிலையான வாழ்க்கை மாற்றங்களை, சிந்தனையின் குழப்பங்களை, உறவுக் கோட்பாடுகளின் சிக்கல்களை நகைச்சுவையாக வழங்குகிறது. சமகால வாழ்க்கையின் பரிமாணங்களைப் பேசி எழுதுவதில் இந்தப் பகுதியில் ஆசிரியரின் திறமையான எழுத்து தெளிவாகக் காட்சியளிக்கிறது.
👏👏👏👏
- தியாகராஜன்
*******************************************************************
No comments:
Post a Comment