Friday, August 8, 2025

"ஊர்க்குருவி"

 



நூல்: ஊர்க்குருவி

ஆசிரியர்: குத்தனூர் சேஷுதாஸ்


*****************************************************************************

திரு எம் கணேசன் எனும் குத்தனூர் சேசுதாஸ் அவர்களின் *ஊர் குருவி* எனும் கவிதை நூலின் அணிந்துரை:


*அணிந்துரை*


"மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம்" எமக்கு பல நல்ல தமிழ் உறவுகளைக் கொடுத்துள்ளது. அதில் ஒரு முக்கியமான தமிழ் உறவு அருமை *நண்பர் என். கணேசன்.* இவர் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கப் புலனக் குழுவில் தினம் ஒரு கவிதையாக தனது படைப்புகளைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் அருகே இருக்கும் குத்தனூர் கிராமத்தில் பிறந்த இவர், தனது ஊரின் பெயரையும் தனது பெயர் சொல்ல வந்த பேரனின் பெயரையும் இணைத்து *குத்தனூர் சேஷுதாஸ்* என்கின்ற புனைப் பெயரிலே கவிதைகளைப் படைத்து அளித்து வருகிறார். 


எங்கள் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நாங்கள் நடத்திய *"ழகரக் கவியரங்கம்"* என்னும் சிறப்புமிகு கவியரங்கத்தில் *"உழல்''* எனும் எதிர்மறைப் பொருள் தரும் அந்தச் சொல்லெடுத்து மிகச் சிறப்பானதொரு கவிதையை அவர் வாசித்தளித்தது குறிப்பிடத் தக்கது. 


அவரது தமிழ் ஆற்றல் மற்றும் தினம் ஒரு கவிதை பகிர வேண்டும் என்கின்ற அந்த ஆர்வம் அவரது படைப்புத் திறனை மேலும் மேலும் மெருகூட்டுகிறது கண்கூடு. அவரது படைப்புகள் பலவற்றைத் தொகுத்து அதனை ஒரு நூலாக வெளிக் கொணர வேண்டும் என்கின்ற எனது அவாவினை அவருடன் பலமுறை பேசி வந்தேன். அந்த அடிப்படையிலே இந்த நூலை அவர் தொகுத்து தன்னுடைய முதல் நூலாக வெளியிடுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது. மேலும் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது அவர் என்னை இந்நூலுக்கு அணிந்துரை எழுதச் சொன்னபோது. 


தினம் ஒரு கவிதை என்கின்ற அளவிலே, தன்னுடைய படைப்புகளைப் பகிர்ந்து வரும் ஒரு கவிஞர் தனது முதல் நூலுக்கு அணிந்துரை எழுதித் தரச் சொல்லும் போது அதை செய்வதற்கு தயக்கம் ஏதாவது வருமா என்ன! மிக மகிழ்ச்சியோடு அப்பொறுப்பினை ஏற்றேன்.


ஊர் நடப்புகளைப் படம் பிடிக்கும் கவிதைகளை *"ஊர் குருவி"* எனும் பெயரில் தொகுத்து ஒரு நூலாய் இவர் வெளியிட்டிருப்பது சிறப்பு. உயரப் பறந்தாலும் பருந்தாக இயலாது எனும் தன்னடக்க எண்ணத்தோடு இவர் இப்பெயரை இந்நூலுக்கு சூட்டியிருக்கக் கூடும். பருந்தாகாவிடில் என்ன, படிப்போருக்கு நல் விருந்தாக கவிதைகளைக் கொடுத்துள்ளாரே! அதுதானே ஒரு படைப்பாளிக்கு வெற்றி. 


நூலில் உள்ள சில கவி வரிகளை மட்டும் தொட்டுக் காட்டுதலை எனது கடமையாக நான் பார்க்கிறேன். இந்நூலைப் படிக்க விழையும் வாசகரின் வாசிப்பு முழுமை அடைய உதவும் ஒரு சிறு முயற்சியாக இதனை செய்வது நலமென உறுதியாக நம்புகிறேன். 


துவக்கமே வாழ்த்துக் கவியோடு களை கட்டும் இந்நூல் ஆர்வம் ஊட்டுகிறது. அந்தக் கவிதையில் இறையை, இயற்கையை, நாட்டைப் போற்றுவதோடு, தமிழன்னையால் வாழ்கிறேன் என பதிவு செய்து துவக்குகிறார் அவர் பயணத்தை. அடுத்து, இவரது அன்னையைப் போற்றும் கவிதையோடு தொடர்கிறார். 


இவரது கவிதைகள் ஒவ்வொன்றிலும் யதார்த்தம் இழையோடுகிறது. மலரும் நினைவுகள் மலர்கின்றன *[கூட்டாஞ்சோறு],* நாட்டுப் பற்று மிளிர்கிறது *[வெள்ளைக் காஷ்மீரம்],* தற்கால அவலம் விமர்சிக்கப் படுகிறது *[குட்டிப் பிசாசு]*

வறுமையின் கொடுமை தாண்டவம் ஆடுகிறது *[குழந்தைகள் பாரீர்]* தமிழை மறக்கும் தமிழ் சமுதாயம் பற்றி கவலைப் படுகிறது *[தள்ளாடும் தாய்மொழி தினம்]* இன்றைய ஊடகங்களின் நிலையை எள்ளி நகையாடுகிறது *[பாவம் பத்திரிக்கை]* 


இவ்வாறு பற்பல சிந்தனைகள் ஊற்றெடுக்கும் அற்புத படைப்பு இந்நூல். மேலும் *அன்னை, தந்தை, தாத்தா, பாட்டி, மகள், பேரன், பேத்தி*  என உறவுகள் பற்றிய கவிதைகள் நல்லுறவுகள் பற்றி முரசறைகின்றன. *அன்னையர் தினம், மழலையர் தினம்* என கொண்டாடப் படும் பற்பல தினங்கள், இவரால் கொண்டாடப் படுகின்றன.


இதற்கு மேலும் உங்களுக்கும், இக்கவிதைகளுக்கும் இடையே நிற்க  மாட்டேன். படித்து ரசியுங்கள். இந்த கவிதைகளைப் படித்த பின், உங்கள் கருத்துகளையும் அந்தப் படைப்பாளியோடு பகிர்ந்து கொள்ளுங்கள். அவருக்கு அது பேருதவியாக அமையும்.


குத்தனூர் கவிஞரே! உங்களுடைய தமிழ்ப் பயணம் மிகச் சிறப்பாகத் துவங்கியுள்ளது. உங்களுடைய முதல் நூல் இதோ வெளியாகிவிட்டது. இந்த துவக்கம் நல்லதொரு இனிய துவக்கமாக அமைந்து, உங்களுடைய தமிழ்ப் பயணம் தொய்வின்றி மிகச் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நிறைய எழுதுங்கள். அடுத்தடுத்த நூல்களை வெளியிடுங்கள்! நன்றி.


அன்புடன், 

*ஸ்ரீவி*

(என்கின்ற)

ஜெ. ஸ்ரீ வெங்கடேஷ் கவிஞர், 

எழுத்தாளர், 

தலைவர்,

*(மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சென்னை 100).*

*****************************************************************************

ஊர்க் குருவி -நூல் விமர்சனம் 

--_----------------------------------

கவிதைகள் வாசிப்பதில் ஒரு வசதி...ஊர்க்குருவி கொத்தி கொத்தி அரிசி எடுப்பது போல் பட்டென்று பக்கம் ஒன்றை எடுத்து சட்டென்று கவிதை படித்துவிடலாம். கணேசன் ஐயாவின் கவிதைகள் ஏற்கனவே வாசித்தது என்றாலும்...புத்தகத்தில் வாசிப்பது , வாழை இலையில் விருந்து அருந்துவது போல் தனிச் சுவை. இம்மென்றால் கவிதை ஏனென்றால் கவிதை என எதை பற்றி வேண்டும் என்றாலும் எழுதும் திறன் கொண்ட நம் கவிஞர் இந்த நூறு கவிதைகளில் எதையும் விடவில்லை. தாய் தந்தை குழந்தை பேரக்குழந்தை என உறவுகள் இயற்கை, வாய் காது என உறுப்புகள் , முருங்கை, சுண்டை என காய்கள் , பாரதியார், பாவேந்தர் உலக தினங்கள்  மட்டுமல்ல எருமையுடன் கொசுவையும் பாடி அசத்தி உள்ளார் நம் கவிஞர். அடிக்கடி நிறம் மாற்றும் நீ! பச்சோந்தியா? என சமூகத்தின் சீர்கேடுகளைச் சாடவும் தவறவில்லை இவர். ஊர்க்குருவி வாசிப்பவரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை. 


- அமுதவல்லி நாராயணன்

********************************************************************************

115 கவிதைகளை அனாயசியமாக எழுதிவிட்டு தன்னை “ஊர்க்குருவி” என்றும், ஆனால் உயரப் பறக்கத் துடிப்பதாகவும் சொல்வது நம் *குத்தனூர் சேஷுதாஷ் கணேசன் ஐயாவின் தன்னடக்கத்தைக் காணும் போது மெய் சிலிர்க்கிறது.*


தன் எளிய கவிதைச் சிறகுகளால் நாளும் உயர முயல்வதாக அவர் கூறும்போது, பேரனைக் கண்ட பின் உறங்கிக் கிடந்த தமிழார்வம் மீண்டும் முளைத்ததாக அவர் சொல்வதிலும் அவரது உள்ளார்ந்த உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது.


ஐயா, *விதை எப்போதும் உறங்குவதில்லை.* சரியான நேரத்தில் அதை விதைக்க வேண்டும், அவ்வளவுதான்! அந்த “சரியான நேரம்” என்பதே, நீங்கள் பேரனைக் கண்ட தருணம் தான்.


“ஊர்க்குருவி” என்ற உங்கள் சொற்றொடரை, நான் “சிட்டுக்குருவி” என்றே எடுத்துக்கொள்கிறேன்.


*தாயில் சிறந்த கோயில் இல்லை* என்பதற்கிணங்க, தமிழ்த்தாயை வாழ்த்தி, அன்னையை போற்றி, அவளின் அமுதமாம் கூட்டாஞ்சோறு என்று தொடங்கிய உங்கள் வரிகள், ஏற்கனவே உங்களை உயரத்தில் எடுத்து நிறுத்தி விட்டன ஐயா. அப்படி இருக்க, இன்னும் *ஏன் இந்த பேராசை?*


*சிங்கத்தின் வாலாக இருப்பதைவிட, எலியின் தலையாக இருப்பதே சிறப்பு* என்பார்கள். அதுபோல், பருந்தாக உயரப் பறந்து சிலரால் மட்டுமே பாராட்டப்படுவதற்குப் பதில், *அனைவராலும் விரும்பப்படும் ஊர்க்குருவியாகவே (சிட்டுக்குருவியாகவே) இருத்தல் நன்றன்றோ!*


இன்றைய காலத்தில் மொபைல் போன்களின் தாக்கத்தால் சிட்டுக்குருவிகள் மறைந்துவிட்டன; மண்ணின் மனம் மங்கியிருக்கிறது. அத்தகைய நேரத்தில் நமக்கு அந்த மண்ணின் மனதை மீட்டுக் கொடுக்க வேண்டியது ஊர்க்குருவிகள் தான்.


அதனால் தான், ஐயா, நீங்களே ஊர்க்குருவியாக இருந்து, இன்னும் பல சிறந்த படைப்புகளை தந்து, எங்களை மகிழ்விக்க வேண்டும். எங்களுக்கு தங்களைப்  போன்ற ஊர்க்குருவிகள் மிகவும் தேவை!

அனைவரும் ஊர்க்குருவியை படிக்கவும்! அப்போது தான் நான் கூறுவதில் உள்ள நியாயம் புரியும்.

- தியாகராஜன்

*********************************************************************************

என்னங்க இப்படி ஏமாற்றி இருக்கிறார் இந்த  குத்தனூரார்

  இப்படியும் தன்னடக்கமா

 குருவி என்று கூறிவிட்டு

 ஒரு பறவை பார்வையில் முழு

 உலகையும் உலாவரச் செய்திருக்கிறார்  இவர் கவிதையால்!!


 முன்னுரை தமிழே உன்னால் வாழ்கிறேன் என்றார்

 வள்ளுவரைப் போல் ஆதி பகவன் அம்மையப்பனை போற்றி எழுத ஆரம்பிக்கிறார் 

 என்றே நினைத்தேன் நானும்  ஓர் அதிர்ச்சி

 வாழ்க்கையின்  அடிக்கல் அப்பாவை  கல் என்று கூறியிருப்பார்

 அந்தக் கல்லையும் காதலால் கரைத்த  அம்மாவின் புகழ் பாட!


 சற்றே சுதாரித்து  அடுத்த கவிதைக்குச் சென்றால்

 சோறு முக்கியம்  என்பதாக கூட்டாஞ்சோறு

 பிளாஷ்பேக் ஓடும் பாவம் இந்த காலத்துப் பிள்ளைகள்  என்னவென்று தேடும்!


 அப்படியே நம் நினைப்பை கடத்தி இந்த காலத்துக்கு வரவழைக்க

 அமைதி கொடி பறக்க  ஒரு வெள்ளை காஷ்மீரம்!


 ஒரு வருடத்தில் இவ்வளவு தினங்கள் கொண்டாடுகிறார்களா

 தகவல் அறிந்தேன் 

 இருந்தாலும் பாம்பு தலைவரேனோ கோபத்தில் இருக்கிறார்

 உலக பாம்புகள்  தினம் பற்றி  கதைக்கவில்லை என்று

 நீங்கள் தான்  உலகளந்த பெருமாளை போல்  கவிதையால்

 புவி  அளந்துள்ளீரே

 ஆதிசேஷனை எப்படியோ அமைதிப்படுத்துங்கள்!


ஓ !!இப்போது அறிந்தேன் பூமி தினத்தன்று உங்கள் காதலியை மாமன் மகள் போல்  நேசிக்க சொன்னதன்  அர்த்தம்

 இல்லையென்றால் பயமுறுத்த

 குறும் பிசாசு ஏவினீர் அலைபேசி மூலம்!


 உங்கள் வரிகளிலேயே குழந்தை பாரீர்

  அழித்த பொட்டுக்காரி ஆத்தாவுக்கு  துணையாம்

 அப்பனை அடித்துப் போனது சாராய அலையாம்!

 என்னே அவல நிலையாம்!


 புலவனைப் போல் பொய்யுரைக்கா உங்கள் கண்ணாடியும்

 கொல்லையில் இருந்து குரல் கொடுக்கும் முருங்கை மரமும்

 பல வகை சுவாரசியங்கள்!


 பகையாய் பார்க்காதீர் என்பார் கொசுவை

 டெங்கு மலேரியா பற்றி  அறியா  சிசு போல்!


 உலக கவிதை நாளில் படைத்தது அவியல்

 தள்ளாடும் தாய் மொழியோ  தங்கிலீஷில் புகல்


 இனி யாரையும் வையாதீர்

 பெரிய சுண்டைக்காய் என்று

 பற்பல  பயனாம்  படித்தறியுங்கள்!


 மூங்கில் தினம் பற்றி கூறாமல் இருப்பாரா  உலகளந்த  கண்ணன்

  சுடச்சுட காப்பியும் உண்டாம்

 படித்து மகிழுங்கள்  ஆறும் முன்னே!


- ஸ்ரீவித்யா

****************************************************************************

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...