••••••••••••••••••••••••••••••
*பள்ளி நாட்களில் மிகவும் பிடித்தது எது!*
••••••••••••••••••••••••••••••
பள்ளி நாட்களில் எனக்கு மிகவும் பிடித்தது உணவு இடைவேளை நேரமே!
அவரவர் உணவை பிறரோடு பகிர்ந்து உண்ணும் நேரம் அது!
கீதாவின் தயிர் சாதம்
ராமுவின் பரோட்டா- குருமா
சீனுவின் சாம்பார் சாதம்
ஆல்பர்ட்டின் இட்லி- காரக்குழம்பு
முஸ்தபாவின் பூரிக் கிழங்கு
என எல்லாவற்றிலும் பங்கு கிடைக்கும்
உணவு கொண்டு வராத
மீனாவின் வயிறும் நிச்சயம் நிரம்பும்.
*பகுத்துண்ணும் இனிய பண்பு அங்கே தான் தொடக்கம்*
உணவுப் பாத்திரங்களை கழுவி வெயிலில் காய வைத்து விட்டு தொடங்கிடும் ஆட்டம் பாட்டம்.
எப்போதும் கலைச்செல்விக்கு குழாயில் பாத்திரங்கள் கழுவிய பின் ஓடிவரும் நீரை செடிப்பக்கம் கால்வாய் போல இழுத்து விடுவது மிகவும் பிடிக்கும்.
அதனைச் செய்யாமல் அவள் இருந்ததே இல்லை.
*வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்* என்னும் வள்ளலாரின் வழித்தோன்றல் அவள்.
*இயற்கையை நேசித்தல் என்பதை கற்பித்த நேரம் அது*
பிற பிள்ளைகளுக்கு வேறு நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கும்:
பாண்டி ஒரு பக்கம் பதவிசாய் நடக்கும்.
நொண்டி ஆடி மகிழ
ஒரு கூட்டம் இருக்கும்.
மரத்தடி நிழலில் கோலி விளையாடுவர் சிலர்.
மரத்தடியில் அமர்ந்து கதை பேசுவர் சிலர்.
ஒளிந்து பிடித்து விளையாடுவோர் உண்டு..
ஓடி ஆடி தாவிக் குதித்து கூவிடுவோர் உண்டு.
*உடல்நலம் பேண் - உற்சாகமாய் இரு* என சொல்லிக்கொடுத்த நேரம் அது.
பள்ளிவாயில் வெளியே
பிளாட்பாரக் கடை விரித்த
பாட்டியம்மா கடைதனிலே
எலந்த பழம்,
சீனி மிட்டாய்,
தேன் மிட்டாய்,
கமர்கட்டு
வாங்கி தின்போர் உண்டு.
ஐஸ் அண்ணாச்சி கடையிலே
குடை ஐஸ் வாங்கி ரசித்து சாப்பிடுவோர் உண்டு.
ஐஸ்ப்ருட்டு வாங்கி கையில் இருந்து அது ஒழுகி முழங்கை வரையில் வழிந்து வர வேகமாய் அதனை சுவைக்கும் பலரும் அங்கு உண்டு.
*வாழ்வின் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியை ஒளித்து வைத்திருக்கும். அதனைக் கண்டுபிடித்து மகிழ்வோடு வாழ்* எனும் மந்திரத்தை சொல்லிக் கொடுத்த நேரம் அது.
மதிய வகுப்பு துவங்குவதற்கு ஸ்கூல் பெல் அடிக்கும் வரையில், கொண்டாட்டம்தான்..
குதூகலந்தான்.. குதியாட்டம் தான்... ஆனந்தமோ ஆனந்தம் தான்..
பள்ளிக்கூட வகுப்புகள் சொல்லிக் கொடுத்தது படிப்பறிவு.
உணவு இடைவேளை நேரம் சொல்லிக் கொடுத்தது பட்டறிவு.
உணவு இடைவேளை நேரமே *அனுபவம் எனும் ஆசான்* நம்முடன் பயணிக்க துவங்கும் பட்டறை ஆகும்.
ஆதலால்,
*பள்ளிக் காலங்களில் எனக்குப் பிடித்தது உணவு இடைவேளை நேரமே*
அதை இப்போது நினைத்தாலும், நீங்குது என் மன பாரமே
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
------------------------------------
எங்கள் பள்ளி
பள்ளிக் கல்வி அரசுப் பள்ளியில் வேண்டும்
பாட்டன் மொழியாம் தீந்தமிழே ஒலிக்கும்
துள்ளி விளையாட பூஞ்சோலை பள்ளி
துரத்தித் துரத்திப் பிடிப்பாள் "வள்ளி"
கிள்ளி அழ வைப்பாள் "தமிழ்ச் செல்வி"
கிச்சுகிச்சு மூட்டி நகைப்பாள் "அல்லி"
உள்ளங்கையில் வைப்பாள் மிட்டாய் "மேரி"
உரித்த வேர்க்கடலை தருவான் நல் "பாரி"
அள்ளிப் பிசைந்த பெரும் சோறுருண்டை
அடைக்க அம்மா வர முடியாக் கோட்டை
புள்ளிமான் என்று அறியப்படும் "ரேஷம்"
புளியம்பழம் தந்து பல்பம் பண்டமாற்றம்
கள்ளமறியாத "பவுனு" அவள் புன்னகை
கால்தூசே இரும்பு லாக்கரின் (locker) பொன்னகை
குள்ளக் "குப்பன்" வந்தால் வகுப்பே குதிக்கும்
குதூகலம் தொற்றிக் கொளும் எல்லார்க்கும்.
" இவையும், இன்னும் பலவாம் எங்கள் பள்ளி "
__. குத்தனூர் சேஷுதாஸ் 17/4/2026
================================
No comments:
Post a Comment