பாகம் 13
பயணங்கள் முடிவதில்லை…
டெக்சாஸின் கெளபாய் ஆத்மாவை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வரலாற்று ரத்தினம்
டல்லாஸிலிருந்து (Dallas) வடக்கு நோக்கி சுமார் 30–40 நிமிடப் பயணத்தில் அமைந்துள்ள Fort Worth Stockyards என்னை நேரடியாக 19ஆம் நூற்றாண்டின் பழைய மேற்கத்திய (Wild West) காலத்திற்கு கொண்டு சென்றது. இந்த வரலாற்று மாவட்டத்தில், காலத்தின் தடயங்கள் உயிர்ப்புடன் சுவாசிப்பதை உணர முடிந்தது. பழைய மரக்கட்டிடங்கள், தோல் பூட்ஸ் மற்றும் கெளபாய் தொப்பிகளின் வாசனை, தெருக்களில் ஒலிக்கும் நாட்டுப்புற இசை, இவை அனைத்தும் டெக்சாஸின் உண்மையான ஆத்மாவை நேரில் உணரச் செய்தன.
1800களின் பிற்பகுதியில், Fort Worth நகரம், புகழ்பெற்ற சிஷோம் பாதை வழியாக மாடுகளை வடக்கு நோக்கி ஓட்டிச் செல்லும் பெரும் பயணங்களின் முக்கிய மையமாக விளங்கியது. லட்சக்கணக்கான நீண்ட கொம்புகளைக் கொண்ட டெக்சாஸ் மாடுகள் இங்கு வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருந்ததால், “மாட்டு நகரம்” (Cowtown) என்ற பெயரைப் பெற்றது. இரயில் பாதை வந்தபின், இந்த இடம் அமெரிக்காவின் மிகப்பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றாக உருவெடுத்தது.
இன்றும் இந்தப் பகுதி தேசிய வரலாற்றுப் பாதுகாப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. Stockyards Museum மற்றும் பழைய Livestock Exchange Building போன்ற இடங்கள், அந்தக் காலத்து மாட்டுச் சந்தையின் கதைகளை உயிரோடு விவரிக்கின்றன. இது ஒரு உயிருள்ள அருங்காட்சியகம் மட்டுமல்ல; இன்னும் துடிப்புடன் இருக்கும் கலாச்சாரப் பாரம்பரியம்.
இந்த இடத்தின் இதயம் “Fort Worth Herd” எனப்படும் தினசரி மாட்டு ஊர்வலமே. ஒவ்வொரு நாளும் காலை 11:30 மணிக்கும், மாலை 4:00 மணிக்கும் (வானிலை அனுமதிக்கும் பட்சத்தில்; சில பண்டிகை நாட்களைத் தவிர), நீண்ட கொம்புகளைக் கொண்ட பிரம்மாண்டமான மாடுகள் East Exchange Avenue வழியாக ஒரே வரிசையில் நகர்கின்றன. பாரம்பரிய உடையில் கெளபாய்கள் குதிரையில் அமர்ந்து அவற்றை வழிநடத்தும் காட்சி, சில நிமிடங்களில் முடிந்தாலும் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. குதிரைகளின் குளம்படி ஒலி, கெளபாய்களின் உற்சாகக் குரல் அனைத்தும் காலத்தைத் தாண்டி பயணம் செய்யும் உணர்வை தருகின்றன. உலகில் தினமும் இருமுறை நடைபெறும் ஒரே மாட்டு ஊர்வலம் இதுவே என்பது இதன் தனிச்சிறப்பு.
மாடுகளின் பிரம்மாண்டமான கொம்புகள் கண்ணைக் கவர்ந்தாலும், என் மனதில் வேறு ஒரு உணர்வு எழுந்தது.
நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வீட்டில் எப்போதும் 20–30 மாடுகள் இருந்தன. அவற்றை கொட்டகையில் கட்டி, வைக்கோலை கவனையில் வைத்து உணவளிப்போம். அந்தச் சிறிய கொம்புகளே ஒன்றோடொன்று சிக்கி, மாடுகள் தவிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவம் மனதில் இருந்தபடியே, இங்கே இவ்வளவு நீண்ட நீளமான கொம்புகளுடன் நிற்கும் மாடுகளைப் பார்த்தபோது, அவற்றின் நிலையை நினைத்து ஒரு பரிதாப உணர்வு மனதில் தோன்றியது.
அதே நேரத்தில், இவ்வகை மாடுகளை Space Center Houston அருகிலுள்ள பரந்த நிலப்பரப்புகளிலும் வளர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவற்றிற்கு விரிந்த வெளி கிடைப்பதால், இயல்பான இயக்கத்துடன் சுதந்திரமாக வாழும் சூழல் கிடைக்கிறது.
ஸ்டாக்யார்ட்ஸில் நடைபயணம் செய்யும்போது, இருபுறமும் அசல் கெளபாய் தொப்பிகள், தோல் பூட்ஸ், பழைய சலூன் பார் அமைப்புகள் அனைத்தும் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. Cowtown Coliseum-இல் நடைபெறும் Stockyards Championship Rodeoவில் காளை ஏறுதல், குதிரைச் சவாரி, கயிறு வீசி மாடு பிடித்தல் போன்ற உண்மையான கெளபாய் திறமைகள் நேரில் காணக்கிடைக்கின்றன. இது வெறும் காட்சி அல்ல; டெக்சாஸின் உழைப்பும் துணிச்சலும் கலந்த வாழ்க்கை முறையின் உயிரோட்டமான வெளிப்பாடு.
Texas Cowboy Hall of Fame மற்றும் Stockyards Museum ஆகிய இடங்களில் புகழ்பெற்ற கெளபாய்களின் கதைகளையும், மாட்டுப் பயணங்களின் வரலாறையும் ஆழமாக அறிய முடிகிறது.
பழமையான மார்க்கெட் பகுதியில், உண்மையான மேற்கத்திய பாணி பொருட்களான:
கெளபாய் பூட்ஸ், தொப்பிகள், தோல் பெல்ட்கள், ஜாக்கெட்டுகள், குதிரை உபகரணங்கள் வாங்கலாம்.
Billy Bob’s Texas போன்ற இடங்களில் நாட்டுப்புற இசை ஒலிக்கிறது. இரவு நேரத்தில் பழைய கட்டிடங்களில் ஒலிக்கும் நேரடி இசையும், வரிசை நடனமும் (Line Dancing) டெக்சாஸின் இரவு வாழ்க்கையின் சாராம்சத்தை உணரச் செய்கின்றன.
புகை வாட்டிய இறைச்சி, சுவையான ஸ்டேக், தெற்கு மண்டல உணவுகள் ஆகியவை இங்கு சிறப்பாகக் கிடைக்கின்றன. Cattlemen’s Steak House, Joe T. Garcia’s போன்ற உணவகங்கள் பழைய மேற்கத்திய அனுபவத்துடன் சேர்த்து உணவை வழங்குகின்றன.
ஒரு நாள் முழுவதும் இங்கு செலவழித்தால், வரலாறு, பொழுதுபோக்கு, ஷாப்பிங், உணவு என எல்லாம் ஒரே இடத்தில் சங்கமித்து மறக்க முடியாத அனுபவத்தைத் தருகிறது.
இது ஒரு “அருங்காட்சியகம்” போன்ற அமைதியான இடம் அல்ல. இங்கு வரலாறு இன்னும் உயிருடன் இருக்கிறது. உண்மையான கெளபாய் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுபவமாக்கும் இடம் இது.
பயண முன்னெடுப்பு குறிப்புகள்:
* காலையில் சீக்கிரம் சென்று மாட்டு ஊர்வலத்தைப் பார்ப்ப்து நன்று. கூட்டம் அதிகமாகும் முன் நல்ல இடம் கிடைக்கும்.
* நிறைய நடக்க வேண்டியிருப்பதால், வசதியான காலணிகள் அவசியம்.
* மாலை நேரம் மிகவும் உற்சாகமாக இருக்கும்; ரோடியோ அல்லது நேரடி இசையைத் தவறவிடக்கூடாது.
* வானிலை காரணமாக மாட்டு ஊர்வலம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதால், முன்பே தகவல் சரிபார்த்துக்கொள்ளுதல் நன்று.
வரலாறு இங்கு வெறும் பக்கங்களில் அல்ல, தெருக்களில் நடக்கிறது.
No comments:
Post a Comment