*தமிழ்ச்சங்க உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு*
ஒரு முக்கிய சமூகக் கடமையை நிறைவேற்றி விட்டு வந்த மன திருப்தியுடன் இன்று நடந்த ஒரு மிக முக்கிய நிகழ்வினைப் பற்றிய விவரணத்தை உங்களுடன் பகிர்வதில் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் பெரு மகிழ்வு கொள்கிறது.
*முதியோர் இல்ல வாசிகளை மகிழச் செய்த தமிழ்ச் சங்க இன்னிசை நிகழ்ச்சி*
வருடம் ஒருமுறை நாம் தொடர்ந்து தவறாமல் செய்து வரும் சமூகக் கடமையில் ஒன்று இன்று மாலை சிறப்பாக நடந்தேறியது. ஆம். சமூகக் கடமையாக நாம், உதவி தேவைப்படும் இல்லங்களுக்கு நிதி உதவி செய்வதோடு அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். அந்த வரிசையில் இந்த வருடத்திற்கான நிகழ்வினை தற்போது மன மகிழ்வோடு செய்து முடித்துவிட்டு இல்லம் திரும்பி உள்ளோம்.
இன்று, 28.6.26, ஞாயிறு அன்று மாலை 4:30 மணி முதல் 6.30 மணி வரை 2 மணி நேரம் அருமையான இசை நிகழ்ச்சி ஒன்றினை முடிச்சூர் பகுதியில் உள்ள *அக்ஷயா டிரஸ்ட்* முதியோர் இல்லத்தில் நமது மகாகவி பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் செய்து முடித்து உள்ளோம்.
வழக்கம்போல், நமது நிதிச் செயலர் சாய்ராம் அண்ணா அவர்களின் மேற்பார்வையில் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்ட ஏழு பாடகர்கள் உடன் இன்று அவ்விடம் சென்றோம். பாடிய இன்னிசைக் குயில்கள்:
சாய்ராம்,
துர்கா சாய்ராம்,
விஜயலட்சுமி,
செங்கதிர்ச் செல்வன்,
கார்த்தி,
ரிஜாவுதீன், மற்றும்
ஸ்ரீ நிகேதன்.
ஒலி அமைப்பிற்கு நமது ஆஸ்தான ஒலி அமைப்பாளர் சசி அவர்களை அழைத்துச் சென்று இருந்தோம்.
நிகழ்ச்சியைப் படம் பிடித்து, நமது சேனலிலும் - படவரிக் குழுவிலும் பகிர்வதற்காக உடன் வந்தவர் நமது நிர்வாகக் குழு உறுப்பினர் அமுதவல்லி.
இவர்களுடன் அடியேனும், திரு மோகன் ஐயா அவர்களும்.
உற்சாகமாக நமது இன்னிசைக் குயில்கள் பாடல்களைப் பாட முதியோர் இல்ல வாசிகள் பலரும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். அவர்களில் ஓரிருவரும் பாடல்களைப் பாடினர்.
அந்த இல்லத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும் ஆலோசகரமான திரு. தாசரதி அவர்கள் வந்திருந்து நமது சங்கத்தைப் பாராட்டி உரை நிகழ்த்தினார்கள். இவரது உரை நமது சங்க செயல் பாட்டிற்கு உரமூட்டுவதாக இருந்தது. இவர் நமது சாய்ராம் ஐயாவின் ஆத்ம நண்பர் என்பது குறிப்பிடத் தக்கது.
முதியோர் இல்ல வாசிகள் அனைவரும் இரண்டு மணி நேரம் மிக மகிழ்வோடு ரசித்து ஆடிப் பாடி கலகலப்பாய் இருந்தது நமக்கு மனநிறைவை தந்தது. அவர்களுக்கு இணையான மனமகிழ்ச்சி எங்கள் அனைவருக்கும் வந்தது.
நமது சங்கத்தின் சார்பாக பத்தாயிரம், செங்கதிர் செல்வன் அவர்கள் மூவாயிரம், வழக்கம்போல் தன் பெயர் சொல்ல விழையாத ஒரு புரவலர் கொடுத்த ஐயாயிரம் ஆக மொத்தம் ௹.18,000/-க்கான காசோலை அந்த இல்லத்துக்கு இன்று வழங்கப்பட்டது. நமது பாடகர்களில் ஒருவரும் நிர்வாகக் குழு உறுப்பினருமான திருமதி. விஜயலட்சுமி 2000 ரூபாய் நேரடியாக நன்கொடை கொடுத்தார். இன்று அனைவரையும் பாடி மகிழ்வித்த கார்த்திக் (நமது நிர்வாகக் குழு உறுப்பினர் ரமணி அவர்களின் மைந்தன்) ௹.10,000/- நன்கொடை செய்தார். ஆக மொத்தம் ௹.30,000/- அந்த இல்லத்திற்கு இன்று அளிக்கப் பட்டுள்ளது.
முத்தாய்ப்பாக ஒரு அருமையான கதம்பப் பாடலை (medley) சாய்ராம் ஐயா பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்கள்.
சங்கத் தலைவர் ஸ்ரீவி அவர்கள் நன்றியுரை கூற இந்த பொன்மாலைப் பொழுதினை மேலும் இனிதாக மாற்றிட நம் சங்கத்தால் வழங்கப்பட்ட இன்னிசைப் பாடல் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பிறகு இல்ல வாசிகளுடன் உணவு அருந்திவிட்டு மனநிறைவோடு கிளம்பினோம்.
*ஸ்ரீவி*
தலைவர்
(நிர்வாகக் குழுவிற்காக)
28.06.2026 அன்று மாலை மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் சார்பில் முடிச்சூர் பகுதி அக்க்ஷயா ட்ரஸ்ட் முதியோர் இல்லத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது
முதியோர் இல்லத்தில் இன்னிசை நிகழ்ச்சி