Saturday, June 27, 2026

சிலம்பொடு ஒரு பயணம்(27) *அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை* *காம வேள் நடனமும் காதையின் வெண்பாவும்*

 ••••••••••••••••••••••••••••••••

*{27} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை*


*காம வேள் நடனமும் காதையின் வெண்பாவும்*

••••••••••••••••••••••••••••••••


மாலைப் பொழுதின் மயக்கத்திலே 

மாதவிப் பொன் மயிலாள் மகிழ்வுற்றிருக்க.. 

மனக்கலக்கத்தில் கண்ணகி ஆழ்ந்திருக்க 

இரவுப் பொழுதும் உருண்டோடிப் போகிறது. 

செங்கதிரோன் கீழ் வானில் 

மேல் எழும்ப பொழுதும் புலர்கிறது. 


இக் காட்சிகளை இளங்கோவடிகள் 

இனிதே வர்ணிக்கிறார்: 


*அன்னம் என்னடை நன்னீர் பொய்கை ஆம்பல் நாறும்*


அன்னப்பறவைகள் அழகு நடை பயிலும் பொய்கையில் பெண்களின் கண் போல் ஆம்பல் பூ மலர்ந்து மனம் வீசிக்கலாம். 


*தண் அறல் கூந்தல் பான் வாய் வண்டு நோதிறம் பாட*


பொய்கையில் காற்றில் அலையும் நேரலைகள் தலைவியின் வளைந்து நெளிந்து ஆடும் நீண்ட கூந்தலை நினைவூட்டின. இசை பாடும் வண்டுகள் வந்து காலைப் பண் பாடின.


*தண் அறல் கூந்தல்* குளிர்ந்த நீர்களை அசைவது போன்ற கூந்தல். என்ன அழகிய சிந்தனை. இதைத்தான் இந்நாளில் திரைப்படப் பாடலில் 

*நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ* என வாலிபக் கவி எழுதினாரோ!


*உரவு நீர்ப்பரப்பின் ஊர் துயில் எடுப்பி இரவு தலைப் பெயரும் வைகறை காரும்*


புள்ளிகள் பொருந்திய சிறகினை உடைய சேவல் கோழி தனது கூறிய வாயால் சங்கு முழங்குவது போல் ஒலித்து உறங்கிக் கிடந்த புகார் நகரை துயில் எழுப்பியது. இரவு கழிந்து வைகறைப்பொழுதும் வந்தது. 


அப்போது என்ன நடக்கிறது? 


*பகலும் துஞ்சான் விரை மலர் வாளியோடு கருப்பு வில் ஏந்தி*


இரவில் மட்டுமல்ல பகலிலும் உறங்காத மன்மதன் மலர் கணைகளோடும் கரும்பு வில்லோடும் மகரக் கொடியோடும் நகர்வலம் வருகிறான். அவனுக்கு மட்டும் ஓய்வும் உறக்கமும் இல்லை போலும். 


இதையே வல்லபன் எனும் பாடலாசிரியர், 

*மீன்கொடித் தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான்* என எழுதினார் போலும். 

(மகரம் எனில் மீன் என அறிக) 


இப்போது வெண்பாவை பார்ப்போம்: 


*கூடினார்பால் நிழல் ஆய், கூடார்பால் வெய்யது ஆய்,*

*காவலன் வெண்குடை போல் காட்டிற்றே - கூடிய*

*மாதவிக்கும், கண்ணகிக்கும், வான் ஊர் மதி விரிந்து*

*போது அவிழ்க்கும் கங்குல் - பொழுது.*


இதன் பொருளை மழலைக் கவி விளக்குவார்.



ஐயா ,

அந்திமாலையில் கண்ணகி உழன்றாள் - மாதவி மகிழ்ந்தாள் எனப்

பார்த்தோம். இந்த மாலை புகார் நகர் மகளிருக்கு, அவரவர் கூடலையும் ஊடலையும் பொறுத்து, இன்பத்தையும், துன்பத்தையும் அளித்தது .


காமதேவனின் ஆட்சி:

இரவு வந்துவிட்டது. காமதேவனின் ஆளுமை எங்கும்

அரசன் முதல் குடிமக்கள் யாவரையும் அவன் 

இப்போது ஆட்டிப்படைக்கும் நேரம் .

அடிகளின் நோக்கில் இந்த சூழ்நிலை எப்படிக்காணப்

படுகிறது?

காமதேவன் மகரக்கொடியோடு ( மீன் கொடி) நகரைச் சுற்றி வந்தான்,கையில்

கரும்பு வில்லும், மலரம்புகளும் ஏந்தி;(ஐந்து மலர்கள்-தாமரை, முல்லை , அசோகு,மா, நீலம் என ஐந்து மலர்கள் கொண்ட அம்பு. )

ஒரு முழம் மல்லிகைப்பூவுக்கே மயங்கும் மகளிர் ஐந்துமலர்க்கணை  மேனியில் பட்டால் காமதேவன் வசப்படுவதில் என்ன வியப்பு!

இரவு  முடிந்து வைகறைப் பொழுது ஆரம்பிக்கும் வேளை. ஆம்பல் மலர்ந்தது.நன்னீரப் பொய்கையில்(  நன்னீரா!அக்காலத்தில் சர்வ சாதாரணம்!) அன்னங்கள் நடை பயிலத்தொடங்கின. வண்டுகள் வந்து  பள்ளி எழுச்சி" நோதிறம்" (பிரிவுத்துயரில் பாடும் பண்- நொந்த திறம்) பாடத்தொடங்கின. 

யாரை எழுப்ப? 

ஆம்பல் மலர் போல் சிவந்த வாயும், குளிர்ந்த ஆற்று மணல் படிவுகள் போல சுருள் சுருளான கூந்தலையும் உடைய நன்மங்கையைப் போன்ற பொய்கையை எழுப்பவாம். இயற்கையாக அமைந்த சுருள் கூந்தல். உபகரணங்கள் உதவி இன்றி! உலகில்உயிர்களைத்தோற்றுவிக்கும் மகளிரோடு , அவ்வுயிர்கள் வாழ இன்றியமையாத நீர் கொண்ட பொய்கையோடு ஒப்பிட்டது எவ்வளவு நல்ல உவமை! இயற்கையோடு மானுடம் பின்னிப்பிணைந்த  காலம் அப்போது.


அக்காலத்தில் இயற்கைச்சூழலில் எழும் ஒலிகளே மக்களை எழுப்பும்.

பறவைகள் முரசொலி போல ஒலி எழுப்பும்.புள்ளிச்சிறகுடை

சேவல்கள் சங்கு போல முழங்கும். அதுவும் எப்படி?" முறை முறை ஆர்ப்ப"- அடுத்தடுத்து முறையிட்டுக் கூவும். கடிகாரத்தின் தலையில் அடித்துவிட்டுத்திரும்பிப் படுக்கும் வழக்கம்  கிடையாது.

 அப்போது.

மீன் கொடி வேந்தனான காமதேவன் இரவேல்லாம் ஆட்சி செலுத்துகையில் , இன்புற்றோர் துன்புற்றோர் யாவரும் உறங்கவில்லை. காமதேவன் பாரபட்சம் பார்ப்பதில்லை; யாவருக்கும் பொது( common!)

இந்த மீன் கொடியான் மாதவி கோவலன் கூடலுக்கு அடிகோலினான். விளைவு, பின்னர் மற்றொரு மீன்கொடியானின்  ( பாண்டிய மன்னனின் செங்கோல் பிழைத்தது.


"மன்மத லீலையை வென்றார் உண்டோ?

என் மேல் உனக்கேனோ பாராமுகம்?

ஒருபிழை அறியா என்மனம் மலர்க்கணை பாய்ந்து அல்லல் படுமோ? 

என்று தியாகராஜ பாகவதர் பாடியது நினைவுக்கு வருகிறது.


 (காதைச்சுருக்க )வெண்பா :

மன்னின் வெண்கொற்றக்குடை எப்படி " கூடினார் பால் நிழலாய், 

கூடார்ப்பால் பால் வெய்யதாய்"

உள்ளதோ ,அது போல வெண்ணிலாவும் மாதவிக்கு நிழலாகவும், கண்ணகிக்கு வெய்யிலாகவும் தோன்றியதாம்.

இன்றைய திரை உலக கதாசிரியர்கள் போல் நான்கடி வெண்பாவில் காதைச்சுருக்கம்!


*அந்தி மாலை சிறப்பு செய் காதை இத்துடன் நிறைவுற்றது. நாமும் மயக்கம் மாலையிலிருந்து

*இந்திர விழா ஊர் எடுத்த காதை* எனும் அடுத்த காதையில் மீண்டும் இணைவோம்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...