Saturday, June 6, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (24) *அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை* *பொன் அந்தி மாலைப் பொழுது தரும் மயக்கம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{24} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை*


*பொன் அந்தி மாலைப் பொழுது தரும் மயக்கம்*

••••••••••••••••••••••••••••••••



இந்தக் காதையில் மாலை நேரத்தை ஏன் *மயக்கும் மாலை* எனக் கூறுகிறார்கள் என்பதை விளக்குவதோடு, அப்படிப்பட்ட மாலைப் பொழுதில் மாதவி மகிழ்ந்திருக்க, கண்ணகியோ கண்ணீர் உகுத்து கவலையோடு இருக்கிறாள் என்பதை விளக்கும் பகுதி.


*விரி கதிர் பரப்பி, உலகம் முழுது ஆண்ட  ஒரு தனித் திகிரி உரவோன் காணேன்;*


*அம் கண் வானத்து, அணி நிலா விரிக்கும் திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்கொல்*


விரிந்த ஒளிக் கதிர்களைப் பரப்பி உலகம் முழுவதையும் ஆண்ட உரவோனாகிய (வலிமை மிக்கவனாகிய) ஞாயிற்றைக் காண முடியவில்லை. 

(*உரவோன்* எனும் சொல் *வலிமை மிக்கவன்* என்ற  பொருளில் வரும். *உறவோன்* எனும் சொல்லோ உறவினர் எனும் பொருள் தரும் என்பதறிக)


நிலவொளி வீசி  வானத்தில் உலாவரும் திங்கள்-அம்-செல்வன் எங்கே இருக்கிறானோ?


*திசை முகம் பசந்து, செம் மலர்க் கண்கள் முழு நீர் வார,* 


*திரை நீர் ஆடை இரு நில மடந்தை அரைசு கெடுத்து, அலம்வரும் அல்லல்காலை-*


திசையின் முகங்கள் இருள் என்னும் பசப்பு நோயில் வாடுகின்றன. 


நிலம் என்னும் பெண் தன் கருநீலக் கடல் எனும் ஆடை போர்த்தியிருக்கும் தன் உடம்பு முழுவதும் நடுங்கிக் (அதாவது கடலில் அலைகள் நிலமகள் உடல் நடுங்குவதற்கான உவமை எனக் கொள்க) கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். 


அதாவது தன் காதலன் கதிரவன் மறைந்து விட அவன் பற்றி தகவல் சொல்லும் அவன் தோழன் வராத நிலையில் நில மகள் கலங்கி நிற்கிறாளாம். இந்நிலையில் கண்ணகி இருக்கிறாள்.


அந்த பொன் அந்தி மாலைப் பொழுதை மேலும் இவ்வாறு விளக்குகிறார் அடிகள்:


*தாழ் துணை துறந்தோர் தனித் துயர் எய்த;*


*காதலர்ப் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த;*


காதலனின் துணையைப் பிரிந்தவர் தனிமைத் துயலில் வாடி நின்றனர். 


காதலனைத் தழுவிக் கொண்டிருப்பவர்கள் களிப்பு மிகுந்து மகிழ்வில் திளைக்கின்றனர். 


*குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய் வைத்து ஊத;*


*அறுகால் குறும்பு எறிந்து, அரும்பு பொதி வாசம் சிறுகால் செல்வன் மறுகில் தூற்ற;*


*எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப,*


*மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்தென*


முல்லை நிலத்தில் குழல் போல் நீண்ட காம்புடன் பூக்கும் முல்லைப் பூவில் வண்டுகள் வாயை வைத்து ஊதுகின்றனவாம். 


அதுபோலவே கோவலர் (ஆயர்கள்), தம் புல்லாங் குழலில் இன்னிசைக்கின்றனர். 


தென்றல் தனது மிருதுவான காற்றால் மலர்களின் மணத்தை சுமந்து வந்து தெருவெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறது. 


ஒளிரும் வளையலுடன் மகளிர் விளக்கை ஏற்றிக் கொண்டிருக்கின்றனர். 


வளம் மிக்க பழமையான இந்த ஊரில் இப்படி மாலைக்காலம் வந்திருக்கிறது. இதையெல்லாம் அனுபவித்து மாதவி மகிழ்வோடு இருக்கிறாள். 


இப்போது மழலைக் கவி தொடர்கிறார்:


அரங்கேற்ற காதையில் இருந்து அந்திமாலைச் சிறப்புக்காதையில் நுழைகிறோம்.


தன்மனை தனையும்,

மனையாளையும் விட்டு 

விட்டு ஆடல்மகள் வயப்பட்டு அவள்அகம் புகுந்தான் கோவலன்.


ஒரு " இல்" லில் இன்பம்; மற்றொரு " இல்" லில் இன்பம்  "இல்" லை.


இக்காவியமே *"ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"* என்று ஒரு கருத்தை வலியுறுத்தும் என்பர்.

இந்த ஊழ் 

ஆகூழ் - நெருங்கின பொருள் கைப்படத் தேவையான முயற்சி,

போகூழ் அப்பொருள் கைவிட்டுப்போகச்செய்யும் சோர்வு என இருவகைப்படும் என்று கொள்ளலாம். ஒன்று கைப்படச் செய்யும்; மற்றொன்று கை விடச்செய்யும்.

கோவலன் என்னும் கைப்பொருள் கைமாறியதும் இரு மகளிரின் அவரவர் ஊழ்வினை 

வசத்தாலோ!


இந்த நிலையைப் பிரதிபலிப்பதே, அந்திமாலை சிறப்புச்செய்காதை.


அந்தி மாலை என்பது பகலும் இரவும் சந்திக்கும் நேரம் எனக் கொள்ளலாம்.

இந்நேரம் கூடியவர்க்கு இன்பமும், ஊடியவர்க்கு துன்பமும்  உணர்த்தும் காலமாக இலக்கியங்கள் விவரிக்கின்றன.


அடிகள் மட்டும் விலக்கா என்ன? 


அவர்அடிகளை 

ஒட்டிச்செல்வோம்.


திசைகள் பசந்து:

இந்த அந்திமாலையில் நில மடந்தை வருந்துகிறாளாம்.

எப்படிப்பட்டவள்?

திரை நீர் ஆடை இருநில  மடந்தை "

-*"அலைகளையுடைய கடலைத் தன் ஆடையாகக் கொண்ட பூமிதேவி"*

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தை" நமக்குப் பழக்கமானவள்தானே. 


இவள் கணவனான ஆதவன் மறைந்த துக்கத்தோடு , மகன் நிலவன் இன்னும் வரவில்லை என்னும் கவலையும் சேர்ந்து கொள்ள, அவளின்திசைமுகங்கள்" பசந்து" காணப்பட்டனவாம்.

அந்திமாலை " அல்லல் காலை- துன்ப வேளை ஆயிற்று.

பசந்து என்பது பசலை நோய்-தலைவனைப்பிரிந்து வருந்தும்தலைவியின் உடலில் தோன்றும் நிறமாற்றங்கள். அகநானூறு விவரமாகப் பேசும் நோய்.


மாலயும் வந்ததே:

"மல்லல் மூதூர்" பூம்புகாரில் மாலை வந்தது . 

எப்படி?

நாட்டைப் பகைவரிடம் காட்டிக் கொடுத்த துரோகிகளால் கவலையுறும் குடிமக்கள் போல   காதலனைப் பிரிந்தவர் வாடுகின்றனர்.வெற்றி பெற்ற வேந்தன் மகிழ்வது போல், தலைவனோடு கூடிய தலைவியர் காதல் களிப்பில் மகிழ்வுறுகின்றனர்.எளிய மக்களின் வாழ்க்கை நாட்டு நடப்புகளோடுப் பின்னிப் பிணைந்திருப்பதைக் கவி நயத்தோடு உரைக்கிறார் அடிகள்.

ஆநிரை மேய்ப்பர்கள் முல்லைப் பண்ணில்( மோகன இராகம் அல்லது அதன் தாய் இராகம் அரி காம்போதி )குழலிசைத்து வர,  குழல் போல் நீண்ட காம்புகளை உடைய முல்லைப்பூக்களில் வண்டுகள் ஊத , மெல்லிய தென்றல் பூக்களின் நறுமணத்தை எங்கும் பரவச்செய்ய, ஒளிரும் வளைக்கர மகளிர் வீடுகளில் விளக்கேற்ற , அந்தி மாலை வரவேற்கப்பட்டது.


மாலைப் பொழுது ஒன்றுதான். பிரிவோ கூடலோ  அவரவர் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்று உணருகிறோம்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...