Friday, June 5, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(18)

 *பாகம் 18*

பயணங்கள் முடிவதில்லை…

*தங்கக் கனவுகளின் வாயிலும், சுதந்திரத்தின் சாட்சியும்*

அமெரிக்காவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரம். உயரமும் தாழ்வும் கொண்ட சாலைகள், குளிர் காற்றோடு கலந்து வரும் கடலின் உப்பு வாசனை, எப்போது வேண்டுமானாலும் நகரத்தை விழுங்கிவிடும் போல மிதக்கும் வெண்பனி இவைற்றின்  நடுவே நம்மை  ஈர்த்தபடி நின்றது *Golden Gate Bridge.*


Golden Gate Bridge என்ற பெயரை முதலில் கேட்டவுடன், நான் நினைத்தது நம் ஊர்களில் *தங்கக்கூரை வேயப்பபட்ட கோயில்கள் இருப்பது போல  இங்கு *தங்கப் பாலம்* என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் அந்தப் பாலத்தில் தங்கமோ தங்க நிறமோ கூட இல்லை. சான் பிரான்சிஸ்கோ *வளைகுடாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடையிலான கடல் நுழைவாயிலையே Golden Gate” என்று அழைக்கிறார்கள்.* அதன்மேல் கட்டப்பட்ட பாலத்திற்கும் அதே பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


அந்தப் பெயருக்குள் மறைந்து கிடப்பது அமெரிக்க வரலாற்றின் ஒரு பெரிய அத்தியாயம். 1848 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டபோது, உலகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் தங்க வேட்டைக்காக அங்கு விரைந்தனராம். *Gold Rush* என்று அழைக்கப்பட்ட அந்தக் காலத்தில், கடல் மார்க்கமாக வந்தவர்கள் சான் பிரான்சிஸ்கோவுக்குள் நுழைய வேண்டிய முக்கிய வாயில் இதுவே. *தங்கக் கனவுகளோடு வந்த கப்பல்கள் இந்தக் கடல்வாசலை கடந்து சென்றதால், “Golden Gate” என்ற பெயர் மக்களின் மனதில் “தங்கத்தின் நுழைவாயில்”என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தப்பாலம் 1933 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1937 ஆம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் உலகின் மிகப் பெரிய தொங்கு பாலங்களில் ஒன்றாக இது கருதப்பட்டது. கடுமையான காற்று, ஆழமான கடல், வேகமான நீரோட்டம், அடிக்கடி மூடும் பனிமூட்டம் இத்துனை சவால்களையும் மீறி  மனித முயற்சி அதை வென்றது.


பனிமூட்டத்திலும் தெளிவாகத் தெரியும் வகையில் பாலத்திற்கு *சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறம்* “International Orange” என்று அழைக்கப்படும் அந்த நிறம், தேர்ந்தெடுக்கப்பட்டது. இன்று அந்த நிறமே பாலத்தின் அடையாளமாக உள்ளது.


Golden Gate Bridge மீது நின்று பார்த்தபோது, ஒரு புறம் நகரத்தின் உயரமான கட்டிடங்கள், மறுபுறம் எல்லையற்ற கடல், கீழே அலைகளை வென்று செல்லும் கப்பல்கள் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு திரைப்படக் காட்சியைப் போல தோன்றின. குறிப்பாக மாலை நேரத்தில் சூரிய ஒளி பாலத்தின் மேல் விழும் போது, அது உண்மையிலேயே பொன்னால் ஆன பாலம் போல ஒளிர்ந்தது.  *Pizza சாப்பிட எத்தனிக்கும் போது  நம் ஊத்தப்பம் நினைவிற்கு வருவது போல்* எனக்கு நம் Howrah bridge நினைவிற்கு வந்ததின் பலன்:

Golden Gate நவீன suspension தொழில்நுட்பத்தின் சிறப்பு. நீண்ட தூரம், உயரமான தூண்கள், கடல் மற்றும் மலைகளுக்கு இடையே அமைந்திருப்பது அதன் அழகைப் பெருக்குகிறது. மூடுபனி, கடல் அலைகள், சான் பிரான்சிஸ்கோ நகரக் காட்சி இவை இதை உலக அதிசயமாக்குகின்றன.

*Howrah Bridge cantilever* வகை ஆற்றின் நடுவில் எந்த தூணும் இல்லாமல் கட்டப்பட்டது (அப்போது பெரும் சாதனை). கொல்கத்தாவின் பரபரப்பான வாழ்க்கையுடன் இணைந்து, தினசரி மக்கள் நடமாட்டத்தின் சின்னம். இரவில் விளக்குகள் பளிச்சிடும் போது அழகு, ஆனால் இயற்கைச் சூழல் Golden Gate அளவுக்கு இல்லை.

Golden Gate பல மடங்கு நீளமானது மற்றும் உயரமானது. Howrah Bridge பிஸியான போக்குவரத்து மற்றும் வரலாற்றுப் புகழில் முன்னிலையில் உள்ளது. 

இரண்டும் தங்கள் நகரங்களின் அடையாளம். Golden Gate க்கு சுற்றுலாப் புகழ் அதிகம் (அமெரிக்கா என்பதாலா! ) Howrah Bridge அன்றாட வாழ்வின் ஒரு பகுதி.


அந்த அழகின் அருகே, கடலின் நடுவே தனிமையாக நின்றுகொண்டிருந்த இன்னொரு தீவு எங்கள் கவனத்தை ஈர்த்தது *அல்காட்ராஸ்.*


சான் பிரான்சிஸ்கோ நடுவே அமைந்துள்ள அந்தக் கல் தீவு, ஒரு காலத்தில் அமெரிக்காவின் மிகவும் பாதுகாப்பான சிறைச்சாலையாகப் புகழ்பெற்றது. 1934 முதல் 1963 வரை இயங்கிய அந்தச் சிறையில் ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். சுற்றிலும் உறையவைக்கும் குளிர்கடல், வேகமான நீரோட்டம், கடுமையான அலைகள் ஆகவே அங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியம் என்று கருதப்பட்டது. அதனால் அந்தச் சிறைக்கு *The Rock* என்ற பெயரும் இருந்தது.


அமெரிக்காவின் பிரபல கும்பல் தலைவன் Al Capone கூட அங்கு அடைக்கப்பட்டிருந்தானாம். ஆனால் அல்காட்ராஸை உலக வரலாற்றில் மர்மத்தின் அடையாளமாக மாற்றியது 1962 ல் நடந்த தப்பிப்புச் சம்பவம். மூன்று கைதிகள் சிறைச் சுவரை உடைத்து இரவில் தப்பிச் சென்றனர். அவர்கள் கடலைக் கடந்து உயிருடன் தப்பினார்களா, அல்லது அலைகளில் மூழ்கினார்களா என்பது இன்று வரை தெரியாத புதிராகவே உள்ளது.


அல்காட்ராஸ் வரலாறு சிறையுடன் முடிவடைந்து விடவில்லை. 1963-ல் சிறை மூடப்பட்ட பிறகு, 1969-ஆம் ஆண்டு அமெரிக்க பூர்வகுடி மக்களான Native Americans அந்தத் தீவை ஆக்கிரமித்து உரிமை கோரினர். “Indians of All Tribes” என்ற அமைப்பின் கீழ் அவர்கள் அங்கு குடியேறி, *இந்த நிலம் எங்களுடைய முன்னோர்களின் நிலம்* என்று உலகிற்கு அறிவித்தனர். கல்வி, கலாசார மையம், அருங்காட்சியகம் ஆகியவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.


*ஒருகாலத்தில் சுதந்திரத்தை பறித்த சிறைச்சாலையாக இருந்த அல்காட்ராஸ், பின்னாளில் உரிமையும் அடையாளமும் கோரி எழுந்த போராட்டத்தின் சின்னமாக மாறியது என்பது வரலாற்றின் மிகப் பெரிய வியப்புகளில் ஒன்று.*


இன்று அல்காட்ராஸ் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது. படகில் அந்தத் தீவுக்குச் செல்லும்போது, பின்னணியில் Golden Gate Bridge சிவப்பு கோடாகத் தெரியும் காட்சி மனதை மயக்குகிறது. *வெளியுலகின் சுதந்திரம் கண்முன் தெரிந்தும் அதை அடைய முடியாமல் வாழ்ந்த கைதிகளின் ஏக்கத்தை அந்தச் சுவர்கள் இன்னும் சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.*


சான் பிரான்சிஸ்கோ வெறும் நகரமல்ல, அது கனவுகளும் போராட்டங்களும் கலந்த ஒரு வரலாற்று உலகம். Golden Gate Bridge மனிதனின் சாதனையை நினைவூட்டுகிறது. அல்காட்ராஸ் மனித வாழ்க்கையின் இருண்ட பக்கத்தையும் சுதந்திரத்தின் அருமையையும் நினைவூட்டுகிறது. ஒரு பக்கம் தங்கக் கனவுகளின் வாசல், மறுபக்கம் சுதந்திரத்திற்காக ஏங்கிய மனிதர்களின் தனிமைக் கல்.


அந்த மாலை, பனிமூட்டத்திற்குள் மெதுவாக மறைந்து கொண்டிருந்த Golden Gate Bridge-ஐ கடைசியாக பார்த்தபோது, “சில இடங்கள் வெறும் சுற்றுலாத் தலங்களல்ல, அவை *மனித வரலாற்றின் உயிருள்ள நினைவுச் சின்னங்கள்* என்ற உணர்வே ஏற்பட்டது.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...