Thursday, November 19, 2026

என்று தெரியும் இதன் தாக்கம்

“என்று தெரியும்

                 இதன் தாக்கம்”

“என்று தணியும்

 இந்த (ஆக்கிரமிப்பு)    

             ஆதிக்க தாகம்”

🥵 🥲🥲😭


காணி நிலம் வேண்டும் -- பராசக்தி 


காணி நிலம் வேண்டும் ! 


பாடி வைத்தார் பாரதியார் -- அன்று !


பாடலை, ஏட்டினிலே எழுதிச் சென்றார் பாரதி  -- அன்று !            


காலி நிலம் வேண்டும் -- பராசக்தி 


காலி நிலம் உடன் வேண்டும் ! 🧐 !


விரும்பியோர்,  காற்றின் போக்கினிலே போய்......... 


விரும்பிய வண்ணம், உழைக்காமல் 


கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளையடிக்க,


கொள்கை இல்லாக் கூட்டத்தார்க்கு.........., 


காலி நிலம் வேண்டும் -- பராசக்தி 


காலி நிலம் வேண்டும் ! 🤔 !


உலகே அழிந்தால் அன்றி, 

விலகாது ஐயா,                         


உலகை விட்டு " ஊழல் " என்றென்றும் 😇


…அக்ரி சா.இராஜா முகமது

Tuesday, November 17, 2026

மிகை எதுவும் நஞ்சாகும்

 மிகை எதுவும் நஞ்சாகும் 


வகை வகையாய் குற்றங்கள் நாளும் நிகழும் 

   வலிக்காமல், உழைக்காமல் வேணும் பணமும் 


பகையாம் பேராசையால் பாழாம் வாழ்வு

   பட்டம், பதவி எல்லாம் பறிபோம் தாழ்வு


குகையாம் காதலதில் நரிகள் போடும் திட்டம் 

   கொள்ளை, கொலையில் தான் முடியும் வட்டம் 


நகைக் கடைக் கொள்ளையதை நாடே பேசியது 

   நாலு நாள் "கோடீஸ்வரன்" கதையாம் அது


அகவை இருபதுகளில் அவ் இருவரும் 

  அன்னை தரும் தைரியம் எது வரையும் ?


முகமூடி போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவும் 

   முன் கையில் பச்சை (டேட்டூ) அது தகவல் ஏவும்


"சுகம் இன்னும், சுகம் இன்னும்" *வேட்டல் தவறில்லை 

   சோர்வின்றி உழைத்துப் பெற இல்லை தொல்லை


" மிகை எதுவும் நஞ்சாகும் " என்றார் அன்று 

   மீ 'வன்னா, நி'னா கூட்டணி மீண்டும்  சான்று .


* வேட்டல் -- விரும்புதல் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 17/11/2026

வாட்ஸ்அப் – உள்ளங்கையில் உலகம்!

 வாட்ஸ்அப் – உள்ளங்கையில் உலகம்!


நவீனத் தொழில்நுட்பப் படிக்கட்டு!

நலிந்தோர் கைபிடித்து வழிகாட்டு!


யாஹூ மண்ணில் விதையாய் விழுந்தாய்!

இளைஞர் கரங்களில் செடியாய் எழுந்தாய்!


இரண்டாயிரத்து ஒன்பதில் மலர்ந்த விந்தை!

இன்றோ உலகை இணைத்திடும் சந்தை!


பிரையன் ஆக்டன், ஜான் கோம் படைத்த புதுமை!

கடவுச்சொல் கேட்காத நுழைவு எளிமை!


கைபேசி எண்ணால் திறந்திடும் கதவும்!

கட்டணமின்றிச் செய்தியை அனுப்பிட உதவும்!


காதலர் ஊடலைக் குறுஞ்செய்தி தீர்க்கும்!

குடும்பச் சண்டையோ நீலக்குறி வளர்க்கும்!


குரலாய் ஒலிக்கும், முகமாய்ச் சிரிக்கும்!

காணொளி அழைப்பில் தூரத்தை எரிக்கும்!


படங்கள், கோப்புகள், இருப்பிடத் தகவல்,

பகிர்ந்திடும் வேகத்தில் இணையமே வியக்கும்!


குடும்பக் குழுவில் குதூகலம் பொங்கும்,

நட்புக் குழுவிலோ நகைச்சுவை தங்கும்!


வணிகக் குழுவில் விற்பனை தகைக்கும்!

வாடிக்கையாளர் கேள்வியால் வணிகம் திகைக்கும்!


பூர்வா குழுவில் தமிழ்மணம் பொங்கும்!

அபூர்வ ராகங்கள் அதனால் எங்கும்!


காலை வணக்கத்திற்குக் கதவே எல்லை!

கடவுள் படங்களுக்கும் இடமே இல்லை!


வண்ணம் இங்கு வரையறை இல்லை!

எண்ணம் ஒன்றே உறுப்பினர் எல்லை!


படிக்காத செய்தியும் பகிர்ந்திடுவார் சிலர்!

பகிர்ந்தபின் உண்மையாவெனக் கேட்பார் பலர்!


நீலக்குறி கண்டதும் நெஞ்சம் சுடுமே!

'பார்த்தும் பதிலில்லை!' பரிதவித்து விடுமே!


தட்டச்சு செய்கின்றார் எனத் திரையினைப் பார்ப்பார்,

மூன்று புள்ளி மறைந்ததும் மூச்சினை விடுவார்!


அனுமனும் அன்று அலைந்தான் இலங்கை,

அன்னை சீதையைத் தேடிடும் வேங்கை!


தேடித் திரிந்தே தூதினை முடித்தான்,

தியாகத் தொண்டினால் வரலாற்றில் நிலைத்தான்!


வாட்ஸ்அப் கணையாழி அன்று இருந்திருந்தால்,

வாலிய வீரனுக்கு வேலை குறைந்திருக்கும்!


எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் காவல் தருமே,

இரகசிய உரையாடல் பாதுகாத்து நிற்குமே!


வாட்ஸ்அப் வீதியில் குப்பை கொட்டாதீர்!

வக்கணையாய் அதுக்கு சப்பை கட்டாதீர்!


உண்மை அறியாமல் உரையினைப் பகிராதீர்!

ஊழியால் உறவுகள் சிதைய பதராதீர்!



- திருஞானசம்பந்தம்

Monday, November 16, 2026

புவி காப்போம் -- வாரீர் !

 புவி காப்போம் -- வாரீர் !         



இயற்கையாய் விடும் மூச்சு


இன்பம் நமக்குப் பயக்குமே ! 


செயற்கை சுவாசம் யாவுமே 


செயல் மறந்த செய்கையே 🤔 


மூக்கு முட்ட உண்பாரும்


மூச்சு முட்ட சுவாசிப்பாரும் 


பாரில் மகிழ்வாய் வாழ்ந்ததில்லை அறிவீரே ! 


பாங்குடனே, புவியை நாமும் பேணினால்....


நடுக்கம் ஏதும் வாராமல் 


நம்மை அது காக்குமே !  👏 ! 


சுமையைக் கூட்டியும் பெருக்கியும் 


சுக வாழ்வை அழித்துவிட்டால் .......


புவியும்,  நன்மை நமக்குப் புரியுமோ ?


புரிந்தவர் புகலுவீர் ?


நம்மைத் தாங்கும் புவியை நாளும்


நாம் காத்து வாழ்ந்திட்டால்...... 


நன்மை பல கூடுமே !


கடமை இதுவென,     நாமுணர்ந்து 


மடமை அகற்றி வாழ்வோமே ! 


மாசுகளைப் போக்கியே


மாண்பறிந்து காப்போமே ! 


புவி காத்திட, இந்தக்


கவி சொல்வதுபோல்

நடப்போமே 🙏


….,,அக்ரி சா.இராஜா முகமது

Sunday, November 15, 2026

விமர்சனம்

படைப்பினைப் படைப்பது படைப்பவர் உரிமை!


படைத்ததை விமர்சிப்பது பார்பவர் கடமை!


நேர்மறை விமர்சனம் நெய்யூற்றும் தீபம்!


எதிர்மறை விமர்சனமோ எரியூட்டும் ரூபம்!


விமர்சனம் இல்லா எழுத்தும் முடங்கும்!


அதனினும் நன்று எதிர்மறை என்றே,


விமர்சனம் என்னும் இருபக்க வாளை


ஏந்திடு எழுத்தின் கேடயம் கொண்டு!


எதிர்மறைச் சொல்லில் கருத்தினைக் காண்போம்!


சொல்லும் கருத்தினில் வாதத்தை வைப்போம்!


விமர்சனம் என்பது வீழ்த்திடும் கல்லா?


வளர்ச்சிக்கு வழிகாட்டும் உளியெனக் கொள்க!


ஏளனம் என்றால் இதயத்தில் காயம்!


ஏற்றம் நோக்கினால் தோல்வியும் மாய(யு)ம்!


படைப்பாளி திருந்திடப் பார்வைகள் உதவும்!


படைப்பின் தரமோ நாள்தோறும் உயரும்!


மௌனம் கலையை அழித்திடும் அன்றோ?


மொழிந்தால் பொழியும் பனியென மலர்மேல்!


- திருஞானசம்பந்தம்

படம் பார்த்து பா எழுது(இயற்கை பிறழ்வு)

 இயற்கை பிறழ்வு - அழிவின் அழைப்பு


நீரினிலே நீந்தி மகிழும் 

மீன் ஒன்று பறக்க விழைவதும்


பாரினிலே பறந்து மகிழும் 

பறவை ஒன்று நீந்த விழைவதும்


இயற்கை விதியில் தப்பாகும்

அது தற்கொலைக்கு ஒப்பாகும் 


இயற்கையினின்று முரண்பட்டால் 

அழிவு ஒன்றே முடிவாகும் 


உங்கள் தோழன் ஶ்ரீவி


====================

முந்நீர் முழுதும் ஞாயிறு பருகுமோ?


பெயலும் மண்ணை முழுதும் கரைக்குமோ?


வளியும் பார்மிசை முழுதும் புரட்டுமோ?


ஞாலமோ விதைகளை முற்றும் விழுங்குமோ?


சமன்செய் கோலோன் அவனே விசும்பே!


நுண்கலை கொண்டு நன்மதிக் குறியாய்,


அருவிச் சுனையை அணைகளில் அடக்கி,


யாற்றின் வழியை அடைத்துத் திரித்து,


வரையைக் குடைந்து மாடம் எழுப்பி,


மரன்கள் தடிந்து நகரம் நரகம் படைத்து,


கானம் சிதைத்துப் புறவினை எரித்து,


கானுறை உயிரின் உறையுள் கனவென,


மாற்றிப் பெயல்நீர் செல்வழி மறிக்கும்


பொழுதே மண்ணின் பொறையும் முடிவுறும் அன்றே!


வெள்ளம் பெருகும் யாறுகள் ஒருபால்;


வேரொடு வீழும் கானம் மறுபால்;


நேபாளத்து வரையின் நெஞ்சம் காண்மின்;


ஞாலம் அதிர்ந்த பெருந்துயர் யாதே!


புனலின் ஆற்றல் அறியாய் நீயே!


அழலில் நீந்த ஒல்லாய் நீயே!


வளியை அடைக்க ஆற்றாய் நீயே!


பாரினைப் பிளக்க முயலாய் நீயே!


ஆடூஉ நெஞ்சினும் அன்பின் சுனையே;


மகடூஉ நெஞ்சினும் மறத்தின் உரனே!


விரைவும் தெளிவும் இருவர்க் குண்டே;


ஓம்பலும் வலியும் இருவர்க் கென்றும்;


மென்மை என்று பாலினம் கொல்லோம்!


புதுமை நனியெனத் தெளிவினை மறவோம்!


உள்ளதை உணரின் உயிரும் மலருமே!


இயற்கை மறப்பின் உலகம் உருகுமே!


இயற்கை இயைந்து வாழ்மின் மாந்தரே!


நுண்கலை அதனால் எய்தல் அரிதே@


அறிவிலி மாந்தா உணர்மதி எளிதே!


வியப்பன யாவும் எய்த எண்ணலை;


வாய்த்ததை நயந்து இனிமை கொள்மதி மாந்தே!


 வே.திருஞானசம்பந்தம்


=======================

*வாழ்வின் மடத்தனம் அல்ல…*வளர்ச்சியின் மகத்துவம்!*

மீன் சொன்னதாம்…

வானத்தில் பறக்க வேண்டும் என்று!

பறவை சொன்னதாம்…

கடலுக்குள் நீந்த வேண்டும் என்று!

இயற்கை சிரித்ததாம்…

உங்கள் ஆசைகள் வீண் என்று!

ஆனால்…

மனிதன் மட்டும் ஆசைப்படலாமா?


மனிதனின் கனவுகள் மட்டும்

கண்டுபிடிப்புகளாக மாற வேண்டுமா?

மற்ற உயிர்களின் கனவுகள் மட்டும்

மடத்தனமாகக் கருதப்பட வேண்டுமா?

கைகள், கால்கள் மட்டுமே கொண்ட மனிதன்

அவற்றின் துணையால் நீந்தக் கற்றுக்கொண்டான்!

நீரில் மூழ்காமல் மிதக்கவும்,

கடலின் ஆழத்தை ஆராயவும் கற்றுக்கொண்டான்!

பறவையைப் பார்த்து வியந்த மனிதன்

விமானம் படைத்தான்!

வானத்தைக் கடந்து விண்வெளி செல்ல

ராக்கெட்டையும் உருவாக்கினான்!

வானிலிருந்து பாதுகாப்பாக இறங்க

பாராசூட்டையும் கண்டுபிடித்தான்!

*இயற்கை தராத சிறகுகளை*

*மனிதன் தானே உருவாக்கிக்கொண்டான்!*


அது அறிவின் சாதனை என்றால்,

மீனின் பறக்கும் ஆசை மட்டும்

எப்படிக் கேலிக்குரியதாகும்?


பறக்கத் தெரியாத மனிதன்

வானத்தை வென்றது பெருமை!

நீந்தத் தெரியாத மனிதன்

கடலைக் கடந்தது சாதனை!

அப்படியிருக்க,


*பறக்க நினைக்கும் மீனின் கனவையும்,*

*நீந்த நினைக்கும் பறவையின் ஆசையையும்*

*ஏன் குற்றமாகப் பார்க்க வேண்டும்?*

இயற்கையின் எல்லைகளை

மனிதன் தாண்டும்போது அது அறிவியல்!

மற்ற உயிரினங்கள் தாண்ட நினைத்தால்

அது இயற்கையின் மடத்தனமா?

ஆசைப்படுவது மனிதனின் உரிமை என்றால்,

கனவு காண்பது மற்ற உயிர்களின் உரிமையும்தானே!

*இயற்கையோடு இயைந்து வாழ்வது அறிவு!*

*இயற்கையைப் புரிந்து கொள்வது திறமை!*

*இயற்கையின் எல்லைகளை ஆராய்வது துணிவு!*

ஆசைகள் இயற்கைக்கு முரணானவை அல்ல,

*அவை புதிய சாத்தியங்களின் தொடக்கம்!*

வாழ்க்கை என்பது

இயற்கை விதித்த எல்லைகளுக்குள்

அடங்கிக் கிடப்பதல்ல…

*கனவு காண்பது,*

*முயற்சி செய்வது,*

*புதிய சாத்தியங்களைத்*

*தேடுவது…*

*அதுவே வாழ்க்கை!*

- தியாகராஜன்


=============================

அவரவர் இயல்பில் அழகு!

விண்ணில் சிறகடிக்கும் பறவைக்கும்

வியப்பூட்டும் நீருலகின் ஆசை!

நீரினில் நீந்திடும் மீனுக்கோ

நீலவானில் பறந்திடும் ஆசை!

தனக்குரிய அழகு மறந்து

தவிப்பது ஏனோ இரண்டும்?

எட்டாத ஒன்றை எட்டிப் பிடிக்க

ஏங்குவது ஏனோ மனமும்?

மனித மனமும் அப்படித்தானே!

மற்றவர் வாழ்வில் மயங்கிடுமே!

பிறர் போல வாழத் துடித்திடுமே!

பாலும் தயிரும் வெண்மையன்றோ?

பருகிப் பார்த்தால் சுவை வேறன்றோ?


காளையின் துயரம் நாய்க்குத் தெரியாது,

நாயின் பிழைப்பு காளைக்குப் புரியாது!

கட்டின்றித் திரியும் காளையின் சுதந்திரம்

கண்டே நாயும் ஏங்கிடுமோ?

நாய்க்குக் கிடைக்கும் பரிவும் பாசமும்

கண்டே காளையும் குமுறிடுமோ?

ஒன்றின் வாழ்வில் மற்றொன்று அறியாத

துயரங்கள் ஆயிரம் உண்டு!

அவரவர் வாழ்வின் அகத்தினில் புதைந்த

அவதிகள் பலவும் வெளியில் தெரியாது!

மலருக்குத் தனி மணம் உண்டு,

மரத்திற்குத் தனி நிழல் உண்டு;

நதிக்குத் தனிப் பாதை உண்டு,

இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு!

பிறரின் மகுடம் கண்டு மயங்காதே!

பிறரின் பாதையில் உன்னைத் தொலைக்காதே!

உனக்குள் உறையும் ஆற்றலை உணர்ந்து

உன் வழி சென்று உயர்ந்திடுவாய்!

உன்னதம் என்பது பிறரை வெல்வதல்ல,

உன்னையே நீ அறிந்து கொள்வதுவே!

பிறரைப் போல மாறுவதில் பெருமையில்லை,

தன்னியல்பில் மலர்வதைவிடச் சிறப்பு வேறில்லை

உலகமே ஒரு நாடக மேடையடா!

நடிக்க வந்தவர்கள் நாமடா!

அவரவர் பாத்திரம் தனை உணர்ந்து

அற்புதமாய் நாமும் நடித்திடுவோம்!

அடுத்தவர் பாத்திரம் அழகென்று எண்ணி

அதற்காக ஆசை கொண்டு அலைந்திடாதே!

உனக்குரிய பாத்திரம் மறந்து

உன் வாழ்வையும் தொலைத்திடாதே!

அவரவர் இயல்பில் அழகு உண்டு;

அதை உணர்ந்த வாழ்வில் நிறைவு உண்டு!


- லதா கணேசன்

============================




பொதுக்குழு/காமு - சோமு கலாட்டா காலனி கலைஞர்களுக்கு பாராட்டு விழா/குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி விவரணம்

 *பொதுக்குழு/காமு - சோமு கலாட்டா காலனி கலைஞர்களுக்கு பாராட்டு விழா/குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி விவரணம்*.


14 நவம்பர் 2026 சனிக்கிழமை காலை 9:30 மணி அளவில் மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் பொதுக்குழு துவங்கியது. 


மங்களகரமாக நிகழ்ச்சியை துவக்க குத்து விளக்கினை 


1. திரு. தியாக ராஜன் 

2. திரு.  ரமணி 

3. திருமதி.  பிருந்தா 

4. செல்வி. நிவர்சனா

5. திருமதி.  பிரபு குமாரி


ஆகியோர் ஏற்றி வைத்தனர். 


திருமதி துர்கா சாய்ராம் அவர்களுடன் இணைந்து அவையோர் தமிழ்ப் பண் பாடுதலோடு நிகழ்ச்சி துவங்கியது.


திருமதி பிருந்தா அவர்கள் அனைவரையும் வரவேற்று சிறப்பான வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.


முதலில் பொதுக்குழு நடைபெற்றது. தலைவர் ஸ்ரீவி அவர்கள் பொதுக்குழு கூட்டப்பட்டதன் நோக்கத்தை விளக்கியதோடு, நமது சங்க சட்ட விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வருவதற்காக இரண்டு திருத்தங்களை முன்மொழிந்து அவற்றை விளக்கினார். அந்த திருத்தங்கள்:


முதல் திருத்தம்:


*நிர்வாகிகளுக்கான தேர்தல் ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அதற்காக ஒரு தேர்தல் பணிக்குழு அமைக்கப்படும். வேட்பு மனு படிவம் புலனக் குழுவில் பகிரப்படும். பொதுக்குழு நடத்துவதற்கு 15 தினங்களுக்கு முன்பாக வேட்பு மனுக்கள் வரவேற்கப் படும். வேட்பு மனுக்களை தாக்கல் செய்திட ஐந்து நாட்கள் அவகாசம் தரப்படும். அதன் பின் இரண்டு நாட்கள் வேட்பு மனுவினை விலக்கிக் கொள்ள அவகாசம் உண்டு. பொதுக்குழு நடப்பதற்கு ஒரு வாரம் முன்பாக இந்த தேர்தல் பணி  செய்து முடிக்கப் படும்.*


*ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியே வேட்பு மனு செய்திட வேண்டும். ஒரு குழுவாகவும் (ஏழு பதவிகளுக்கும் சேர்த்து) வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதாவது ஒரு Panel  ஆக முன்மொழியலாம். ஒருவர் தன்னைத் தானே முன்மொழிந்து கொள்ளலாம். அல்லது பிறர் ஒருவரால் முன்மொழியப் படலாம்.*


*ஒருவர் வேறொரு நபரை முன்மொழியும் போது அவரது ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.*


*ஒரு பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் வந்தால் பொதுக்குழுவில் தேர்தல் நடத்தப்படும்.*


*ஒரு பதவிக்கு ஒரு வேட்பு மனு மட்டும் வந்திருந்தால் ஒரு மனதாக அப்பதவி நிரப்பப் பட்டதாக பொதுக் குழுவில் தேர்தல் குழுவினரால் அறிவிக்கப்படும்.*


*குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த வேட்பு மனுவும் வரவில்லை என்றால், ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளின் ஒப்புதலை பெற்று தேர்தல் பணிக்குழு அந்தப் பட்டியலையே பொதுக்குழுவில் அறிவிக்க வேண்டும்.*


இரண்டாவது திருத்தம்: 


*தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும், விருப்பத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாக உறுப்பினர்களும் தொடர்ந்து மூன்று நிகழ்ச்சிகளுக்கு, (அதாவது நிர்வாகக் குழு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்) வாராது இருந்தால் அவர்கள் நிர்வாகக் குழுவில் இருந்து விடுவிக்கப் படுவார்கள்.*


இந்த இரண்டு திருத்தங்களும் உறுப்பினர் சிலர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தபின் ஒரு மனதாக அவையோரால் ஏற்றுக் கொள்ளப் பட்டன.


பிறகு உறுப்பினர்கள் திரு. திருஞான சம்பந்தம் அவர்களும் திருமதி. வித்யா பிரபு அவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறி ஆலோசனைகள் வழங்கினார்கள். 


அவர்களுக்கு நிதிச் செயலர் சாய்ராம் அவர்களும் தலைவர் ஸ்ரீவி அவர்களும் விளக்கம் அளித்தனர். 


இரண்டாவது நிகழ்ச்சியாக காமு - சோமு கலாட்டா காலனி கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 


சிறப்பு விருந்தினர் திரு தாசரதி ஐயா அவர்கள் சிறப்பானதொரு உரையை வழங்கியதோடு கலைஞர்கள் சிலருக்கு நினைவுப் பரிசினை வழங்கினார்கள். 


நமது சங்க செயல்பாட்டையும் பி.டி.எஸ் தயாரிப்புக் குழுவையும் அவர் மனதாரப் பாராட்டியது நமது சங்கத்திற்கு பெருமை சேர்த்தது. 


பிறகு, நமது சிறப்பு விருந்தினர் திருமதி சுஜாதா அருண் கோபால் அவர்கள் தனது சன் டிவி படைப்பாக்க குழுவில் தலைவராக இருக்கும் அனுபவத்தோடு ஒப்பிட்டு நமக்கு சில வழி காட்டுதல்களையும் நமது தொழில்நுட்பக் கலைஞர்களை வெகுவாக பாராட்டியும் உரையாற்றினார்.


அவரும் நமது தயாரிப்பு குழுவினர் சிலருக்கு நினைவு பரிசுகள் வழங்கினார். 


நினைவுப் பரிசு வழங்க ஒவ்வொரு கலைஞர்களையும் தொழில்நுட்ப பிரிவினரையும் அழைக்கும் போது அவர்களது பங்களிப்பை பற்றி நிதிச் செயலர் அவர்கள் சிறப்பான அறிமுகத்தையும் செய்தது அனைவரையும் உற்சாகப் படுத்தியது.


நினைவுப் பரிசு பெற்றோர் பட்டியல்: 


1. ஸ்ரீவி 

    2. தேவி அருண் 

3. மலர்விழி 

4. சுல்தானா - அர்மான் -அர்ஃபா 

5. ஸ்ரீவித்யா 

6. அமுதவல்லி 

7. ரமா 

8. லக்ஷ்மி நாராயணன் 

9. துர்கா சாய்ராம் 

10. ரஷீதா-ஆயீஷா 

11. வெங்கட்ராமன் -ரமா 

12. பிரபு குமாரி 

13. கார்த்திக் ரமணி 

14. சுஜாதா சுகுமார் 

15. சில்வெஸ்டர் ஹாஸ்டிங்ஸ் 

16. கேசவன் 

17. விஜயகுமாரி - சுகுமார் 

18. சுஜாதா - ஜெகன் 

19. தியாகராஜன் 

20. விஜயலக்ஷ்மி பாலாஜி 

21. ஸ்ரீநிகேதன் 

22. கணேசன் 

23. மகிலேஷ் 

24. நிவர்ஷனா 

25.  ஆதிரா 

26. I. B. ஸ்ரீநிவாசன் 

27. மல்லிகா மணி 

28. நாகராஜன் 

29. மல்லிகா 

30. லலிதா கிருஷ்ணன் 

31. ரம்யா 

32. மைதிலி நீலகண்டன் 

33. வாசலக்ஷ்மி 

34. ஸ்வாதி 

35. லதா ஐயாசாமி 

36. நல்லம்மை -ரம்யாதேவி 

37.விமலா 

38. பத்மா

39. அருண் 

40.  அசோக்

41. தாசரதி


இந்த அன்புப் பரிசினை நமது நிதிச் செயலர் திரு. சாய்ராம் அவர்கள் அன்பளித்தார்கள். பி டி எஸ் தயாரிப்புக் குழுவினை வழி நடத்திய - காமு சோமு திரைத் தொடரின் இயக்குனர் நமது நிதிச் செயலர் அவர்களுக்கு தலைவர் ஸ்ரீவி அவர்களும் தாசரதி ஐயா அவர்களும் இணைந்து நினைவுப் பரிசினை வழங்கினார்கள். அதனை தலைவர் ஸ்ரீவி அவர்கள் அன்பளித்தார்கள்.


இந்தத் திரை நாடகத் தொடரின் வெற்றிக்கு உழைத்திட்ட சில கலைஞர்களும் அவர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.


அதன் பின்  குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி துவங்கியது.


குழந்தைகள் ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடியும், பேசியும், ஓரங்க நாடகம் நடத்தியும் அவையோரை மகிழ்வித்தார்கள். தெள்ளத் தெளிவாக நல்ல உச்சரிப்போடு மழலை மாறாது சில குழந்தைகளும் கம்பீரமாக ஆணித்தரமாக சில வளர்ந்த குழந்தைகளும் மேடையில் பேசிய - பாடிய விதம் நமது தமிழ்ச்சங்கம் மிகச் சரியான பாதையில் பயணிக்கிறது என்பதற்கும் எதிர்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தாரகைகளாக குழந்தைகள் ஜொலிக்கப் போகிறார்கள் என்பதற்கும் கட்டியம் கூறியது.


பங்கேற்று கலக்கிய குழந்தைகள்:


குழந்தைகள் 

1. தான்யா 

    2. மித்ரா 

    3. வேத வியாஷ்

    4.  வருண். 

    5. வர்ஷா 

6. கயல் 

7. நிதின் 

    8.  அர்மான் 

    9.   அர்ஃபா

   10. மீரா 

11. மந்த்ரா


அனைத்து குழந்தைகளுக்கும் திருமதி சுஜாதா அவர்கள் கையால் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 


நிகழ்ச்சியின் நிறைவாக திருமதி மல்லிகா அவர்கள் நன்றியுரை நவீன் என்ற பிறகு நாட்டுப்பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. 


*நன்றிகள் பற்பல*:


இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக கரத்தாலும் கருத்தாலும் உழைத்திட்ட தன்னார்வலர்கள் நிர்வாகிகள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. 


தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி நமது அழைப்பினை ஏற்று வந்து கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் திரு தாசரதி ஐயா அவர்களுக்கும் திருமதி சுஜாதா அருண் கோபால் அவர்களுக்கும் நமது உளம் நிறை நன்றிகள் 


ஒலி அமைப்பிற்காக உதவிக்கரம் நீட்டிய நமது உறுப்பினர் திரு கார்த்தி ரமணி அவர்களுக்கும் அவர்களுடன் இணைந்து ஒலி அமைப்பை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுத்த அவரது நண்பர்களுக்கும் நன்றிகள் பற்பல.


காணொளி எடுத்து நமது youtube சேனலில் ஏற்ற உதவிய திரு. பாலா அவர்களுக்கும் நமது நன்றிகள் பல


இந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இல்லாத கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சு நிறை நன்றிகள்🙏


*ஸ்ரீவி*

தலைவர்

Saturday, November 14, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {47} *கானல்வரி காதை* *நடந்தாய் வாழி காவேரி*

 ••••••••••••••••••••••••••••••••

*{47} சிலம்பொடு ஒரு பயணம்*


*கானல்வரி காதை*


*நடந்தாய் வாழி காவேரி*

•••••••••••••••••••••••••••••• 


கானல் வரி பாடல்களில் 

ஒருவர் மாற்றி ஒருவர் பாடியபடி இருக்க 

அது விவாதமாக மாறி வருவதை பார்த்து வருகிறோம். 


ஒருவர் எதார்த்தமாக கூறுவதே 

வினை விளை காலத்தில் 

விபரீதமாக போகும் என்பதை கானல்வரி காதை அருமையாக விவரிக்கிறது. 


நம் பயணத்தை தொடர்வோம் வாரீர்! 


மாதவி, கலவியால் மகிழ்ந்தாள் போல் கோவலனிடம்

இருந்த யாழை வாங்கி, புலவியால் கானல் வரி பாடத் தொடங்குகிறாள்.

பிரச்சனையும் தொடங்குகிறது. 

வலுவாகத் தொடர்கிறது.



*ஆங்கு, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங் கண் மாதவியும்,*


கோவலன் பாடிய பாடலை கேட்ட மான் போல மருளும் கண்களை உடைய மாதவியும்,


*'மன்னும் ஓர் குறிப்பு உண்டு; இவன் தன் நிலை மயங்கினான்’ என*,


கோவலன் வேறு ஏதோ உட்பொருளை வைத்தே பாடுகிறான் என நினைத்து,


*கலவியால் மகிழ்ந்தாள்போல்,புலவியால் யாழ் வாங்கி,*


கலவியில் (கூடலில்) மகிழ்ந்ததைப் போல, முக மலர்ச்சியோடு புலவியால் (ஊடலில் வரும் பொய்க் கோபத்தோடு) அவன் கையில் இருந்து யாழினை பெற்றுக் கொண்டாள்.


*தானும் ஓர் குறிப்பினள் போல், கானல் வரிப் பாடல்-பாணி,*


தானும் அவனைப் போல வேறு பொதுக் கருத்து உடையவள் போல் வெளிக்கு தோன்றுமாறு பாடத் துவங்கினாள்.


*நிலத் தெய்வம் வியப்பு எய்த, நீள் நிலத்தோர் மனம் மகிழ,*


மண்ணில் உள்ளோரெல்லாம் மகிழும்படியும் - விண்ணில் உள்ளோரெல்லாம் வியப்புறும் படியும்


 *கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்மன்*


கானல்வரி பாடல்களை யாழும் குரலும் சேர்ந்து இசைக்க அருமையான குரலோடு எல்லாரும் மயங்கும் படி பாடினாள்.


---------------------

இனி மோகன் ஐயா தொடர்கிறார் 

---------------------


கானல் வரி

ஐயா,

தாங்கள் மாதவி யாழுடன் கானல் வரிப்பாடலை இசைப்பதை வர்ணித்தீர்.

நான் கண்டு பதிவிடப்போவது, மாதவி  காவேரி பற்றிப் பாடும் ஆற்றுவரிப் பாடல்கள்.


ஆற்றுவரி என்பது ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடப்படும் ஒருவகை வரிப்பாடல் . மாதவி காவேரிக் கரையில் பாடிய வரிப்பாடல்களில் காவேரி ஆற்றைப் பற்றிப் பாடப்பட்ட பாடல்கள் ஆற்றுவரி என்று அழைக்கப்படுகின்றன.


இந்த ஆற்றுவரிப் பாடல்களைக் மாதவி பாட நாம் கேட்டு ரசிப்பதோடு மட்டுமின்றி, அவள பாடல்களின் உட்பொருளையும் உள்வாங்கிப் பயணிக்கிறோம். 


அவள்காவிரியை வர்ணித்துப் பாடுவது மிகவும் இரசிக்கத்தக்கது. கூடவே  சோழ மன்னனை முன்னிறுத்திப் பாடுவது,பின்வரும் பிரிவு, தொடர்ந்து வரும் துன்பங்களை , சுட்டுவதாக உள்ளது. எனவே இயற்கைக்காட்சிகளின்ஊடே, ஊடலின் நிழலும் தொடர்ந்து வருகிறது. 

அவள் வரித்த ஆண்மகன் ஊடல் கொண்டானோ என சந்தேகித்து, அந்த ஆற்றாமை தாங்காமல்  , மனதை ஆற்றப் பாடுவதால் ஆற்று வரியோ!


இப்போது காவிரியை  அவள்  வர்ணிக்கும்  பாடல்களை முதலில் ஒரு மொத்தமாக, காண்போம்.

" நடந்தாய் வாழி காவேரி" என்று வாழ்த்துகிறாள். காவேரி சோழ நாட்டில் ஓடுவதில்லை, கருநாடகத்தைப்போல். மெதுவாக நடந்து, சோழ வளநாட்டின் இயற்கைச்சிறப்புகளைக் கண்டு கொண்டே  நடக்கிறாளாம்.

எப்படி?

கருவண்டுகளின் ரீங்கார ஒலிப்பின்னனணியில், பூப் போர்வையைப் (  மணிப்பூ ஆடை அது போர்த்து)போர்த்திக்கொண்டு கயல்விழிகளால் நோக்கிக்கொண்டு ( கருங்கயல்கண்)நடக்கிறாள்.

 மருங்கே உள்ள பூஞ்சோலைகளில் ( பூவர் சோலை) மயில்களாட, ( மயில் ஆலப்புழிந்து)குயில்கள் தாமே விரும்பிப் பாட,விருப்பம் தரக்கூடிய மாலைகள்அசைய  ( காமர் மாலை அருகு அசைய) ரசித்தபடி பொன்னி மாதா நடக்கிறாள்.தன்கணவன் செங்கோல்வளையாமைக்காக,( நாம வேலின் திறன்கண்டே)

நடக்கிறாள்.அவ்வாறு அவள்நடப்பது அவள்தலைவனின் அச்சம்தரும்ஆற்றலைக்கண்டே என்கிறாள்.


சோழ நாட்டை, ஒரு தாய் மகவைக்காப்பது போல் காத்து, அழிவு செய்யும் ஊழிக்காலங்களையும் தாண்டி மக்கள் உயர்களைக் காக்கும் காவேரியே,  அங்ஙனம்   ஒழுகுதல் யாவும் உயிர் காக்கும் ஆணைச்சக்கரம் செலுத்துவோன் அருளே. ஆகவே காவேரித்தாயே நீயும் வாழ்க என வாழ்த்துகிறாள்." 

"பூவர் சோலை",மயில் ஆலப்புரிந்து", "காமர் மாலை" என ஓலைச் சித்திரங்கள் தீட்டுகிறார் அடிகள். 

இந்த சோழ மன்னன், " உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான்" மட்டும்அல்ல; 

" பகல் வெய்யோன்"- நடுநிலைமை ( பகல்) விரும்புவன்( வெய்யோன்).


கோவலனின் கானல் வரிப்பாட்டுகளைக்கேட்ட மாதவி,இவன் உள்ளத்தில் நிலை பெற்ற வேறுபட்ட மாதரின் குறிப்பு  உள்ளது என எண்ணி ஊடல் கொண்டு மேற்கொண்டவாறு பாடினாள்.

ஆகவே பொன்னி( காவேரி) மகளுக்கும், சோழ மன்னனுக்கும் உள்ள நெறி மாறா உறவை உறுத்திப் பாடினாள். 

ஊழ்வினை காரணமாக, சந்தேகம் எனும் பேய் தலைவன் தலைவி உறவில் புகுந்தால், விளைவு?

நாம் காண்போம் கானல் வரிக்காதை முழுவதும் பயணித்து.

Friday, November 13, 2026

படம் பார்த்து பா எழுது (அறிவாற்றலா அன்புடைமையா)

 *அறிவாற்றலா அன்புடைமையா*


அறிவு ஏற்கும் விடயங்களை 

இதயம் ஏற்க மறுக்கிறது 


இதயம் சொல்லும் தகவல்களை 

அறிவு உணர மறுக்கிறது 


நீதி நெறியும் அறிவியல் உண்மையும் 

அறிவினை ஆட்டிப்படைக்கிறது 


அற வழியும் மனிதநேயமும் 

இதயத்தை துடிக்க வைக்கிறது. 


இரண்டுக்கும் இடையில் சிக்கிய மனிதன் 

தோளில் சிலுவையை சுமக்கின்றான் 

தவிர்க்க வழிகள் 

ஏதுமின்றி

தவியாய் அவனும் தவிக்கின்றான்


ஒருபுறத்தில் இதயம் இருக்க 

மறுபுறத்தில் அறிவு இழுக்க

சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு 

தள்ளாடி அவனும் நடக்கின்றான்


*உங்கள் தோழன் ஶ்ரீவி*


=================

அன்பு 


அன்பெனும் கப்பலில் பயணித்த ஆதாம் ஏவாளின் இன்பம்

மறைந்து துன்பகடலில் சிக்கி

யுகங்கள் கடந்தும் 

கரை சேராமல் இருப்பது எதனாலோ?

அறிவெனும் மாயக்கனியை  புசிததாலா?🤔

====

அறிவு          

            எதுவோ?


எவ்வுயிரும் தம்முயிர் போல் 

எண்ணி பிறர் துன்பத்தை கண்டு

என்னை துடிக்க வைக்கும் என்

 இயற்கை அறிவா?


நான் வாழ தரணியே அழிந்தாலும்

அசாராமல் சிரிக்கும் என்

செயற்கை அறிவா ?


இயற்கை கொடுத்த அறிவோ 

என்னை அன்புவழி

அழைக்க

செயற்கை அறிவோ என்

மூளையை சலவை செய்ய 


முன்னேறவும் முடியாமல் 

மூச்சு விடவும் 

இயலாமல் தவிக்கும் 

என்னை அறிவிலியாக்கிய அறிவு எதுவோ?😉


-வித்யா

===========

அன்பா? அறிவா? – எது பெரிது?


அன்பெனும் அமுதம் அகிலம் வெல்லும்!


அறிவெனும் ஒளியோ இருளினைக் கொல்லும்!


அன்பினால் உள்ளம் அரியணை ஏறும்!


அறிவினால் உலகம் அடங்கியே போகும்!


அறிவுரை கூறி அகந்தையில் நிற்பார்!


அன்புரை கூறி அரவணைத்துக் கொள்வார்!


குழந்தையின் முன்னே அறிவாளி தோற்பான்!


குடும்பத்தில் அன்பே மேலென உணர்வான்!


அறிவின்றி அன்பு வழிதவறிப் போகும்!


அன்பின்றி அறிவு அகந்தையாய் மாறும்!


அன்பும் அறிவும் இருகண்கள் மாந்தர்க்கு!


ஒன்றினை இழந்தால் உலகமே இருளும்!


அன்பே பெரிதென உணர்ந்திடு மனிதா!


அறிவுடன் அதையே உரைத்திடு இனிதா!


அறிவினால் வெல்வது அவையினில் பெருமை!


அன்பினால் வெல்வதே அகிலத்தின் அருமை!


- திருஞானசம்பந்தம்


=================


Thursday, November 12, 2026

வானொலி – காதுக்குள் ஒரு குட்டி உலகம்!

 வானொலி – காதுக்குள் ஒரு குட்டி உலகம்! 


கண்ணின்றிக் காட்டிடும் காட்சிகள் பலவே!


காதுவழி உலகினைக் கைக்குள் தருமே!


விவசாயி வானிலை அறிந்திட சுருள்வான்!


விடுமுறை கிடைத்திட மாணவன் மருள்வான்!


பாட்டு கேட்டிட பாட்டொலி கூட்டுவார்!


பக்கத்து வீட்டாரும் கதவை பூட்டுவார்!


இரண்டே மின்கலம் இவனுக்கு உணவு!


இணையம் தேடா இனிய உறவு!


கண்ணுக்கு விடுமுறை; காதுக்கு விருந்து!


கற்பனைக்கு சுற்றுலா; கவலைக்கு மருந்து!


அப்துல் ஹமீதின் அழகிய தமிழின் உச்சரிப்பில்


அன்றோ முளைத்தது பாட்டுக்குப் பாட்டு!


சரோஜ் நாராயணசாமியின் குரலின் கம்பீரம்!


சாதாரண செய்தியையும் மாற்றிடும் சரித்திரம்!


மயில்வாகனனின் மந்திரக் குரல் கேட்டு,


மலர்ந்தது பல தமிழ் மொட்டு!


எண்பது - தொண்ணூறுகளில் இரவுகள் இனிமை!


வயலும் வாழ்வால் விவசாயம் செழுமை!


வண்ணச்சுடர் தேடும் தொடர் நாடகங்கள்!


வீட்டில் தினம் கேட்கும் குடும்பங்கள்!


புதிய திரைப்படங்களின் ஒலிச்சித்திரம்!


பாடல் தொடங்கிடப் பாதியில் நிறுத்தி,


"அடுத்த நிகழ்ச்சியில் தொடரும்" என்பார்!


காதலி விரும்பிய பாடலைக் கேட்டிட,


காளையர் கடிதங்கள் குவித்திடும் காலம்!


தேன் கிண்ணம் நேயர்களின் கடிதம்!


விவித் பாரதியில் இரவு நேர திரையிசை!


விளையாட்டு நேரலை இந்தியில் படிக்கும்!


புரியாத மொழியெனும் வானொலியில் பிடிக்கும்!


ஆகாசவாணி செய்திகள் அன்றைய அறிவு!


தேன் கிண்ணம் நேயர்களின் கடிதம்!


பத்துமணியில் பாயும் பழைய ராகம்,


படுக்கையை நனைக்கும் வானொலியின் மாயம்!


விவித் பாரதியில் தேசிய இசை நிகழ்ச்சியில்,


வயலின் வைத்தியநாதன், பாம்பே சகோதரிகள்,


பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான்,


பண்டிட் கிஷன் மகராஜ், பண்டிட் சம்தா பிரசாத்,


உஸ்தாத் அமீர் கான், உஸ்தாத் அல்லாரக்கா,


ஷோபா குர்து, பேகம் அக்தர்,


பண்டிட் பீம்சென் ஜோஷி, கிஷன் மகராஜ்,


பண்பலை அதுவால் பரிச்சயம் ஆனார்!


மொழியுமில்லை, மதமுமில்லை, மணியே எல்லை!


பதினொரு மணிக்கு மங்கள இசையால் நிறைவு!


கண்ணுக்குத் தெரியாத கலைஞனின் குரலில்,


கற்பனை உலகமே கண்முன் விரியுமே!


காதுக்குள் நுழைந்து கருத்தினை விதைத்து,


காலங்கள் கடந்தும் கைகொடுத்திடுமே!


தொலைக்காட்சி வந்தது; தோற்றுப்போகவில்லை!


கைபேசி வந்தது; காணாமல் போகவில்லை!


பேசாமல் பேசும் பேரறிவுச் சாதனம்,


வானொலி வாழ்க! அதன் வான்புகழ் வாழ்க!



- திருஞானசம்பந்தம்,


====

தேர்தல் காலங்களில், 

டீக்கடை முன்பு 

பெருங்கூட்டம் கூடும் 


டீக்கடை ரேடியோவில் 

சரோஜ் நாராயணசாமி/ கூத்தபிரான் குரலில் 

தொகுதி முன்னணி நிலவர செய்திகள் வாசிக்கப்படும்.  


முகமறியா அந்த குரலினை

ரசிகர் பட்டாளம் 

மெய் மறந்து கேட்கும்.


கிரிக்கெட் வர்ணனை கேட்க 

கையடக்க ட்ரான்சிஸ்டரை 

காதருகே வைத்த படி 

கண்ணும் கருத்துமாய் காமெண்டரி கேட்டபடி 

சாலையில் போவோர் அதிகம். 

எதிரில் வருவோர் அவரை நிறுத்தி 

*ஸ்கோர் என்ன*

எனக்கு கேட்பது அதைவிட அதிகம். (இடையிடையே வரும் இந்தி வர்ணனையில் வரும் இந்தி எண்களை அறிய தனியே அவற்றை கற்றுக் கொண்டது ஓர் அனுபவம்)


டெரக் ஓ பிரைன் அவர்களின் போன்விட்டா குவிஸ் கான்டெஸ்ட் ஞாயிறு மதியங்களை மகிழ்ச்சியுற வைக்கும்.


சிறுவயதில் ரேடியோவில் ஒளிரும் *மேஜிக் ஐ* (ரேடியோவில் வரும் ஒலி அலைகளுக்கு ஏற்ப குறைந்தும் விரிந்தும் ஒளிரும் ஒரு சிறிய விளக்குத் திரை) கண்களுக்கு களிப்பூட்டும். 


ஒலிச் சித்திரம், திரை கானம், நேயர் விருப்பம் என வாழ்வின் பல தருணங்களை ஒளிமயமாக்கிய வானொலிப் பெட்டிக்கு வந்தனம்.


- ஸ்ரீவி


Saturday, November 7, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {46} *கானல்வரி காதை* *துவளும் இடைப் பெண்ணாள்*

 ••••••••••••••••••••••••••••••••

*{46} சிலம்பொடு ஒரு பயணம்*


*கானல்வரி காதை*


*துவளும் இடைப் பெண்ணாள்*


••••••••••••••••••••••••••••••


*கடல் புக்கு உயிர் கொன்று வாழ்வோர் நின் ஐயர்....*


கடலாடி மீன்பிடித்து அதனை விற்று வாழ்பவர்கள் உனைப் பெற்றோர் 


*உடல்புக்கு உயிர் கொண்டு வாழ்வை மன் நீயும்*


நீயோ உன்னைப் பார்ப்பவரின் உடலில் புகுந்து கொண்டு அவரை கொல்பவளாய் இருக்கிறாய். 


... ... 

...... 


*இடர் புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய்*


உடல் வலிமையால் துன்பப்பட்டு வெளியும் சிற்றிடையை இழந்து விடாதே. 


*கொடுங் கண் வலையால் உயிர் கொள்வான் நுந்தை*


வளைந்த கண்களுடைய வலையை வீசி உயர் பறிப்பவர் உன் தந்தை. 


*நெடுங் கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும்*


நெடிய உன் கண்கள் எனும் வலை வீசி பிறரை கொல்பவள் நீ.


*நுடங்கி  உகும் மென் ,நுசுப்பு இழவல் கண்டாய்*


மின்னலைப் போல் உள்ள உன் எடை தடுமாறுகிறதே! அதை கவனி...


*ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர்*


கடல் அலை மேல் சீறிப்பாய்ந்து ஓடும் படகுகள் (திமில்) மேல் சென்று உயிர்  கொல்வர் (மீன் பிடிப்பர்) உனைப் பெற்றோர் 


*கோடும் புருவத்து உயிர் கொல்வை மன் நீயும்*


வில் போல வளைந்து இருக்கும் உன் புருவத்தாலேயே பார்ப்பவரை கொல்கின்றாய் நீ.


*வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் நீ*


உடல் சுமையால் வருந்தி வாடும் உன் மெல்லிய இடையை கவனி.


*******

மோகன் ஐயா தொடர்கிறார் 

*******


கானல் வரிக்காதையில் நம் பயணம் தொடர்கிறது.....

ஐயா,

இப்போது நாம் காண இருக்கும் பகுதியில்,

"இழவல் கண்டாய்"  என்றுமுடியும் திணை நிலைவரியாக அடிகள் படைக்கிறார். "இழவல் கண்டாய்"- மின்னல் போன்ற இடையை வருந்த விடாதே எனப்பொருள் கொள்ளலாம்.

திணைக்கோட்பாடு மனிதனை மட்டுமின்றி அத்திணையில் உள்ள இயற்கை வளங்கள், விலங்குகள், நீர் , மண் ஆகியவற்றையும் இணைத்து ஒரு முழுமையான  இயற்கையோடு இணைந்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும். இங்கும் நெய்தல் நில செயல்பாடுகளின்  பின்னணியில்  தலைவியைக்கூடிப்பிரிந்த தலைவன் தன்ஆற்றாமையைக் கூறுவதை  நீங்கள் விவரித்தீர்.

இந்த இடந்தலைப்பாட்டின் "உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வை"- என்பது அருமையான வரி! -

உடலிலே புகுந்து உயிரைக் கொன்று நீ வாழ்கிறாய்! என்கிறான்.


என் பயணத்தில் நான் கண்டவற்றைக்கூறுகிறேன்:

" ஒவ்வாய் இவளை" என்று தலைவி வர்ணிக்கப்படுகிறாள்.

"ஒவ்வாய் " என்றால் "இவளுக்கு  நிகராக வேறு வேறு யாரும் இல்லை" என்று பொருள்.

நிச்சயமாக!

பவளத்தால் செய்த உலக்கையால் வெண்முத்துகளைக் குற்றுவாள்.

புன்னை மர  நிழலிலே ,புலால் நாறும் இடத்தில்அன்னப்பறவை போன்று அசைந்து அசைந்து நடக்கிறாள். 

தேனைத் தன்வாயில் வைத்திருக்கும் நீல மலரைக்கையில் ஏந்தி , மீன்வற்றலைக்காய வைக்கப் பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கிறாள்.

பேரழகிதான்! 

ஆனால் அவளின் செவ்வரி படர்ந்த கண்கள் குவளை மலர்களோ, வேல்களோ அல்ல. அவை மிகவும்கொடியன.

" சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய்" என மூன்று  முறை உறுத்திக்கூறுகிறான்.

"அழகிய அன்னமே  , நீ அவளோடு சேராதே! கடலை வேலியாக, கொண்ட உலகைத் தன் அழகால் கலக்கிக்கொண்டு

இருக்கிறாள்."நடை ஒக்கும்" என்று அவள்பின் சென்றுவிடாதே "என்கிறான்.

பாருங்கள்!

தலைவன்தலைவியை நினைத்து வருந்தும்போது கூட இயற்கையாடு ஒட்டிய சுற்றுச்சூழல் நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, பாடுகிறான்.

நாம்தான் செயற்கை நுண்ணறிவு என்ற பெயரில் இயற்கையை விட்டு விலகிக்கொண்டே இருக்கிறோம்.


மேலே பயணத்தைத் தொடருவோம்.

இரவும் பகலும் இடையறா உழைப்பு





 இரவும் பகலும் இடையறா உழைப்பு!

இடுப்பொடி வாழ்வில் இறுகிய பிழைப்பு!


மாடங்கள் உயரினும் மனத்தில் ஏக்கம்,

மாடத்து நிலவிலும் வெக்கையின் துக்கம்!


குளிரறை வாழ்வில் குடில்நினைவு வாடும்,

கூடிய உறவின் குரலினைத் தேடும்!


ஆயிரம் கனவுகள் அகத்தில் தேக்கி,

அன்புறும் உறவை அணைக்கத் துடித்து,


நெஞ்சத்து ஏக்கம் நீங்கிட வேண்டி,

நெரிசலில் நின்று நெடுவூர் தாண்டி,


படிகளில் தொங்கியே பயணம் தொடரும்,

பாசத்தின் வேகம் பாதையைக் குறுக்கும்.


வழிநெடுந் தூரம் வலியெனத் தோன்றா,

விழிவழி ஏக்கம் விழித்துத் தூங்கா!


ஓலைக் குடிலில் ஒளியின் மீதம்!

ஓட்டைப் பாயில் உறக்கம் போதும்!


உற்றார் சூழ உறைந்த இரவு!

உள்ளம் மிஞ்சி நிறைந்த உறவு!


எரியும் இரவும் வெடியால் விடியும்! எண்ணெய்க் குளியல் கண்ணில் எரிச்சல்!


அக்காள் போனாள் அரை மணியாச்சி!

அவளை அழைத்து வெளியே அனுப்பு!


எரிந்த இரவின் மிச்ச சொச்சத்தில் எண்ணெய் குளியல் கண்ணில் எரிச்சல்!


புத்தாடை தானும்  புதுமணம் வீசும்!

பகிர்ந்துண் பலகாரம் பாசம் பேசும்!


பனியகலா வேளை  பலகாரச் சோலை! 

பழங்கதை பேசும் பாசத்தில் மாலை !


பிரிந்தவர் கூடும் பெருவிழா நாளாம்!

பிணைந்த உள்ளங்கள் பேரின்பக் கோலம்!


சுற்றமும் நட்பும் நான்முனை முற்றம்!

சொல்லொடு சிரிப்பும் சூழும் வட்டம்!


கட்டிய அணைப்பில் கவலை கரையும்!

கண்ணீர்த் துளியிலும் களிப்பு அரும்பும்!


மண்ணின் மணமும் மக்களின் குணமும்,

மறவா நெஞ்சின் மாண்புறு வரமே!


ஊருள் வாழ்வது உடலின் இருப்பு,

ஊராரோடு வாழ்வு உயிரின் செழிப்பு!


-திருஞானசம்பந்தம்

==================== 


"குளிரறை வாழ்வில் குடில் நினைவு" 


"படிகளில் தொங்கியே பயணம் தொடரும் 

பாசத்தின் வேகம் பாதையைக் குறுக்கும்"


போன்ற யதார்த்தத்தைக் கூறும் அழகான வரிகள் கொண்ட கவிதை. 

பாராட்டுகள் ஐயா 💐




பிழைப்புக்காக பெரு நகரம் வந்தும் 

   பேரின்பம் பிறந்த ஊரே தரும் 


உழைக்க கிராமத்தில் ஒருவரும் இல்லை 

   ஒவ்வொரு ஊரும் ஆகுதாம் பாலை


மழையும் பொய்க்குது மறுக்கவில்லை 

   மனமும் ஊரதை மறக்கவில்லை 


விழைவது என்று தான் மெய்யாகுமோ?

   "விவசாயம் தலை" என்ற குறளும் பொய்யோ?


__.  குத்தனூர் சேஷுதாஸ் 8/11/2026

Tuesday, November 3, 2026

காதல் என்பது

 காதல் என்பது 


அம்புகள் பாயும் போர்க்களம் அல்ல 

அன்பால் வளரும் விளைநிலமாம் 


அகிலம் முழுதும் ஆணும் பெண்ணும் 

கண்கள் கலந்து கருத்தில் நிறைந்து

காதல் உலகில் இரண்டறக் கலந்து 


இல் வாழ்வில் நுழைந்து 

மழலைகள் பெற்று பல்கிப் பெருகி 

களிப்புடன் வாழ்வதே வாழ்வின் பெருமை. 


களிப்பு தரும் காதல் என்பது 

இயற்கை தந்த உன்னத வரம். 


பெற்று வளர்த்து ஆளாக்கும் பெற்றோர்களையும் காதலிப்போம்! 


தோளோடு தோள் நிற்கும் தோழர்களையும் காதலிப்போம்! 


உற்றம் சுற்றம் அனைவரையும் 

உளமாறக் காதலிப்போம்.


இனிமையான இயற்கையினை

இன் முகத்தோடு காதலிப்போம்.


மகாகவி சொன்ன வைர வரியினை 

மீண்டும் சொல்கிறேன் தோழர்களே! 


*ஆதலினால் காதல் செய்வோம்*


வாருங்கள் உலகத்தீரே!



- ஸ்ரீவி


=============


களிப்பு தராவிட்டாலும் 

காலத்தின் கோலத்தில்

கசந்தாலும்

காதல் செய்க!

கற்போம் அந்த

கல்லூரியில்

வாழ்வின் பல பாடம்

காதல் எனும் அறம்

வளர்ப்போம்

அன்றே சொன்னார்

தமிழ் புலவர் பலர்

ஆதலால் காதல் செய்வோம்🙏🏽


- ஸ்ரீவித்யா,

Monday, November 2, 2026

படம் பார்த்து பா எழுது(தடைகள் உடைப்போம்)




*தடைகள் உடைப்போம்*

*இலக்கை அடைவோம்*


அனலே வரினும் புனலாய் வரினும் 


அன்பாய் நாமும் நம் வழி நடப்போம் 


மலரோ முள்ளோ

கதிரோ மழையோ 


கொண்ட கொள்கை உயர்த்திப் பிடிப்போம் 


மோதிச் சிதறும் அலைகள் போலே 


எதிர்ப்பு கண்டு சிதறிட மாட்டோம் 


தடைகள் கடந்து தாவி எழுந்து 


நெருப்பில் புகுந்து தொடர்ந்து நடந்து 


இறுதி இலக்கை அடைந்தே தீருவோம் 


மயக்கம் நாமும் சிறிதும் கொள்ளோம்


தயக்கம் வந்து தயங்கி நில்லோம்


இறுதி வெற்றி நமதென முழங்கி


வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடப்போம்! 


உறுதியாய் நடந்து இலக்கை அடைவோம் 


*உங்கள் தோழன் ஶ்ரீவி*


===================


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...