Sunday, November 15, 2026

படம் பார்த்து பா எழுது(இயற்கை பிறழ்வு)

 இயற்கை பிறழ்வு - அழிவின் அழைப்பு


நீரினிலே நீந்தி மகிழும் 

மீன் ஒன்று பறக்க விழைவதும்


பாரினிலே பறந்து மகிழும் 

பறவை ஒன்று நீந்த விழைவதும்


இயற்கை விதியில் தப்பாகும்

அது தற்கொலைக்கு ஒப்பாகும் 


இயற்கையினின்று முரண்பட்டால் 

அழிவு ஒன்றே முடிவாகும் 


உங்கள் தோழன் ஶ்ரீவி


====================

முந்நீர் முழுதும் ஞாயிறு பருகுமோ?


பெயலும் மண்ணை முழுதும் கரைக்குமோ?


வளியும் பார்மிசை முழுதும் புரட்டுமோ?


ஞாலமோ விதைகளை முற்றும் விழுங்குமோ?


சமன்செய் கோலோன் அவனே விசும்பே!


நுண்கலை கொண்டு நன்மதிக் குறியாய்,


அருவிச் சுனையை அணைகளில் அடக்கி,


யாற்றின் வழியை அடைத்துத் திரித்து,


வரையைக் குடைந்து மாடம் எழுப்பி,


மரன்கள் தடிந்து நகரம் நரகம் படைத்து,


கானம் சிதைத்துப் புறவினை எரித்து,


கானுறை உயிரின் உறையுள் கனவென,


மாற்றிப் பெயல்நீர் செல்வழி மறிக்கும்


பொழுதே மண்ணின் பொறையும் முடிவுறும் அன்றே!


வெள்ளம் பெருகும் யாறுகள் ஒருபால்;


வேரொடு வீழும் கானம் மறுபால்;


நேபாளத்து வரையின் நெஞ்சம் காண்மின்;


ஞாலம் அதிர்ந்த பெருந்துயர் யாதே!


புனலின் ஆற்றல் அறியாய் நீயே!


அழலில் நீந்த ஒல்லாய் நீயே!


வளியை அடைக்க ஆற்றாய் நீயே!


பாரினைப் பிளக்க முயலாய் நீயே!


ஆடூஉ நெஞ்சினும் அன்பின் சுனையே;


மகடூஉ நெஞ்சினும் மறத்தின் உரனே!


விரைவும் தெளிவும் இருவர்க் குண்டே;


ஓம்பலும் வலியும் இருவர்க் கென்றும்;


மென்மை என்று பாலினம் கொல்லோம்!


புதுமை நனியெனத் தெளிவினை மறவோம்!


உள்ளதை உணரின் உயிரும் மலருமே!


இயற்கை மறப்பின் உலகம் உருகுமே!


இயற்கை இயைந்து வாழ்மின் மாந்தரே!


நுண்கலை அதனால் எய்தல் அரிதே@


அறிவிலி மாந்தா உணர்மதி எளிதே!


வியப்பன யாவும் எய்த எண்ணலை;


வாய்த்ததை நயந்து இனிமை கொள்மதி மாந்தே!


 வே.திருஞானசம்பந்தம்


=======================

*வாழ்வின் மடத்தனம் அல்ல…*வளர்ச்சியின் மகத்துவம்!*

மீன் சொன்னதாம்…

வானத்தில் பறக்க வேண்டும் என்று!

பறவை சொன்னதாம்…

கடலுக்குள் நீந்த வேண்டும் என்று!

இயற்கை சிரித்ததாம்…

உங்கள் ஆசைகள் வீண் என்று!

ஆனால்…

மனிதன் மட்டும் ஆசைப்படலாமா?


மனிதனின் கனவுகள் மட்டும்

கண்டுபிடிப்புகளாக மாற வேண்டுமா?

மற்ற உயிர்களின் கனவுகள் மட்டும்

மடத்தனமாகக் கருதப்பட வேண்டுமா?

கைகள், கால்கள் மட்டுமே கொண்ட மனிதன்

அவற்றின் துணையால் நீந்தக் கற்றுக்கொண்டான்!

நீரில் மூழ்காமல் மிதக்கவும்,

கடலின் ஆழத்தை ஆராயவும் கற்றுக்கொண்டான்!

பறவையைப் பார்த்து வியந்த மனிதன்

விமானம் படைத்தான்!

வானத்தைக் கடந்து விண்வெளி செல்ல

ராக்கெட்டையும் உருவாக்கினான்!

வானிலிருந்து பாதுகாப்பாக இறங்க

பாராசூட்டையும் கண்டுபிடித்தான்!

*இயற்கை தராத சிறகுகளை*

*மனிதன் தானே உருவாக்கிக்கொண்டான்!*


அது அறிவின் சாதனை என்றால்,

மீனின் பறக்கும் ஆசை மட்டும்

எப்படிக் கேலிக்குரியதாகும்?


பறக்கத் தெரியாத மனிதன்

வானத்தை வென்றது பெருமை!

நீந்தத் தெரியாத மனிதன்

கடலைக் கடந்தது சாதனை!

அப்படியிருக்க,


*பறக்க நினைக்கும் மீனின் கனவையும்,*

*நீந்த நினைக்கும் பறவையின் ஆசையையும்*

*ஏன் குற்றமாகப் பார்க்க வேண்டும்?*

இயற்கையின் எல்லைகளை

மனிதன் தாண்டும்போது அது அறிவியல்!

மற்ற உயிரினங்கள் தாண்ட நினைத்தால்

அது இயற்கையின் மடத்தனமா?

ஆசைப்படுவது மனிதனின் உரிமை என்றால்,

கனவு காண்பது மற்ற உயிர்களின் உரிமையும்தானே!

*இயற்கையோடு இயைந்து வாழ்வது அறிவு!*

*இயற்கையைப் புரிந்து கொள்வது திறமை!*

*இயற்கையின் எல்லைகளை ஆராய்வது துணிவு!*

ஆசைகள் இயற்கைக்கு முரணானவை அல்ல,

*அவை புதிய சாத்தியங்களின் தொடக்கம்!*

வாழ்க்கை என்பது

இயற்கை விதித்த எல்லைகளுக்குள்

அடங்கிக் கிடப்பதல்ல…

*கனவு காண்பது,*

*முயற்சி செய்வது,*

*புதிய சாத்தியங்களைத்*

*தேடுவது…*

*அதுவே வாழ்க்கை!*

- தியாகராஜன்


=============================

அவரவர் இயல்பில் அழகு!

விண்ணில் சிறகடிக்கும் பறவைக்கும்

வியப்பூட்டும் நீருலகின் ஆசை!

நீரினில் நீந்திடும் மீனுக்கோ

நீலவானில் பறந்திடும் ஆசை!

தனக்குரிய அழகு மறந்து

தவிப்பது ஏனோ இரண்டும்?

எட்டாத ஒன்றை எட்டிப் பிடிக்க

ஏங்குவது ஏனோ மனமும்?

மனித மனமும் அப்படித்தானே!

மற்றவர் வாழ்வில் மயங்கிடுமே!

பிறர் போல வாழத் துடித்திடுமே!

பாலும் தயிரும் வெண்மையன்றோ?

பருகிப் பார்த்தால் சுவை வேறன்றோ?


காளையின் துயரம் நாய்க்குத் தெரியாது,

நாயின் பிழைப்பு காளைக்குப் புரியாது!

கட்டின்றித் திரியும் காளையின் சுதந்திரம்

கண்டே நாயும் ஏங்கிடுமோ?

நாய்க்குக் கிடைக்கும் பரிவும் பாசமும்

கண்டே காளையும் குமுறிடுமோ?

ஒன்றின் வாழ்வில் மற்றொன்று அறியாத

துயரங்கள் ஆயிரம் உண்டு!

அவரவர் வாழ்வின் அகத்தினில் புதைந்த

அவதிகள் பலவும் வெளியில் தெரியாது!

மலருக்குத் தனி மணம் உண்டு,

மரத்திற்குத் தனி நிழல் உண்டு;

நதிக்குத் தனிப் பாதை உண்டு,

இயற்கையில் ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு!

பிறரின் மகுடம் கண்டு மயங்காதே!

பிறரின் பாதையில் உன்னைத் தொலைக்காதே!

உனக்குள் உறையும் ஆற்றலை உணர்ந்து

உன் வழி சென்று உயர்ந்திடுவாய்!

உன்னதம் என்பது பிறரை வெல்வதல்ல,

உன்னையே நீ அறிந்து கொள்வதுவே!

பிறரைப் போல மாறுவதில் பெருமையில்லை,

தன்னியல்பில் மலர்வதைவிடச் சிறப்பு வேறில்லை

உலகமே ஒரு நாடக மேடையடா!

நடிக்க வந்தவர்கள் நாமடா!

அவரவர் பாத்திரம் தனை உணர்ந்து

அற்புதமாய் நாமும் நடித்திடுவோம்!

அடுத்தவர் பாத்திரம் அழகென்று எண்ணி

அதற்காக ஆசை கொண்டு அலைந்திடாதே!

உனக்குரிய பாத்திரம் மறந்து

உன் வாழ்வையும் தொலைத்திடாதே!

அவரவர் இயல்பில் அழகு உண்டு;

அதை உணர்ந்த வாழ்வில் நிறைவு உண்டு!


- லதா கணேசன்

============================




No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...