Saturday, September 26, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {40} *கடல் ஆடு காதை* *மாதவி யாழினை கையில் வாங்குதல்*

 ••••••••••••••••••••••••••••••••

*{40} சிலம்பொடு ஒரு பயணம்*


*கடல் ஆடு காதை*


*மாதவி யாழினை கையில் வாங்குதல்*

••••••••••••••••••••••••••••••


கடற்கரையில் கொண்டாட்டங்கள் களிப்புடன் நடப்பதையும் 


கோலாகலமாக 

கடற்கரையே விழாக்கோலம் பூண்டிருப்பதையும் 


கண்முன்னே காட்சிப் பொருளாய் கொண்டு வந்து நிறுத்திய சமணத்துறவி 


அடுத்த காதை நோக்கி நகர்வதற்கு 

கதையின் அடுத்த புள்ளிக்குச் செல்வதற்கு 

பாதையை அமைக்கிறார். 


மாதவிக்கும் கோவலனுக்கும் 

வரும் பிரிவை விளக்குகின்ற

கானல் வரி காதைக்கு 

அடித்தளம் இடுகிறார். 


எப்படி என பார்த்திடலாம்: 


அவ்வளவு கோலாகலங்கள் நடக்கின்ற கடற்கரையிலே 

மாதவியும் கோவலனும் மகிழ்ந்திருக்க 

புன்னை மரத்தடியில் 

ஓர் இடம். 

வசந்த மாலை*

(*மாதவியின் தோழி) அமைத்த இடம். 


*கடல் புலவு கடிந்த மடல் பூந் தாழைச் சிறை செய் வேலி அகவயின், ஆங்கு,* 


புலால் நாற்றமும் காய்ந்த மீன் வாடையும் மறைந்து போகும் அளவு செந்தாழை காவல் வேலியாக சுகந்திருக்கும் ஓர் உள்ளிடத்தில்.


*ஓர் புன்னை நீழல், புது மணல் பரப்பில்,ஓவிய எழினி சூழ உடன் போக்கி,*


ஒரு புன்னை மரம் தருகின்ற நிழலில் - புதிய மணல் பரப்பில் 

சித்திரப்பூ வேலைப்பாடு அமைந்த திரைச்சீலைகளை சுற்றிலும் கட்டி வைத்த


*விதானித்துப் படுத்த வெண் கால் அமளிமிசை,*


வெயில் உள்ளே விழாதவாறு மேற்கூறையும் அமைக்கப்பட்ட இடத்தில் அழகான வேலைப்பாடு கொண்ட யானைத் தந்தத்தை கால்களாகக் கொண்ட கட்டில் அமைந்திருந்தது.


இனிமோகன் தொடருகிறார்.


இக்காதையின் இறுதிக்கு வந்து விட்டோம்.

காவிய நாயகன் கோவலனும், இரண்டாம் கதாநாயகி மாதவி மங்கையும் நெய்தல் கானலில்  தந்தக்கட்டிலில் சேர்ந்து  உள்ள காட்சியுடன் காதை முடிகிறது. தோழி வசந்த மாலையிடமிருந்து  மாதவி யாழினை வாங்கி அன்பன் கோவலனுக்கு இசை விருந்தூட்ட ஆரம்பிக்கிறாள். இதுதான் நிகழ்வுச் சுருக்கம். சிறப்புச் சொற்களை,ஆய்வோம்.

"வருந்துபு நின்ற வசந்தமாலை"-இவள் மாதவியின் சேடி. நீண்ட தூரம் நடந்ததாலோ, கோவலன் மாதவி இடையே உள்ள மனக்கசப்பை அறிந்ததாலோ என்னவோ வருத்தமுற்றாள்.

"திருந்து கோல் நல்லியாழ்"- நன்கு செம்மையாகத்திருத்தப்பட்ட நல்ல இசையை எழுப்ப  வல்ல யாழ்.

" ........ தன்னோடும் கொள்கையின் இருந்தனள்"- நல்ல முறைமைப்படி யாழிசைக்கவும் தலைவன் கோவலனை மகிழ வைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவளாக இருந்தனளாம் "நீண்ட நெடுங்கண் "மாதவி.


காதையின் முடிவில் வரும் வெண்பா:

"வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு 

மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக் 

களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர் 

தெளிநிற வெங்கதிரோன் தேர்."


நெய்தல் நிலத்தாழை   வெள்ளை நிற மலர்களின் நடுவே படுத்துறங்கிய நீல நிற வண்டுகள் களித்தேனையும், மலர்த்தாதுவையும் ஊதும்படி,  காம மயக்கம் அடைந்தோர்  தெளிவடையும்படி செந்நிறத் தேரில் வெங்கதிரோன் கீழ்வானத்தில் தோன்றினான் என்கிறார். 

கோவலனும், மலர் விட்டு மலர் தாவித்தேன் உறிஞ்சும் வண்டுகள் மயக்கம் தெளிந்தது போல, ( "காமர் தெளி")

தன்காதல் மயக்கத்திலிருந்து விடுபடப்போகிறான் என்று சூசகமாக, உணர்த்துகிறாரா?!அடுத்து கானல் வரிக்காதை. கானல் நிலத்தில் கோவலனும், கோவலனும், மாதவியும் யாழிசைத்துக்காதல் பாட்டுகளைப் பரிமாறிக்கொள்வார்கள் போல.

" துன்பம் நேர்கையில் யாழிசைத்து இன்பம் சேர்க்க மாட்டாயா, கண்ணே!" என்ற பாடல் நினைவில் வருகிறது!

கானல் வரிக்காதையில் பயணிக்கத் தொடங்குவோம்.

Sunday, September 20, 2026

விடியலை நொக்கி…..,

 விடியலை நொக்கி…..,


நெகிழியின் பயன்பாடு 

நெகிழ்ச்சியாக இருந்தது -- அன்று ❤‍🩹


சூழலைக் கெடுக்கிறது 🤔

சூழ்ந்துள்ள நீரைக் கெடுக்கிறது 🤭

விலங்கினம் உண்டு, மாண்டு போகிறது 😨

விடியல் ஏதும் இதில் இல்லையே 😇

மண்ணுக்குள் புதைந்தாலும் 

மக்குவதில்லை எளிதில் 🤗


உறுதியாய் இருந்தாலும் அரசு 💪

உற்றுழி உதவும் நண்பனாய் 🤝

உலகை வலம் வருகிறது நெகிழி -- இன்று 😭


நீருள் கரையும் நெகிழி மட்டுமே 🫶

நீங்காப் பயன் என்றால்...... 👏

முயன்று பார்க்கலாம்,


இல்லையெனில், 


திரும்புவோம், மஞ்சப்பை நோக்கி😀😀😀😀


…..அக்ரி சா.இராஜா முகமது

Saturday, September 19, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {39} *கடல் ஆடு காதை* *மாதவியும் தோழியரும் களிப்புடன் ஆடுதல்*

 ••••••••••••••••••••••••••••••••

*{39} சிலம்பொடு ஒரு பயணம்*


*கடல் ஆடு காதை*


*மாதவியும் தோழியரும் களிப்புடன் ஆடுதல்*

••••••••••••••••••••••••••••••


கோவலனோடு கடலாடச் சென்ற மாதவி அங்கு கண்ட காட்சிகளை இளங்கோ அடிகள் விவரிக்கும் அழகு மிகச்சிறப்பு:


"வண்ணமும், சாந்தும், மலரும், சுண்ணமும்,

பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்; 

செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்;

காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்;

கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;

நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்;

இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்;

இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்;

விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;

மொழி பெயர் தேஎத்தோர் ஒழியா விளக்கமும்;" 


அதாவது, 


அங்கே கூலமறுகில் பண்டங்களைக் கொடிகள் எடுத்து விற்றனர். மாலைச் சேரிகள் சுறுசுறுப்பாக இயங்கின. அங்கே சுண்ணமும், வண்ணமும், சாந்தும், பாகும், பலகார வகைகளும் விற்போர் விளக்குகள் ஒளி விட்டன. அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர். கள் விற்பவரும், மீன் விற்பவரும் விளக்குகள் வைத்து விற்பனை நடத்தினர். இடித்த மாவில் வெண்சிறுகடுகை வைத்தது போலக் கடற்கரை மணலில் இவ்விளக்குகள் ஒளி விட்டுக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் பொய்கைகளில் பூத்து விளங்கும் மருத நிலத்தைப் போலத் தாழை மலர்கள் தழைத்து விளங்கிய அக்கடற் கரைக் கானலில் அவர்கள் சேர்ந்து தங்கினர்.


இப்படியாக கடற்கரை பரப்பே, 

கலகலவென இருந்ததாம். 

அந்த இடத்தில்தான் அன்புக்குரியர் ஒன்று சேர்ந்து களிப்புடன் பொழுதை கழித்தினராம்:


"எண்ணு வரம்பு அறியா இயைந்து,ஒருங்கு ஈண்டி;

இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்

கடிப்பகை காணும் காட்சி-அது ஆகி;

விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பில்

மருத வேலியின் மாண்புறத் தோன்றும்

கைதை வேலி நெய்தல் அம் கானல்-

பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி;" 



மலைபடு பொருளும், அலைபடு பொருளும் மலையெனக் குவிந்து கிடக்கும் கடல் துறைமுகம் அதுவும் மக்கள் விரும்பித் தங்கும் இடமாக இருந்தது. அத் ​துறைமுகப் பகுதியில் குளிர் சோலைகளில் அரசிளங் குமரரும், அவர்கள் காதலியரும் தங்கி மகிழ்ந்தனர். அவ்வாறே வணிக இளைஞரும், கணிகை மகளிரும் கலந்து உரையாடத் தனியே திரைகள் இட்டுத் தங்கி மகிழ்ந்தனர். 


இன்றளவும் கூட, 

இதயத்தை பரிமாறிக் கொண்டோர், 

இன்பமாய் பொழுதைக் கழிக்க 

கடற்கரை நோக்கி 

ஏன் செல்கின்றனர் 

என புரிகிறதா! 


அது இளங்கோ காட்டிய வழியம்மா! 

காதலர்க்கு அதுவே சரி அம்மா!! 


மோகன் ஐயா தொடர்கிறார்:


ஐயா,

கடற்கரையில் பல வண்ண விளக்குகளின் அணிவகுப்பை மிகவிளக்கமாக விவரித்தீர்.

அந்த விளக்குகளின் ஒளியில் நான்மேலும் பயணிக்கிறேன்.

"நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சிய

மலைப்பல்தாரமும் கடல்பல்தாரமும்

வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை"

அந்தக்கடற்கரையில் எவ்விதக்குற்றமும்இல்லாது, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட மலைபடு பொருட்கள்-சந்தனம்,அகில் மற்றும் கடல்படு பொருள்கள்-முத்து, பவளம்- என்றபடி மலைவளமும் , கடல்வளமும் கலந்து காணப்பட்டன். துறைமுகத்தில் பல்வேறு திசைகளில் வந்த மரக்கலங்களும் இருந்தன.

அருகில் இருந்த சோலையில் 

வண்ண வண்ண திரைச்சீலைகளால் சூழப்பட்ட கூடாரங்கள்- "சூழ்தரல் எழுனி"-சுற்றி வரும்படி அமைப்பு உள்ள திரைச்சீலைகள். நாட்டிய அரங்கை விளக்குகையில் அடிகள் இந்த எழுனியோடு, ஒருமுக எழுனி,பொருமுக எழுனி என்ற திரைகளையும் விவரித்தது நினைவிருக்கலாம்.

 தொகுதி தொகுதியாக உள்ள இந்த  கூடாரங்களில்,  அரசகுமாரர் ,அவர்தம் உரிமைச்சுற்றம்,நெய்தல்நில பரதவரும் அவர்தம் நண்பர்குழாமும், மற்றும் ஆடல்மகளிரும், பாடல்  மகளிரும்இருந்து கூடி மகிழ்ந்தனர்.

"விண்பொரு பெரும் புகழ் கரிகால் வளவன்" புதுப்புனல் விழாவைக் கொண்டாடும் தலைநாளில்,வெவ்வேறு நடையுடை பாவனைகள் கொண்டவர்களும், பலவித மகிழ்ச்சி ஆரவாரங்களை எழுப்புவர்களும் கூடி அந்த விழாக்களத்தில் " வீறு பெறத்தோன்றி" னர்.

காவிரி ஆறு கடலோடு கலக்கும் அந்த முகத்துவாரத்தில் , நான்கு வகை வருணத்தாரின் அடங்காத

ஆரவாரங்கள்- " அடங்காக் கம்பலை"- விடாது ஒலித்துக்கொண்டிருந்தன.

" நடந்தாள் வாழி காவேரி அலைகடலெனும் மணமகன் துணை பெற". அவள் காதலன் கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நடக்கும் கூடுகை.  பேரின்பம் நிலவ ,கேட்பானேன்!

கோலாகலம் , கேளிக்கை என எங்கும்  மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்! கடற்கரை ஒரு சமத்துவ கூடம். இங்கு அரசகுமாரர் பரதவர், கலைஞர்கள் என்று யாவரும்  வேறுபாடின்றிக் கூடி மகிழும் காட்சியைக் கண்டோம்.

பயணம் தொடர்கிறது.

உலக மூங்கில் நாளில்...

 உலக மூங்கில் நாளில்... 


ஓங்கி எம் சிந்தனை  உனைப் போல் உயரணும்

   ஒன்றாக இருப்பதையும் உன்னிடம் கற்கணும்


தாங்கி ஒன்றை நீ தூக்கிச் செல்ல  உதவுவாய்

   தரை இருப்பாரை ஏணியாய்

குரு போல்  ஏற்றுவாய் 


தூங்க நிழல் தந்து சோம்பலை ஊக்குவதில்லை

   துளையிட்ட குழலாய் மயக்கத் தவறியதில்லை


ஏங்க வைக்கும் அழகி *வேயுறு தோளியாம்

   எளிதில் உடையாமல் வளையும் நீ வில்லாம்


வாங்கி பனித்துளியைத் தாயாய் தூங்க வைப்பாய்

   வான் வரும் கதிரோன் அதை வாங்கிச் செல்வான்


தேங்கும் தேன் கூஜா தேனீக்கள் தொங்க விடும்

   திருட மாட்டாய் எமைப் போல் அவையும் அறியும்


மாங்கல்யம் ஏறும் நேரம் பந்தலாய் நிற்பாய் 

   மாற்றுடல் புகும் போதும் பாடையாய் வருவாய்


மூங்கிலே ! உன் நாளாம் உலகம் கொண்டாடுது

   மூச்சு விட்டவர்க்காக நாளுமுனை துண்டாடுது. 


* வேய் -- மூங்கில் 


__  குத்தனூர் சேஷுதாஸ் 18/9/2025

Wednesday, September 16, 2026

வான் என்னும் தலைவி

 வான் என்னும் தலைவி


சிறை பிடித்து வைத்தானோ தலைவன் நெஞ்சில் ? 

   செவ்வானம் இன்று அழகிய கருஞ்சேலையில் 


பிறை *நுதலில் வைத்த பொட்டு விழுகிறது 

   " பிறகு எனச் சென்றான் வருவான் எப்போது? "


"அறைய வேண்டும்  வந்த உடன் அவன் கன்னத்தில்

   அழகு மீசை, புன்னகை மறப்பேனா கணத்தில் ?


முறையாக பெண் கேட்க வரும் போது வரட்டும் 

   முழு இரவும் என் தவிப்பு அவனும் பெறட்டும் ".


* நுதல் -- நெற்றி


__. குத்தனூர் சேஷுதாஸ் 16/9/2026

Tuesday, September 15, 2026

கருநீல பட்டினிலே வெள்ளி நிறப் பொட்டு

 ०★०★०★०★०★०★०★०★०★०★

கருநீல பட்டினிலே 


வெள்ளி நிறப் பொட்டு

★०★०★०★०★०★०★०★०★०★०★


எங்கள் இல்லத் தாய்மார்கள்

தங்கள் அருமைக் குழந்தைகளுக்கு

தங்கக் கரங்களால் சோறூட்ட


உதவி செய்யும்

தகுந்த ஒரு தோழன் நீ!


நிலா நிலா ஓடி வா எனும்

சிறார்க்கான பாடல் முதல்

வதனமே சந்த்ர பிம்பமோ

எனும் பாடல் வரையிலும்


நிலவு ஒரு பெண்ணாகி

நீந்துகின்ற அழகோ எனும்

நயமிகு டி.எம்.எஸ்ஸின் 

ரீங்காரக் குரலிலும்

வான் நிலா நிலா அல்ல

எனும்

பாடும் நிலா பாலுவின்

தேன் மதுரக் குரலிலும்

ஒலித்த பாடல்களிலே

பாட்டுடைத் தலைவன்

நீதானே!


அறிவியலோ சுய ஒளி 

உனக்கில்லை என்கிறது.

ஆன்மீகமோ உனக்கு

இறையனாரின் முடிதனிலே

சிம்மாசனம் தந்திட்டது.

இலக்கியமோ நிலவுனக்கு

தாய்மையின் மேன்மையையும்

பெண்மையின் நளினத்தையும்

வானியலின் பேரழகையும்

குளிர்மையின் பொருள்தனையும்

ஒரு சேர உனக்களித்து

உன்னத இடத்தைக் கொடுத்திட்டது.


கருநீலப் பட்டினிலே 

வெண்ணிறப் பொட்டே

உருதேய்ந்து போனாலும்

விடாமுயற்சியால் மீண்டும்

வளர்ந்து விண்ணில் 

ஒளிரும் வெள்ளித் தட்டே..


துவளாமல் தன்னம்பிக்கையோடு


நடைபோடு என

மானுடர்க்குப் பாடம் சொல்லும்

உளவியல் ஆசானே!


உன்னிடம் ஒரு கேள்வி..

திருடி உண்ணும் காகத்துக்குப்

பயந்து போன பாட்டிக்கு

கடைபோட இடம் கொடுத்தாய்.


அமெரிக்காவின் அப்பல்லோ

ராக்கெட்டில் வந்திறங்கிய

ஆர்ம்ஸ்ட்ராங்க்கை வரவேற்க

எங்கள் பாட்டி என் செய்தாள்?


அந்த விண்வெளி வீரனுக்கு

அவள் கொடுத்தது என்ன?

மசால் வடையா.. மெது வடையா..

உன்னைப் போன்ற வெண்ணிறத் தயிரினிலே 


மூழ்கித் திளைக்கும் 


தயிர்வடையா!


விடையை நீ கூறிடுவாயா 


வெண்ணிலவே!

தெரிந்து கொள்ள நாங்கள்

ஆவலாய்க் காத்துள்ளோம்!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

Saturday, September 12, 2026

சிலம்பொடு ஒரு பயணம்{38} *கடல் ஆடு காதை* *கூடல் கூடல் முடிந்து கடல் ஆடுதல்*

 ••••••••••••••••••••••••••••••••

*{38} சிலம்பொடு ஒரு பயணம்*


*கடல் ஆடு காதை*


*கூடல் கூடல் முடிந்து கடல் ஆடுதல்*

••••••••••••••••••••••••••••••


மாதவியும் கோவலனும் 

ஊடல் கொண்டு ஊடாடினர் 

கூடல் கண்டு களிப்புற்றனர் 


அதன் பின்னர் கடலாடச் சென்றனர். 


*மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி*


கூடிக் கழிக்கும் இராப்பொழுது நீங்கி, 

கருக்கல் தொடங்கி 

இருள் கலையும் நேரத்தில் 

புகார் நகர மக்கள் எல்லாம் 

பூம்பொழில் ஆட 

கடற்கரை நோக்கி போவார் ஆயினர். 


அவர்களைப் பார்த்து அகமகிழ்ந்த மாதவியும், 

கடற்கரை ஏகி 

நீர் விளையாட்டுகளை பார்க்க ஆவல் மேலோங்கிட 

கோவலனை அழைத்திட்டாள். 


*பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப,*


தாமரை தடாகத்திலேயே இருந்த அன்னப்பறவைகள் யாவும் வாய்விட்டு கூவினவாம்


*வைகறை யாமம் வாரணம் காட்ட,*


பொழுது புலர்ந்து விட்டது என்பதை சங்கொலியும் கோழியும் குரல் எழுப்பி தெரிவித்தனவாம்.


*வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய;*


விடியல் மலரப் போகிறது என்பதை இருளை விரட்ட வந்த விடிவெள்ளி காட்டுகிறதாம். 


*தார் அணி மார்பனோடு... வான வண் கையன் அத்திரி ஏற,*


தன் மார்பினில் மலர் மாலை அணிந்த கோவலனோடு உயர்ந்த பல அணி கலன்களை அணிந்திட்ட மாதவி புறப்பட்டாள் கடலில் நீராடி மகிழ. 


மோகன் ஐயா தொடர்கிறார்:

நன்றி ஐயா.

கோவலனும் மாதவியும் கடலாட வேண்டி அவன் கோவேறு கழுதை மேலேறியும், அவள் மூடு வண்டியிலமர்ந்தும்கடற்கரை நோக்கிச்செல்லுகின்றனர். 

" வான வண்கையன் அத்திரி ஏற

மான் அமர் நோக்கியும் வையம்ஏறி"- வான்மழை போல் வழங்கும்கைகளைக்கொண்ட கோவலன்; அத்திரி- கோவேறு கழுதை- அரச வாகனம்- கோவேறு கழுதை மேல் கோவலனும்,மான்போன்ற பார்வை கொண்ட மாதவி வையம் எனும் மூடு  வண்டியில் ஏறி,சற்று முன் ஊர்காண பல கூத்துகளை ஆடியவள் இப்போது மூடு வண்டியிலும் பயணம்.

இப்போது என்ன மனநிலையோ( mood)!

அவர்கள்  பயணிக்கும் வழியில் உள்ள தெருக்களைப் பார்ப்போம்.

முதலில் பெருஞ்செல்வங்கள் குவிந்து கிடக்கும் பெரும் வணிகர் இல்லங்கள் நிறந்த தெரு- "கோடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை" என்கிறார். குப்பை என்றால் குவியல்." மறு சுழற்சி" செய்ய வேண்டிய குப்பை அன்று; விலை மதிப்பற்ற செல்வக்குவியல்; சோழ வளநாடு அன்றோ!

அடுத்து பீடிகைத்தெரு. இந்தப் பீடிகை பற்றி அறியப் பெரிய பீடிகை( முன்விளக்கம்) தேவையில்லை. 

இங்கு பீடங்கள் எனப் பொருள்படும். பீடங்களின் மேல் வியாபாரப் பொருட்களை அழகுற அடுக்கி விற்கும்கடைகள். மலர்கள்அலங்கரிக்கப்பட்ட மணிவிளக்குகளை்ஏந்தி, மங்கல மங்கையர் அறுகம்புல்லும் , நெல்லும் தூவியபடி இருபுறமும் செல்லும்" திருமகள் இருக்கை" கொண்ட " செவ்வனம்" ஆகிய அத்தெரு நீங்கி,

"மகர வாரி வளம்தந்து ஓங்கிய நகர நடுவண்வீதி போகி" னர்-மீன் வருவாய் தந்த செல்வப் பெருக்கில் ஓங்கியிருந்த நகர வீதி நடுவில் சென்றனர். 

அடுத்து," கலம்தரும் திருவின் புலம்பெயர் மாக்கள்" மரக்கலங்கள் கொண்டு சேர்க்கும் மாபெரும் செல்வங்களை உடைய நாடு விட்டு நாடு வந்து வணிகம்செய்யும் வேற்று நாட்டார் குடியிருப்புகளைக் கடந்தனர். இன்றைய புலம் பெயர் மாக்கள் போலன்றி இவர்கள் பெரும் ஏற்றுமதியாளர்

கள்.

அடுத்து,

வெண் மணல் ("வாலுகம்" )பரப்பில்   " கூல மறுகில்" ,

(கூலம் என்றால் தானியம்)  தானியங்கள் குவிந்து கிடந்த  கூலக்கடை வீதி - அங்காடிகள் நிறைந்த வீதியைக்கடந்து, இன்ன இன்ன பொருட்கள் இவை என விளம்பரப் பதாகைகள் கொண்ட " மாலைச்சேரி மருங்கு"- (மாலை என்றால் இங்கு ஒழுங்கு எனப் பொருள்படும்) , ஒழுங்குபடுத்தப்பட்டு,விளம்பரம் செய்யும் மாலைச்சேரியைக் கடந்து  நெய்தலங்கானலாகிய கடற்கரையை அடைந்தனர்.


(பயணம் தொடரும்)

Friday, September 11, 2026

சாலமன் பாப்பையா

 அந்த "நாவல் பழம்" எங்கே?


நடுவர் இருக்கையில் ஒரு "நாவல் பழம்" 

   நற்றமிழ், நகைச்சுவை இரண்டும் சேரும்


வெடிச் சத்தமே எங்கும் தீபாவளி நன்னாளில் 

   விண்ணதிரும் இதன் பட்டிமன்றக் கரவொலியில் 


கடுகடுப்பு இதன் முகமோ கண்டறியாதது

   களிக்க வைக்குமாம் "வாங்கையா" அது 

   

தொடும் நூறு நிச்சயமென எண்ண வைத்தது 

   தொலைவில் யாரோடு "பழகப்" போனது? 😭


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/9/2026


==================

தலைப்பு எதுவாயினும் 

போட்டி பலமாயினும் 

ஒட்டி உரைத்தாலும்

வெட்டிகரைத்தாலும் 

தீர்ப்பின் தாக்கம் 

தெளிவாக இருக்கும் 

வெகுமக்கள் நலனில் 

அக்கறை யிருக்கும் 

இளந்தலைமுறைக்கு 

ஊக்கம் பிறக்கும் 

எதிர்கால நன்மையே 

நடுநிலை வகிக்கும்! 

பிள்ளையை இரண்டாக 

பிளந்திடு என்றான்  

மன்னன் சாலமன் 

பெற்றவள் துடித்தாள் 

மற்றவள் நடித்தாள் 

உற்றவள் யாரென 

உணர்ந்த சாலமன் 

வழங்கிய தீர்ப்பை 

வரலாறு சொல்லும் 

நாம் வாழும் காலம் 

சாலமன் பாப்பையா 

தீர்ப்புரைகள் பாடம் 

பேசுமொழிபெருமைக்கு 

தமிழறிஞர் பலவுண்டு 

நாமறிந்த புலவரில் 

மேடைபுகழ் பாப்பையா  

பிரியா விடையறிந்து 

இரங்கியது மனமே!

…..,,அக்ரி சா.இராஜா முகமது


==============


மகாகவி பாரதியார் நினைவு நாள்

# பாரதி — ஒரு விழிப்பு


**“ஓடி விளையாடு பாப்பா,

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!”**


என்று

ஓங்கி உரைத்தாய் நீ!


முதிர்ந்த முதியவரிடமும்,

வளர்ந்த இளைஞரிடமும்

எதை உரைத்தாலும்

விழலுக்கு இறைத்த நீராய்ப் போகுமென்று

உணர்ந்தாயோ?


அதனால்

மழலையின் மனதில் விதைத்தாய்

விழிப்பின் முதல் விதையை!


---


**“சாதிகள் இல்லையடி பாப்பா!”**


என்று

வார்த்தையில் மட்டும்

உரைத்துவிட்டுச் செல்லவில்லை நீ.


சாதியின் சுவர்களைத் தாண்டி

மனிதனை மனிதனாகக் கண்டாய்;

சமத்துவம் என்பது

சொல்லில் மட்டும் அல்ல —

செயலில் மலர வேண்டும்

என்று உணர்த்தினாய்.


---


**“கத்தி இன்றி, ரத்தம் இன்றி

யுத்தம் ஒன்று வருகுது!”**


என்று

உன் கவிதையை

புரட்சியின் ஆயுதமாக்கினாய்.


வாளேந்தாத கைகள்

விழித்தெழுந்தன;

ரத்தம் சிந்தாத புரட்சி

உன் பாடல்களில் பிறந்தது.


தூங்கிக் கிடந்த தேசத்தின்

நெஞ்சில்

நாட்டுப்பற்றைத் தீயாய் மூட்டி

ஒரு தேசத்தையே

விழிப்புறச் செய்தாய்!


---


**“மாந்தர் தம்மை

இழிவு செய்யும் மடமையை

கொளுத்துவோம்!”**


என்று

பெண்ணின் அடிமைத்தனத்தை

மட்டுமல்ல —

அவளை அடிமையாக்கிய

மனங்களையும் சுட்டெரித்தாய்.


பெண்

பார்க்கப்பட வேண்டியவள் அல்ல,

நடக்க வேண்டியவள்;

பேசப்பட வேண்டியவள் அல்ல,

பேச வேண்டியவள்;

அடிமை அல்ல —

அவளும் மனிதனே

என்று உரத்துச் சொன்னாய்.


---


**“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!”**


என்று

ஒருவனின் பசியை

உலகத்தின் பசியாகக் கண்டாய்.


ஒருவன் வாடினால்

உலகமே முழுமையற்றது

என்று உணர்த்தினாய்.


சமத்துவம்

உன் கனவல்ல —

உன் உயிரின் துடிப்பு!


---


குழந்தையை விழிப்புறச் செய்தாய்...

பெண்ணை விழிப்புறச் செய்தாய்...

சமூகத்தை விழிப்புறச் செய்தாய்...

தேசத்தை விழிப்புறச் செய்தாய்...


உறங்கிக் கிடந்த

மனிதனுக்குள்

மனிதத்தையே விழித்தெழச் செய்தாய்!


அதனால்தான்

இன்று உன் பிறந்த நாளில்

ஒரு கேள்வி மட்டும்...


**நீ கவிஞனா?**


இல்லை...


கவிதை எழுதியவன் அல்ல நீ;

**கவிதையால்

ஒரு காலத்தையே எழுப்பியவன்!**


நீ ஒரு பாடல் அல்ல —

பாடலுக்குள் மறைந்த

ஒரு புரட்சி!


நீ ஒரு குரல் அல்ல —

உறங்கிய தலைமுறைகளின்

விழித்தெழுந்த குரல்!


நீ ஒரு கவிஞன் அல்ல...


**நீ —

ஒரு விழிப்பு!**


- லதா 


======================

வெறும் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதர். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது.


வறுமையும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் மகாகவி பாரதியாரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேசப்பற்றைத் தூண்டும், மக்களுக்கு துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கும் வரிகளை அவர் தொடர்ந்து எழுதியவாறே இருந்தார்.


“மனதில் உறுதி வேண்டும்” — வாழ்க்கையில் நாம் விரும்பி நாட வேண்டிய எளிமையான, அதே நேரத்தில் வலிமையான விஷயங்களை நமக்கு நினைவூட்டுகிறது.


“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” — இன்றும் எனக்கு வலிமை தரும் ஒரு வரி. வாழ்க்கையை ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் மிகப் பெரிய உத்வேகம்.


“பாயும் ஒளி நீ எனக்கு” — ஒரு திருமண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களையும், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எவ்வாறு துணையாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் அழகாகப் பேசுகிறது.


அதன்பிறகு, கண்ணனுடனான அவரது உறவு.


கண்ணனை ஒரு குழந்தையாகவும், நண்பனாகவும், சேவகனாகவும், இறைவனாகவும் அவர் பார்த்தார். கண்ணனை அவர் அழைத்த விதங்களும், அவருடன் கொண்ட உறவும், பாரதியாரின் ஆழமான பக்தியையும், கண்ணனுடன் அவர் கொண்டிருந்த அழகான பிணைப்பையும் வெளிப்படுத்துகின்றன.


பாரதியைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவரது வார்த்தைகளிலும், சிந்தனைகளிலும், வாழ்க்கையிலும் பேசுவதற்கு இவ்வளவு இருக்கிறது.


1921-ல் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். 105 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், இன்றும் அவரது எழுத்துக்கள் வழியாக அவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


அதுதான் மகாகவி பாரதியின் உண்மையான சக்தி என்று நான் நினைக்கிறேன்.


இந்தப் பாடல் வாழ்க்கையைப் பற்றியும், நாம் பற்றிக்கொண்டிருக்கும் அனைத்துமே இறுதியில் ஒரு மாயையாக இருக்கலாம் என்பதையும் பேசுகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.


சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தது.


--- சுஜாதா


==================


*மீண்டும் பிறக்குமா அந்தத் தீ .....* 


மீசை முறுக்கியவன் அல்ல,

மூடநம்பிக்கையை

 முறுக்கி எறிந்தவன்!


அச்சம் என்ற சொல்லை

அகராதியில் இருந்து அழித்தவன்!


அடிமை விலங்குகளை உடைக்க

அனல் கக்கும்

 வார்த்தைகளை விதைத்தவன்!


கவிதை எழுதவில்லை அவன்

காலத்தையே எழுதியவன்!


சாதி எனும் சதிக்கு 

சவுக்கடி தந்து ,

சமத்துவத்தின் விதையை

சமூகத்தில் விதைத்தவன்!


 பெண் கல்வியும்,

 உரிமையும் பெற்று சுதந்திர வானில் 

சிறகடிக்க வேண்டும் 

என்று கனவு கண்டவன்!


குழந்தைகளின் சிரிப்பில்

நாளைய 

இந்தியாவைக் கண்டவன்!


இந்தியா எழ ,

உலகின் முன்னிலையில்

 நிற்க 

உழைத்தவன்!


வறுமை வந்தது…

வாழ்க்கை தடுத்தது…

துன்பங்கள் சூழ்ந்தன…

ஆனாலும் தலை குனியவில்லை!


“நிமிர்ந்த நன்னடை,

 நேர்கொண்ட பார்வை”

என்று வாழ்ந்தவன் 

நம் பாரதி!


இன்று அவன் நினைவு நாள்…

மலர் வைப்பது மட்டும் போதுமா?


அவன் கனவு கண்ட

 சமத்துவத்தை

நம் வாழ்வில் மலரச்

 செய்வோம்;


அவன் நேசித்த நாட்டை

நம் செயலால் உயர்த்துவோம்!


பாரதி மறைந்த நாள் இது ,

ஆனால் பாரதியின் சிந்தனை

முடிந்த நாள் அல்ல!


அவன் எழுப்பிய நெருப்பு

இன்னும் நம்

 உள்ளங்களில் எரியட்டும்;

“அச்சமில்லை!” என்ற துணிவு

ஒவ்வொரு தலைமுறையிலும் பிறக்கட்டும்!


மகாகவி பாரதி வாழ்க!

தமிழ் வளர்க!

அவன் கனவு கண்ட பாரதம் மலர்க!


- மலர்விழி 


===============


உடன்பாடில்லை எனக்கு


எனக்கு இதில் முற்றிலும் உடன்பாடில்லை 

   இன்று நம் பாரதியார் உயிருடனில்லை 


கனக்கும் உடல் சுமந்து திரிதலே வாழ்வா?

   கன்னித் தீந்தமிழில் "கரைதல்" வீழ்வா?


"எனது, நான்" என்னும் சுயநலம் தான் வாழ்வா?

   "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்" இதுவா?


"மனதில் உறுதியோடு சொல்லுதல்" வாழ்வா?

   மண்டியிட்டு அந்நியரின் அடி பணிதல் அதுவா?


இன வேறுபாடு அது பார்த்தலே இருத்தலா?

   "எங்கள் சாதி காகம், குருவியும்" என்பதா?


தினம் தினம் அச்சத்தில் நடுங்குவது வாழ்வா?

   "தீமை கண்டு வெகுண்டு எழுதல்" அதுவா?


"வினையே இல்வாழ்வு" எனப் புலம்பல் வாழ்வா?

   "வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுக்கா?"



கனவாகத் தோன்றி பின் மறைவதே வாழ்வதா?

   "கவிதைகளாய் இன்றும் ஒலிப்பது" இல்லையா?


இப்போது சொல்லுங்கள் 

இன்று நம் பாரதி வீழ்ந்த நாளா? 

இன்றும் வாழும் நாளா?


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/9/2026

===============


அமர் கவி பாரதிக்கு சிரம் தாழ்த்திய அஞ்சலி🙏🙏

இன்று பாரதி நினைவு நாள்.

வருடம் முழுவதும் அல்லாடிவிட்டு, வருடத்தில் ஒரு நாள் நினைவு கூறக்கூடியவரா நம்பாரதி?

என்றென்றும்,நம் இரத்தத்திலும், சித்தத்திலும், உணர்விலும்,உள்ளத்திலும் ஊன்றிப் பதிந்தவரன்றோ அண்ணல்!

இவர் தீவிழி விழித்தால் நாட்டில் சுதந்திரப் பொறி பறந்தது;

மீசையை முறுக்கினால் , தாய்மண்ணின்மீது ஆசை பிறந்தது;

இவர் முண்டாசு, வெள்ளைய "குண்டாஸை", கிலி கொள்ளச்செய்தது;

இவரது பேனா அன்னியனை இனிமேலும் இங்கிருப்பேனா என அச்சம் கொள்ள வைத்தது;

இவரது எதிர்கால நோக்கு நூறாண்டுகளுக்கு முன்:( சில துளிகள்)

" ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்"

" வானை. அளப்போம் கடல்மீனை அளப்போம்"

" சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"

" உலகத்தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்"

இக்கவிப்பரிதிக்கு ஏது மறைவு?

காலன் கவர்ந்தாலும் , காலங்கள் தாண்டி நம்உள்ளங்களில் வாழ்பவரன்றோ🙏🙏

நம்சங்கமே சான்று!

அன்னாருக்கு, சிரம் தாழ்ந்த, மனம் உவந்த , கண்கள்பனித்த அஞ்சலி🙏🙏

அவருக்கு " இந்த கரகரப்பிரியன்"செலுத்தும் இசை அஞ்சலி.( அவரும், சாய்ராம் ஐயாவும் மன்னிப்பார்களாக)!


- இ.ச.மோகன்

Saturday, September 5, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {37) - *கடல் ஆடு காதை* *ஊடலும் கூடலும்*

 ••••••••••••••••••••••••••••••••

*{37} சிலம்பொடு ஒரு பயணம்*


*கடல் ஆடு காதை*


*ஊடலும் கூடலும்*

••••••••••••••••••••••••••••••••


பல்வேறு கூத்துகள் பற்றியும், 

மாதவி ஆடிய நடனம் பற்றியும் 

அற்புதமாக விளக்கிய சமண அடிகள் 


கோவலன் மாதவி இருவர் இடையே ஊடாடிய ஊடல் பற்றியும் 

கூடி மகிழ்ந்த கூடல் பற்றியும் 

விளக்குவதையும் பார்த்திடலாம்: 


*ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப;*

*பத்துத் துவரினும், ஐந்து விரையினும், முப்பத்து-இரு வகை ஓமாலிகையினும்,*

*ஊறின நல் நீர், உரைத்த நெய் வாச,*

*நாறு இருங் கூந்தல் நலம் பெற ஆட்டி;*


கோவலனுடன் ஏற்பட்ட ஊடலைத் தணிப்பதற்காக, மாதவி தன் கூந்தலின் அழகைக் கூட்ட இந்த நறுமணக் குளியலை மேற்கொண்டாள் என்கிறார் அடிகள். 


அதெப்படி என நாம் பார்ப்போமா! 


பத்து வகையான துவர்ப்புப் பொருட்கள்.

ஐந்து வகையான நறுமணப் பொருட்கள்.

முப்பத்திரண்டு வகையான மருத்துவ மூலிகைகள்/நறுமண இலைகள் ஆகியவற்றை ஊறவைத்து எடுத்த நல்ல நீரினாலும் நீராடினாள். 


என்னென்ன

பொருட்கள் கொண்டு  மாதவி தன் கூந்தலை அலசி நீராடினாள்.  கசப்பு மற்றும் துவர்ப்புத் தன்மை கொண்ட அகில், சந்தனம் போன்ற மரப்பட்டைகள், வேர்கள்.விரை (நறுமணம் 5) கத்தூரி, சந்தனம், குங்குமப்பூ, கற்பூரம் மற்றும் தக்கோலம் போன்ற வாசனைப் பொருட்கள்.

ஓமாலிகை (வாசனை இலைகள்-32) துளசி, மருக்கொழுந்து, கத்தரி, நெல்லி, தாழை உள்ளிட்ட 32 வகையான மருத்துவ மற்றும் வாசனை மூலிகைகள் என விவரிக்கும் இந்த வரிகள் அன்றைய தமிழர்களின் கூந்தல் பராமரிப்பு, நறுமணக் கலை மற்றும் வாழ்வியல் நெறிகளின் உன்னதத்தை நமக்குக் காட்டுகின்றன அல்லவா!


அதோடு அவள் நிற்கவில்லை. நீராடிய பின் உடை அணிந்து அணிகலன்கள் அணிந்து கொள்ளும் அழகை கூறுகிறார் இளங்கோ அடிகள்:


*புகையின் புலர்த்திய பூ மென் கூந்தலை*

*வகைதொறும் மான்மதக் கொழுஞ் சேறு ஊட்டி;*

*அலத்தகம் ஊட்டிய அம் செஞ் சீறடி நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ;*

*பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து;*


கால் அடி முதல் தலை முடி வரை அவள் பலவகை அணிகளைப் பூண்டாள். இங்கே அவனுக்கு மாதவியாகக் காட்சி அளித்தாள். கால் விரலுக்குக் கணையாழிகள்; கணைக் காலுக்குச் சிலம்பு வகைகள்; தொடைக்குச் செறிதிரள் என்னும் அணி முத்துப்பதித்த மேகலை அவள் இடைக்கு அணிந்தாள். தோளுக்குக் கண்டிகை, வயிரம் பதித்த சூடகம்; மற்றும் பல்வகை வளையல்கள் அவள் கைகளில் அணிந்தாள்: கைவிரலுக்கு மகரமோதிரம்; கழுத்துக்குப் பொன் சங்கிலியும் முத்து ஆரமும் அணிந்தாள்: செவிக்குக் கடிப்பு: தெய்வஉத்தி, தொய்யகம் முதலியன அவள் தலைக்கு அணிந்தாள்.


அப்பப்பா.. எத்தனை வகையான அணிகலன்கள். 


தொடர்கிறார் மோகன் ஐயா:


பலரும் மாதவி நல்லாளின் நற்கூத்துகளைக் கண்டு மகிழ்ந்தது கண்ட கோவலன் " ஊடல் கோலமோடு" இருந்தான் .

அவன்மனம்" உவப்ப"  வேண்டி, மாதவி நீராடிய சிறப்பையும், அவள்அணிந்த சில அணிகலன்கள் பற்றியும் விவரித்தீர்.

மேலும்  அவள் உடல் முழுவதும் அவள் எவ்வாறு தன்னை  அலங்கரித்துக் கொண்டாள்என்பதை நம்சமணத் துறவி வர்ணிக்கிறார் என்பதைக்காண்போம்.


தொடைப்பகுதியில் நன்கு திரண்ட " குறங்கு செறி" என்னும்ஆபரணம்  ,

முப்பத்திரண்டு முத்துகள் கோத்த இரண்டு வடங்களாக அமைந்த " விரிசடை" என்னும்அணிகலனை மெல்லிய துகில் உடுத்திய இடையில்,

கண்டிகை( நெருக்கிப் பிணைந்த- சோக்கர்( (choker) போன்ற)யோடு கூடிய தோள்வளையைத் தோளிலும்  ,

"மத்தக மணியாடு கூடிய சித்திரச்சூடகம்"-வயிரங்களோடு சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த கைவளைகளையும்,செம்பொன் வளைகளையும், "பரியகம்"- எனும் கங்கணமும், "வால்வளை"- எனும வெண்சங்காலான வளைகளையும்," பவழப் பல்வளை"-  எனும் பவழ வரிசைகளாலான வளையல்களையும் முன்கைகளிலும்,

காந்தள்மலர்கள் போன்ற கைவிரல்கள் முற்றாக மறையும்படி,வீளை மீனின் திறந்த வாய்போன்ற நெளியும்,முடக்கு மோதிரமும்," மரகத தாள்செறி"- எனும் மரகதக்கற்களும் , இலை வடிவிலான தங்கத்தகடுகளோடு பிணைந்த ஆபரணமும்,

வீர சங்கிலியும், நுண்ணிய சங்கிலியும்,பூணப்படும் சரமும்

முன் கழுத்தில்கிடந்த முத்துச்சரத்துடன்ஒரு சேரும்படியும்,

பின் கழுத்தில் கொக்கி 

அமைந்த  பல மணிகள் கோர்வையாக அமைந்த கோவை என்னும் சரம்அவள் பிடரியை மறைக்கும்படியும்,

இந்திர நீல கற்களோடு வைரங்களும் சேர்த்துக்கட்டப்பட்ட" குதம்பை" யைக் காதின் உள்புறமும்,

தலையில், தெய்வத்தன்மையோடு பொருந்திய செழுநீர் எனும் குவளை மலர் போன்ற வடிவில் நவரத்தினங்கள்பதித்த எனும்தலையணியும்,

வலம்புரியும்- வலம்புரிச்சங்கு வடிவத்தில் தங்கத்தால் செய்யப்பட்டு சூரிய பிரபை வடிவில் உள்ள அணியையும்,

புல்லகம்- சுட்டி- நெற்றியின் மேல் பகுதியிலும்,

தொய்யகம்-கரிய நீண்ட கூந்தலின் நடுப்பகுதியிலும். அணிந்து  தன்அழகுக்கு அழகு சேர்த்தாள்.

இவள்" காதல்

மழை பொழியும் கார் முகிலாய், காதலன் உடனிருக்கப் பேரெழிலாள் " அன்றோ! கோவலனும் வந்து விட்டான். அவனோ அழகை ஆராதிப்பவன். இவளோ ஊர்வசியின் மறுபிறவி. பின் கேட்பானேன்! 

சும்மாவா சொன்னார் வள்ளுவர் ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கு இன்பம், கூடி முயங்கப் பெறின் என்று.

பல அடுக்குகள்  அமைந்த மெத்தைகள் கொண்ட பள்ளியறையில்" பாடு அமை சேக்கைப்பள்ளியுள்"- இருவரும் ஊடியும், கூடியும் மகிழ்ந்தனர்.

ஆசிரியர் தினம்

 ஆசிரியர் தினம்

05/09/2026.  இன்று🙏🙏


ஆசான்  மற்றும்ஆசிரியை தம் சேவைகளை நன்றியுடன்  

நினைவு கூறும் நாள்.


ஓர்ஆசிரியர் நாட்டின் அதிபராக உயர்ந்த நம்நாடு " பாருக்குள்ளே நல்ல நாடு" அன்றோ!


'முளைத்து மூன்று இலை நன்றாக விடும்வரை' பேணி வளர்த்து விடும் பெற்றோர் முதல் ஆசான்கள்.


பள்ளி, கல்லூரி என உயர உயர சளைக்காமல் தூக்கி விட்ட ஆசிரியர் கரங்கள்.


தாம் இருந்த இடத்தில் இருந்தாலும் மாணாக்கனின் உயர்வு கண்டு கண்கள் பனிக்க இறும்பூது அடையும் கரும்பு நெஞ்சங்கள்!


அல்லவை நீக்கி நல்லவை

 பயிற்றுவிக்கும் " வாலறிவர்கள்".


வாழ்வின்ஓட்டத்தில்  முறையான கல்வி கற்பித்தவர்களோடு  , பயணம் சரியாக செல்ல கற்பித்த  மற்ற ஆசான்கள் ஏராளம் !ஏராளம்!


துவிச்சக்கர வண்டி ஓட்ட கற்றுக்கொடுத்த தந்தை,

கணிப்பொறி தட்டி வாழ்க்கையின்  வளமான கதவுகளைத்திறக்க உதவிய கணிப் பொறியாளர்,

சாதம் செய்வது எப்படி என்று காட்டிய இல்லாள்,

தலையில் காப்புக்கவசம்அணிய அறிவுறுத்தும் பாதுகாவலர் ........ம்ம் சொல்லி மாளாது.


 தினமும் ஓர்ஆசிரியர், கற்பது வாழ்க்கைக் கல்வியில் மற்றோர் பாடம்.


எல்லா ஆசிரியர்களையும் எவ்வளவு முறை வணங்கினாலும் போதாது. இரு கைகள் போதாது என்றால் தலை 

இருக்கிறதே!


நன்றி கலந்த வாழ்த்துகள்🙏🙏


- இ.ச.மோகன்

Tuesday, September 1, 2026

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் - சேனல் 5 நேர்காணல்


சேனல் 5 நிறுவனத்தைச் சார்ந்த திரு. ஜெயக்குமார் என்பவர் நமது நிதிச் செயலர் சாய்ராம் ஐயா அவர்களை ஒரு நிகழ்ச்சியில் சமீபத்தில் சந்தித்து இருக்கின்றார். ஒரு நேர்காணலுக்காக அனுமதி கேட்டுள்ளார். 


நமது சாய்ராம் ஐயாவோ நேர்காணல் தர தயார் என்று சொன்னதோடு எங்கள் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளை நேர்காணல் செய்ய வேண்டும் என்று பதிலுக்கு கேட்டிருக்கிறார். 


அந்த அடிப்படையில் என்னையும் - நமது சங்க செயலர் திருமதி மலர்விழி அவர்களையும் - தொழில்நுட்பப் பிரிவின் பொறுப்பாளர்களில் ஒருவரான திருமதி. அமுதவல்லி அவர்களையும் அவர்கள் நேர்காணல் எடுத்து இருக்கிறார்கள். 


இந்த நேர்காணலில் அவர் நமது தமிழ்ச் சங்கத்தை ஒரு குடும்பம் என்று குறிப்பிட்டது உள்ளத்தில் இருந்து வந்த வார்த்தைகள். 

நமது சங்க வளர்ச்சிக்காக போகும் இடம் எல்லாம் முயற்சி மேற்கொண்டு வரும் இவரை நமது சங்க நிர்வாகிகளில் ஒருவராக பெற்று இருப்பது மிகப் பெரிய பாக்கியம் என்றே சொல்ல வேண்டும். 


இவரது அரிய முயற்சியால் மட்டுமே சேனல் 5 தமிழ் (11 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டு உள்ளது) நிறுவனம் + அதன் தாய் நிறுவனமான சேனல் 5 (36 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை கொண்டுள்ளது) நிறுவன தொழில் நுட்பக் குழு நேரடியாக பூர்வா வந்திருந்து எங்களை பேட்டி எடுத்தார்கள். இது நமது நிதிச் செயலர் சாய்ராம் ஐயா அவர்கள் மூலமாக மட்டுமே சாத்தியம் ஆனது. 


அல்லும் பகலும் நம் தமிழ்ச் சங்க வளர்ச்சி பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற எனது அருமை சாய் அண்ணா அவர்களுக்கு உளம் நிறை நன்றிகளை நமது சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.


- தமிழ்ச்சங்கத் தலைவர் 

ஸ்ரீவி


நேர்காணல் சுட்டிகள்:

பன்முகக் கலைஞர் சாய்ராம்

புதுப் படைப்பாளர்களை உருவாக்கும் மகாகவி பாரதியார் சங்கம்

தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள்





மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...