Friday, September 11, 2026

மகாகவி பாரதியார் நினைவு நாள்

# பாரதி — ஒரு விழிப்பு


**“ஓடி விளையாடு பாப்பா,

நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!”**


என்று

ஓங்கி உரைத்தாய் நீ!


முதிர்ந்த முதியவரிடமும்,

வளர்ந்த இளைஞரிடமும்

எதை உரைத்தாலும்

விழலுக்கு இறைத்த நீராய்ப் போகுமென்று

உணர்ந்தாயோ?


அதனால்

மழலையின் மனதில் விதைத்தாய்

விழிப்பின் முதல் விதையை!


---


**“சாதிகள் இல்லையடி பாப்பா!”**


என்று

வார்த்தையில் மட்டும்

உரைத்துவிட்டுச் செல்லவில்லை நீ.


சாதியின் சுவர்களைத் தாண்டி

மனிதனை மனிதனாகக் கண்டாய்;

சமத்துவம் என்பது

சொல்லில் மட்டும் அல்ல —

செயலில் மலர வேண்டும்

என்று உணர்த்தினாய்.


---


**“கத்தி இன்றி, ரத்தம் இன்றி

யுத்தம் ஒன்று வருகுது!”**


என்று

உன் கவிதையை

புரட்சியின் ஆயுதமாக்கினாய்.


வாளேந்தாத கைகள்

விழித்தெழுந்தன;

ரத்தம் சிந்தாத புரட்சி

உன் பாடல்களில் பிறந்தது.


தூங்கிக் கிடந்த தேசத்தின்

நெஞ்சில்

நாட்டுப்பற்றைத் தீயாய் மூட்டி

ஒரு தேசத்தையே

விழிப்புறச் செய்தாய்!


---


**“மாந்தர் தம்மை

இழிவு செய்யும் மடமையை

கொளுத்துவோம்!”**


என்று

பெண்ணின் அடிமைத்தனத்தை

மட்டுமல்ல —

அவளை அடிமையாக்கிய

மனங்களையும் சுட்டெரித்தாய்.


பெண்

பார்க்கப்பட வேண்டியவள் அல்ல,

நடக்க வேண்டியவள்;

பேசப்பட வேண்டியவள் அல்ல,

பேச வேண்டியவள்;

அடிமை அல்ல —

அவளும் மனிதனே

என்று உரத்துச் சொன்னாய்.


---


**“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

இந்த ஜகத்தினை அழித்திடுவோம்!”**


என்று

ஒருவனின் பசியை

உலகத்தின் பசியாகக் கண்டாய்.


ஒருவன் வாடினால்

உலகமே முழுமையற்றது

என்று உணர்த்தினாய்.


சமத்துவம்

உன் கனவல்ல —

உன் உயிரின் துடிப்பு!


---


குழந்தையை விழிப்புறச் செய்தாய்...

பெண்ணை விழிப்புறச் செய்தாய்...

சமூகத்தை விழிப்புறச் செய்தாய்...

தேசத்தை விழிப்புறச் செய்தாய்...


உறங்கிக் கிடந்த

மனிதனுக்குள்

மனிதத்தையே விழித்தெழச் செய்தாய்!


அதனால்தான்

இன்று உன் பிறந்த நாளில்

ஒரு கேள்வி மட்டும்...


**நீ கவிஞனா?**


இல்லை...


கவிதை எழுதியவன் அல்ல நீ;

**கவிதையால்

ஒரு காலத்தையே எழுப்பியவன்!**


நீ ஒரு பாடல் அல்ல —

பாடலுக்குள் மறைந்த

ஒரு புரட்சி!


நீ ஒரு குரல் அல்ல —

உறங்கிய தலைமுறைகளின்

விழித்தெழுந்த குரல்!


நீ ஒரு கவிஞன் அல்ல...


**நீ —

ஒரு விழிப்பு!**


- லதா 


======================

வெறும் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதர். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது.


வறுமையும், ஆங்கிலேயர்களின் அடக்குமுறையும் மகாகவி பாரதியாரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தேசப்பற்றைத் தூண்டும், மக்களுக்கு துணிவையும் நம்பிக்கையையும் அளிக்கும் வரிகளை அவர் தொடர்ந்து எழுதியவாறே இருந்தார்.


“மனதில் உறுதி வேண்டும்” — வாழ்க்கையில் நாம் விரும்பி நாட வேண்டிய எளிமையான, அதே நேரத்தில் வலிமையான விஷயங்களை நமக்கு நினைவூட்டுகிறது.


“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” — இன்றும் எனக்கு வலிமை தரும் ஒரு வரி. வாழ்க்கையை ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை நினைவூட்டும் மிகப் பெரிய உத்வேகம்.


“பாயும் ஒளி நீ எனக்கு” — ஒரு திருமண வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படையான விஷயங்களையும், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் எவ்வாறு துணையாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் அழகாகப் பேசுகிறது.


அதன்பிறகு, கண்ணனுடனான அவரது உறவு.


கண்ணனை ஒரு குழந்தையாகவும், நண்பனாகவும், சேவகனாகவும், இறைவனாகவும் அவர் பார்த்தார். கண்ணனை அவர் அழைத்த விதங்களும், அவருடன் கொண்ட உறவும், பாரதியாரின் ஆழமான பக்தியையும், கண்ணனுடன் அவர் கொண்டிருந்த அழகான பிணைப்பையும் வெளிப்படுத்துகின்றன.


பாரதியைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவரது வார்த்தைகளிலும், சிந்தனைகளிலும், வாழ்க்கையிலும் பேசுவதற்கு இவ்வளவு இருக்கிறது.


1921-ல் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். 105 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், இன்றும் அவரது எழுத்துக்கள் வழியாக அவர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


அதுதான் மகாகவி பாரதியின் உண்மையான சக்தி என்று நான் நினைக்கிறேன்.


இந்தப் பாடல் வாழ்க்கையைப் பற்றியும், நாம் பற்றிக்கொண்டிருக்கும் அனைத்துமே இறுதியில் ஒரு மாயையாக இருக்கலாம் என்பதையும் பேசுகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.


சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்தது.


--- சுஜாதா


==================


*மீண்டும் பிறக்குமா அந்தத் தீ .....* 


மீசை முறுக்கியவன் அல்ல,

மூடநம்பிக்கையை

 முறுக்கி எறிந்தவன்!


அச்சம் என்ற சொல்லை

அகராதியில் இருந்து அழித்தவன்!


அடிமை விலங்குகளை உடைக்க

அனல் கக்கும்

 வார்த்தைகளை விதைத்தவன்!


கவிதை எழுதவில்லை அவன்

காலத்தையே எழுதியவன்!


சாதி எனும் சதிக்கு 

சவுக்கடி தந்து ,

சமத்துவத்தின் விதையை

சமூகத்தில் விதைத்தவன்!


 பெண் கல்வியும்,

 உரிமையும் பெற்று சுதந்திர வானில் 

சிறகடிக்க வேண்டும் 

என்று கனவு கண்டவன்!


குழந்தைகளின் சிரிப்பில்

நாளைய 

இந்தியாவைக் கண்டவன்!


இந்தியா எழ ,

உலகின் முன்னிலையில்

 நிற்க 

உழைத்தவன்!


வறுமை வந்தது…

வாழ்க்கை தடுத்தது…

துன்பங்கள் சூழ்ந்தன…

ஆனாலும் தலை குனியவில்லை!


“நிமிர்ந்த நன்னடை,

 நேர்கொண்ட பார்வை”

என்று வாழ்ந்தவன் 

நம் பாரதி!


இன்று அவன் நினைவு நாள்…

மலர் வைப்பது மட்டும் போதுமா?


அவன் கனவு கண்ட

 சமத்துவத்தை

நம் வாழ்வில் மலரச்

 செய்வோம்;


அவன் நேசித்த நாட்டை

நம் செயலால் உயர்த்துவோம்!


பாரதி மறைந்த நாள் இது ,

ஆனால் பாரதியின் சிந்தனை

முடிந்த நாள் அல்ல!


அவன் எழுப்பிய நெருப்பு

இன்னும் நம்

 உள்ளங்களில் எரியட்டும்;

“அச்சமில்லை!” என்ற துணிவு

ஒவ்வொரு தலைமுறையிலும் பிறக்கட்டும்!


மகாகவி பாரதி வாழ்க!

தமிழ் வளர்க!

அவன் கனவு கண்ட பாரதம் மலர்க!


- மலர்விழி 


===============


உடன்பாடில்லை எனக்கு


எனக்கு இதில் முற்றிலும் உடன்பாடில்லை 

   இன்று நம் பாரதியார் உயிருடனில்லை 


கனக்கும் உடல் சுமந்து திரிதலே வாழ்வா?

   கன்னித் தீந்தமிழில் "கரைதல்" வீழ்வா?


"எனது, நான்" என்னும் சுயநலம் தான் வாழ்வா?

   "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்" இதுவா?


"மனதில் உறுதியோடு சொல்லுதல்" வாழ்வா?

   மண்டியிட்டு அந்நியரின் அடி பணிதல் அதுவா?


இன வேறுபாடு அது பார்த்தலே இருத்தலா?

   "எங்கள் சாதி காகம், குருவியும்" என்பதா?


தினம் தினம் அச்சத்தில் நடுங்குவது வாழ்வா?

   "தீமை கண்டு வெகுண்டு எழுதல்" அதுவா?


"வினையே இல்வாழ்வு" எனப் புலம்பல் வாழ்வா?

   "வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுக்கா?"



கனவாகத் தோன்றி பின் மறைவதே வாழ்வதா?

   "கவிதைகளாய் இன்றும் ஒலிப்பது" இல்லையா?


இப்போது சொல்லுங்கள் 

இன்று நம் பாரதி வீழ்ந்த நாளா? 

இன்றும் வாழும் நாளா?


__. குத்தனூர் சேஷுதாஸ் 11/9/2026

===============


அமர் கவி பாரதிக்கு சிரம் தாழ்த்திய அஞ்சலி🙏🙏

இன்று பாரதி நினைவு நாள்.

வருடம் முழுவதும் அல்லாடிவிட்டு, வருடத்தில் ஒரு நாள் நினைவு கூறக்கூடியவரா நம்பாரதி?

என்றென்றும்,நம் இரத்தத்திலும், சித்தத்திலும், உணர்விலும்,உள்ளத்திலும் ஊன்றிப் பதிந்தவரன்றோ அண்ணல்!

இவர் தீவிழி விழித்தால் நாட்டில் சுதந்திரப் பொறி பறந்தது;

மீசையை முறுக்கினால் , தாய்மண்ணின்மீது ஆசை பிறந்தது;

இவர் முண்டாசு, வெள்ளைய "குண்டாஸை", கிலி கொள்ளச்செய்தது;

இவரது பேனா அன்னியனை இனிமேலும் இங்கிருப்பேனா என அச்சம் கொள்ள வைத்தது;

இவரது எதிர்கால நோக்கு நூறாண்டுகளுக்கு முன்:( சில துளிகள்)

" ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்"

" வானை. அளப்போம் கடல்மீனை அளப்போம்"

" சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்"

" உலகத்தொழில் அனைத்தும் உவந்து செய்வோம்"

இக்கவிப்பரிதிக்கு ஏது மறைவு?

காலன் கவர்ந்தாலும் , காலங்கள் தாண்டி நம்உள்ளங்களில் வாழ்பவரன்றோ🙏🙏

நம்சங்கமே சான்று!

அன்னாருக்கு, சிரம் தாழ்ந்த, மனம் உவந்த , கண்கள்பனித்த அஞ்சலி🙏🙏

அவருக்கு " இந்த கரகரப்பிரியன்"செலுத்தும் இசை அஞ்சலி.( அவரும், சாய்ராம் ஐயாவும் மன்னிப்பார்களாக)!


- இ.ச.மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...