Friday, August 28, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (36) *கடல் ஆடு காதை* *புகழ்மிகு புகாரில் எழில்மிகு மாதவி நடனம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{36} சிலம்பொடு ஒரு பயணம்*


*கடல் ஆடு காதை*


*புகழ்மிகு புகாரில் எழில்மிகு மாதவி நடனம்*

••••••••••••••••••••••••••••••••


விஞ்சை வீரன் விழாக் கோலம் பற்றி 

வியந்தோதுகிறான் தன் காதலியிடம் 

விமரிசையாக அதனை விளக்கிய அடிகள் 


புகழ்மிகு புகார் நகரில் 

எழில் மிகு மாதவியின் நடன வகைகள் பற்றி 

விவரிப்பதைப் பார்த்திடலாம். 


*சிமையத்து இமயமும், செழு நீர்க் கங்கையும்,*

*உஞ்சை அம் பதியும், விஞ்சத்து அடவியும்,* 

*வேங்கட மலையும், தாங்கா விளையுள் காவிரி நாடும்,* 

*பூ விரி படப்பைப் புகார் மருங்கு எய்தி,*


உயர்ந்த முகடுகளை உடைய இமயமலை, 

செழுமையான நீர் ஓடும் கங்கை,

உஞ்சை நகரம்,

விஞ்சைக் காடு (அடவி), 

வேங்கட மலை,

விளைச்சலைத் தாங்க முடியாமல் இருக்கும் காவிரி ஆற்றுப் படுகை 

ஆகியவற்றைக் காட்டித் தொழுது கொண்டே வரும் விஞ்சையன் எனும் வித்தியாதரன் புகார் நகரம் வந்தடைந்தான் தன் இனிய காதலியோடு.


பின்பு மாதவி ஆடிய நடனத்தின் சிறப்பை நளினமாக கூறுகிறார்: 


*சீர் இயல் பொலிய, நீர் அல நீங்கப் பாரதி ஆடிய பாரதி- அரங்கத்து,*


நடனச் சீரின் தாளத்திற்கு ஏற்ப அடியிட்டு ஆடினாள். 

ஒழுங்கு நீர்மை இல்லாதவை அகலும்படி ஆடினாள். 

‘பாரதி’ என்னும் பெயர் கொண்ட அரங்கில் ஆடினாள். 


*திரிபுரம் எரியத் தேவர் வேண்ட,*

*உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்;*


 

முக்கண்ணன் ஆடிய கொடுகொட்டி ஆட்டம்  போல் உக்கிரத்துடன் ஆயின் கண் கவர் வகையில் ஆடினாள்.


*கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக அஞ்சன-வண்ணன் ஆடிய ஆடலுள்*


 கம்ச வத கண்ணன் ஆடிய ஆட்டம் போல் இருந்ததாம். 


 இப்போது மோகன்  அவர்களின்  பார்வையில்....


"விஞ்சைவீரன்" அன்புக்காதலிக்கு மாதவி நல்லாள் ஆடும் பலவகைக் கூத்துகளை விவரிக்கிறான்.


பண்டைக் காலத்தில் கூத்து என்பது ஆடல், பாடல், இசை மூன்றும் கலந்து அளிக்கப்படும் கலை நிகழ்ச்சி. இது அக்காலத்தில் கல்வி மற்றும் பண்பாட்டை மக்களிடம் சேர்த்த ஊடகமாகும். 

மக்கள் என்றால் சமத்துவமாக அரசன் முதல் ஆண்டி வரை, பாவேந்தரிலிருந்து பாமரன் வரை ,  என்று யாவரும் கூடி இருந்து கண்டு களிக்கும் வகையில் இருக்கும். 

காலப்போக்கில் நவீன பொழுது போக்குகள் வந்து கூத்து வகைகளைத் 

தெருவுக்குத்தள்ளி விட்டன.


பழங்காலக் கூத்துகள் இதிகாசக்கதைகளை எளிய முறையில் மக்களுக்குக் கொண்டு சேர்த்தன. அறிவியல் சார்ந்த கருத்துகளும் இடம் பெறும். 


இங்கு நாம் காண இருப்பது மாதவி மங்கை  ஆடும் கூத்துகள், படைகளை இதிகாசத் தொடர்புடையவை ஆகும்.


 பதினொன்று வகைக்கூத்துகளை மாதவி ஆடுவதாக வீரன் காதலியிடம் விவரிக்கிறான்.. அந்த ஆட்டங்களை வித்தியாதரன் வாயிலாக,நாம் காணுவோம்.


நீலக்கடலில் அலைகளை் திரையாகக் கொண்ட அரங்கத்தில் சூரனை வெற்றி கண்ட பிறகு ஆடும்

துடிக்கூத்து . ( துடி- பறை) - " (சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்")காண்பாய்!


படைகளைக் கீழே போட்டுவிட்டு அவுணர்கள்  வருத்தமுற்ற நிலையில் இருக்கையில் முருகன்அவர்தம்முன்னே குடையைச் சாய்த்து சாய்த்து ஆடிய குடைக் கூத்தைக்-" (குடை வாழ்த்து  .... ஆடிய குடையும்")-காண்பாய்!


பாணாசுரனின் பேரூரில் , பூவுலகை அளந்த நெடியமால் ஆடிய குடக்கூத்தை-

(நீள்நிலம் அளந்த  நெடியோன் குடமும்" )கண்டு மகிழ்வாய்!


ஆண்தன்மை இழந்து பெண் உருக்கொண்ட  காமன் ஆடிய பேடிக் கூத்துதனைப் (காமன் ஆடிய பேடி ஆடலும்") -பாராய்!


துர்க்கையானவள் ஆடிய மரக்கால் கூத்தை நோக்குவாய்!

(" மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்")

மரக்கால் ஆட்டம்- ம்ம்ம்-- அருகி வரும்வரும்பண்டைத் தமிழ்க்கலை. 

உயரமான கட்டைகளை இரண்டு கால்களில் கட்டிக்கொண்டு ஆடும்ஆட்டம். கொல்லிக்கால் ஆட்டம், கொக்கலிகா ஆட்டம் என்றெல்லாம் அறியப்படும்.

வெளி நாடுகளில் குறிப்பாக கரீபியன் தீவுகளில் இன்றும் ஆடப்படும் " மோக்கா ஜம்பீஸ்" எனும்ஆட்டம்.


அவுணர்களின் வெம்மைப்போர்க்கோலம் அழியத். திருமகள் ஆடிய பாவைக்கூத்தும்- (" திருவின் செய்யோள்ஆடிய பாவையும்") பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம்என்றும் அறியப்படும்.


பாணாசுரன் கோட்டை வடக்கு வாயிலில் வயலில் நின்று, உழத்தி போல் வேடமிட்டு இந்திரன்மனைவி அயிராணி ஆடும் கடையக்கூத்தைக் காண்பாய்!("அயிராணி மடந்தை ஆடிய கடையமும்")


இவ்வாறு மரபு விதிகள் மாறாமல் " மாதவி மரபின் மாதவி" ஆடிய ஆட்டங்களை , தேனோடு கூடிய மகரந்தத்துகள்களை, விரிந்து சொரியும் சோலையில்,(" தாதவிழ் பூம்பொழில்") எனக் காதலிக்கு மிக்க மகிழ்வோடு விவரித்துத் தானும் மகிழ்ந்தான் மேன்மை தாங்கிய வித்யாதரன் .

ஆடல் வல்லாள், நாட்டியப் பேரொளி மாதவி மடந்தை என்ன ஆட்டம் போட்டிருக்கிறாள்!

வித விதமான ஆட்டங்கள், ஒன்றன் பின் ஒன்றாக; ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட 

ஆட்ட அசைவுகள், முக பாவங்கள், முத்திரைகள், அணிகலன்கள், ஒப்பனைகள் என்று பலப்பல. அப்பப்பா!

மூச்சு முட்டுகிறதே!

எவ்வளவு வகையான கூத்துகள் பராணக்கதைகளை மக்களுக்குப் புரியும் வகையில் கொண்டு சேர்த்தன.

இன்று கூத்துப்பட்டறை போன்ற முயற்சிகள் கூத்து முறையையும் நவீன நாடகங்களையும் இணைத்து, கூத்துமுறை அழியாமல் பாதுகாக்கின்றன.

"பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை, தாதவிழ் புரிகுழல் மாதவி’’ யின்அருமையான ஆட்டங்களைக்கண்டோம், மகழ்ந்தோம். வித்யாதரனுக்கு நன்றி.

Sunday, August 23, 2026

தமிழ் நட்சத்திரப் பெயர்கள்

 படித்துப் பார்த்து வியந்தது:

முன்னோர்கள் எப்படிப்பட்ட புத்திசாலிகள்?

27 தமிழ் நட்சத்திரப் பெயர்களின் வடிவ மற்றும் இலக்கிய ரீதியான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. நம் முன்னோர்கள் விண்ணில் உள்ள விண்மீன் கூட்டங்கள் (Constellations) காட்சி அளித்த வடிவத்தை அடிப்படையாகக் கொண்டே இப்பெயர்களைச் சூட்டியுள்ளனர்:

1 முதல் 10 வரையிலான நட்சத்திர விளக்கங்கள்

* 01. புரவி (அசுவினி): 'புரவி' என்றால் குதிரை என்று பொருள். விண்ணில் இக்குதிரையின் தலை வடிவத்தைக் கொண்ட விண்மீன் கூட்டம் இதுவாகும்.

* 02. அடுப்பகம் (பரணி): 'அடுப்பு' அல்லது முக்கோண வடிவில் உள்ள அடுப்புக் கூட்டி வைக்கும் இடம் என்று பொருள். மூன்று விண்மீன்கள் அடுப்புக் கல் போல அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

* 03. ஆரல் (கார்த்திகை): 'ஆரல்' என்பது ஒரு வகை நெருப்பு மீன் அல்லது கூர்மையான ஆயுதம் (கத்தி). இந்த விண்மீன் கூட்டம் பார்ப்பதற்கு நெருப்புப் பொறி போலவோ அல்லது கத்தியின் முனை போலவோ பிரகாசமாக இருக்கும்.

* 04. சகடு (உரோகினி): 'சகடு' என்றால் வண்டி அல்லது தேர் என்று பொருள். மாட்டு வண்டியின் பின் பகுதி போன்ற முக்கோண அமைப்பில் இவ்விண்மீன்கள் தோற்றமளிக்கும்.

* 05. மான்றலை (மிருகசீரிடம்): 'மான் தலை' என்பதன் மருவே இது. விண்ணில் மானின் தலை போன்ற வடிவத்தை உருவாக்குவதால் இப்பெயர் பெற்றது.

* 06. மூதிரை (திருவாதிரை): 'முதிர்ந்த ஈரம்' அல்லது 'பெரிய துளி' என்று பொருள்படும். இது விண்வெளியில் சிவந்து காணப்படும் ஒரு பிரம்மாண்ட விண்மீன் (Betelgeuse) ஆகும்.

* 07. கழை (புனர்பூசம்): 'கழை' என்றால் மூங்கில் அல்லது வில்லின் தண்டு என்று பொருள். நேராக வளர்ந்த மூங்கில் போன்ற அமைப்பைக் குறிக்கும்.

* 08. கொடிற்று (பூசம்): 'கொடிற்று' என்றால் நண்டின் கொடுக்கு அல்லது வளைந்த தாடை என்று பொருள். நண்டு வடிவ விண்மீன் கூட்டத்தின் (Cancer) மையப்பகுதியில் இது அமைகிறது.

* 09. அரவு (ஆயில்யம்): 'அரவு' என்றால் பாம்பு என்று பொருள். விண்ணில் நாகப் பாம்பு வளைந்து நெளிந்து படுத்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

* 10. கொடுநுகம் (மகம்): 'கொடு நுகம்' என்பது வளைந்த ஏர் பூட்டும் நுகத்தடி அல்லது சிம்மத்தின் பிடரி போன்ற வடிவத்தைக் குறிக்கும்.

11 முதல் 20 வரையிலான நட்சத்திர விளக்கங்கள்

* 11. கணை (பூரம்): 'கணை' என்றால் அம்பு என்று பொருள். நேராகப் பாயும் அம்பின் வடிவத்தைக் குறிப்பது.

* 12. உத்தரம் (உத்தரம்): 'உத்தரம்' என்றால் மேல்நிலை அல்லது படுக்கைக்கட்டிலின் கால் பகுதி என்று பொருள்படும் (கட்டிலின் வடிவமாகப் பூரமும் உத்தரமும் பார்க்கப்படும்).

* 13. கை (அத்தம்): மனிதனின் உள்ளங்கை அல்லது ஐந்து விரல்களை விரித்து வைத்தது போன்ற வடிவத்தில் ஐந்து விண்மீன்கள் அமைந்திருக்கும்.

* 14. அறுவை (சித்திரை): 'அறுவை' என்றால் ஆடை அல்லது பிரகாசமான துணி என்று பொருள். விண்ணில் தனியாகத் தறித்துத் தொங்கும் ஒளிவீசும் ஆடை போலத் தோன்றும்.

* 15. விளக்கு (சுவாதி): இருளில் ஏற்றி வைக்கப்பட்ட ஒற்றைச் சுடர் விளக்கு போலத் தனித்து, மிக அதிக ஒளியுடன் பிரகாசிக்கும் விண்மீன்.

* 16. சுளகு (விசாகம்): 'சுளகு' என்றால் தானியம் புடைக்கும் முறம் என்று பொருள். முறத்தின் அகன்ற வடிவத்தைப் பெற்றுள்ள விண்மீன் கூட்டம்.

* 17. பனை (அனுடம்): 'பனை' என்றால் பனை மரம் என்று பொருள். நேராக உயர்ந்து நிற்கும் பனை மரத்தின் வடிவ அமைப்பைக் கொண்டது.

* 18. துலாங்கோலி (கேட்டை): 'துலாம்' (தராசு) மற்றும் தேளின் கொடுக்கு ஆகியவற்றைக் குறிக்கும் சொல். தேளின் வளைந்த வால் பகுதியில் உள்ள நச்சு முள் போன்ற வடிவம்.

* 19. குருகு (மூலம்): 'குருகு' என்றால் பறவை (குறிப்பாக நாரை அல்லது கொக்கு) அல்லது மரத்தின் வேர்ப்பகுதி என்று பொருள்.

* 20. முற்குளம் (பூராடம்): 'முன்னுள்ள குளம்' அல்லது கட்டிலின் முன் பகுதி வடிவத்தைக் குறிக்கும் விண்மீன் தொகுதி.

21 முதல் 27 வரையிலான நட்சத்திர விளக்கங்கள்

* 21. கடைக்குளம் (உத்திராடம்): 'பின்னியுள்ள குளம்' அல்லது நீர் நிலையின் இறுதிப் பகுதி போன்ற வடிவ அமைப்பு.

* 22. முகைகோல் (திருவோணம்): 'அம்பின் முனை' அல்லது முக்கூர் வடிவம் கொண்ட கோல் என்று பொருள். விண்ணில் மூன்று விண்மீன்கள் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும்.

* 23. காக்கை (அவிட்டம்): காகம் அமர்ந்திருப்பது போன்ற வடிவத்தையோ அல்லது முரசு கொட்டும் கருவியின் வடிவத்தையோ குறிக்கும்.

* 24. செக்கு (சதயம்): வட்ட வடிவமான எண்ணெய் ஆட்டும் செக்கு போன்ற அமைப்பில், பல சிறிய விண்மீன்கள் வட்டமாகச் சூழ்ந்திருக்கும்.

* 25. முரசு (பூரட்டாதி): தமிழர்களின் போர்க் கருவியான முரசு (Drum) போன்ற சதுர அல்லது உருளை வடிவ அமைப்பின் முன்பகுதி.

* 26. முரசுக்கட்டில் (உத்திரட்டாதி): முரசின் பின்பகுதி அல்லது அரசர்கள் அமரும் அரியாசனம்/கட்டில் போன்ற நாற்கர வடிவ அமைப்பு.

* 27. தோணி (ரேவதி): 'தோணி' என்றால் படகு என்று பொருள். விண்மீன் கூட்டத்தின் இறுதிப் பகுதியில் படகு போன்ற வளைந்த வடிவத்தில் இவ்விண்மீன்கள் காட்சி அளிக்கும்.

தொகுப்பு நோக்கு: இந்தப் பெயர்கள் அனைத்தும் வெறும் கற்பனையல்ல, சங்கத் தமிழர்கள் இரவில் வெறும் கண்ணால் வானைப் பார்த்து, அந்த விண்மீன் புள்ளிகளை இணைத்துக் கண்டறிந்த தூய தமிழ்க் கலைச்சொற்கள் ஆகும்!

Friday, August 21, 2026

சிலம்பொடு ஒரு பயணம் (35) *கடல் ஆடு காதை* *விஞ்சை வீரன் விளக்கம்*

 ••••••••••••••••••••••••••••••••

*{35} சிலம்பொடு ஒரு பயணம்*


*கடல் ஆடு காதை*


*விஞ்சை வீரன் விளக்கம்*

••••••••••••••••••••••••••••••••


இந்திர விழா போர் எடுத்த காதையை இன்பமயமாய் இளங்கோ அடிகள் எழுதிய பின் ஆறாம் காதையாய் கடல் ஆடு காதை என்பதை துவக்குகிறார். 


இந்திர விழாவின் பெருமையைப் பற்றி விரிவாக சென்ற பாதையில் பார்த்தோம். அந்த விழாவினை பார்த்து விஞ்சை வீரன் எனும் வித்தியாதரன் தன் காதலியுடன் கண்டு மகிழ்ந்தான். 


*கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னோடு விருந்தாற்று ஆயிரம் ஓர் விஞ்சை வீரன்*


அவன் காதலி கருமையான மீனைப் போன்ற பெரும் கண் இருந்தவளாம். அவளோடு அந்த விஞ்சை வீரன் இந்திர விழாவை கண்டு மகிழ்ந்தானாம். 


*இந்திர விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி*


வளம் மிக்க ஊரில் இந்திர விழா எடுக்க கொடியேற்றும் நாள் அன்று கொடிய அரக்கர்கள் வலிமையோடு வந்து மோதினராம். 


*கொடு வரி ஊக்கத்து கோ நகர் காத்த*


அப்போது வீரக்கழல் அணிந்த முசுகுந்த மன்னன் இந்திரனின் நாட்டைக் காப்பாற்றினானாம். 


*நெஞ்சு இருள் கூற நிகழ்த்து மேல் விட்ட வஞ்சம் பயத்த மாபெரும் பூதம்..... இருந்து பழி உண்ணும் இடனும் காண்கும்*


என்றாலும் அரக்கர்கள் முசுகுந்த மன்னனை அழிக்க தமது மாயையே ஏவினர். அதனால் இருள் சூழ்ந்தது. அப்போது முசுகுந்த மன்னனைக் காக்க இந்திரன் வலிமைமிகு பூதம் ஒன்றை ஏவினான். புகார் நகருக்கு காவலாக அந்த பூதம் அங்கேயே தங்கி இருந்தது. அது தங்கி இருந்து பலி உண்ணும் நாளங்காடி என்னும் இடம் அதோ உள்ளது காண்பாய்.. என தன் காதலிக்கு அவன் காட்டுகிறான்.


மோகன் ஐயா:


நடக்கும் எந்திர விழாவை பார்க்க விஞ்சை வீரன் ஒருவன் தன் காதலியுடன் வருகிறான். அவன் வித்தியா இனத்தைச் சேர்ந்தவன். இவர்கள் மந்திர வித்தைகளில் தேர்ந்தவர்கள். வானுலகிலும், மண்ணுலகில் மலைகளில் வாசம் செய்பவர்கள்.இவனும்  காதலியும் வடக்கே உள்ள மலைகளில் இருந்து நீண்ட நெடும்பயணம் செய்து நம் சோழ நாட்டு இந்திர விழாவைக்காண வருகின்றனர், என்றால் இந்திர விழவின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்து, கண்டு மகிழ எல்லைகள் ஒரு பொருட்டல்ல என்று உணருகிறோம்.


நீங்கள் அவன் நாளங்காடியை விவரித்ததைக் கண்டோம்.

பின்பு ஐம்பெரும் மன்றங்களைப்பற்றி விவரிக்கிறான். நாம் ஏற்கெனவே பார்த்து விட்டோம் இம்மாமன்றங்களை. அவன் காதலி காண் வேண்டாமா?


" தமரில் தந்து தகைசால் சிறப்பின் பொய் வகை இன்றிப் பூமியில் புணர்த்த  ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்" என்கிறான். தேவர்ககோன் இந்திரனைக்காத்தமையால் பரிசாகப்பெற்ற, அழகு மிகு , எவ்விதப் பொய்மையும் இன்றி பூமியில் நிலை பெற்ற மன்றங்கள். நீதியை நிலை நாட்டும் மன்றங்களில் பொய்மை எப்படி நுழையும்! 


பின்பு நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான மாதவியின் முற்பிறவி பற்றிக் கூறுகிறான்.

" நாரதன் வீணை நயம்தெரி பாடலும் , தோரிய மடந்தை  வாரம் பாடலும் ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய  நாடகம்உருப்பசி நல்காள்ஆகி  மங்கலம் இழப்ப  வீணை மண்மிசைத் தங்குக இவள் எனச்சாபம் பெற்ற  மங்கை மாதவி" ( ஊர்வசி மேல் உலகில்; பூமியில் மாதவி) என்கிறான். (இச்சாபம்பற்றி அரங்கேற்றக்கதையிலேயே கண்டு விட்டோம். அதனால் விவரிக்கவில்லை)

அரவத்தின் அழகையும் இயல்பையும் கொண்ட மாதவி நடனமாடுகிறாள் , என்கிறான் காதலியிடம். 

அவள்எத்தகைய  அழகு படைத்தவள்?

"துவர் இதழ்ச் செவ்வாய்த் துடியிடையோயே" என்று வர்ணிக்கிறான். 

பவளம்அல்லது துவரம்பூ போன்று சிவந்த இதழ்களை உடையவள் . செயற்கை உதட்டுப்பூச்சு பிறக்காத  காலத்தில் இயற்கை அளித்திட்ட சிவப்பு!

துடிஇடையாம்; துடி என்றால் உடுக்கை .அது போல அமைந்த இடை. இது இயற்கையோடு இணைந்த உவமை. நாம் தற்காலக் கவிதைகளில் 

" இடை இல்லாது போல் இருக்குது"; " இடையில் இடையோ கிடையாது" என்றெல்லாம் உயர்வு நவிற்சியாக, காண்கிறோம்.  எப்படி வர்ணித்தாலும்காலம் காலமாக , பெண்களின் இடையழகு இடைவெளி இன்றி ஆண்களால் இரசித்து உவமிக்கப்படுகிறது என்பதே  உண்மை.

இனி" அமரர் தலைவனை ( இந்திரனை) வணங்குதும்" என்கிறான்.

மேலே பயணத்தைத் தொடருவோம்.

Thursday, August 20, 2026

உலக மூத்தோர் தினத்தில் (21/8/2026) ...

 உலக மூத்தோர் தினத்தில் (21/8/2026) ...


நேத்து வரை ஓடோடி சேர்த்தோம், சேமித்தோம்  

   நிலம், வீடு, நகை என வாங்கிக் குவித்தோம் 


கூத்தடித்தோம் இல்லறத்தில் துணையுடன் 

   குழந்தைகள் பிறந்தனவோ ஓரரை டஜன் (6)


காத்து வாங்க கடற்கரை சேர்ந்தே போனோம் 

   கால் வாரும் அலைகளிடை கடலை தின்றோம்


ஊத்துக்குளி வெண்ணெயாய் உருகிய குடும்பம் 

   "ஓய்வெடுக்க வேண்டும் நீங்கள்!" என்னும் 


பேத்தியும், பேரனுமே உலகமெனச் சுருங்கினோம்

   பெரியவர்கள் "எல்லாம் பொய்" என்றதை மறந்தோம் 

   

சாத்துக்குடி அது போல் பிழியப் பட்டோம் 

   சர்க்கரை நோய் புகவும் வழிவிட்டோம்


பார்த்துக் கொள இன்று யாரும் இல்லை

   பறந்தன கிளிகள் விரித்து தம் சிறகை


மூத்தகுடிகள் தினமாம் இன்றாவது 

   "முழு வாழ்வும் நமக்காம் இனியாவது".


__. குத்தனூர் சேஷுதாஸ் 21/8/2026

Wednesday, August 19, 2026

ஞானத்தை தேடி

  ஞானத்தை தேடி


உனது ஆதியும் அறியேன்

 அந்தமும் அறியேன்

நீயின்றி துயரமில்லை

 நீயின்றி மகிழ்ச்சியில்லை

நீயின்றி சுற்றம் இல்லை

 நீயின்றி தனிமையில்லை

நீயின்றி நட்பில்லை

 நீயின்றி பகையில்லை

நீயின்றி ஆசை இல்லை

 நீயின்றி துறவில்லை

நீயின்றி மதமும் இல்லை

 நீயின்றி குணமும் இல்லை

நீயின்றி யாரும் இல்லை 

நீயின்றி யானும் இல்லை

நீயின்றி எனது இல்லை

 நீயின்றி பிறிது இல்லை

நீயின்றி இவ்வுலகில்லை

 நீ இன்றேல் எதுவும் இல்லை

ஏ... மனமே

உன்னால் அனைத்தும் எழுவதால்

நீ  இல்லாமையே இறையை அறிதல் காண் !!!!!!


லதா கணேசன்

Saturday, August 15, 2026

கலாட்டா காலனி

 


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் வ்ழங்கும் நகைச்சுவைத் தொடர் கலாட்டா காலனி நமது யுட்யூப் சானலில் வாரம் தோறும் ஞாயிறு இரவு 7 மணிக்கு வெளியிடப்படுகிறது


மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் சானல்


கலாட்டா காலனி - 1

கலாட்டா காலனி - 2

கலாட்டா காலனி - 3



துவக்கமே மிகச் சிறப்பு. 


படப்பிடிப்பில் பார்த்ததைவிட திரையில் பார்க்கும் பொழுது மிக அருமையாக உள்ளது. மிகுந்த உழைப்பு செலுத்தப்பட்டிருப்பதால் இந்த வெற்றி கிடைத்து இருக்கிறது. தயாரிப்புக் குழு (creative team) முழுமையான பாராட்டிற்கு உரியது. தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம். 


கைப்பேசியில் படம் பிடித்து - நம்மிடம் இருக்கும் மிக மிகக் குறைந்த கருவிகளை மட்டும் பயன்படுத்தி - இவ்வளவு சிறப்பாக வெளிக் கொணர்ந்த அனைவருக்கும் பாராட்டுதல்கள். வழிநடத்த சாய்ராம் ஐயா, அவரைப் பின் தொடரும் நன்கு உழைக்கின்ற ஒரு குழு, தமிழ்ச் சங்க உறுப்பினர்களே கதாபாத்திரங்களாக வலம் வர - என உருவான இந்தப் படைப்பு மேலும் மேலும் வெற்றியை நிச்சயம் ஈட்டும்.


- ஸ்ரீவி

- 



முற்பகல்.. பிற்பகல்

 முற்பகல்.. பிற்பகல் 


அழகான என் மகள் நெளிந்து, குழைந்தாள் 

   "அப்பா! புத்தாடை தீபாவளிக்கு" விழைந்தாள் 


"கிழிந்த" சில நோட்டுகள் கையில் திணித்தேன் 

   "கிடைக்கும் தருணம் கடையில் தள்ளிடு" பணித்தேன்


வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தேன் 

   *வாங்கியதைக் கண்டு மிக அதிர்ந்தேன் 

   

விழித்தேன் வாயடைத்து வேறென்ன செய்வேன் !

   வினை செய்தது முற்பகல் விளைந்தது பிற்பகல்.


*வாங்கியது -- கிழிந்த ஜீன்ஸ் 


__. குத்தனூர் சேஷுதாஸ்

Friday, August 14, 2026

சிலம்பொடு ஒரு பயணம்(34) *இந்திர விழவு ஊர் எடுத்த காதை*

 ••••••••••••••••••••••••••••••••

*{34} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*புகார் நகர மகளிர்*

••••••••••••••••••••••••••••••••



பொதிகை மலை உச்சியிலே 

பிறந்து தவழ்ந்து வந்த தென்றல் 

வீதியிலே வலம் வரும் உளமகிழ்

பெண்டிரின் சிரிப்பொலியோடும், பாடித் திரியும் பாணர்களின் பாட்டொலியோடும்

வீதி வலம் வந்ததைக் கூறிய அடிகள், 

புகார் நகரின் பெண்கள் இருந்த நிலையையும் விவரிக்கிறார். 


*கருமுகில் சுமந்து .... இரு கருங் கயலோடு கிடைக்குமிழ் எழுதி*


கரிய மேகம் எனும் கூந்தலைச் சுமந்து,

(பின் நாட்களில் வந்த கவிஞர்கள் கார்மேகக் கூந்தலை பற்றி எழுதாதவர்கள் மிகக் குறைவு என்பதை நினைவில் கொள்க) 

இரண்டு கரு மீன்கள் போன்ற கண்களுடன், (*வெள்ளி வயல் மேலே துள்ளும் கயல் போலே இரு விழி தாவக் கண்டேன் என் மேலே* உத்தமபுத்திரன் திரைப்பட பாடல் வரிகள் நெஞ்சிலே நிழலாடுகிறது அல்லவா!) இடையில் குமிழி மலர் போன்ற நாசியினோடு முழுமதி முகத்துடன் விளங்கும் பெண்


*நீர் வாய் திங்கள் நீர் நிலத்து அமுதின்*


வானில் உள்ள அரவங்கள் (ராகு மற்றும் கேது) கவ்விடுமோ என பயந்து நிலத்துக்கு வந்து விட்டாளாம். 


*இரு நில மன்னற்குப் பெருவளம் காட்ட திருமகள் புகுந்தது இச்செழும்பதி ஆம்*


நீண்ட நிலப்பரப்பு உடைய மன்னர்களுக்கும் தனது செல்வ வளம் காட்டுவதற்காக திருமகள் வாழும் செல்வச் சிறப்புடைய நகரம் ஆன புகார் நகரமாம்


*கமலம் தெரிந்தலும் உண்டு கொல்*


திருமகள் வாழும் தாமரையைத் தேடி தாமரைப் போன்ற முகம் கொண்ட நல்லாள் (புகார் நகரம் பெண்ணாக சித்தரிக்கப் பட்டுள்ளது) திரிகின்றாளோ! 


*மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சு பல்லுயிர் பருகும் பகு வாய் குற்றம் ஆண்மையில் திரிந்து... பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டென*


அரசாளும் மன்னன் செங்கோலுக்கு இழுக்கு  ஆகிவிடும் எனக் கருதி பயந்து,  பல உயிர்களைக் கொன்று குவிக்க வாய் திறந்தபடி அலையும் கூற்றுவன் தன்னுடைய ஆண் உருவை மாற்றிக் கொண்டாலும், தனது கொல்லும் தொழிலை விட்டொழியாது பெண்ணுருக் கொண்டு இங்கு திரிவதும் உண்டோ! (அழகால் கண்டவரை வாட்டி வதைக்கும் பெண்களை கூற்றுவன் பெண்ணுரு கொண்டு வந்த தோற்றம் என ஒப்பிடுகிறார் கவி -

*நித்தம் நித்தம் பொய்யடா... பேசும் புவியில் மட மாதரை விட்டு  உய்யடா உய்யடா உய்*.. எனும் சித்தர் பாடல் நினைவுக்கு வருகிறது அல்லவா)

------------

இனி் மோகன் ஐயா:

------------


மனை சேர்ந்த ஆடவர்:

இந்திர விழா எடுக்கும் சாக்கில் ஆடவர்கள். "மடமாதரோடு "ஆட்டம் போட்டனர்.எப்படிப்பட்ட மாதர்?

*"உருவிலாளன் ஒரு பெருஞ்சேனை"* - மன்மதனின் படை போன்ற இளம்பெண்கள். 

என்ன செய்கிறார்கள்?

*இகல்அமர்ஆட்டி எதிர்நின்று விலக்கி அவர் எழுதுவரி கோலம் முழுமெயும்உறீஇ* -ஆடவர்களை  தங்கள் கண்அம்புகளால் எதிர் கொண்டு, இப்படி அப்படி நகர விடாமல் செய்து நெருங்குவதால்,  இப்பெண்கள் மார்பிலும் தோள்களிலும் சந்தனம், குங்குமம்கொண்டு எழுதிய "தொய்யல்" எனும் சித்திரங்கள் (தற்காலிக ஒப்பனை) அந்த ஆடவர்கள் மேல் படிகிறதாம்.இந்த அடையாளத்தோடு அவரவர் இல்லம் திரும்புகின்றனர்.

வீட்டில்உள்ள மகளிர் "வடமீன்" (அருந்ததி) போல் "கற்பின் மனையுறை"பவர்கள். அவரவர் இணையர் நிலை கண்டு  அவர்தம் நீலக்குவளை மலர்கள் போன்ற கண்கள் "புறம்போக" , ( சினம் காரணமாக) சிவந்து காணப்பட்டன. வேறொன்றுமில்லை.. ஊடல்தான்! விருந்தினர் வந்த போதும் நீங்கவில்லை. அவர்களும் இதற்கு இப்பெரிய நிலத்தில் மருந்துண்டோ என நடுநடுங்கி நின்றனர்- *"மருந்தும்தரும்கொல் இம்மாநில வரைப்பு எனக்கையற்று நடுங்கும்"*  இவ்வாறு விழா நாட்களில் ஊடல் நிகழ்வுகளும் இருந்தன.


*கருங்கண்ணும்செங்கண்ணும்:*

நறுமண தாதுக்கள் நிறைந்த செங்கழுநீர் மலர்கள்  கட்டவிழ்ந்து தேன் சொரிவது போல் கண்ணகியின் கருங்கண்ணும், மாதவியின் செங்கண்ணும்  அவரவர் உள்ளக் கிடக்கைகளை, அகத்திலே மறைத்து,  கண்ணீர் முத்துகளை உதிர்த்தன. ஊடலால் கண்ணகியின் துயரமும், கூடலால் மாதவியின் மகிழ்ச்சியும் கண்ணீராக வெளிப்பட்டன எனக்கொள்ளலாம்.பெண்களின் கண்கள் வேல்போல்  உறுதி கொண்டு ஆடவரைத் தடுத்து ஈர்க்கும். இன்பமோ துன்பமோ வரின் பெண்மையின் தன்மையாக, கண்ணீராக வெளிப்படுத்தும்.

இத்தருணத்தில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தன. பழங்கால நம்பிக்கைப்படி (ஏன் இப்போதும் கூடத்தான்) பெண்களுக்கு இடக்கண் துடிப்பு நன்நிமித்தத்தையும், இடக்கண் துடிப்பு துர் நிமித்தத்தையும் குறிக்கும் என்பர். 


கண்ணகி விரைவில் கோவலனை அடைவாள்; மாதவி அவனைப் பிரிவாள் என அடிகள் ஒரு நிமித்திகர் போல உணர்த்துகிறார் போலும். 

இந்திர விழாக்கொண்டாட்டங்களைப் பார்த்தோம். அடுத்துக் கடலாடு காதையில் நுழைகிறோம். 

--------


அன்பு வாசகர்களே! 


இந்தப் பதிவோடு *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* நிறைவுறுகிறது.


இனிய வரப்போவது: 

*கடலாடு காதை*

.

*சுதந்திரம்…*

 *சுதந்திரம்…*


*அப்பா* :சுதந்திரம் என்றால் என்ன தெரியுமா?


*குழந்தை* :தெரியும் அப்பா… நாளைக்கு ஸ்கூல் லீவு! 😄


*அப்பா:* அதை விடு. உண்மையான சுதந்திரம் என்றால்?


*குழந்தை:* அம்மா *போனை வச்சுட்டு படி* என்று சொல்லாதது! 😂


*அப்பா:* சரி… வேறு?


*குழந்தை:* நான் விரும்பியதைச் செய்வது!


*அப்பா:* அப்படியா? அப்போ அடுத்த வீட்டுக்காரர் விரும்பியதைச் செய்ய அவருக்கு சுதந்திரம் இல்லையா?


*குழந்தை:* …😳


*அப்பா:* அதுதான் சுதந்திரத்தின் அர்த்தம்.

*நமக்கான சுதந்திரத்தை அனுபவிப்பதோடு, மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதிப்பதுதான் உண்மையான சுதந்திரம்!*


*குழந்தை:* அப்படின்னா… நாளைக்கு லீவு கிடைக்கிறது மட்டும் சுதந்திரம் இல்லையா? 😄



- தியாகராஜன்

Wednesday, August 12, 2026

ஏலகிரி - பதினான்கு வளைவுகள் சொல்லும் பதினான்கு கதைகள்

 *நல்லவைகளை பாராட்டுவோம்*

பதினான்கு வளைவுகள் சொல்லும் பதினான்கு கதைகள்


*மலைகளைப் பார்ப்பது ஒரு பயணம், மலைகளை உணர்வது ஒரு அனுபவம்.* அந்த அனுபவத்தை முழுமையாகத் தரும் இடங்களில் ஒன்றுதான் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலகிரி.


சென்னையின் பரபரப்பிலிருந்து சுமார் 230 கிலோமீட்டர் பயணித்தவுடன், பொன்னேரி மலைச்சாலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கிருந்து தொடங்குகிறது உண்மையான பயணம். பதினான்கு கொண்டை ஊசி வளைவுகள்… 

சுவாரஸ்யமான தகவல் என்னவெனில் அவற்றின் பெயர்கள்: 

*முதல் 7 வளைவுகள், தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த புலவர்கள் மற்றும் அறிஞர்களின் பெயர்களைக் கொண்டவை.*

*அடுத்த 7 வளைவுகள், கடையேழு வள்ளல்கள் பெயர்களைக் கொண்டவை.*

1. பாவேந்தர்

2. பாரதியார்

3. திருவள்ளுவர்

4. இளங்கோ அடிகள்

5. கம்பர் 

6. கபிலர் 

7. ஒளவையார்

8. பாரி

9. காரி

10. ஓரி

11. ஆய்

12. அதியமான்

13. நள்ளி 

14. பேகன்

இந்த அற்புதமான பெயர்ச்சூட்டல்  பாரட்டுக்குறியது.


- தியாகராஜன்


- 

Tuesday, August 11, 2026

*ஆழ்துளைக் கிணறு*

 *ஆழ்துளைக் கிணறு*

துளையிடும் எந்திரத்தின் 

இரைச்சலில் வெளியில்

கேட்பதில்லை பூமியின் 

கதறல்!


-தியாகராஜன்

Monday, August 10, 2026

*திரை விலகிய நேரங்கள்*

 *திரை விலகிய நேரங்கள்*


கார்த்திக்கின் விரல்கள் மொபைல் திரையில் அதிவேகமாக மேலேயும் கீழேயும் நகர்ந்துகொண்டே இருந்தன. 'ஸ்க்ரோல்' செய்வதும், பதினைந்து வினாடி 'ரீல்ஸ்' வீடியோக்களைப் பார்ப்பதும் அவனுக்குக் குடிப் பழக்கம் போல அடிமையாகிவிட்டது. சாப்பிடும்போது, நடக்கும்போது, ஏன்... தூங்குவதற்கு முன் விளக்கை அணைத்த பிறகும் கூட கை போனைத் தேடியது.


அவன் மனைவி ரம்யா, கையில் ஆவி பறக்கும் டீக்கப்போடு அருகில் வந்தாள்.


"கார்த்திக்... டீ கொண்டு வந்திருக்கேன், பிடிங்க."


கார்த்திக் போனில் இருந்து கண்ணை எடுக்காமலேயே, "ம்... அப்படியே வை ரம்யா, இதோ இந்த ஒரு வீடியோ முடிஞ்சதும் குடிச்சிர்றேன்," என்றான்.


பத்து நிமிடங்கள் கடந்தன. டீ முழுமையாக ஆறிப்போயிருந்தது.


ரம்யா பெருமூச்சு விட்டபடி அந்த டீக்கப்பை எடுத்துக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். சண்டையிட்டோ, கத்தியோ இதைக் மாற்றிவிட முடியாது என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்திருந்தது. அன்புடனும், நிதானத்துடனும் தான் இதை அணுக வேண்டும் என்று முடிவெடுத்தாள்.


அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை. கார்த்திக் வழக்கம்போலக் கண் விழித்ததும் படுக்கையிலேயே கையை நீட்டி போனைத் தேடினான். தலையணைக்கு அடியில் போன் இல்லை. மேஜை மீதும் இல்லை.


படபடப்புடன் எழுந்தான். "ரம்யா... என் ஃபோனைப் பார்த்தியா? எங்கே வச்ச?"


ரம்யா புன்னகையோடு ஒரு சிறிய பூட்டு போட்ட மரப்பெட்டியைக் காட்டி, "ஃபோன் இந்தப் பெட்டிக்குள்ள பத்திரமா இருக்கு கார்த்திக். இன்னைக்கு ஒரு நாள்... காலைல 8 மணியிலிருந்து சாயந்தரம் 6 மணி வரைக்கும் 'டிஜிட்டல் டிடாக்ஸ்' (Digital Detox) சவால்! நாம ரெண்டு பேரும் இன்னைக்கு ஃபோன் தொடவே கூடாது. என்ன சொல்றீங்க?"


கார்த்திக் கொஞ்சம் சலிப்புடன், "என்ன ரம்யா இது? ஆபீஸ் மெசேஜ், வாட்ஸ்அப் மெசேஜ் எதுவும் வந்தா என்ன பண்றது? ஃபோன் இல்லாம எனக்கு ஒரு மாதிரி இருக்கும்," என்றான்.


"ஒரே ஒரு நாள் தான் கார்த்திக். அவசரமான விஷயம்னா ஆபீஸ்ல என் நம்பருக்குக் கூப்பிடுவாங்க. நாம ரெண்டு பேரும் கடைசியா எப்போ போன் இல்லாம நிம்மதியா பேசினோம்னு உனக்கு ஞாபகம் இருக்கா? எனக்கு ஒரு நாளைக்கு உன் நேரத்தைக் கொடுக்க மாட்டியா?" என்று அன்பாகக் கேட்டாள்.


ரம்யாவின் முகத்தைப் பார்த்த கார்த்திக்கால் மறுக்க முடியவில்லை. "சரி... உன் இஷ்டம்," என்று ஒப்புக்கொண்டான்.


ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் கார்த்திக்கிற்கு மிகுந்த அசௌகரியமாக இருந்தது. கை தானாகப் பாக்கெட்டைத் தேடியது. ஏதோ உலகமே நின்றுவிட்டது போன்ற ஒரு உணர்வு.


ரம்யா அவனை சும்மா விடவில்லை. "வா கார்த்திக், பால்கனில உட்கார்ந்து டீ குடிக்கலாம்," என்று கூப்பிட்டாள்.


பால்கனியில் அமர்ந்தபோது, கார்த்திக் சுற்றியிருந்தவற்றை கவனிக்கத் தொடங்கினான். மரங்களில் குருவிகள் பறப்பதும், பக்கத்து வீட்டுச் சிறுவர்கள் சிரித்துப் பேசுவதும் அவனுக்குப் புதிதாகத் தெரிந்தன.


"ரம்யா... நாம இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் ஆகுது. ஆனா இந்த பால்கனில இவ்வளவு நல்ல காத்து வரும்கிறது இன்னைக்கு தான் கவனிக்கிறேன்," என்றான் ஆச்சரியமாக.


"காத்து எப்பவும் வீசிட்டு தான் கார்த்திக் இருந்தது... நாம தான் திரைக்குள்ள அடைபட்டுக் கிடந்தோம்," என்றாள் ரம்யா மென்மையாக.


மதிய உணவிற்குப் பிறகு, இருவரும் சேர்ந்து பழைய போட்டோ ஆல்பங்களை எடுத்தனர். பள்ளிப் பருவ நினைவுகள், திருமண நாள் புகைப்படங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துச் சிரித்துப் பேசினர். இணையத்தில் ஆயிரக்கணக்கான 'லைக்குகள்' தருவதை விட, தன் மனைவியின் இந்த உண்மையான சிரிப்பு எவ்வளவோ மேலானது என்பதை கார்த்திக் உணரத் தொடங்கினான்.


சாயந்தரம் இருவரும் சேர்ந்து தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினர். நேரம் போனதே தெரியவில்லை.


மாலை 6 மணி அடித்தது.


ரம்யா மரப்பெட்டியைத் திறந்து, "சவால் முடிஞ்சது கார்த்திக்! இதோ உன் ஃபோன்," என்று நீட்டினாள்.


கார்த்திக் அந்த போனைப் பார்த்தான். ஆனால் அதை உடனே கை நீட்டி வாங்கத் தோன்றவில்லை.


"என்ன கார்த்திக்... போனை வாங்கலையா?"


கார்த்திக் ரம்யாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "இன்னைக்கு ஒரு நாள் ஃபோன் இல்லாம வாழ்ந்த இந்த பத்து மணி நேரம்... கடந்த ஆறு மாசத்துல நான் வாழ்ந்த மிகச் சிறந்த நேரம் ரம்யா. அடுத்தவன் வாழ்க்கையை ஸ்கிரீன்ல பாத்துட்டே என் சொந்த வாழ்க்கையை வாழ மறந்துட்டேன். என்னை இந்த மாய உலகத்துல இருந்து வெளிய கொண்டு வந்ததுக்கு ரொம்ப நன்றிடி," என்றான் நெகிழ்ச்சியோடு.


அன்று முதல், கார்த்திக் சோசியல் மீடியாவை முற்றிலும் தவிர்க்கவில்லை; ஆனால் அதைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான்:


* சாப்பிடும்போதும், தூங்கும்போதும் ஃபோன் அறையிலேயே இருக்காது.

* தினமும் மாலை நேரத்தை குடும்பத்தோடும், இயற்கையோடும் செலவழிப்பது வழக்கமானது.


திரை விலகியபோது, அவன் வாழ்க்கை மீண்டும் வெளிச்சத்தால் நிறைந்தது!


- வெங்கட்ராமன்

Sunday, August 9, 2026

குறுங்கவிதைகள்

 ஆயத்தம்


மழைக்குப் பின்

குடை விரித்த காளான்—

மறுமழைக்கான ஆயத்தமோ?



லதா கணேசன்

===============

*முடிந்த விருந்து* 


விருந்து முடிந்ததும் நான் அழுக்காம்;

முதுமையில் மனிதரும்!!

—காலியான உணவுத்தட்டு 


லதா கணேசன்


==================

நீல வானத்தின் நித்திய பிரசவத்தில் 

நிதமும் தோன்றி நிதமும் மறைந்து

வாழும் வகையை நமக்கு புகட்டும்,

பொன்வண்ண சூரியக்குழந்தை!




வைகறை வணக்கத்துடன்

லதா கணேசன்


*புத்தகப் பிரியர்கள் தினம்*

 *புத்தகப் பிரியர்கள் தினம்*


மனிதனுக்கு மனிதத்தை சொன்னது புத்தகம் 


பல்லுயிர் ஓம்ப கற்றுக் கொடுத்தது புத்தகம் 


சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தியது புத்தகம் 


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என சொன்னது புத்தகம் 


கற்றனைத் தூறும் அறிவு என சொன்னது புத்தகம் 


பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்று கற்க வலியுறுத்தியது  புத்தகம் 


அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றம் என சொன்னது புத்தகம்


அறிவியலை அழகுற போதித்தது புத்தகம் 


காக்கை குருவி எங்கள் ஜாதி என்று கூறியது புத்தகம் 


தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என சொன்னது புத்தகம்


*புத்தகப் பிரியர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள்*


*புத்தகங்களை வாசிப்போம் - பூவுலகை நேசிப்போம்*



-ஸ்ரீவி

Saturday, August 8, 2026

முதல் வாக்கு எந்திரம்

 ★★★★★★★★★★★★★★★

சங்க இலக்கியம்

அகநானூறு

குடவோலை முறை

முதல் வாக்கு எந்திரம்

★★★★★★★★★★★★★★★


உலகெங்கும் பெரிய பெரிய

ஜனநாயக வல்லரசுகளில்

நடைபெறும் தேர்தலின் முன்னோடி

நம் பாரம்பரிய மிக்கத் தமிழகமே


நிர்வாகப் பதவிகளுக்கு 

தேர்தலின் மூலம் மக்களின்

பிரதிநிதியை மக்களே

தேர்ந்தெடுக்கும் தேர்தல்முறை


தொன்மையான தமிழகத்தின்

சமூகவியல் நடைமுறையாம்.

ஆச்சரியங் கொள்ள வேண்டாம்.

குடவோலை முறை என்பதே அதுவாம்.


தாம் விரும்பும் நபர் பெயரை

பனையோலை ஒன்றில் பொறித்து

பொதுவிடத்தில் வைக்கப்பட்ட

மண்குழிசி (பானை) ஒன்றிலே


ஒவ்வொருவராய் போட்டபின்

அவற்றை எடுத்து எண்ணிப்பார்த்து

அதிக வாக்குப் பெற்றவரை

தேர்ந்தெடுக்கும் முறையே குடவோலை முறையாகும்.


அகநானூறு தொகுப்பினிலே

எழுபத்து ஏழாம் பாடல் இதுபற்றி

பதிவேற்றி வைத்துள்ளது.

அப்பாடலை பார்த்திடலாம் நாமும்:


(அகநானூறு 77 -

மருதன் இளநாகனார்)


"நன்னுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்

துன்னருங் கானந் துன்னுதல் நன்றெனப்

பின்னின்று சூழ்ந்தனை யாயினன் றின்னாச்

சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற

இடியுமிள் வானம் நீங்கி யாங்கனும்

குடிதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழக்

கயிறுபிணிக் *குழிசி ஓலை* கொண்மார்

பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்

உயிர்திறம் பெயர


நல்லமர்க் கடந்த

தறுக ணாளர் குடர்த்தரீஇத் தெறுவரச்

செஞ்செவி எருவை யஞ்சுவர இகுக்குங்

கல்லதர்க் கவலை போகின் கீறூர்ப்

புல்லரை யித்திப் புகழ்படு நீழ

எல்வளி யலைக்கும் இருள்கூர் மாலை

வானவன் மறவன் வணங்குவிற் றடக்கை

ஆனா நறவின் வண்மகிழ்ப் பிட்டன்

பொருந்தா மன்னர் அருஞ்சமத் துயர்த்த

திருந்திலை யெஃகம் போல அருந்துயர்

தருமிவள் பனிபார் கண்ணே"


பொருள்:

(தலைவி வருந்தி அரற்றும்படி, ஊழ்வினையின் காரணமாக 

பொருளீட்ட, மிக்க துன்பம் தரும் காட்டுப் பாதையில் செல்லும்படி மனம் செலுத்துகிறது.


இடியும் மழையும் வானம் வழங்காததால் வறண்டு போன நிலத்திலுள்ள மக்களெல்லாம் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டனர்.


அங்கு கயிற்றால் கட்டப் பெற்றிருக்கும் பானையில் தகுதியான தலைவனை தேர்ந்தெடுக்கும் பொருட்டு ஒவ்வொன்றாக எடுக்கப்படும் ஓலையினைப் போன்று  


சிவந்த செவியுடைய பருந்துகள் இறந்து போன வீரர்களின் சடலங்களிலிருந்து குடல்களைப் பிடுங்கித் தின்னும்.

அத்தகைய பாதையில் அமையப் பெற்ற இத்தி மர நிழல் புள்ளிகளாகக் காணப்படும்.அங்கு வீசும் காற்று கூட மிக்க வெம்மையாக காணப்படும்.


வானவனின்(சேரன்) படைத்

தலைவனும் வணங்குவதற்குரிய வலிமையான வில்லுடையவன் பிட்டன்.


அவனது இலை போன்ற கூர் முனையுடைய வேல்கள் பகைவரின் உடல்களை வருத்தும். அதைப்போன்று இவளது கண்ணீர் பொருந்திய விழிகள் என்னை வருத்துகின்றன.)


அந்த காலத்தில் வழக்கத்திலிருந்த தேர்தல் முறையான குழிசி ஓலை (குடவோலை) முறை

பணந் திண்ணும் கழுகின் செவிகளின் தோற்றத்திற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது.


இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 

ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளதை உணரலாம்.


உலக வரலாற்றில்

ஜனநாயகத் தேர்தல் முறையினில்

முதன்முதல் பயன்பட்ட பொருள்

மண்குடம் (குழிசி/பானை) மற்றும்

பனையோலை தான்.

இதுவே 'குடவோலை' என்றானது.


இலக்கியங்களில் உவமை என்ற ஒன்று மட்டும் இல்லாது போயிருக்குமானால் பல தகவல்களை நாம் இழந்திருக்க நேரிட்டிருக்கும்.

வேட்பாளருக்கான தகுதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் முறை பற்றி கூறும் உத்திர மேரூர் குடவோலை கல்வெட்டுகள் பற்றி வருகின்ற பதிவொன்றில் தவறாது நாம் பார்த்திடலாம்.


~  தமிழ்ப் பயணம் தொடரும்


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*


(குறிப்பு இது மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் தொடர்ந்து எழுதி வந்த *சங்க கால இலக்கியம் ஒரு புதையல்* எனும் என் படைப்பில் நான் பகிர்ந்த ஒன்று)




Friday, August 7, 2026

கம்பன் வீடு

 சற்று நீண்ட பதிவு- பொறுமை தேவை!


கம்பர் நல்ல சந்த நயத்தோடு கவி பாடுபவர்,இலக்கண சுத்தமாக.

அவர் வீட்டில் உள்ள கட்டுத்தறியில் உள்ள ஊடும் பாவும் ஒன்றிணைந்து நெய்யும்போது நல்ல சந்தத்துடன் நெய்யும்

போல் உள்ளதாக  இப்பழமொழி உரைப்பதாக, கொள்ளலாம்.


கம்பன் வீடு தொடர்பாக மற்றொரு கதை, நான் படித்ததைப் பகிர்கின்றேன்:


கம்பர் வீட்டு வாசலில் மாட்டுச்சாணம் கொண்டு வறட்டி தட்டும் பெண்மணியிடம் ஒரு புலவர் கம்பர் இருக்கிறாரா என்று கேட்டார். அவள் உள்ளே நிறைய பேர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேண்டும் என்றாள். அவருக்குக

கோபம் வந்து, நீ நிறைய, பேசுகிறாய்; கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா என வினவினார்.

அதற்கு அவள் நான் ஒரு விடுகதை கூறுகிறேன்; பொருள் கூறுங்கள் என்றாள்.


விடு கதை பின் வருமாறு:


"வட்டமாக இருக்கும் வன்னி கொடியில் தாவும் கொட்டுபவர் கையில் கூத்தாடும் எரித்தால் சிவசிவ "


அது என்ன  என்று கேட்டாள். அவருக்குத்

தெரியவில்லை. 


( திரைப்பட தருமியின் முன்னோடியோ!)


கம்பர் வெளியே வந்ததும் அவரிடம் விடுகதையின் பொருள் கேட்டார்.

அதற்கு கம்பர் அது ஒன்றும் இல்லை ஐயா; அவளுடைய தொழிலை சொல்லி இருக்கிறாள் என்றார். ஐயா எனக்கு புரியவில்லை என்று இந்த புலவர் சொல்ல உடனே வரட்டியைத்தான் அப்படி சொன்னாள். வட்டமாக இருக்கும்  என்று.மேலும் அதை வன்னி எனும் நெருப்பில் சுடுவார்கள்.(வன்னி மரத்தின் நெருப்பில் தான் வரட்டியை சுடுவார்கள்) சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு ஆகும் .அதை நெற்றியில் பூசும் போது சிவ சிவா என்று சொல்லி பூசிக் கொள்வார்கள் அல்லவா. அதைத்தான் அவள் அப்படி சொல்லி இருக்கிறாள் என்றார்.


புலவர் அசந்துவிட்டார்.

கம்பர் வீட்டில் வறட்டியே, கவிப்பொருள் ஆனால், கட்டுத்தறி ஏன் கவி பாடாது என்று தோன்றியது, எனக்கு.

சிலம்பொடு ஒரு பயணம் (33) - *இந்திர விழவு ஊர் எடுத்த காதை*

 ••••••••••••••••••••••••••••••••

*{33} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*திருவிழாக் காட்சிகள்*

••••••••••••••••••••••••••••••••


இந்திர விழா துவங்கியதும், திருவிழாக் காட்சிகள் கண் கவரும் வண்ணம் இருந்தன. எல்லாக் கோயில்களிலும் சிறப்பு ஆராதனை பிரம்மதேவன் நெறிமுறைப்படி நிகழ்த்தப் பட்டது. பலவகையான தெய்வங்களின்கோயிலும் பொலிவுற்று விளங்கின. அங்கு   வேள்விகள் நடந்தன. 


*நால் வகைத் தேவரும், மூ-அறு கணங்களும்,*

*பால் வகை தெரிந்த பகுதித் தோற்றத்து*


அங்கு பலவிதமான தெய்வங்களுக்கு பூசை நடந்தது. 


*அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும்,*


அருகர் புத்தர் வாழும் தவச்சாலைகளும் அறம் செய்யும் தர்மச்சாலைகளும் 


*திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்-*


பேச்சாற்றல் மிக்க பெரியோர் நிகழ்த்தும் சொற் பொழிவுகளால் சிறந்து விளங்கின. 


*கொடித் தேர் வேந்தனொடு கூடா மன்னர்*

*அடித் தளை நீக்க அருள் சிறந்து ஒருபால்-*


வேந்தனோடு போரிட்டு சிறைப்படுத்திக் கொண்டுவரப்பட்ட சிறைக் கைதிகளின் காலில் பூட்டிய விலங்குகள் கழற்றப்படும் அருள் புரிந்த நற்செயல் ஒரு பக்கம் நடந்தபடி இருந்தது.


மன்னன் பிறந்தநாள் முன்னிட்டு நடக்கக்கூடிய பல்வேறு விழாக்களில் சிறைச்சாலைக் கைதிகளை விடுவிக்கும் ஒரு பழக்கம் இருந்ததை சிலப்பதிகாரம் நமக்குச் சுட்டுகிறது.


------------------

இனி மோகன் ஐயா 

------------------


 இன்று நான் விவரிக்கக இருப்பது, இசை நிகழ்ச்சிகளின் சிறப்பும், தென்றல் வருடிய புகார் தெருக்களில், நடந்த களியாட்டங்களும்.

.

இசை நிகழ்ச்சிகளின் சிறப்பு:

பல விதமான இசை நிகழ்ச்சிகள் தெருக்களில் நடைபெற்றன.

என்ன என்ன நிகழ்ச்சிகள்?


கண்ணுளாளர்-

கண்கவர்ஆடும்

கூத்தர்கள் கருவிக்குயிலுவர்- 


குயிலுவர் என்றால் வாத்தியம் வாசிப்பவர், இங்கு தோலினினால் ஆன வாத்தியம் வாசிப்பவர்

யாழிலே பண் இசைத்துப்பாடும் புலவர்கள்

வாய்ப்பாட்டுப் பாணர்கள்

என "எண்அருஞ் சிறப்பின் இசை  ஒரு பால்" நடந்த வண்ணம் இருந்தன.

முழவுகள் இரவு பகல் பாராது முழங்கின. சிறிய தெருக்களும், பெரும் வீதிகளும் மகிழ்ச்சி ஆரவாரங்களோடு காணப் பெற்றன- " முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலுள்அங்கண்" என்பது அடிகளின் வரிகள்.


மாருதம் காண இருப்பது மருகு:

அடுத்து காண இருப்பது " மாருதம் தரும் மருகு". 

அது என்னய்யா?

தென்றல்( மாருதம்) தவழ்ந்த புகார் வீதிகள்தாம்; அவற்றில் 

நிகழ்ந்த களியாட்டங்கள்தாம்.


எடுத்த எடுப்பிலேயே மாதவி பற்றி ஒரு வர்ணணையைப் பதிவு செய்கிறார் இளங்கோ அடிகள்-"காதல் கொழநனைப் பிரிந்து அலர் எய்தா மாதர்க் கொடுங்குழை மாதவி" யாம். அலர் என்பது இரு காதலர்களின் காதல் என்பது ஊரறிந்த ஒன்று . அம்பல் என்றால் சில பேருக்கு மட்டும் தெரியும். காதல்கொழநனனான கோவலனைப் பிரிந்து அலர் தூற்றலால் துன்புறாமல் (கணிகையர் குலத்தில் பிறந்தும்) அவனைப்பிரியாமலிருந்தாள் , மகரக்குழைகளை அணிந்த மாதவி. மறை பொருளாக , கணவனைப்பிரிந்து" அலர் எய்தினாளா" கண்ணகி என நினைக்கத்தோன்றுகிறது.


கோவலன் என்ன செய்கிறான்?

இல்லத்தில் வளரும்( இயற்கை முறையில்!) முல்லை, மல்லிகை மற்றும் இருவாட்சி , தாழியில் வளரும் குவளை, வண்டினம் சூழும் செங்கழு நீர் மலர்கள் என கட்டப்பட மாலைகளை மாதவியோடு அணிந்து  காமத்தின் களிப்பை அடைந்தான்.

நறுமணம் கமழும் பூம் பொழிலில்  விளையாட விரும்பி

நாள்முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் நாளங்காடியில் பற்பல மலர்களின் நறுமணமும், அகிற்புகை, சந்தனச்சாந்து இவற்றின் நறுமணமும்சேர்ந்து கொள்ள  , இவற்றை நுகர்ந்து கொண்டே, பரத்தையோராடும் பாணர்களோடும் கோவலன் களித்துத் திரிந்தான். 


இவனைப்போல வண்டுகளும்இளி என்ற சுரத்தை (ஐந்தாவது சுரமான பஞ்சமம்) பாடியவாறு பூக்களை நாடித் திரிந்தன . இளவேனில் காலம், மலையிலிருந்து வருடி வருடி வீசும் தென்றல் வேறு என மக்களும் இயற்கையும் பின்னிப் பிணைந்த இந்திர விழவு!

மலை மாருதம் என மலைத்தென்றலைக்குறித்தார். இது மலையமாருதம் என்ற இராகத்தைப்போல் இதயத்தை வருடிக்கொடுத்துத் தொடும்.


இந்தக்கொண்டாட்டங்களில் என்னைக் கவர்ந்தது புகார் நகர தெருக்கள்தாம்.  குறுந்தெருக்கள், அகன்ற வீதிகள், நாற்சந்திகள், இராஜ பாட்டைகள் யாவும் மக்கள்   இசைக்கருவிகளோடு சேர்ந்து கூடி ஆடிப்  பாடி  மகிழ   ஏதுவாக அமைந்தன. குண்டு, குழி , மேடு, பள்ளம் எல்லாம் நம்காலத்தவை போலும்!


*பயணம் தொடரும்*

Thursday, August 6, 2026

*தமிழின் சிறப்புமிகு தனித்துவம்*



பொதுவாக நம் மக்களிடையே ஆங்கிலத்தில் உரையாடுவதும் உறவாடுவதும் ஒரு பெரிய சமூக அந்தஸ்தாக பார்க்கப் படுகிறது. 

அது கூட பரவாயில்லை. தமிழ் தெரிந்தோர் மத்தியிலே கூட தமிழில் பொது வெளியில் உறவாடுவது அல்லது உரையாடுவது என்பது சமூகத்தில் ஏளனமாகவும் அந்தஸ்து குறைவாகவும் பார்க்கப்படுவது தான் மிகப் பெரிய கொடுமை. 


நம் மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் கொள்கைகளாக நாம் வரையறுத்து இருப்பது: 


*தமிழில் உறவாடுவோம் உரையாடுவோம்*


*எம்மொழியும் நேசிப்போம் - நம் மொழியை சுவாசிப்போம்*


செம்மொழியாம் எம்மொழி எம் மொழிக்கும் தாழ்ந்ததில்லை. பிற மொழிகளும் பெருமைக்குரியனவே. ஆயினும் ஒரு சிந்தனை எனக்குள் வந்தது. 


ஆங்கில மோகம் அதிகம் உள்ள நம் தமிழ்ச் சமூகத்தில் தமிழின் தனித்துவமான சிறப்புகளை பகிர வேண்டியது கட்டாயம் எனத் தோன்றியது. 


எடுத்துக்காட்டாக, 


ஆங்கிலத்தில், *Speaker* is one who speaks. அவ்வளவே. அதாவது ஒரு செயலை செய்கிறார் என்ற பொருள் மட்டுமே.


ஆனால் தமிழில் அவர் *பேச்சாளர்* என அறியப் படுகிறார். அதாவது *பேச்சினை ஆள்பவர்* என்ற பொருளில் அழைக்கப் படுகிறார். அதாவது அந்த செயலையே ஆள்கிறார் என்கின்ற பொருளில் தமிழ் மொழி அவர்களை பெருமைப் படுத்துகிறது.


அதேபோல, 

*Writer : எழுத்தாளர்*

என்ற சொல்லாடலும் வருகிறது. 


மனித சமூக பரிணாம வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தவை எழுத்துகளும் சொற்களும் மட்டுமே. அந்த இரண்டையும் ஆள்பவர்களால் தான் ஒரு சமூகத்தை நல்ல சமூகமாக கட்டமைக்க முடியும். 


தமிழ்ச் சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறது.


பெருமை கொள்வோம்! 

தமிழின் பெருமையை பறைசாற்றுவோம்!! 


குறிப்பு: இதுபோல வேறு சொல்லாடல்கள் இருந்தால் பின்னூட்டம் இடுங்களேன். 

*ஆட்சியாளர்* என்ற சொல் போல நீங்களும் கூறலாமே!


- ஸ்ரீவி

காத்திருப்பு

 காத்திருப்பு

 ரஞ்சனிக்கு  வாழ்க்கையே வெறுப்பாக இருந்தது. இந்த காத்திருப்புக்கு ஒரு முடிவே கிடையாதா.! சே! என்று அலுத்துக் கொண்டாள். கண்களில் தண்ணீர்  தளும்பி வந்தது. எல்லாம் என் தலையெழுத்து! எத்தனை நாளா நானும் காத்திருக்கிறது. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?. நடுவில் தொலைபேசியில் யாரோ அழைக்க, ஒருவேளை அவனாக இருக்குமோ? ஓடிச்சென்று எடுத்தால் மறுமுனையில் மேடம் லோன் தரோம், வாங்கி கிறீங்களா? என்ற குரல் கேட்டது. அட! வையம்மா போனை , நேரம் காலம் தெரியாம,என்று மிகவும் சலிப்புடன் கூறிவிட்டு போனை டப் என்று வைத்தாள்.  ஒருவேளை மெசேஜ் ஏதாவது வந்திருக்கிறதா என்று ஆவலுடன் பார்த்தாள் அதிலும் இல்லை. . ஐயோ கடவுளே என்னை ஏன் இந்த மாதிரி சோதனை பண்ற எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது. பக்கத்து வீட்ல பிரியா, ரம்யா எல்லாருக்கும் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்க ஏன் எனக்கு மட்டும் இப்படி சோதனை பண்ற என்று வாய் வட்டு கதறினாள். விளையாட்டு போல் ஒரு மாதம் ஆகிவிட்டது இதோ அதோ என்று அவளும் நாட்களை தள்ளி வந்தாள். இனி முடியாது.தினமும் எவ்வளவு சிரமமாக இருக்கிறது. வேறு யாரும் உதவி செய்யவும் முடியாது என்று கூறுகிறார்கள் என்னதான் பண்ணுவது? கொஞ்சமாவது கஷ்டம் தெரியுதா? அவளும் இந்த எண்ணத்தை மாற்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பார்த்தாள்.  கொஞ்சம் வாக்கிங போயிட்டு வந்தாள். ஆனா மனசு என்னமோ இதையே சுத்தி சுத்தி வருது. 

அவன் வருகைக்காக தினம் தினம் ஏங்கி ஏங்கி மனம் வேதனைப்பட்டது.  என்னமோ குடிமுழுகி போன மாதிரி  மூஞ்ச தூக்கி வச்சுட்டு உட்கார்ந்து இருக்கா பாரு, என்று மாமியார் இவளைப் பார்த்து சொன்னதும், உங்களுக்கு என்ன கஷ்டம் தெரியும் எனக்கு இல்ல அந்த கஷ்டம் தெரியும் நீங்க நல்லா சந்தோஷமா இருக்கீங்க எனக்கு அப்படியா? என்று பதிலுக்கு கத்தினாள். ஆமா நாங்க அந்த �


ஆமா நாங்க அந்த காலத்துல படாத கஷ்டம் தான் நீங்க பட்டுட்டீங்க எல்லாத்தையும் பெருசு பண்ணுவாங்க இந்த காலத்து பசங்க என்று மாமியார்க்காரி பதிலுக்கு வாய் அடித்து விட்டு சென்றாள்.

சரி சற்று  கண்ணயறலாம் என்று அவள் உள்ளே சென்றபோதுதான் அந்த அழைப்பு மணி கேட்டது. ஏக்கமும் ஆவலும் பொங்க அவள் ஓடினாள். கதவை திறந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி.  அங்கு நின்று கொண்டிருந்தவனை பார்த்ததும் கண்களில் நீர் வழிந்தது.ஏம்மா ராமநாதன் வீடு இதுதானே ? ஆமா வாங்க வாங்க உங்களை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன் என்று ஆவலாக கதவை திறந்து விட்டாள்.  சரி எங்கம்மா வைக்கணும் இந்த கேஸ் சிலிண்டரை என்று கேட்டவனை காலில் விழுந்து வணங்க வேண்டும் போல இருந்தது அவளுக்கு. அப்பாடா ...ஒரு வழியா வந்து சேர்ந்தது என்ற நிம்மதி பெருமூச்சுடன் கேஸ் வாங்கி வைத்துவிட்டு உறக்கச் சென்றாள் ரஞ்சனி.

-சிறுகதை 

-லதா கணேசன்



தேவதை

*தேவதை*


ப்ரீதா மிகவும் உற்சாகமாகவும் அதே நேரம் பதற்றத்துடனும் இருந்தாள். மாத பரிசோதனைக்கு (monthly check-up) இன்று வந்தபோது மகப்பேறு மருத்துவர் (gynecologist) பிரேமா அவளுக்கு நாட்கள் நெருங்கிவிட்டதையும் அவளை இன்று மாலைக்குள் மருத்துவமனையில் அட்மிட் ஆகிவிடுமாறும் கூறியதுதான் காரணம். ப்ரீதா தன் மனதிற்குள் கடந்த சில மாதங்ளாக நடந்தவற்றை நினைவு கூர்ந்தாள்.


ஏழு மாதத்திற்கு முன் தான் அவள் பரிசோதனைக்கு சென்று அவள் கருவின் முதல் வளர்ச்சியை கண்டது போல் இருந்தது. அதற்குள் நாட்கள் எவ்வாறு விரைந்துவிட்டன. முதல் ஸ்கேனி‌ல் அந்த கரு ஒரு சிறிய இலந்தைபழம் அளவிற்கு இருந்ததும் அவள் வயறு மெலிதாய் தெரிந்ததும், அதன் அசைவுகள் தெரிந்தபோதும் அவள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 


பதினைந்து வாரங்களுக்கு பிறகு அவள் சற்று தெளிந்திருந்தாள். தன் உடல்நிலை மாறுபாட்டை ஓரளவிற்கு அவள் அறியத் தொடங்கிவிட்டாள். வாந்தி, மயக்கம் போன்றவை சற்று குறையத் தொடங்கியது. அவளுக்கு சத்தான ஆகாரங்கள் யாவும் கொடுக்கப்பட்டது. அவளுக்கு வேண்டப்பட்டவர்கள் அவள் உடல்நலம் பற்றி உடனுக்குடன் கேட்டறிந்து கொண்டனர். 


சில வாரங்கள் கடந்து... 


குழந்தையின் அசைவும் , வளர்ச்சியும் நன்றாகவே இருந்தது. அவள் வயிற்றை கூர்ந்து கவனித்தால் சிலசமயம் சிறுபாதத்தின் தோற்றம் நன்றாகவே தெரியும். பல வேளையில் நன்றாக உதைப்பது தெரிந்தது. அந்த வலியும் இன்பமாகவே  இருந்தது அவள் அதன் நல்ல வளர்ச்சியை எண்ணி ஆனந்தம் கொண்டாள். பல நேரங்களில் அவள் தனிமைக்கு துணையாக அந்த கருவே இருந்தது. 


அவள் அதனிடம் "இன்னும் கொஞ்ச நாள்ல நீ வெளில வந்து இந்த உலகத்த பார்க்கபோற டா செல்லக்குட்டி. உன்ன கையில வெச்சு தாங்க போறோம்" என்று சொல்லும் போது அதை ஆமோதிப்பதைப் போல ஒரு உதை தெரியும். அதேபோல் அவள் நல்ல இசையைக் கேட்கும்போதும், இயற்கை எழிலை ரசித்து காற்று வாங்கும்போதும், அவள்" நீ நல்லா வருவ செல்லம்.. " என்று கூறும் போதும் நன்றி கூறுவது போல் ஒரு உதை உண்டு. 


இவ்வாறு நாட்கள் கடந்து இன்று அரங்கேற்ற நாளாக அவள் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டாள். செவிலி அவ்வப்போது அவளை சரிபார்த்து விட்டு "எல்லாம் இயல்பாக (normal) இருக்கு. நீ அமைதியாவும் தைரியமாவும் இரு" என்று கூறிவிட்டு சென்றாள். வலி வர தொடங்கியது ப்ரீதா பிரசவ அறைக்கு அழைத்து செல்லப்பட்டாள். 


மருத்துவர் பிரேமா பலவருட அனுபவம் வாய்ந்தவர். இப்போது ப்ரீதாவிற்கு மிகவும் ஆறுதலாய், பொறுமையாய் அவளுக்கு தைரியம் கூறி அவள் மூச்சு மற்றும் இதர மருத்துவ விஷயங்களையும் மிக நேர்த்தியாக நிபுணத்துவத்துடன் (expertise) கையாண்டு ப்ரீதாவிற்கு சுகபிரசவத்தில் ஒரு அழகிய குட்டி தேவதை பிறந்தாள். ப்ரீதா எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தாள். 


ஒரு கணம் அவள் அதை பார்த்தபோது தனது அழுகையின் ஊடே அந்த தேவதையும் ஒரு நொடி இவள் கண்களை உற்று நோக்கியது அவளுக்கு ஆயிரம் அர்த்தங்களை தந்தது. 


பின்னர் மூன்றாம் நாள் வீடு திரும்பிய ப்ரீதா சில நாட்கள் வெறுமையை உணர்ந்தாள். என்னதான் ஒத்துக்கொண்டு வாடகைத்தாயாக (surrogate mother) இருக்க சம்மதித்தாலும், இத்தனை நாட்கள் தன்னோடு இருந்த தன் உயிரை யாரோ பிரித்து சென்றார்போல் உணர்ந்தாள். அதனை பார்க்க எண்ணி ஏக்கத்திலும், பல வேளை கட்டு ஏற்பட்டும் வலியிலும் துடித்தாள், எரிச்சலும் கோவமும் கொண்டாள். ஆனால் அவளின் மனதில் தான் பெற்றெடுத்த குழந்தை எங்கோ ஒரு நல்ல தம்பதியரிடம் நன்றாக வளர போவதை எண்ணி, இதுவே நிதர்சனம் என்பதையும் உணர்ந்து அக்குழந்தையின் அந்த ஒரு நொடி பார்வை தந்த நினைவில் தன் வாழ்வின் அடுத்த பயணத்திற்கு தெளிவுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்தாள். 


தாய், வாடகைத்தாய் ஆயினும் அவளும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்க்கு அந்த வரத்தை தன் மூலம் தந்த தேவதையே. 


ந‌ன்றி!!!



- பிரபு

Tuesday, August 4, 2026

மேஜிக் கார்:

 சிறுகதை 

மேஜிக் கார்:


கால வளையம் ஆங்கிலத்தில் டைம் லூப் அல்லது டெம்போரல் லூப் என்று ஒரு கோட்பாடு உண்டு.

அதாவது உலகில் ஒரு நிகழ்வு மீண்டும் மீண்டும் அதே தருணத்தில் நிகழ்ந்தால் அதை   கால வளையம் (time loop) என்று கூறுவோம். அப்படி ஒரு நிகழ்வு அதன் முடிவை அதன் பாதையில் எட்டும் வரையில் அதே கால வளையத்தில் மீண்டும் மீண்டும் சிக்கி அதே நிகழ்வை அனுபவிக்கும் ஒரு கற்பனையே இந்த கதை.




கார்த்திக் மற்றும் தேவா இருவரும் ஹைடெக் கார் திருடர்கள். அவர்கள் கார் மற்றும் அதன் சம்பந்தமான எலக்ட்ரானிக்ஸ்  அனைத்து விஷயத்தையும் நேர்த்தியான முறையில் திருடுபவர்கள். அவை அனைத்தையும் இதுவரை மாட்டிக் கொள்ளாமல் திருடி விற்று பணம் செய்து உல்லாசமாக வாழ்ந்து வருபவர்கள். ஒருநாள் 


மணி: காலை 11:30.


ஒருநாள் ஒரு உணவு விடுதியின் அருகில் லாவகமாக ஒரு காரை திறந்து அந்த காரை திருடிக்கொண்டு வந்தனர் தேவா மற்றும் கார்த்திக் இருவரும். அந்த காரில் ஒரு பர்ஸ்ஸும் ஒரு மொபைல் ஃபோனும் இருந்தது.


தேவா: மச்சி!!! காஸ்ட்லி ஆண்ட்ராய்டு ஃபோன் டா. பர்ஸ்ல ஒரு பத்தாயிரம் தேறும். இந்த மியூசிக் சிஸ்டம் அது ஒரு நல்ல அமௌண்ட் தேறும்.

கார்த்திக்: கார நம்ம ஆள் சேகர் எப்போதும் போல எடுத்துப்போக வருவான். இது கொஞ்சம் ஹை எண்டு மாடல் கார். அதனால் இந்த தடவை ரேட் விஷயத்தில் கறாராக பேசி வாங்கிடனும்.

தேவா: ஆமா மச்சி கண்டிப்பா வாங்கிடலாம்.

கார் அவர்கள் வீட்டில் வந்து நின்றது.

கார்த்திக்: மச்சி நான் போய் சரக்கு வாங்கிட்டு வரேன். இன்னிக்கு கொண்டாடறோம்.


கார்த்திக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான். முதலில் காரை ஒரு டீக்கடை வாசலில் நிறுத்தி ஒரு டீ குடித்தான். பின்னர் ஒரு ரோட்டோர கடையில் சூடாக ஒரு சிக்கன் பக்கோடா வாங்கினான்.

பின்னர் ஒரு சிறுமி ரோடு கிராஸ் செய்ய பார்த்து அவன் காரில் மோதுவது போல வர, கார்த்திக் சடன் பிரேக் அடித்து நிற்பாட்டினான். பின்னால் ஒரு அம்மா ஓடிவர,

கார்த்திக்: ஏம்மா சின்ன பொண்ண பாத்து கூட்டிட்டு வர மாட்டீங்களா? நான் மட்டும் பிரேக் போடாம இருந்தா இவ்ளோ நேரம் அடிச்சு தூக்கியிருப்பேன்.

அந்தபெண்: சாரி சார் கூடவே வந்தா பைய சரி பண்ணிட்டு வரதுக்குள்ள டக்னு ஓடி வந்துட்டா. என் தப்பு தான். ரொம்ப தேங்க்ஸ் சார்" என்று கூறி அந்த சிறுமியை தொடையில் இரண்டு அடி போட்டுவிட்டு இழுத்து சென்றாள்.


அவன் மீண்டும் காரை உயிர்ப்பித்து ஒட்டினான். அவன் காரின் முன்னால் ஒரு டெம்போ சென்று கொண்டிருந்தது.



மணி மதியம் 12.45.

அப்போது அவன் கைபேசியில் ஒரு அழைப்பு வர, அதை எடுத்து "ஹலோ" என்றான். இமைக்கும் நேரத்தில் வலது புறத்திலிருந்து ஒரு கார் அந்த டெம்போவில் மோத, அந்த டெம்போ அதற்கு முன்னால் சென்ற ஆட்டோ மற்றும் டூவீலரில் மோத, கார்த்திக்கின் காரும் சற்று நிலை இழந்து அந்த டெம்போவில் மோதி அவன் தலை கார் ஸ்டியரிங்கில் மோதி அவன் கண்கள் இருண்டு மயங்கி விழுந்தான். டூ வீலரில் இருந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தனர்.


கார்த்திக் மீண்டும் கண் விழிக்க, அவன் தேவாவுடன் மீண்டும் உணவு விடுதி அருகிலிருந்து அந்த காரை திருடிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.


மணி: காலை 11:30.


தேவா: மச்சி!!! காஸ்ட்லி ஆண்ட்ராய்டு ஃபோன் டா. பர்ஸ்ல ஒரு பத்தாயிரம் தேறும். இந்த மியூசிக் சிஸ்டம் அது ஒரு நல்ல அமௌண்ட் தேறும்.

கார்த்திக்குக்கு இதெல்லாம் ஏற்கனவே நடந்தது மீண்டும் நடப்பது போல் இருந்தது

கார்த்திக்: டேய் இந்த காரை நாம ஏற்கனவே தூக்கினோம்ல. இதெல்லாம் ஏற்கனவே பேசினோம்ல?

தேவா: மச்சி இந்த கார் மாதிரி பல காலை நாம தூக்கி இருக்கோம். நிறைய பேசி இருக்கோம். அதெல்லாம் ஞாபகம் வெச்சுக்க முடியுமா?

கார்த்திக்: இல்லடா. இதே விஷயம், இதே கார் இதெல்லாம் அப்படியே நடந்தது இப்போ திரும்ப நடக்குது.

தேவா: "என்னடா சரக்கு அடிக்காமயே உளர்ற. ஒரு சரக்கு போடு தெளிவாகிடுவ" என்றான்.


கார் வீட்டிற்கு வந்தது. கார்த்திக் காரை எடுத்தான். டீ கடையில் டீ குடித்தான். பக்கோடா வாங்கினான், அந்த சிறுமியை அந்தப் பெண்ணிடம் தந்து, அதே இடத்தில் மீண்டும் கைப்பேசி அலற, மணி 12.45. அதே போல் டெம்போவில் மோதி விபத்து ஏற்பட்டு மயங்கினான். மீண்டும் கண் விழித்தபோது அவர்கள் காரை திருடி வந்து கொண்டிருந்தனர்.


மணி அதே காலை 11.30


கார்த்திக் தனக்கு மட்டும் இது மீண்டும் மீண்டும் நடப்பதை உணர்ந்தான். இம்முறை அவன் டீ கடையிலும், ரோட்டோர கடையிலும் நிறுத்தாமல் சென்றான். அதனால் அந்த சிறுமியை அவன் இம்முறை காணவில்லை. டிராஃபிக் நெருக்கடியால் சற்று மெதுவாக வாகனங்கள் நகர்ந்தது. அந்த விபத்து நடக்க இருக்கும் பகுதியை அடைந்தான்.

மணி 12.42

இம்முறை அந்த டெம்போவை கடந்து ஓவர்டேக் செய்து ஓட்டிச்சென்றான். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை.

மணி 12.45. அவன் வலது கண்ணாடியில் அது தெரிந்தது. டெம்போவில் அந்த கார் மோத, பைக்கும் ஆட்டோவும் விபத்துக்குள்ளாகி அந்த பைக்கில் வந்த இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அவன் கண்கள் மீண்டும் மயங்கின.


கண் விழித்தபோது அவர்கள் மீண்டும் காரை திருடி வந்து கொண்டிருந்தனர்.

மணி மீண்டும் அதே காலை 11.30.


இந்த முறை கார்த்திக் தேவாவிடம், "டேய் நான் இறங்கிக்கறேன். ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ காரை எடுத்துட்டு போ"

தேவா: டேய் என்ன டா ஆச்சு???

கார்த்திக்: "டேய் நீ போடா. நான் ஒரு வேலைய முடிச்சிட்டு வரேன்"

என்று சொல்லி இறங்கி ஓடினான்.


கார்த்திக் மீண்டும் அவர்கள் திருடிய இடத்திற்கு சென்று அங்கே அருகில் மறைந்து கொண்டு பார்த்தான்.

அந்த காரை தவரவிட்டவன் அதை காணாமல் பதைபதைத்து தேடி கொண்டிருந்தான். உணவு விடுதிக்கு அருகில் இருந்த மெடிக்கல் லேபில் இருந்து கையில் ரிப்போர்ட்டுடன் இருந்தான். பின்னர் அங்கு வந்த ஒருவனிடம் ஏதோ பேசி, அவன் கைப்பேசியிலிருந்து யாரோ ஒருவருக்கு கால் செய்தான். அடுத்த பதினைந்திலிருந்து இருபது நிமிடத்தில் ஒருவன் பைக்கில் வந்தான். வந்தவன் சில மருந்துகளை கார் தொலைத்தவனுக்கு வாங்கி கொடுத்து, அவனுடன் பைக்கில் ஏற்றிக்கொண்டு இருவரும் புறப்பட்டனர்.

கார்த்திக்கும் ஒரு ஆட்டோ பிடித்து அவர்களை பின் தொடர்ந்தான்.

மணி மதியம் 12.45.

அதே இடத்தில் விபத்து ஏற்பட, இந்த முறை தேவா காரில் பின்னால் வந்து டெம்போவில் மோதி மயக்கம் அடைந்தான்.


அவர்கள் மீண்டும் காரை திருடி வந்த அதே தருணத்தில் இருந்தனர்.

மணி காலை 11.30.


தேவா: டேய் எனக்கு என்னவோ நடப்பது எல்லாம் ஏற்கனவே நடந்து பார்த்த மாதிரி இருக்கு. நான் இப்போ தான் கார இடிச்ச மாதிரி இருந்தது. ஆனா இப்போ உன் கூட இருக்கேன்.

கார்த்திக்: நானும் அத தான் டா சொல்றேன். இப்போ வரைக்கும் எனக்கு இதே சம்பவம் நாலு தடவை நடந்துடுச்சு. இப்போ திரும்பவும் நடக்குது.

தேவா: ஆமா மச்சி. எனக்கும் இப்போ உன்ன மாதிரி தான் தோணுது. என்னடா சுத்தி சுத்தி இதே டைம்ல நிக்கறோம்.

கார்த்திக்: டேய் போன முறை எதுக்குடா கார எடுத்துட்டு வந்த?

தேவா: உன்ன தேடிதான்டா. உன்ன கூட்டிட்டு போக வந்தா நீ ஆட்டோல போன. அதான் உன்ன ஃபாலோ பண்ணிட்டு வந்தேன்.

கார்த்திக்: மச்சி நல்லா யோசி. நாம இந்த கார திருடி வந்த இதே டைம்ல தான் திரும்ப திரும்ப வரோம். அதாவது காலை 11.30. ஒரு நிகழ்வு நடக்கணும். ஆனா அது அப்படி நடக்காம நேர்மாறா நடக்குது. அதான் அப்படி நடக்கற வரைக்கும் திரும்ப திரும்ப இதே தருணத்துல வந்துட்டு இருக்கோம்.

தேவா: அப்போ ஒரு வேளை அந்த விபத்தை நடக்காம பண்ணிட்டா இது ரிப்பீட் ஆகாம இருக்குமோ?

கார்த்திக்: நீ சொல்ற மாதிரியும் இருக்கலாம். முயற்சி பண்ணுவோம். அந்த கார் டெம்போவில் மோதி தான் விபத்து நடக்குது. இப்போ டைம் 11.30. நாம வீட்டுக்கு போக 12.00. அந்த accident ஸ்பாட அடைய தோராயமா  நாற்பது நிமிடம் ஆகுது. 12.40லேருந்து 12.45குள்ள விபத்து நடக்குது. அந்த நேரத்துல நாம அந்த கார மோதாம செஞ்சிட்டா இதே டைம்ல நாம திரும்ப வராம இருக்க வாய்ப்பு இருக்கு.

தேவா: மே பி. அந்த இடிச்ச காரை உனக்கு நியாபகம் இருக்கா?

கார்த்திக் இதுவரை நடந்ததை நினைவுகூர்ந்து, "அது ஒரு ஒயிட் கலர் ஸ்கார்பியோ" என்றான்.

தேவா: சரி வா. அந்த ஸ்பாட்டுக்கு போகலாம்.


மணி மதியம் 12.10.

அவர்கள் வண்டியை அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்தனர். அந்த கார் வருவதை பார்த்த இவர்கள் அதன் முன்னால் சென்று மெதுவாக ஓட்டினார்கள். அவன் ஹார்ன் அடித்தான். ஆனால் இவர்கள் வழி விடாமல் ஒரு கணத்தில் ஸ்கார்பியோவின் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டனர்.



ம‌ணி மதியம் 12.43

அவன் பொறுமை இழந்து இறங்கி வந்து இவர்களை கண்டபடி திட்ட, இவர்கள் வண்டி சரி செய்வது போல் ஏதோ செய்து அடுத்த 3 நிமிடத்தை கடத்தினர்.


மணி மதியம் 12.46. எந்த விபத்தும் நடக்காமல் அந்த டூவீலர் கடந்து சென்றது. இவர்கள் உடனே வண்டியை உயிர்ப்பித்து அதை பின் தொடர்ந்தனர். அந்த வண்டி ஒரு மருத்துவமனையை நோக்கி செல்ல, திடீரென்று அங்கு ஒரு தெருவிலிருந்து வேறு ஒரு ஸ்கார்பியோ இவர்கள் பைக்கை மோத, அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இவர்கள் காரில் மோதி இரத்த வெள்ளத்தில் கீழே வீழ்ந்து கிடந்தனர்.


மீண்டும் அதே காலை 11.30.


தேவா: டேய் என்னடா இவ்ளோ முயற்சி பண்ணியும் திரும்ப இங்கயே வந்துட்டோம்? 


கார்த்திக்: மச்சி பிரச்சனை ஆரம்பிக்கிறது, நாம கார தூக்கிய உடனே அவன் வெளிய வரான். பரபரப்பு ஆகிறான். யார் கிட்டயோ ஃபோன் வாங்கி பேசி ஒருத்தர வர வெக்கறான். அப்புறம் 2 பேரும் பைக்ல ஒண்ணா போறாங்க. இது எல்லாம் நடக்க சுமாரா ஒரு முப்பது நிமிடம் ஆகுது. விபத்து நடக்குற இடம் நாம காரை தூக்கின இடத்துல இருந்து சுமார் பத்து நிமிஷம். 


இவங்க பதட்டமா போறதுகூட விபத்துக்கு ஒரு காரணம். மே பி அவனுக்கு மெடிக்கல் எமர்ஜென்ஸி இருக்கலாம். கைல ரிப்போர்ட், மெடிசின்ஸ் இருக்கு. அவனுக்கு அந்த மாத்திரைகள் இங்க தான் கிடைத்து இருக்கும். அதான் ஹாஸ்பிடல தாண்டி இவ்ளோ தூரம் வந்து இருக்கான். 


நாம காரை இங்க தூக்காம அவன் டெஸ்டிநேஷன் அடைந்ததும் அதாவது ஹாஸ்பிடல அடைந்ததும் தூக்கினா நாம இந்த டைம்ல திரும்ப வராம இருக்க வாய்ப்பு இருக்கு. அவன் இந்த காரோட அங்க போகணும் அது தான் நியதி (ப்ரீடெஸ்டிநேஷன்). அப்படி நடக்காம போனதால் தான் திரும்ப திரும்ப இந்த டைம்ல இருக்கோம்னு நினைக்கறேன். 


தேவா: அப்போ நாம இந்த கார தூக்க போறதில்லையா? 


கார்த்திக்: இங்க இப்போ தூக்க போவதில்லை. ஆனா ஹாஸ்பிடல்ல வெச்சு தூக்க போறோம். 


கார் திருடப்படாமல் இருந்ததால், காரின் உரிமையாளன் அதை எடுத்து உடனே கிளப்பினான். அவர்கள் இருவரும் அந்த காரை ஒரு ஆட்டோவில் பின்தொடர்ந்து சென்றனர். பத்து நிமிடத்தில் அந்த விபத்து நடக்கும் பகுதியை எந்த விபத்தும் நேராமல் கடந்து சென்றனர். அப்போது மணி காலை 11.45. அவன் மருத்துவமனையை அடைந்தான்.


மணி மதியம் 12.00. 


ரிப்போர்ட் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றான். இவர்களும் பின் தொடர்ந்தனர். கார் உரிமையாளனின் மகளுக்கு வைத்தியம் நடந்துக் கொண்டிருந்தது.


மணி மதியம் 12.05


அந்த மருந்தை வாங்கி அந்த சிறுமிக்கு செலுத்தினர். அந்த சிறுமி சற்று சீரடைந்தாள். 


டாக்டர்: "டோண்ட் ஒரி. ஷீ இஸ் ரெக்கவரிங்க். ஷு வில் பீ ஆல்ரைட். இந்த ஐவி (இன்ட்ராவீனல் - நரம்பு மூலம் செலுத்துதல்) முடிந்ததும் நர்ஸ் கிட்ட சொல்லுங்க" என்று கூறி விடைபெற்றார். 


கார்த்திக்கும், தேவாவும் வெளியே கார் அருகே வந்தனர். 


தேவா: மச்சி, நம்ம திரும்ப 11.30 க்கு போகல. அப்போ இது தான் நடக்க வேண்டியதா? இது மாறியதால் தான் நாம டைம் லூப்ல சிக்கினோமா? 


கார்த்திக்: ஆமாம். இந்த கார்ல இந்த கார் ஓனர் மூலமா அந்த பொண்ணுக்கு மருந்து கிடைக்கணும். அது தான் நியதி அல்லது ப்ரீடெஸ்டிநேஷன். அத நடக்காம நாம காரை தூக்கினது இந்த நியதிய மாத்தி அமைச்சுடுச்சு. அதான் இந்த கார் மூலமா அதே டைம் லைன்ல திரும்ப திரும்ப வந்தோம். 


தேவா: அப்போ இது மேஜிக் காரா மச்சி. இது மூலமா நடக்க வேண்டிய நியதி நடந்துடுச்சு அதான் மருந்து அந்த பொண்ணுக்கு கிடைச்சு போச்சே. 


கார்த்திக்: இன்னும் ஒரு நியதி நடக்கணும். நாம இந்த கார தூக்கணும். அதுவும் இப்போ நடந்துடும். 


தேவா: இப்பவே இங்கயேவா? 


கார்த்திக்: "ஆமாம். அந்த பொண்ணு பிழைக்க தான் டைம் லூப் நடந்தது. இப்போ லூப் முடிஞ்சுது. இனிமே இந்த காருக்கு நாம தான் ஆதரவு. இந்த ஓனர் வெளிய வர இன்னும் இருபது நிமிடம் ஆகும். வா வேலைய முடிக்கலாம்" என்று சொல்லி விரைவில் அதை மீண்டும் திருடிக்கொண்டு சென்றனர்.


 இப்போது மணி மதியம் 12.20


தேவா: மச்சி சரக்கு வாங்கிட்டு போகணும். மறந்துடாதே. 


கார்த்திக்: ஓகே டா ஓகே. ஏன் டிராஃபிக் மெதுவா மூவ் ஆகுது? 


என்று அவர்கள் செல்லும் போது சிகப்பு சிக்னல் விழுந்தது. அறுவது நொடிகள் முடிந்ததும் பச்சை சிக்னல் மாறியது. அவர்கள் காரை நகர்த்த, நொடிப்பொழுதில் இடதுபுறத்தில் இருந்து வேகமாக ஒரு ஸ்கார்பியோ இவர்கள் காரை இடித்து இருவரும் காரில் சரிந்தனர். இப்போது மணி மதியம் 12.45.


இவ‌ர்க‌ள் இந்த காரில் மோதி விபத்துக்குள்ளாக வேண்டியதும் ஒரு நியதி (ப்ரீடெஸ்டிநேஷன்). 


நன்றி....



- பிரபு

நண்பன் என்பான்

 நண்பன் என்பான் 


தூளியினின்று வெளி வந்ததும் கிடைப்பான்

   தொடர்ந்து வாழ்நாள் முழுதும் வருவான்


தோளில் கை போடும் முதல் உறவும் இவன் 

   "தோப்பில் மாங்காய் திருடுவோம்" என்பவன் 


ஆளில்லா இடம் வர அழைப்பு அது விடுப்பான்

   அத்தனை தீயவையும் சொல்லிக் கொடுப்பான் 


*வாளியாய் துயர் கேட்டு வருவான் விரைந்து 

   வாய்ப்பு வர விளிப்பான் காகமாய் கரைந்து 


மீள முடியாக் காதல் *ஆழியில் தள்ளுவான்

   மிதந்து வரும் என் முத்தையும் அள்ளுவான்


காளியாய் தன் மனைவி கண்டித்த போதும்

   காணாமல் இரான் என்னை ஒரு நாளும் 


கேளிக்கை அவனின்றி களை கட்டாது ஏதும் 

   கிட்டத்தட்ட அவனும் என் மனைவியே ஆகும் 


தாளிப்பாம் நம் வாழ்வில் தோழன் என்பான் 

   தவிர்க்க முடியாது குகன், கர்ணன் அன்னான்.


* வாளி -- அம்பு

* ஆழி -- கடல் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 2/8/2026

Monday, August 3, 2026

🌹ஆடி 18 ஆம் நாளில்

 🌹ஆடி 18 ஆம் நாளில் 


" ஆடிப் பெருக்கு " நிகழவே 


 நடந்து வரும் காவிரியில் 


கடந்து வந்தது " நீர்ப் பெருக்கு " 


ஆடிப்பாடி மகிழ்ந்த 


ஆடவரும் பெண்டிரும் 


ஆர்வம் மிகு சிறுவர்களும் 


ஆற்றுப் புதிய புனல் தொட்டு, 


ஆரத்தி எடுத்து வணங்கி,


ஆனந்தமாய்க் கூடி மகிழ்ந்து கொண்டாடும் 


ஆடிப்பெருக்கு விழாவை


ஆவலுடன் வரவேற்போமாக 🌹


நன்மை செய் நன்செயும்     


புன்மை செய் புன்செயும்


கொஞ்சி விளையாடும்  


தஞ்சை சூழ் பசுமை -- அன்று 👌

நம்மைக் காக்க, நலம் தரும் வருணன்


நம்பொருட்டு, அங்கு பொழிய...... 


கள்ளத்தனம் புரிந்த கருநாடகா 


வெள்ளத்திற்குப் பயந்து அணையைத்


திறந்து விட்டதையா..... பாரீர் !


மறந்தும் மாறிடாதீர், இயற்கைக்கு மாறாக !


ஆகையால்,

🌴 நடுவோம்! ☔️ பெறுவோம்!!


- ராஜா முஹம்மது

Sunday, August 2, 2026

*சீயக்காயும் அப்பமும்*

 *சீயக்காயும் அப்பமும்*


வெள்ளிக்கிழமை பள்ளி முடிந்து சாயங்காலம் பாகி மாமி வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

சன்னமான குரலில் மாமி ,


"கோந்தே, கொஞ்சம் கடைத் தெருக்கு போயிட்டு வரியா, பட்சணம் தரேன்"


விளையாட இன்னும் யாரும் வரவில்லை ஆதலால், வேடிக்கை பார்த்துக் கொண்டே போய் வரலாம் என்று எண்ணி,


"சரி மாமி"


"2006 சீயக்காய் 2 பாக்கெட் வாங்கிட்டு வா"


"2006 இல்லன்னா புலி மார்க் வாங்கவா?"


"இல்லன்னா பக்கத்து கடையில கேளு"


எங்கேயுமே இல்லன்னா, வீட்டுக்கு வந்துரணுமோ என்று எண்ணி, அடுத்த கேள்வியைக் கேட்கலாமா,வேண்டாமா என்ற குழப்பத்திலேயே நின்றேன். கடைசியில், 2006 கிடைக்கும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

காசு வாங்கிக் கிளம்பும் போது, கோபியும் வந்து சேர்ந்து கொண்டான்.


வாங்கிக் கொண்டு வந்து, மீதி சில்லறை யை சரியாக கொடுத்துக் கிளம்பும் போது,


"சித்த இருங்கோ, தோ வர்றேன்"


ஆளுக்கொரு அப்பம் கிடைத்தது.


"இங்க உக்காண்டு சாப்பிடுங்கோ" என்று ஒரு செம்பில் தண்ணீரும் வைத்தார்.


அப்பத்தின் மணம் என்னமோ செய்தது.

கோபி, ஒரு கடியில் மயங்கினான்.நானோ அதன் மணத்திலேயே கிறங்கினேன்.

கோபி, ஒரு நாற்காலியில் தலைகீழாக படுத்துக் கொண்டே காலை சுவற்றின் மீது வைத்தவாறு வியாபித்திருந்தான், அப்பத்தில் ஒரு பிறையளவு காணாமல் போயிருந்தது.

நானோ, குளிர்ந்த தரையில் கன்னம் பதித்து அப்பத்தை மூக்கினருகே வைத்தவாறு அதன் மணத்தில் கண் சொக்கிப் படுத்திருந்தேன்.


அப்போது வாசலில் நிழலாடியது; கைவிரலால் கம்பியிடுக்கின் வழி தாழ்ப்பாள் திறந்து, வெள்ளை உடையில், ஒருவர் உள்ளே வந்தார்.


நான் தலைதூக்கி ஏறிட்டுப் பார்த்தேன்.


கச்சிதமான உடை, சாந்தமான முகம், லேசான புன்முறுவலுடன் கடந்தார்.

அவருக்கு வழிவிடும் விதமாக, காலால் ஒரு அரைவட்டம் போட்டு ஒரு சுற்று சுற்றினேன்.


க்ஷணப் பொழுதில் தண்ணீர் செம்பு குடை சாய்ந்தது.

அப்போது அவர் "மெதுவாப்பா" என்று மெதுவாகவே சொன்னாலும், கோபியும் நானும் நிஷ்டை கலைந்து அட்ரீனலின் "ஓடுங்கடா" என்று உசுப்பேற்ற பயந்து, தெறித்து வீட்டிற்கு ஓடினோம்.


ஹ்ம்ம்…! தார்மீக பயம்.. அது ஒரு காலம்!!!


ஒரு இம்மிக் கடியில்லாத முழு அப்பத்தைப் பார்த்ததுமே,

"யாரு தந்தா?" என வினவினாள் என் அக்கா.


"நான் கடைக்குப் போயிட்டு வந்தேன், பாகிமாமி தந்தாங்க. யார்ட்டயும் சொல்லாத, நான் அவங்க வீட்ல தண்ணி கொட்டி செம்பு ... " பயத்தில் உளறிக் கொட்டினேன்.


"அம்மாடி!! அவர் தான் ராமையா சார், கணக்கு வாத்தியார்,அப்பண்ணா ஒரு துண்டு தா"!! என்று பயங்காட்டினாள்.


கனத்த மனதுடன், ஓரத்தில் இருந்த ஒரு பொறுக்கைப் பிய்த்துக் கொடுத்து,

"ம் பொறுக்கு தான் நல்லா இருக்கும்" சலித்துக் கொண்டேன்.


"இன்னும் கொஞ்சம் தா"


ராமையா சார் ரொம்ப அன்பாகத் தானே பேசினாங்க, என்று ஒரு தைரியம் வந்தது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று, ஒரே வேகத்தில் அப்பத்தை  அமுக்கினேன்.


"எம்மா, *திருவை* எங்கியோ வாங்கித் தின்னுட்டு வந்திருக்கான்"  என்று போட்டு விட்டாள். 

திருவை என்பது, ஒரு கைஅரவை இயந்திரம் . என் வாய் எந்த பண்டத்தையும் அரைத்துத் தள்ளும் திறன் கொண்டது என்று நம்பினாள், என் அக்கா. எனது பெயரும் பொருத்தமாயிற்று.


அம்மா வந்து என்ன ஏது என்று விசாரித்து விட்டு, "உதவி செய், ஆனா

இனிமேல் இப்படி வாங்கக் கூடாது" என்று கண்டித்தார்.


"சரி" மண்டையை ஆட்டினேன்.


அப்பத்தின் கைமணம் கரையாமல் இருக்க, எதையுமே தொடாமல், அக்குள் புண் ஆறாமல் இருப்பவன் போல், கையைத் தள்ளியே வைத்திருந்தேன். அவ்வப்போது, நுகர்ந்து மகிழ்ந்தேன்.

இரவு தூங்கும் போதும் கையைப் போர்வைக்கு வெளியே தள்ளியே வைத்திருந்தேன்.


"எம்மா!  நெய் வாசனைக்கு எலி வருமா?"

அக்கா சிரித்தாள்.


திடுக்கிட்டுப் பதறி எழுந்தேன்; பின்னர், கையை நன்றாகக் கழுவிவிட்டு வந்து படுத்தேன்.


மறுநாளே சோதனை வந்தது.


காலையில் பாகிமாமி வீட்டு வாசலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம்.


"கோந்தே" மாமி கூப்பிட்டார். 


அங்கு ஏழெட்டு பொடியர்கள் இருந்தாலும், நான் தான் கொஞ்சம் பெரிய பொடியன்!


"விளையாடிட்டு கடைக்குப் போயிட்டு வர்றியா !!"


பக்கத்தில் ஐயா நாற்காலியில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்.


"சரி மாமி, ஆனா பட்சணம் ஏதும் வேண்டாம்", என்றேன் தலையை ஒருபக்கமாக சாய்த்து.


மாமி சிரித்தார்.

"இன்னிக்கு இல்லடா கண்ணா" .


"குறும்புடா" என்று ஐயாவும் சிரித்தார்.


பக்கத்தில் நின்று கொண்டிருந்த கண்ணனும் க்ளுக்கென்று சிரித்துவிட்டான்.


டேய் உனக்கென்னடா புரிஞ்சது?? அய்யய்யோ!! எனது தியாகம் இப்படி பல்பு ஆகிவிட்டதே. நான் ஏதோ, பட்சணம் வேண்டும் என்று ஞாபகப் படுத்திக் கேட்பது போல அல்லவா ஆகிவிட்டது!!!


- திரு


                             --------------------------++++ ----------------------------

Saturday, August 1, 2026

பட்டுக்கோட்டையார் மன்னிப்பாராக

 சும்மா கிடந்த ரிமோட்டெடுத்து

விடியும்முன்னே டீவியப் போட்டு

தட்டு நிறைய குமிச்சு வச்சு

சோத்து மலைமேல பாத்தி கட்டி

சாம்பார் தயிரைப் பிரிச்சு விட்டு

தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

வயிறு வளர்ந்திருக்கு நல்லா வீடு வெளங்கிருக்கு

வயிறு வளர்ந்திருக்கு  நல்லா வீடு வெளங்கிருக்கு!!


அட! வீடு வெளங்கியென்ன மச்சான் 

நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்

வாயும் வயிறுந்தானே பக்கம்! 


வீடு வெளங்கியென்ன மச்சான் 

நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்

வாயும் வயிறுந்தானே பக்கம்! 


வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு

புள்ள இருக்குது கண்ணே

புள்ள இருக்குது கண்ணே! 


வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு

புள்ள இருக்குது கண்ணே

புள்ள இருக்குது கண்ணே!!


வாழப் பழகி கூடிக் குலாவி

ஆரத் தழுவி அன்பு பெருகி

வாழப் பழகி கூடிக் குலாவி

ஆரத் தழுவி அன்பு பெருகி


சீராடும்  சீமாட்டிகள் வாழ்வினில்

பட்ட கடன் இனி மாறும் - அந்த 

இல்லம் மலருமே நாளும்

இல்லம் மலருமே நாளும்


அவர் பட்ட கடன் இனி மாறும் -அந்த 

இல்லம் மலருமே நாளும்

இல்லம் மலருமே நாளும்!


அட! வீடு வெளங்கியென்ன மச்சான் 

நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்

வாயும் வயிறுந்தானே பக்கம்! 


வீடு வெளங்கட்டும் பொண்ணே- நமக்கு

புள்ள இருக்குது கண்ணே

புள்ள இருக்குது கண்ணே!


ஆளப் பிறந்தவர் வாழ்க்கையிலே

தள் ளாடிவந்திடக்  காரணம் என்ன மச்சான்?

அவர் ஓடிய பாதைகள் எங்கேயுமே

சேராததால் வந்த தொல்லையடி!


கொஞ்சும் குழந்தைகள் வாழ்வதற்கு 

இனி பண்ண வேண்டியது என்ன மச்சான்?


தினம் கொஞ்சிக் கொஞ்சிக் கொண்டு

கஞ்சி கொடுக்காமல் 

சிந்திக்கச் சொல்லவேணுமடி!


வேடிக்கை தரும் இன்பங்களை 

இன்னும் தட்டிப் பறிப்பது 

மோசமன்றோ?


புதர் மூடிக் கிடந்த மனை சிறக்குது

வைபோகம் வீட்டிலே ஆகுமடி- இனி 

வைபோகம் வீட்டிலே ஆகுமடி!!


அட! வீடு வெளங்கியென்ன மச்சான் 

நமக்கு வாயும் வயிறுந்தானே பக்கம்

வாயும் வயிறுந்தானே பக்கம்! 


நாளை போடப் போறேன் சட்டம் 

உனக்கு உண்மை விளங்கிடும்  திட்டம்

வீடு நலம்பெறும் திட்டம்!!

உண்மை விளங்கிடும்  திட்டம்

வீடு நலம்பெறும் திட்டம்!!

உண்மை விளங்கிடும்  திட்டம்....

வீடு நலம்பெறும் திட்டம்!!!!!!


- திரு


வீடு!

 வீடு! 


திண்ணையும் தென்னையும் பேசும்!

தெருவில் தேன் சிட்டு விளையாடும்! 

தெற்கு தெரு வடக்கு தெரு என்று திசை பேசும்!


தெரிந்தவர் தெரியாதவரும் 

தாகம் என்றால் வற்றாத இளநீரும் மோரும்!

வற்றிப்போன வத்தல்களும்! ஊரிப்போன ஊறுகாய் ஜாடிகளும்! 

வக்கனையா சாப்பிட்டு வளர்ந்த வயிற்றை தாலாட்ட கையிற்று கட்டிலும் !


மழையில்,  செந்நிற ஓட்டின் வாசமும்! 

வெயிலிலும் மணம் வீசும் வெங்காய வடகமும்!

காற்றுப்புகாத அறைவீடும்!

அதில் சேர்ந்த முறுக்குக்களும், நொறுக்குகளும்!



மங்கி போன நேரத்தில் மங்களமான பாட்டும்!

ஜோடி போட்டு நடக்கும் டபரா செட் காபிகளும்!

மாடகுழிகளில் மணி மணியாக எரியும் விளக்கும்!

வாடைப்பொழுதில் நந்தியாவின் புன் முறுவலும்,

விளக்கின் உச்சி முதல் பாதம் வரை மாலையாக மாறினதும்!


மீந்து போன மதிய சோறு நிலா சோறு ஆனதும்!

கையிலே உருண்டைகளும் காதிலே கதைகளும்!

30 40 நட்சத்திரங்கள் எண்ணுவதும்!

வானொலியின் இரவின் மடியிலும்!

சின்ன சின்ன தலைகள் உறவின் மடியிலும்!

சிறு மொட்டும் தொட்டிலில்,தாலாட்டு மெட்டில் அழகாக கண்ணுரங்கும்!!


ஆனால் இன்றோ, வீடு தனிமை பட்டது! வெவ்வேறு பட்டினப் பிரதேசத்தால் வறுமை பட்டது!

உறவுகள் கட்டின கூடும் பழமை  பட்டது!

துரிதமாக செல்லும் உயிரே உறவே கொஞ்சம் திரும்பி பாராய்!

துயில் கொண்டாயோ! கொஞ்சம் எழுந்து வாராய்!

இது நிழல் அல்ல நிஜம்!



- ,தேவி அருண்

 _கவிதை எழுதியவர் 

தேவி அருண்_

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...