காத்திருப்பு!
எவ்வளவு நேரம் தான் புத்தகச்சாவியை வைத்திருப்பாய்!
கொஞ்சம் சத்தமாக படிக்கலாமே! எங்கள் அககதவும் திறந்து காற்று வரும் பொழுது தூற்றி கொண்டு, எங்கள் அறிவும் நீரூற்றாய் பெருகுவதை நாங்கள் எப்பொழுது பறைசற்றுவது?
- தேவி அருண்
===================
*என் புரிதல்*
பூட்டு என்பது அடைப்பதற்கானது. ஆனால் திறந்து கிடக்கும் புத்தகம்தான் மனதைத் திறக்கும் திறவுகோல்.
மூவரில் இருவர் தங்களைத் தாங்களே மனக்கதவுக்குள் பூட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள்முன் திறந்து கிடக்கும் அறிவுலகை அவர்கள் பார்க்கவே விரும்பவில்லை.
மூன்றாவது நபர் மட்டும் புத்தகத்தைத் திறந்து வாசிக்கிறார். அதனால் அவருடைய அறிவும் விரிகிறது.
வாழ்க்கையில் பல வாய்ப்புகள் இப்படித்தான். அவை நம்மைத் தேடி வந்தாலும், நாம் முன்வந்து அதை ஏற்றுக்கொண்டால்தான் அதன் பயன் கிடைக்கும்.
வாசிப்பு வட்டம்,
தமிழ்ச்சங்கம்,
நூலகம்,
பயிற்சி வகுப்புகள்
போன்றவை அனைத்தும் *திறந்து கிடக்கும் புத்தகங்களைப் போன்றவை.* அவற்றில் இணைய மறுப்பது, யாரோ பூட்டியதால் அல்ல, *நாமே நமக்குள் போட்டுக் கொண்ட மனப்பூட்டால்தான்.*
- தியாகராஜன்
===================
புத்தகங்கள்
புத்தகங்கள்...
மனங்களைத் திறக்கும்
மாயத் திறவுகோல்கள்.
மூடநம்பிக்கையின்
பூட்டுகளை உடைக்கும் திறவுகோல்கள்.
குறுகிய சிந்தனையின்
கதவுகளைத் தகர்க்கும் திறவுகோல்கள்.
அறியாமை என்ற
இருளறையின் பூட்டை
திறந்து வெளிச்சம் காட்டும்
அற்புதத் திறவுகோல்கள்.
ஜாதி, மதம், மொழி, இனம்
என மனிதன் கட்டிய
சுவர்களைக் கூட
சிதறடிக்கும் திறவுகோல்கள்.
காலத்தை வென்ற
ஐம்பெரும் காப்பியங்களையும்,
அறிவியலின் அற்புதப் படைப்புகளையும்
தலைமுறை தலைமுறையாக
மனிதகுலத்திடம்
சேர்த்துவைத்த
அழியாத திறவுகோல்கள்.
இந்த ஓவியத்தைப் பார்த்தபோது...
திடீரென
என் பார்வை
என் வீட்டின் புத்தக அலமாரியைத் தேடியது.
அது...
இன்னும் பூட்டியே இருந்தது.
அந்தக் கணத்தில்
தேட ஆரம்பித்தேன்...
அலமாரியின் திறவுகோலை மட்டும் அல்ல...
என் மனதை
இன்னும் அதிகம் திறக்கும்
புத்தகங்களையும்.
- லதா
===========
No comments:
Post a Comment