திறவுகோல்
உணர்ச்சிகளையும், என்னுள் உழன்றவைகளையும் -
உள்ளத்தில் பூட்டினேன் ,
இறுகியது மனம் .
திறவுகோல் கண்ணில் பட ,
கையில் எடுத்து படித்தேன் ;
பூட்டிய கதவும் திறந்தது -
இறுகிய மனமும் இளகியது.
- பத்மாவதி
================================
வாசிப்பில்லா மனிதருக்கோ
சிந்தனைகள் பூட்டப்பட்டு
சிறையிருக்கும்
வாசித்தல்
வந்து விட்டால்,
மனிதரின்
சிந்தனைகள் சிறகடிக்கும்.
- ஸ்ரீவி
=============================
பா இல்லை. எண்ண ஓட்டம்.
ஒரு மனிதரின், மூன்று நிலைகள்.
முதலில் எந்த சிந்தனையும் இன்றி வாளா இருக்கிறார்.
இரண்டாவதாக அதிக நாட்கள் வாளாயிருந்ததால் சலித்து விட்டவர்.
மூன்றாவதாக அதிகம் சலித்து, பின் சிலிர்த்து, வாசிப்பு திறவுகோல் கொண்டு சிந்தனை ஊற்றுக்கண் திறக்கப் பட்டவர்.
அன்னாரின் இல்லாள் , செயலாற்ற சென்று விட்டாள். அதனால் படத்தில் இடம் பெறவில்லை.
- கற்பகம்
====================
தெளிந்தது உயருது
உறவால் இணைந்தன ஒன்று, இரண்டு, மூன்று
ஒன்றாய் ஒரே குடும்பப் பின்னணி கொண்டு
வரவேற்பு அறையில் வசதியான இருக்கை
வாய் பிளக்கும் வண்ணத் தொலைக்காட்சித் திரை
சிறை பிடிக்கப் படுகின்றன முதல் இரண்டு
சிந்திக்க விடாமல் அங்கே சிரசில் பூட்டு
திறவுகோல் நூலாம் தெளிந்தது மூன்று
திறமை வளருது திகைக்க வைக்குமது.
__. குத்தனூர் சேஷுதாஸ் 31/7/2026
==================================
கண் அறியாத பூட்டு
கண் திறக்கவல்ல பூட்டு
கால்களுக்கு இல்லை பூட்டு
காலம் வெல்ல உண்டு பூட்டு
கைகளுக்கு இல்லை பூட்டு
கற்றலுக்கு உண்டு பூட்டு
சிரசுக்கு இல்லை பூட்டு
சிந்தனைக்கு உண்டு பூட்டு
யாரும் இடாத பூட்டு
நாமே இட்ட பூட்டு
மனம் திறக்கவல்ல பூட்டு
மனதைத் திறக்கவல்ல பூட்டு
வாசிப்பு வட்டத்துள் வந்துவிட்டால்
வானம் தொட ...
வழி திறக்கும் பூட்டு
- அமுதவல்லி
===================
தலை நிறைய பாரத்தோடும்,
முகம் நிறைய இறுக்கத்தோடும்,
மனம் நிறைய குழப்பத்தோடும்,
உடல் நிறைய சலிப்போடும்,
இருக்கும் மனிதர்களுக்கு மாமருந்தாகவும், விருந்தாகவும் பரிமாறப்படுகிறது புத்தகம்.
================
அன்று:"சாவி ஒரு புத்தகம்"
இன்று:புத்தகமே "சாவி"
😊சாயி 😊
=================
-
No comments:
Post a Comment