Saturday, August 1, 2026

சிலம்பொடு ஒரு பயணம் {32} * *இந்திர விழவு ஊர் எடுத்த காதை* *இந்திர விழா துவங்கியது*

 ••••••••••••••••••••••••••••••••

*{32} சிலம்பொடு ஒரு பயணம்*


*இந்திர விழவு ஊர் எடுத்த காதை*


*இந்திர விழா துவங்கியது*

••••••••••••••••••••••••••••••••


ஐம்பெரும் மன்றங்கள் பற்றி அழகாக கூறி வந்த அடிகள் கால்கோள் விழா நடந்த நிகழ்வை நாம் கண்முன்னே கொண்டு வந்த நிறுத்துகிறார் அருமையாக.


மங்கல முரசு அறைந்து இந்திர விழா துவங்குதல் பற்றிய பாடல்களை பார்ப்போம்


*வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி,*

*வால் வெண் களிற்று-அரசு வயங்கிய கோட்டத்து, கால்கோள், விழவின், கடைநிலை, சாற்றி*


இந்திரனின் வச்சிரப்படை இருக்கும் கோயில் வச்சிரக் கோட்டம். அதில் இருக்கும் முரசம் கச்ச ஒப்பனை செய்யப்பட்ட - அழகாக அலங்கரிக்கப்பட்டஅக் கோயில் யானையின் பிடரியில் ஏற்றி முரசு அறைந்து விழா பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது. 

வெள்ளை யானை அரசன் இந்திரன், அவனுக்கு விழா. அவனுக்கு விழா தொடங்கும் நாள் இது. விழா முடியும் நாள் இன்ன நாள் - என்று சொல்லி முரசு அறையப் பட்டது. 


அதன்பின் என நடந்தது! 


*தங்கிய கொள்கைத் தரு நிலைக் கோட்டத்து, மங்கல நெடுங் கொடி வான் உற எடுத்து*


தரும் தகைமை கொண்ட கற்பக மரம் காவல் மரமாக நின்றிருக்கும் இந்திரன் கோயிலில் மங்கலக் கொடி விண்ணை உரசும் படி பறக்க விடப்பட்டது. 


*அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்* என்கின்ற இக்காலத் திரைப்படப் பாடல் வரிகளை நினைவு படுத்துகின்றன அல்லவா இவ் வரிகள்! 


இந்திர விழா துவங்குவதை இவ் வரிகளில் குறிப்பிட்ட அடிகள் அந்நகரத்து வீடுகளும் வீடுகள் இருந்த வீதிகளும் எவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருந்தன என்பதையும் அருமையாக விவரிக்கிறார்: 


*மரகதமணியொடு வயிரம் குயிற்றி, பவளத் திரள் கால், பைம் பொன் வேதிகை, நெடு நிலை மாளிகைக் கடைமுகத்து யாங்கணும்,*


*கிம்புரிப் பகுவாய்க் கிளர் முத்து ஒழுக்கத்து, மங்கலம் பொறித்த மகரவாசிகைத்தோரணம் நிலைஇய,தோம்*


 *அறு பசும் பொன் பூரண கும்பத்து, பொலிந்த பாலிகை,*


*பாவை விளக்கு, பசும் பொன் படாகை, தூ மயிர்க் கவரி, சுந்தரச் சுண்ணத்து, மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு*


மரகத மணி, வைரம், பவளம் முதலானவை பதிக்கப்பட்ட வேலைப் பாட்டுடன் கூடிய தூண்கள் இருக்கும் திண்ணைகளைக் கொண்ட மாளிகை வீடுகளின் வாயிலில் ஒப்பனைகள் செய்யப் பட்டிருந்தன. (மாளிகை வீடுகளின் வாயில் திண்ணையிலே இப்படி வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததை கேட்கவே மலைப்பாக உள்ளதே!)


ஆடி ஒலி எழுப்பும் கிம்புரிப் பகுவாய் 

ஒளி வீசும் முத்து மாலைகள் 

மங்கலச் சின்னம் பொறித்து மீன் வாய் போலத் தோன்றும் மகர வாசிகைத் தோரணம் கட்டப் பட்டிருந்தனவாம்.

அங்கெல்லாம் நீர் நிறைந்த பொற் குடங்கள் 

முளைப் பாலிகை 

பாவை விளக்கு 

பசும்பொன்னால் ஆன கொடி (பட்டுத்துணிக் கொடி)

மயிரால் செய்யப்பட்ட கவரி-விசிறி,

மணம் பரப்ப தூவும் அழகிய சுண்ணாம்பு பொடிகள் 

முதலானவை வீட்டுக்கு வெளியில் தெருவில் வைக்கப் பட்டிருந்தனவாம்.


இவ் வரிகளை படிக்கையிலேயே நம் கண் முன்னே கோலாகல கொண்டாட்ட வீதிகள் தெரிகின்றன அல்லவா! 


*ஶ்ரீவி*


(இனி தொடர்வது மோகன் ஐயா)


ஐயா, நீங்கள் ,

மங்கல நெடுங்கொடி பற்றியும், வீதியின் பொலிவு பற்றியும் அழகாக சொற்சித்திரங்கள் தீட்டினீர். 

இனி இந்திரனை நீராட்டிய பாங்கைக் காண்போம்.


*ஐம்பெருங்குழுவும் எண்பேர் ஆயமும்அரசகுமரரும் பரத குமரரும் கவர்ப்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்ப் பரித்தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி"*


ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் அரசனுக்கு நல்லாட்சி புரிய அருந்துணை புரியும் அமைப்புகள். இவைகளில் பணி புரிவோரும்,

அரச குமாரர்களும்வணிகப் பெருமக்களும், அலங்கரிக்கப்பட்ட  குதிரைகள் மேலும் , யானைகள் மேலும், விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேர்கள் மீதும் அமர்ந்து  ஒன்று திரண்டு வந்தனர்.  சமூக வேறுபாடுகளோ " முக்கிய பிரமுகர்"( VIP) கலாசாரமோ இல்லாத சமத்துவக் கொண்டாட்டம்! அவ்விழா நாட்களில் எல்லோரும் அந்நாட்டு மன்னர்கள்தாம்! மன்னராட்சியில்  பின்னிப் பிணைந்த ஐனநாயகம்!

நம்அரசர் மேலும் மேன்மை அடைய வேண்டும் என ,புகார் நகரின் அப்பக்கத்தில்கூடி"உரைசால்  மன்னன்

கொற்றம்கொள்க" -பெரும்புகழ் கொண்ட கொற்றவன் சிறப்பாக ஆட்சி செய்க , என  வாழ்த்தினர். 

இந்திர உருவை நீராட்ட நீர் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது!

ஆயிரத்தெட்டுத் தலை கொண்ட ஆதிசேடன்  உலகைத் தாங்கிக் காப்பது  போல 

தன் வளத்தால் நாட்டை ஊட்டிக் காக்கும் காவிரித் தாயின் நீர் . எப்படிப்பட்ட நீர்?

*"தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் புண்ணிய நல்நீர்"-* குளிர்ந்த  பூக்களின் நறுமணம் வீசும் நல்ல நீர். சுத்திகரிப்பு நிலையங்கள் தேவைப்படாத " புண்ணிய" நீர்.

பொற் குடங்களில் இந்நீரை நிரப்பி  மண்ணுலகம் மருள, விண்ணுலகம் வியக்க  விண்ணவர் தலைவனை நீராட்டினர்.


*மோகன்*


(பயணம் தொடரும்..)

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...