••••••••••••••••••••••••••••••••
*{38} சிலம்பொடு ஒரு பயணம்*
*கடல் ஆடு காதை*
*கூடல் கூடல் முடிந்து கடல் ஆடுதல்*
••••••••••••••••••••••••••••••
மாதவியும் கோவலனும்
ஊடல் கொண்டு ஊடாடினர்
கூடல் கண்டு களிப்புற்றனர்
அதன் பின்னர் கடலாடச் சென்றனர்.
*மடல் அவிழ் கானல் கடல்-விளையாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினன் ஆகி*
கூடிக் கழிக்கும் இராப்பொழுது நீங்கி,
கருக்கல் தொடங்கி
இருள் கலையும் நேரத்தில்
புகார் நகர மக்கள் எல்லாம்
பூம்பொழில் ஆட
கடற்கரை நோக்கி போவார் ஆயினர்.
அவர்களைப் பார்த்து அகமகிழ்ந்த மாதவியும்,
கடற்கரை ஏகி
நீர் விளையாட்டுகளை பார்க்க ஆவல் மேலோங்கிட
கோவலனை அழைத்திட்டாள்.
*பொய்கைத் தாமரைப் புள் வாய் புலம்ப,*
தாமரை தடாகத்திலேயே இருந்த அன்னப்பறவைகள் யாவும் வாய்விட்டு கூவினவாம்
*வைகறை யாமம் வாரணம் காட்ட,*
பொழுது புலர்ந்து விட்டது என்பதை சங்கொலியும் கோழியும் குரல் எழுப்பி தெரிவித்தனவாம்.
*வெள்ளி விளக்கம் நள் இருள் கடிய;*
விடியல் மலரப் போகிறது என்பதை இருளை விரட்ட வந்த விடிவெள்ளி காட்டுகிறதாம்.
*தார் அணி மார்பனோடு... வான வண் கையன் அத்திரி ஏற,*
தன் மார்பினில் மலர் மாலை அணிந்த கோவலனோடு உயர்ந்த பல அணி கலன்களை அணிந்திட்ட மாதவி புறப்பட்டாள் கடலில் நீராடி மகிழ.
மோகன் ஐயா தொடர்கிறார்:
நன்றி ஐயா.
கோவலனும் மாதவியும் கடலாட வேண்டி அவன் கோவேறு கழுதை மேலேறியும், அவள் மூடு வண்டியிலமர்ந்தும்கடற்கரை நோக்கிச்செல்லுகின்றனர்.
" வான வண்கையன் அத்திரி ஏற
மான் அமர் நோக்கியும் வையம்ஏறி"- வான்மழை போல் வழங்கும்கைகளைக்கொண்ட கோவலன்; அத்திரி- கோவேறு கழுதை- அரச வாகனம்- கோவேறு கழுதை மேல் கோவலனும்,மான்போன்ற பார்வை கொண்ட மாதவி வையம் எனும் மூடு வண்டியில் ஏறி,சற்று முன் ஊர்காண பல கூத்துகளை ஆடியவள் இப்போது மூடு வண்டியிலும் பயணம்.
இப்போது என்ன மனநிலையோ( mood)!
அவர்கள் பயணிக்கும் வழியில் உள்ள தெருக்களைப் பார்ப்போம்.
முதலில் பெருஞ்செல்வங்கள் குவிந்து கிடக்கும் பெரும் வணிகர் இல்லங்கள் நிறந்த தெரு- "கோடி பல அடுக்கிய கொழுநிதிக் குப்பை" என்கிறார். குப்பை என்றால் குவியல்." மறு சுழற்சி" செய்ய வேண்டிய குப்பை அன்று; விலை மதிப்பற்ற செல்வக்குவியல்; சோழ வளநாடு அன்றோ!
அடுத்து பீடிகைத்தெரு. இந்தப் பீடிகை பற்றி அறியப் பெரிய பீடிகை( முன்விளக்கம்) தேவையில்லை.
இங்கு பீடங்கள் எனப் பொருள்படும். பீடங்களின் மேல் வியாபாரப் பொருட்களை அழகுற அடுக்கி விற்கும்கடைகள். மலர்கள்அலங்கரிக்கப்பட்ட மணிவிளக்குகளை்ஏந்தி, மங்கல மங்கையர் அறுகம்புல்லும் , நெல்லும் தூவியபடி இருபுறமும் செல்லும்" திருமகள் இருக்கை" கொண்ட " செவ்வனம்" ஆகிய அத்தெரு நீங்கி,
"மகர வாரி வளம்தந்து ஓங்கிய நகர நடுவண்வீதி போகி" னர்-மீன் வருவாய் தந்த செல்வப் பெருக்கில் ஓங்கியிருந்த நகர வீதி நடுவில் சென்றனர்.
அடுத்து," கலம்தரும் திருவின் புலம்பெயர் மாக்கள்" மரக்கலங்கள் கொண்டு சேர்க்கும் மாபெரும் செல்வங்களை உடைய நாடு விட்டு நாடு வந்து வணிகம்செய்யும் வேற்று நாட்டார் குடியிருப்புகளைக் கடந்தனர். இன்றைய புலம் பெயர் மாக்கள் போலன்றி இவர்கள் பெரும் ஏற்றுமதியாளர்
கள்.
அடுத்து,
வெண் மணல் ("வாலுகம்" )பரப்பில் " கூல மறுகில்" ,
(கூலம் என்றால் தானியம்) தானியங்கள் குவிந்து கிடந்த கூலக்கடை வீதி - அங்காடிகள் நிறைந்த வீதியைக்கடந்து, இன்ன இன்ன பொருட்கள் இவை என விளம்பரப் பதாகைகள் கொண்ட " மாலைச்சேரி மருங்கு"- (மாலை என்றால் இங்கு ஒழுங்கு எனப் பொருள்படும்) , ஒழுங்குபடுத்தப்பட்டு,விளம்பரம் செய்யும் மாலைச்சேரியைக் கடந்து நெய்தலங்கானலாகிய கடற்கரையை அடைந்தனர்.
(பயணம் தொடரும்)
No comments:
Post a Comment