••••••••••••••••••••••••••••••••
*{39} சிலம்பொடு ஒரு பயணம்*
*கடல் ஆடு காதை*
*மாதவியும் தோழியரும் களிப்புடன் ஆடுதல்*
••••••••••••••••••••••••••••••
கோவலனோடு கடலாடச் சென்ற மாதவி அங்கு கண்ட காட்சிகளை இளங்கோ அடிகள் விவரிக்கும் அழகு மிகச்சிறப்பு:
"வண்ணமும், சாந்தும், மலரும், சுண்ணமும்,
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்;
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்;
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்;
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்;
நொடை நவில் மகடூஉக் கடை கெழு விளக்கமும்;
இடை இடை, மீன் விலை பகர்வோர் விளக்கமும்;
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை-விளக்கமும்;
விலங்கு வலைப் பரதவர் மீன் திமில் விளக்கமும்;
மொழி பெயர் தேஎத்தோர் ஒழியா விளக்கமும்;"
அதாவது,
அங்கே கூலமறுகில் பண்டங்களைக் கொடிகள் எடுத்து விற்றனர். மாலைச் சேரிகள் சுறுசுறுப்பாக இயங்கின. அங்கே சுண்ணமும், வண்ணமும், சாந்தும், பாகும், பலகார வகைகளும் விற்போர் விளக்குகள் ஒளி விட்டன. அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர். கள் விற்பவரும், மீன் விற்பவரும் விளக்குகள் வைத்து விற்பனை நடத்தினர். இடித்த மாவில் வெண்சிறுகடுகை வைத்தது போலக் கடற்கரை மணலில் இவ்விளக்குகள் ஒளி விட்டுக் கொண்டிருந்தன. தாமரை மலர்கள் பொய்கைகளில் பூத்து விளங்கும் மருத நிலத்தைப் போலத் தாழை மலர்கள் தழைத்து விளங்கிய அக்கடற் கரைக் கானலில் அவர்கள் சேர்ந்து தங்கினர்.
இப்படியாக கடற்கரை பரப்பே,
கலகலவென இருந்ததாம்.
அந்த இடத்தில்தான் அன்புக்குரியர் ஒன்று சேர்ந்து களிப்புடன் பொழுதை கழித்தினராம்:
"எண்ணு வரம்பு அறியா இயைந்து,ஒருங்கு ஈண்டி;
இடிக் கலப்பு அன்ன ஈர் அயிர் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சி-அது ஆகி;
விரை மலர்த் தாமரை வீங்கு நீர்ப் பரப்பில்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல் அம் கானல்-
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி;"
மலைபடு பொருளும், அலைபடு பொருளும் மலையெனக் குவிந்து கிடக்கும் கடல் துறைமுகம் அதுவும் மக்கள் விரும்பித் தங்கும் இடமாக இருந்தது. அத் துறைமுகப் பகுதியில் குளிர் சோலைகளில் அரசிளங் குமரரும், அவர்கள் காதலியரும் தங்கி மகிழ்ந்தனர். அவ்வாறே வணிக இளைஞரும், கணிகை மகளிரும் கலந்து உரையாடத் தனியே திரைகள் இட்டுத் தங்கி மகிழ்ந்தனர்.
இன்றளவும் கூட,
இதயத்தை பரிமாறிக் கொண்டோர்,
இன்பமாய் பொழுதைக் கழிக்க
கடற்கரை நோக்கி
ஏன் செல்கின்றனர்
என புரிகிறதா!
அது இளங்கோ காட்டிய வழியம்மா!
காதலர்க்கு அதுவே சரி அம்மா!!
மோகன் ஐயா தொடர்கிறார்:
ஐயா,
கடற்கரையில் பல வண்ண விளக்குகளின் அணிவகுப்பை மிகவிளக்கமாக விவரித்தீர்.
அந்த விளக்குகளின் ஒளியில் நான்மேலும் பயணிக்கிறேன்.
"நிரை நிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல்தாரமும் கடல்பல்தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை"
அந்தக்கடற்கரையில் எவ்விதக்குற்றமும்இல்லாது, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட மலைபடு பொருட்கள்-சந்தனம்,அகில் மற்றும் கடல்படு பொருள்கள்-முத்து, பவளம்- என்றபடி மலைவளமும் , கடல்வளமும் கலந்து காணப்பட்டன். துறைமுகத்தில் பல்வேறு திசைகளில் வந்த மரக்கலங்களும் இருந்தன.
அருகில் இருந்த சோலையில்
வண்ண வண்ண திரைச்சீலைகளால் சூழப்பட்ட கூடாரங்கள்- "சூழ்தரல் எழுனி"-சுற்றி வரும்படி அமைப்பு உள்ள திரைச்சீலைகள். நாட்டிய அரங்கை விளக்குகையில் அடிகள் இந்த எழுனியோடு, ஒருமுக எழுனி,பொருமுக எழுனி என்ற திரைகளையும் விவரித்தது நினைவிருக்கலாம்.
தொகுதி தொகுதியாக உள்ள இந்த கூடாரங்களில், அரசகுமாரர் ,அவர்தம் உரிமைச்சுற்றம்,நெய்தல்நில பரதவரும் அவர்தம் நண்பர்குழாமும், மற்றும் ஆடல்மகளிரும், பாடல் மகளிரும்இருந்து கூடி மகிழ்ந்தனர்.
"விண்பொரு பெரும் புகழ் கரிகால் வளவன்" புதுப்புனல் விழாவைக் கொண்டாடும் தலைநாளில்,வெவ்வேறு நடையுடை பாவனைகள் கொண்டவர்களும், பலவித மகிழ்ச்சி ஆரவாரங்களை எழுப்புவர்களும் கூடி அந்த விழாக்களத்தில் " வீறு பெறத்தோன்றி" னர்.
காவிரி ஆறு கடலோடு கலக்கும் அந்த முகத்துவாரத்தில் , நான்கு வகை வருணத்தாரின் அடங்காத
ஆரவாரங்கள்- " அடங்காக் கம்பலை"- விடாது ஒலித்துக்கொண்டிருந்தன.
" நடந்தாள் வாழி காவேரி அலைகடலெனும் மணமகன் துணை பெற". அவள் காதலன் கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் நடக்கும் கூடுகை. பேரின்பம் நிலவ ,கேட்பானேன்!
கோலாகலம் , கேளிக்கை என எங்கும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்தான்! கடற்கரை ஒரு சமத்துவ கூடம். இங்கு அரசகுமாரர் பரதவர், கலைஞர்கள் என்று யாவரும் வேறுபாடின்றிக் கூடி மகிழும் காட்சியைக் கண்டோம்.
பயணம் தொடர்கிறது.
No comments:
Post a Comment