Saturday, November 7, 2026

இரவும் பகலும் இடையறா உழைப்பு





 இரவும் பகலும் இடையறா உழைப்பு!

இடுப்பொடி வாழ்வில் இறுகிய பிழைப்பு!


மாடங்கள் உயரினும் மனத்தில் ஏக்கம்,

மாடத்து நிலவிலும் வெக்கையின் துக்கம்!


குளிரறை வாழ்வில் குடில்நினைவு வாடும்,

கூடிய உறவின் குரலினைத் தேடும்!


ஆயிரம் கனவுகள் அகத்தில் தேக்கி,

அன்புறும் உறவை அணைக்கத் துடித்து,


நெஞ்சத்து ஏக்கம் நீங்கிட வேண்டி,

நெரிசலில் நின்று நெடுவூர் தாண்டி,


படிகளில் தொங்கியே பயணம் தொடரும்,

பாசத்தின் வேகம் பாதையைக் குறுக்கும்.


வழிநெடுந் தூரம் வலியெனத் தோன்றா,

விழிவழி ஏக்கம் விழித்துத் தூங்கா!


ஓலைக் குடிலில் ஒளியின் மீதம்!

ஓட்டைப் பாயில் உறக்கம் போதும்!


உற்றார் சூழ உறைந்த இரவு!

உள்ளம் மிஞ்சி நிறைந்த உறவு!


எரியும் இரவும் வெடியால் விடியும்! எண்ணெய்க் குளியல் கண்ணில் எரிச்சல்!


அக்காள் போனாள் அரை மணியாச்சி!

அவளை அழைத்து வெளியே அனுப்பு!


எரிந்த இரவின் மிச்ச சொச்சத்தில் எண்ணெய் குளியல் கண்ணில் எரிச்சல்!


புத்தாடை தானும்  புதுமணம் வீசும்!

பகிர்ந்துண் பலகாரம் பாசம் பேசும்!


பனியகலா வேளை  பலகாரச் சோலை! 

பழங்கதை பேசும் பாசத்தில் மாலை !


பிரிந்தவர் கூடும் பெருவிழா நாளாம்!

பிணைந்த உள்ளங்கள் பேரின்பக் கோலம்!


சுற்றமும் நட்பும் நான்முனை முற்றம்!

சொல்லொடு சிரிப்பும் சூழும் வட்டம்!


கட்டிய அணைப்பில் கவலை கரையும்!

கண்ணீர்த் துளியிலும் களிப்பு அரும்பும்!


மண்ணின் மணமும் மக்களின் குணமும்,

மறவா நெஞ்சின் மாண்புறு வரமே!


ஊருள் வாழ்வது உடலின் இருப்பு,

ஊராரோடு வாழ்வு உயிரின் செழிப்பு!


-திருஞானசம்பந்தம்

==================== 


"குளிரறை வாழ்வில் குடில் நினைவு" 


"படிகளில் தொங்கியே பயணம் தொடரும் 

பாசத்தின் வேகம் பாதையைக் குறுக்கும்"


போன்ற யதார்த்தத்தைக் கூறும் அழகான வரிகள் கொண்ட கவிதை. 

பாராட்டுகள் ஐயா 💐




பிழைப்புக்காக பெரு நகரம் வந்தும் 

   பேரின்பம் பிறந்த ஊரே தரும் 


உழைக்க கிராமத்தில் ஒருவரும் இல்லை 

   ஒவ்வொரு ஊரும் ஆகுதாம் பாலை


மழையும் பொய்க்குது மறுக்கவில்லை 

   மனமும் ஊரதை மறக்கவில்லை 


விழைவது என்று தான் மெய்யாகுமோ?

   "விவசாயம் தலை" என்ற குறளும் பொய்யோ?


__.  குத்தனூர் சேஷுதாஸ் 8/11/2026

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...