உலக சுற்றுச் சூழல் நாளில் (5, ஜூன்)....
கற்கும் கல்வியது செல்வம் சேர்க்க மட்டுமா ?
கடல், மலை, மரம் அவை பாதுகாக்க வேண்டாமா ?
பெற்ற பிள்ளையும் பிரிந்து நம்மை வாழலாம்
பேசா இறையே இயற்கை, நாளும் தொழலாம்
* பெற்றமும் நம் சுற்றமே, பால் பெறுகிறோமே
பெரிய நீர் நிலை தணிக்கும் உறு பசியுமே
விற்று ஆற்று மணலை பாலையாக்கலாமா?
விலங்கு, பறவை உறவே விரட்டியடிக்கலாமா?
வற்றா நதிகளையும் மாசு படுத்தலாமா ?
*வாரிதியில் மீன்கள் மூச்சு திணறலாமா?
குற்றால அருவியும் நம் சிற்றப்பா தானே
குடகுக் காவிரியும் இன்னொரு தாயே
சுற்றுச்சூழல் தினம் ஒரு நாள் போதுமா?
சொர்க்கம் இப் புவியே ஏதும் ஐயமா?
சற்றேனும் இவை எல்லாம் நினைவில் கொள்வோம்
சாரை சாரையாய் வரும் தலைமுறை காப்போம் .
* பெற்றம் -- பசு
* வாரிதி -- கடல்
__. குத்தனூர் சேஷுதாஸ் 5/6/2026
==============================
★◆★◆★◆★◆★◆★◆★◆★
*சுற்றுச்சூழலை சீர்குலைத்தால்*
*சுனாமி தானே வரும்!*
★◆★◆★◆★◆★◆★◆★◆★
நம் வீட்டின் கூரையில்
சின்னஞ்சிறு பறவையின்
ஒரே ஒரு கூடு இருந்தாலும்
அதனையும் கலைத்திடுவான்.
பல்லுயிர் ஓம்புதல் அறியா மனிதன்
கருணையைத் தொலைத்திடுவான்.
பல்லுயிர்களின் வாழ்விடங்களை
வளைத்துப் போட்டு
அடுக்குமாடியும் கட்டுவான் -
ஆசிரமும் கட்டுவான்.
நீர்நிலைகளைச் சீரழித்து
வானுயர்
குடியிருப்புகளை
வரிசையாகக் கட்டிடுவான்.
இயற்கையன்னையின்
சமநிலைக் கோட்பாட்டை அப்பட்டமாய் மீறிடுவான்.
சுனாமியாய், எரிமலையாய், பெரும்புயலாய்
இயற்கைச் சீற்றம் வந்திட்டால்
கருணையில்லையா
என கோவில் சென்று
முறையிடுவான்.
விதைத்தது சுரையென்றால்
அவரையா முளைக்கும்!
முற்பகல் செய்ததுதானே
பிற்பகலில் விளையும்?
பல்லுயிரும் ஓம்பிடுவோம்!
சுற்றுச்சூழலை காத்திடுவோம்!
பூவுலகைப் பேணிடுவோம்!!
*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*
No comments:
Post a Comment