Friday, June 12, 2026

சிலம்பொடு ஒரு பயணம்* (25) *அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை* *மயக்கும் மாலைப் பொழுது*

 ••••••••••••••••••••••••••••••••

*{25} சிலம்பொடு ஒரு பயணம்*


*அந்தி மாலைச் சிறப்புச் செய் காதை*


*மயக்கும் மாலைப் பொழுது*

••••••••••••••••••••••••••••••••


பொன்னந்தி மாலைப்பொழுதின் அருமை பெருமைகளை அற்புதமாக படம் பிடித்த இளங்கோவடிகள்,

அந்த மயக்கும் மாலைப் பொழுதிலே காதல் எனும் இன்பக் கடலிலே மூழ்கி - மதிமயங்கி - மயக்கமுற்று இன்பத்தில் திளைத்திருக்கும் மக்கள் பற்றி எழுதுகிறார்: 


*அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டிப் பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி*


பொன்னந்தி மாலைப் பொழுதான நேரத்தில் வானத்தில் பிறை நிலவாக தோன்றுகின்ற சந்திரன், மாலைப் பொழுது தரும் மையல் துன்பங்களை எல்லாம் துரத்தி, எங்கும் தன் பால் போன்ற வெண்ணிற ஒளியைப் பாய விட்டான். நட்சத்திரங்களின் தலைவனாகிய சந்திரனின் நிலவு ஒளி அந்தி மாலைப் பொழுதோடு புகாரில் புகுந்தது.


இவ்விடத்தில் ஒன்றினை கவனிக்க. இக்காதையின் துவக்கத்தில் சூரியனைக் குறிப்பிடுகையில், *விரிகதிர் ஞாயிறு* என்கிறார் புலவர். 


அதே காதையில் இப்பாடலில் தண்ணொளி  வீசும் சந்திரனைப் பார்த்து *பால் கதிர் பரப்பி* என விவரிக்கிறார். 


உலகத்திற்கே ஒளி தரும் கதிரவன் தன் கதிர்களை விரித்து பூ மகளை ஆரத் தழுவுகிறான். ஆதலால் அது *விரிகதிர்* ஆகிறது. 


வெண்ணிலவோ பால் போன்ற தனது வெண்ணிற ஒளியைப் பரப்பி பூவுலகிற்கு குளிர்ச்சி தருகிறது. அதனால் அது *பால் கதிர்* ஆகிறது. என்ன ஒரு சிந்தனை! என்ன நயமான சொல்லாட்சியுடன் கூடிய வர்ணனை!


இப்படி நிலா ஒளி சிந்தும் வேளையிலே, 


*நிலவுப் பயன் கொள்ளும் நெடு நிலாமுற்றத்துகக்  கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு*


வெண்ணிலவு ஒளி சிந்தி குளிர்வித்த வேளையிலே, தன் அகத்தே (இல்லத்தில்) நிலா முற்றத்தில் மாதவி சிவந்த ஆடையும் ஆடை மேல் பவள வட மேகலையும் அணிந்து அழகுற விளங்கினாள். இளமை எழில் பூத்த மாதவி  கோவலன் உடன் ஊடியும், கூடியும், அன்புடன் தழுவியும் இன்புற்று இருந்திட்டாள்.


புகார் நகரில், பிற மாந்தரோ


*வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தனம் மறுகத் தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க் காமரு குவளைக் கழுநீர் மாமலர்*



வடக்கே இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட வட்ட வடிவக் கல்லிலே, தென் பொதிகை மலையில் விளைந்த சந்தனக் கட்டையை அரைத்து வந்த சந்தனத்தை பூசிக் கொண்டனர். தாமரையின் இளந் துளிர்களையும், மகரந்தம் சிந்தும் பெரிய தாமரைப் பூக்களையும், கண் கவர் குவளைப் பூக்களையும், பெரிய செழுங்கழுநீர் பூக்களையும் இளந்தளிர் இலைகள் சேர்த்துக் கட்டிய படலை மாலையும், பெரிய முத்து மாலையும் அணிந்து கொண்ட மகளிர், 


*ஆவி அம் கொழுநர் அகலத்து ஒடுங்கி காவி அம் கண்ணார் களித்துயில் எய்த*


வண்ண வாசனைப் பொடிகளும், மலர்களும் சிந்திக் கிடக்கும் பஞ்சணை மெத்தையில் - வீசும் மாலைத் தென்றலில் மயங்கி - காதல் வேட்கை மிக, தம் உயிரணைய துணைவர்கள் மார்பில் முகம் புதைத்து, கருங்குவளை மலர் ஒத்த தம் கண்கள் மூடி இன்பத்தில் துயின்றனராம். 


இப்பாடல் வரிகளே இந்நாளில் வந்திட்ட திரைப்பட பாடல் வரிகள் சிலவற்றிற்கு அடித்தளம் இட்டதோ:

 

*மயக்கும் மாலை பொழுதே நீ போ போ..."*   


*இது மாலை நேரத்து மயக்கம்.. பூ மாலை போல் உடல் மணக்கும்*


எனும் வரிகளுக்கு வித்திட்டதோ!


(மயக்கும் மாலைப் பொழுது மழலைக் கவி சொல்லாடலில் தொடர்கிறது):


*திங்களின் வருகை:*

செக்கர் வானில் பால் நிலவு தோன்றுகிறது. இந்த நிலவு பாண்டிய மன்னர்களின் முன்னோடி. இளைய பாண்டிய மன்னர்கள் ("செருமாண் தென்னர்") " கொடிய  பகை அரசு கடியும்" திறன் கொண்டவர். இளைய நிலாவும் கொடிய இருளைத்தன் " பால் கதிர்" வீசிப் போக்குகிறதாம். 

உவக்கத்தக்க உவமை!


இள வயதில் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நினைவூட்டுகிறது.


குல முன்னோடியான  சந்திரன் ஒளியை நிலை நாட்டுவது போலப் பின்னால் குல வழித்தோன்றலான ஆரியப்படை கடந்த நெடுஞ்சேரலாதன் நீதியை நிலை நாட்டத் தன் இன்னுயிரையே ஈந்ததை நாம் காண உள்ளோம்.


மேலும் இந்த நிலவன் (இருபத்தேழு மனைவியரைக் கொண்டவன், ). "மாலைக்குறும்பு எறிந்து" ஓட்ட வல்லவன். அதாவது தலைவன்-தலைவி இடை ஏற்படும் பிரிவுத் துயரைப் போக்க வல்லவன்.


*மாதவியும் கோவலனும்:*

இவர்கள் "பல் பூஞ்சேக்கைப் பள்ளி"யில் கூடி இருந்தனர். படிப்பதும் பள்ளி. படுத்து உறங்குவதும் பள்ளிதான்! சமண முனிவர்கள்  முழைகளில் ( குகைகளில்) படுக்கை போன்ற அமைப்பில்( சமணப் பள்ளிகள் என்பர்) அமர மாணவரும் கூட அமர்ந்து கல்விப்பாடம் நடக்குமாம். அது கல்விப்பள்ளி. இங்கு நாம் காணும் பள்ளி "இல்வளர்"

முல்லை, மல்லிகை மலர்கள் பரப்பப்பட்ட படுக்கை. வீட்டில் , நன்கு உரமிட்டு, நேரத்தே நீர்வார்த்து வளர்க்கப்பட்ட செடிகள் ஈந்த பூக்கள். செழுமைக்கும், மணத்துக்கும் கேட்பானேன்!


மங்கையரில் மணி போன்ற மாதவி அணிகலன்கள் அணிந்து அழகுப்பெட்டமாக காணுற்றதை விவரித்தீர். 


இவள் கோவலனோடு கூடியும், ஊடியும் மகிழ்கிறாள்- "கலவியும் புலவியும் காதலர்க்கு அளித்து". 

எங்கு? "நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றத்" திலே.


*"வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய"* என்று கவியரசர் பாடியது நினைவுக்கு வருகிறது.


இவ்வாறு மாறி மாறி நடந்த நிகழ்வுகளால் கலைந்த ஒப்பனையை மீண்டும் சீர் செய்கிறாள்" கோவலற்கு எதிரிக் கோலம் கொண்ட மாதவி" என்கிறார் அடிகள்.


கூடி இருந்த பிற மகளிர்:

புகார் நகரம் தரை வாணிபம் , கடல் வாணிபம் இரண்டும் நன்கு வளர்ந்த நகரம் அன்றோ! மகளிர்

மேற்கு நாடுகளிலருந்து வந்த " அயிர்" என்னும் வெண்ணிற சர்க்கரைத்தூளோடு கிழக்கிலிருந்து வந்த கருமை நிற அகிலோடு , கூட்டிப் புகைப்பதை விடுத்தனர். இது சூட்டை உண்டாக்கும். எனவே குளிர் காலத்தில் மட்டுமே பயனபடுத்துவர். வடக்கிலிருந்து வந்த  ஒளிமிகு சந்தனகல்லில் பொதியமலை சந்தனத்தை அரைத்துப் பூசிக்கொண்டனாராம் , இளவேனில் காலம் என்பதால்.


இயற்கையோடு ஒட்டிய  வாசனைப் பொருட்கள்!-சருமத்துக்கு ஊறு விளைக்காது; சுற்றுச்சூழலையும் மாசுபடுத்தாது.

நல்ல இளவேனில் காலத்தில் அவர்கள் அணிந்த படலை மாலை மற்றும் பெரிய("பரிய")

முத்தாரம் பற்றியும், வண்ணப்பொடிகளும், நறுமண மலர்களும் பரப்பிய பஞ்சணைகள் பற்றியும் எடுத்துக்கூறினீர்கள்.

இதமான தென்றல்( " மந்த மாருதம்")

இவர்களை வருடுகிறது. 


"ஆவியங் கொழுந"ர்கள் மார்பில் பொருந்திய இவர்களின் கண்கள்  நீலோத்பல மலர்களை ("காவி அம் கண்ணார்") ஒத்தனவாம்.


சந்தனக்கலவை, நறுமணப் பொடிகள், நன்கு பயிரிடப்பட்ட வாச மலர்கள் என்று இந்த மாலை- அந்திமாலை, மயக்கும் மாலையா அல்லது மணக்கும் மாலையா என்று வியக்க வைக்கிறது.



*பயணம் தொடரும்*

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...