Sunday, June 14, 2026

கர்ணன் ஆவோம்!

 கர்ணன் ஆவோம்!


உருவம் தாம் மனிதரில் எத்தனை வகை !

   உள்ளே ஒரே செந்நீர் வைத்த இயற்கை !


விருந்தாம் புவியின் மிசை நாம் வந்தது 

   விட்டுப் போவதெப்போ? தெரியாது அது


அருந்தும் நீர்ச் சுனையாய் நம் உள்ளும் 

   அன்றாடம் இரத்தம் அது சுரந்து ஓடும் 


வருந்தும் உயிர்களுக்கு வழங்கத் தானே 

   வாய்ப்பாம் குருதி ஈந்து ஆவோம் கர்ணனே


எரிந்து சாம்பலாக ஏனது போக வேண்டும்?

   எவரேனும் பெறட்டும், நன்றி சொல்லட்டும் 


சருகாய் ஒரு நாள் சரியுமாம் இம் மேனி

   சட்டென உறவுகள் வழியனுப்பும் "போ நீ!"


இருக்கும் போதே இயன்ற வரை தரலாம் 

   இதனால் வங்கியில் ஏதும் குறையாதாம்


கொசுறு :


மருந்து, மாத்திரை ஒரு புறம் இருக்கட்டும்

   மாங்கனிகள் சீராக்கும் குருதியோட்டம்


" குருதிக் கொடை" செய்வோம் 


__. குத்தனூர் சேஷுதாஸ் 14/6/2026



==================

உயிரெழும்பின் புறமுளைத்த இருதனல்கள்!

உதிரம் காக்கும் உயிரின் நிழல்கள்!


சதுரங்க உடலெனும் சாக்கடைக்குள்  தினம்-

சலிப்பின்றி செய்யும்  தூய்மைப் பணிகள்!


சிறுநீரக தேன்கூட்டின் நுண்குழலாம் நெஃப்ரான்கள்!

கோடிக் கண்கொண்டு குருதியை வடிகட்டும் தேனீக்கள்!


ரெனின் எனும் அமுதம் சுரக்குமது-

குருதியின் அழுத்தம் சீர் காக்கும்!


எரித்ரோபொய்டின் எனும் நீர் சுரக்கும்!

எலும்பு மஜ்ஜையை  தூண்டி சிவப்பணு சேர்க்கும்!

 


நீரின் அளவை  சீராய் நிறுத்தும்,

நித்தம் உயிரை உச்சி முகரும்!


மதியிழந்து உப்பைக் கூட்டினால்  இந்த

மதிப்புறு உறுப்பும் செயல் இழக்கும்!


விதியென்று நொந்து வலிமாத்திரை தின்றால் - அது

வேரோடு வாழ்வை அறுத்தெறியும்!


அமிர்தமாம் நீரை அள்ளிப் பருகுங்கள்!

அரிதாம் சிறுநீரகம் காத்துப் வாழுங்கள்!


இணையற்ற உறுப்பிது பழுதடையும் நேரம்-

இதயங்கள் சுருங்கி இருள்மடி சேரும்!


உயிரோடு வாழவொரு சிறுநீரகம் போதும்! 

உறவொன்றின் ஆயுளை மற்றொன்று உயிர்க்கும்!


கொடுப்பதே மனிதத்தின் உச்சக்கட்ட அறம் !

கொடையினால் மீளுமொரு சீவனின் தவம்!


சிறுநீரகத் தானத்தின் விழிப்புணர்வு ஏற்றிடுவோம்!

சுகமான வாழ்வை பிறருக்கும் ஈந்திடுவோம்!

- திருஞானசம்பந்தம்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...