Thursday, June 18, 2026

பயணங்கள் முடிவதில்லை…பயணக் கட்டுரை(20)

 பாகம் 20

பயணங்கள் முடிவதில்லை…


சான் பிரான்சிஸ்கோ மலைகள், பனிமூட்டம், வரலாறு மற்றும் தொழில்நுட்பம் சந்திக்கும் அற்புத நகரம்.*

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோவை நேரில் கண்டபோது, புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் பார்த்ததைவிட முற்றிலும் வேறொரு உயிருள்ள அருங்காட்சியகமாகத் தெரிந்தது.


1848-ல் தங்க வேட்டைக்குப் பின் ஆயிரக்கணக்கானோர் வந்து சிறிய குடியேற்றத்தை பரபரப்பான நகரமாக மாற்றினர். 1906-ல் பெரும் நிலநடுக்கமும் தீயும் அழித்தபோதும், சாம்பலிலிருந்து மீண்டெழுந்து பழமையையும் புதுமையையும் சமநிலையில் பாதுகாத்து நிற்கிறது.


சென்னை போன்ற சமதள நகரங்களில் பழகிய நமக்கு மலைமேடுகளில் கட்டப்பட்ட இந்நகரம் புதிய அனுபவம். செங்குத்தான தெருக்கள், திடீர் இறக்கங்கள் வியப்பூட்டின.

கடந்த 40 நாட்களாக அமெரிக்காவைச் சுற்றிப் பார்த்த எனக்கு, இந்திய வாகன ஓட்டுநர்களே மிகத் திறமையானவர்கள் என்று கர்வம் இருந்தது. ஆனால் சான் பிரான்சிஸ்கோவின் மலைச்சரிவு சாலைகளில் வாகனம் ஓட்டுவதைப் பார்த்த பிறகு, அவர்களின் திறமையை உணர்ந்தேன். பேருந்துகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்காக சிவப்பு நிறப் பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுப் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் துல்லியமான நேரத்தில் பேருந்துகள் பயணிகளைச் சென்றடைகிறது.


பேருந்துகளுக்கான தனிப்பாதை, நடைபயணிகளுக்கான பாதுகாப்பான நடைபாதை, மிதிவண்டிகளுக்கான வசதிகள் என ஒவ்வொரு பயணிக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோவின் சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொரு நொடியும், நகர வளர்ச்சி என்பது உயரமான கட்டிடங்களால் மட்டுமல்ல, மக்களின் வசதியையும் சுற்றுச்சூழலையும் சமமாக மதிக்கும் திட்டமிடலால் உருவாகிறது என்பதை உணர்த்தியது.

இந்தியாவில் வாகனத்தை parking செய்யும்போது சக்கரங்கள் நேராக இருக்கும் வகையில் நிறுத்துபவர்களையே நல்ல ஓட்டுநர்கள் என்று நாம் கருதுகிறோம். ஆனால் இங்கு சரிவான தெருக்களில் சக்கரங்களை நடைபாதை நோக்கி அல்லது எதிர்திசையில் திருப்பி நிறுத்துவதே சிறந்த பாதுகாப்பு முறை. பிரேக் செயலிழந்தாலும் வண்டி உருண்டு செல்லாமல் இருக்க இது கட்டாயம்.


மலைச்சரிவுகளில் கட்டப்பட்ட பல வீடுகளுக்கு நீண்ட படிக்கட்டுகள் ஏற வேண்டியிருக்கிறது. இந்தப் படிக்கட்டுகள் பழங்கால நம் நாட்டு கிராமங்களில் இருந்த படிக்கட்டுகளை நினைவூட்டின. கார்த்திகை தீபம் அன்று இந்தப் படிக்கட்டுகளில் அகல் விளக்குகள் ஏற்றினால் எத்தனை அழகாக இருக்கும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை. சிறிய இடங்களிலும் மலர்ச்செடிகள், பூந்தொட்டிகள் நிறைந்திருக்கிறது.

பழைய கட்டிடங்களின் வெளிப்புறம் இரும்புப் படிக்கட்டுகள் உள்ளன. கட்டிடங்கள் இன்றைய தீ பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே உருவாக்கப்பட்டவை. எனவே கட்டிடத்தின் உள்ளகப் படிக்கட்டுகளை தீ மறித்துவிட்டால், ஜன்னல் வழியாக வெளியே வந்து இந்த இரும்புப் படிக்கட்டுகள் மூலம் தரைத்தளத்தை அடையும்படி அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தளத்திலும் சிறிய பால்கனிகளைப் போன்ற மேடைகள், அவற்றை இணைக்கும் இரும்புப் படிக்கட்டுகள், கீழ்தளத்தில் தேவைப்படும் போது மட்டுமே இறக்கக்கூடிய மடக்குப் படிகள் ஆகியவை அவற்றின் சிறப்பம்சங்களாகும். வண்ணமயமான விக்டோரியன் வீடுகளும், நவீன கண்ணாடிக் கட்டிடங்களும் இணைந்த காட்சி இந்நகரின் தனித்துவம்.


காலை வெயிலும், சில மணி நேரத்தில் பனிமூட்டமும் இங்கு சாதாரணம். பல இனம், மொழி, கலாசாரங்கள் இணைந்து வாழ்வது, நடைபயணிகளுக்கு முன்னுரிமை, ஒழுங்கு முறை ஆகியவை இங்குள்ள வாழ்க்கை முறையின் அடையாளங்கள்.

தொழில்நுட்பத் தலைநகரம்

அருகில் உள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு (ஆப்பிள், கூகுள், மெட்டா, என்விடியா உள்ளிட்ட நிறுவனங்களின் தாயகம்) இந்நகரின் உலகளாவிய புகழுக்கு முக்கியக் காரணம். தங்க வேட்டை காலத்தில் செல்வத்தைத் தேடி வந்த மக்கள், இன்று அறிவு மற்றும் தொழில்நுட்பத்தைத் தேடி உலகெங்கிலும் இருந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...