Saturday, June 20, 2026

சிலம்பொடு ஒரு பயணம்(26) *அந்தி மாலைச் சிறப்புச் செய்த காதை* *தனிமைத் துயரில் உழலும் கண்ணகி*

 மதியை மயக்கி மோகத்தில் ஆழ்த்தும் மாலை நேர மயக்கத்தில் மாதவியும் கோவலனும் மகிழ்ந்திருக்க 


தத்தம் மணவாளர்களுடன்

மனதிற்கு இசையந்த தலைவர்களுடன் இளம் பெண்கள் களிப்பில் திளைத்திருக்க 


அதே புகாரில் வேறொரு இடத்தில் கண்ணகியின் நிலை என்ன? பார்க்கலாம் வாருங்கள்.. 


*சீறடி அணிசிலம்பு ஒழிய*


*மேகலை நீங்க*


*குங்குமம் எழுதாள்*


*மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்*


*கொடுங்குழை துறந்து*


*நெடுங்கண் அஞ்சனம் மறப்ப*


*வாள்நுதல் திலகம் இழப்ப*


*தவள வாள்நகை கோவலன் இழப்ப*


*கூந்தல் நெய்அணி மறப்ப*


*கையறு நெஞ்சத்துக் கண்ணகி*


 கோவலனைப் பிரிந்த கண்ணகி துயரிலும் காட்சி அடிகளின் வரிகளில் இதோ:


கண்ணகி தன் கால்களில் சிலம்பு அணிவதை மறந்து விட்டாள். 


மேகலை அணிவதை துறந்து விட்டாள். 


குங்குமம் எழுதிக் கொள்ளாமல் இருந்து விட்டாள்.


மங்கல அணிகலனாம் தாலி ஒன்றைத் தவிர வேறு அணிகலன் எதையும் அணிவதை மறுத்து விட்டாள்.


காதில் குழை (காதணி) இல்லாமல்  வெறும் துளை மட்டும் இருந்தது. 


கண்களில் மை (அஞ்சனம்) தீட்டப் படவில்லை. 


பவள நிற நெற்றியில் பொட்டு (திலகம்) இட்டுக் கொள்ளவில்லை. 


இவளது முத்துப் போன்ற சிரிப்பைக் கோவலன் இழந்துவிட்டான். (அதாவது, இவள் முகத்தில் புன்னகை இல்லை) 


தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு விட்டாள். 


செய்வதறியாத நெஞ்சத்துடன், கையறு நிலையில் இருந்த கண்ணகி கலக்கத்துடன் மிகவும் துயருற்று இருந்தாள்.


அப்போது தங்கள் தலைவனை சேராத பிற மகளிர் நிலை பற்றி சிலம்பு என்ன சொல்கிறது பார்க்கலாமா: 


*காதலர்ப் பிரிந்த மாதர் நோதக  ஊதுஉலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி*


தங்கள் தலைவர்களைப் பிரிந்த பெண்கள் நெருப்பு உலகில் காற்றூதும் துரத்தியின் நுனியில் இருப்பும் நெருப்புச் சுடர் போல மனம் வெறுத்து - பெருமூச்சு விட்டு - துயரத்தில் உழன்றனர். 


*கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து*


*விலங்கிநிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப,*


அவர்கள் துயரத்தில் இருந்த நிலை கண்ட அவர்தான் தலைவர்கள், கலங்காத உள்ளம் பெற்றிருந்தவர்களாக இருந்தாலும் மிகவும் கலங்கிப் போகும் அளவு


கடைக்கண் சிவந்து, துடிதுடித்து, நிமிர்ந்து புலம்பும் கண்ணீர் முத்துக்களுடன் காணப்படுவர். 


*மாலை பொழுதின் மயக்கத்திலே* எனும் திரைப்படப் பாடலின் இந்த வரிகளுக்கு மூலம் இளங்கோவடிகள் எழுதிய இந்த வரிகளாக இருக்கலாம்: 


*மங்கையி்ன் கையில் குங்குமம் தந்தார் - மாலையிட்டார் தோழி.*

*வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்து விட்டேன் தோழி* - 

*அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி*


என் ஊகம் சரிதானே!


இப்போது மழலை கவி மோகன் ஐயா: 


ஐயா, 

அந்தி மாலையில் மட்டும் பிரிவுத்துயர் வாட்டுவதேன்?

பிரிவுத்துயர் காவிய நாயகி கண்ணகியை மட்டும்அல்ல , தம் தலைவனைப் பிரிந்த  தலைவியர் யாவரையும் வாட்டுகிறது என இரு பகுதிகளாக, காணலாம், என் பார்வையில். 


தலைவியரைப் பொறுத்த வரை பிரிவு என்பது கையறு நிலையில் வைத்து விடும்.

"உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறுநிலையும்" என்பது, தொல்காப்பியம்.

தலைவனை இழந்தபோது மனைவியோ அல்லது சுற்றத்தாரோ வருந்துவதையும் குறிக்கும்.

பிரிவுத்துயர்தான் கையறுநிலை எனக்கொள்ளலாம்.


நம்பிக்"கை" யும் கை விட்ட மாதிரித் தோன்றும்நிலை.


கண்ணகியின் நிலைமை:

பிரிவுத்துயர் காரணமாக , கண்ணகி  என்ன என்ன அணிகலன்களை, அழகுச் சாதனங்களை விட்டு விட்டாள் என அடிகள் விவரிக்கிறார். ஏற்கெனவே துன்ப சூழலில் உள்ளோம். எனவே மங்கல மங்கை கண்ணகி  தலைவனோடு கூடிய காலத்தில் எப்படி  தன்னை அலங்கரித்துக் கொண்டாள் என்று உதறித் தள்ளிய ஒப்பனைகளிலிருந்து, கண்டு, சிறிது ஆறுதல் அடைவோம்.


கால்களில் சிலம்புகள், இடையில் மேகலை, மார்பினில் குங்குமக்குழம்புப்பூச்சு, காதுகளில் குண்டலங்கள், கூட்டு மகிழ்வின் விளைவான  நெற்றியில் குறு வியர்வை,மை இட்ட கயல்விழிகள்,மணக்கும் நெய் அணிந்த கூந்தல் என்று" புகழ் உடை வடிவு"(மங்கல வாழ்த்து வர்ணனை)  உடையவளாகத்

திகழ்ந்தவள்இன்று " கையறு நிலை" யில்.  பின்பு நீதிக்கே வழி வகுக்கும் சிலம்பையே இப்போதைக்கு , கால் விட்டாள், கையறு நிலையில்.

அச்சோ! அச்சோ!

"தவள வாள்நகை கோவலன் இழப்ப" என்கிறார் அடிகள். கண்ணகியின் ஒளிநகையை( சிரிப்பை), கோவலன் இழந்தான் என்று கொள்ளலாம்.நாம் கண்ணகி எவ்வாறு பல மங்கல விடயங்களைக் கோவலனுக்காக இழந்தாளென்று கண்டோம்.அவனோ அவளின் முத்து நகையை இழந்தான். 


காதலரைப் பிரிந்த மாதர்:

இவர்கள் ஊது உலைத்துருத்தி (தோல்பை)  போல், தொடர்ச்சியாக ஆழமாகவும், வெப்பமாகவும் பெருமூச்சு விட்டனராம்- 

"ஊது உலைக் குருகின் உயிர்த்தனர்" .

அடிகள் கொல்லர் ஊது உலையை ஒப்பிட்டார். ஆம்  சோழப் பேரரசில்எப்போதும் வாள், வேல் 

போன்ற படைக்கலங்கள், படைக்கப்பட,

ஊது உலைகள் எப்போதும் ஊதப்பட்டே, இருக்குமன்றோ! அதனால் அந்த உவமையோ!


இவர்கள்  இப்போது ,இளவேனில் காலம்எனினும்

குளிர் காலத்தில் தங்கும் இடைப்பள்ளியில், சாளரங்களை அடைத்து , தங்கினர்-"கூதிர்ப் பள்ளி குறுங்கண்அடைத்து" ஏனெனில் இள வேனில் தென்றல் இவர்களைத் துன்புறுத்தாமலிருக்க வேண்டி, அடைக்கப்பட்ட அறையின் வெப்பத்தையும் தாங்கினர்.

அவர்கள் சந்தனப்பூச்சு, மணிமுத்தாரம் அணியவில்லை. குவளை, செங்கழுநீர் மலர்கள் தூவிய மஞ்சமோ அன்னப்பறவைகளின் சிறகுகள் பரப்பிய படுக்கையோ  " திருந்து துயில்"( ஆழ்ந்த உறக்கம்) தர இயலவில்லை. இத்தனைக்கும் இந்த " அன்னத்தூவிகள்"( அன்ன சிறகுகள்), தலைவன்அன்னமும், தலைவி அன்னமும் கூடியபோது உதிர்ந்த இறகுகளாம்!மென்மையோ மென்மை!


"பாலும் கசந்ததடி - சகியே

படுக்கை நொந்ததடீ

கோலக் கிளிமொழியும் - செவியில்

குத்தல் எடுத்ததடீ"

என்ற பாரதியின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.


"இடைக்குமிழ்  எறிந்து கடைக்குழை ஓட்டி"- மூக்கு சிந்தி , காதுக்குண்டலங்களை அகற்றி- தலைவனோடு கூடிய காலங்களை நினைத்து, கண்ணீர்முத்துக்களை உதிர்த்த வண்ணம் இருந்தனர்.


இத்தனை அவலச்சுவைகளுக்கு நடுவே அக்கால வாழ்க்கை முறையையும் அறிய வைத்த அடிகளின் அடிகள், சிறப்போ சிறப்பு.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...