பாகம் 19
பயணங்கள் முடிவதில்லை…
*ஜப்பானிய தேநீர் தோட்டம் அமைதிக்குள் ஒலிக்கும் வரலாறு*
Golden Gate Park-இன் பசுமை வளாகத்திற்குள் அமைந்துள்ளது Japanese Tea Garden. நான் ஒரு அழகான தோட்டத்தைப் பார்க்கப் போகிறேன் என்றே நினத்திருந்தேன். ஆனால் அங்கிருந்து வெளியே வந்தபோது, ஒரு தோட்டத்தை மட்டுமல்ல, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றையும், ஒரு மனிதனின் கனவையும், ஒரு சமூகத்தின் வேதனையையும், இயற்கையின் பொறுமையையும் பார்த்துவிட்டு வருகிறேன் என்ற உணர்வுடன் திரும்பினேன்.
1894-ஆம் ஆண்டு நடைபெற்ற California Midwinter Exposition என்ற உலகக் கண்காட்சிக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறிய ஜப்பானியக் கிராமத்தின் எஞ்சிய பகுதியே இன்று புகழ்பெற்ற Japanese Tea Garden ஆக விளங்குகிறது. கண்காட்சி முடிந்தவுடன் அகற்றப்பட வேண்டியிருந்த இடம், Makoto Hagiwara என்ற ஜப்பானியரின் அர்ப்பணிப்பால் நிரந்தர வாழ்வு பெற்றுள்ளது.
தோட்டத்தின் நுழைவாயிலைக் கடந்தவுடன் நகரத்தின் இரைச்சல் மறைந்து, குளங்களில் மெதுவாக நீந்தும் வண்ணமயமான கோய் மீன்கள், நிழல் பரப்பிய மரங்கள், கவனமாக வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள், கல் விளக்குகள், சிறிய நீர்வீழ்ச்சிகள் என அனைத்தும் இணைந்து அமைதியியான ஓர் இசையை உருவாக்கியிருந்தன. அங்கே யாரும் உரக்கப் பேசவில்லை. பேசினாலும் தன்னிச்சையாக குரலைத் தாழ்த்திக் கொண்டனர். அந்த இடத்தின் அமைதியே அதற்கு காரணமாக இருந்தது.
தோட்டத்தின் புகழ்பெற்ற Drum Bridge-ஐ நோக்கி நடந்தோம். கடுமையாக வளைந்த அந்த மரப்பாலம் முதலில் ஒரு கலைப்பொருள் போலத் தோன்றியது. பின்னர் அதன் பின்னணியை அறிந்தபோது! ஜப்பானிய மரபில் இந்தப் பாலம் வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வுகளைக் குறிக்கிறது. கீழிருந்து பார்க்கும்போது அது ஒரு முழு வட்டத்தின் பாதி போலத் தோன்றுவதால் அதற்கு Drum Bridge என்ற பெயர் ஏற்பட்டது.
குளங்களில் நீந்தும் கோய் மீன்கள் வெறும் அலங்கார மீன்கள் அல்ல. அவை பொறுமை, உறுதி, நீண்ட ஆயுள் ஆகியவற்றின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. அதுபோல பாதைகளின் ஓரங்களில் காணப்படும் கல் விளக்குகள் ஒளி, ஞானம் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதலின் குறியீடுகளாகப் பார்க்கப்படுகின்றன.
எங்களுடன் வந்த அதிகாரப்பூர்வ வழிகாட்டியான Patty (ஆம் அவரது அடையாள அட்டையில் அப்படித்தான் உள்ளது) பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தார். அவற்றில் ஒன்று, கொரோனா காலத்தில் தோட்டம் முழுவதும் மூடப்பட்டிருந்த நாட்களில், அங்குள்ள மணிகள் தானாக ஒலித்ததாக தோட்டப் பணியாளர் கூறியது தான். அதை அவர் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அந்த அமைதியான சூழலில் நின்றபோது, வெறிச்சோடிய தோட்டத்தின் நடுவே காற்றில் ஒலிக்கும் மணிச் சத்தத்தை மனக்கண்களில் கற்பனை செய்ய முடிந்தது. உண்மையா, கற்பனையா என்பதைவிட அந்தக் கதை அந்த இடத்தின் மர்மத்தை அதிகரித்தது. மேலும் அதனால் தான் நாமும் கொரோனா காலத்தில் மணி அடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டோமா என்ற கேள்வியும் எழுந்தது.
தோட்டத்தின் மற்றொரு முக்கிய அடையாளம் Pagoda. முதலில் அதை ஒரு அலங்காரக் கட்டிடம் என்று தான் நினைக்கத் தோன்றியது, பின்னர்தான் அதன் முக்கியத்துவத்தை அறிந்த்தோம். பல அடுக்குகளுடன் உயர்ந்து நிற்கும் அந்தக் கோபுரம், புத்த மத மரபின் அடையாளமாகும். நாம் கோபுரத்தைப் பார்த்தால் கோவிலை நினைப்பது போல, ஜப்பானியர்கள் Pagoda-வைப் பார்த்தால் தங்கள் ஆன்மீக பாரம்பரியத்தை நினைப்பார்கள். சுவாரஸ்யம் என்னவெனில் “Pagoda” என்பது ஜப்பானியச் சொல் அல்ல, ஆசியக் கோபுரங்களை விவரிக்க ஐரோப்பியர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பெயராகும்.
இந்தத் தோட்டத்தின் இதயமும் ஆன்மாவும் Makoto Hagiwara தான். அவர் ஒரு தோட்டக்காரர் மட்டுமல்ல, ஒரு கனவாளர். தனது சொந்தப் பணத்தையும் செலவிட்டு ஜப்பானிலிருந்து அரிய தாவரங்கள், கல் விளக்குகள், கலைப்பொருட்கள், அலங்காரக் கூறுகள் ஆகியவற்றைக் கொண்டு வந்து இந்த இடத்தை மாற்றியமைத்தார். ஆனால் வரலாறு அவரிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் இனவெறி காரணமாக அவரை நிர்வாகத்திலிருந்து நீக்கினர். அவருடைய பங்களிப்பு மறக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு தோட்டத்தின் தரம் குறைந்ததால். நிர்வாகம் தவறை உணர்ந்து மீண்டும் ஹகிவாராவை வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் திரும்பி வந்தார். தோட்டத்திற்குள்ளேயே தனது குடும்பத்துடன் வாழ்ந்தார். இன்று பார்வையாளர்களை மயக்கும் தோட்டத்தின் பெரும்பாலான அழகு அவரது இரண்டாவது வருகைக்குப் பிறகு உருவானது. திறமைக்கும் அர்ப்பணிப்பிற்கும் மாற்று இல்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபிக்கிறது.
தோட்டத்தின் மற்றொரு சுவாரஸ்யமான வரலாறு Fortune Cookie. இன்று உலகம் முழுவதும் சீன உணவகங்களுடன் தொடர்புபடுத்தப்படும் Fortune Cookie, உண்மையில் இந்த Japanese Tea Garden-இல்தான் முதன்முதலில் பிரபலமடைந்ததாக பலர் கருதுகின்றனர். ஒரு சிறிய தேநீர் தோட்டம் உலக உணவுக் கலாச்சாரத்திலும் தனது தடத்தைப் பதித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.
தோட்டத்தில் மேலும் ஒரு தகவல் என்னை நெகிழச் செய்தது. அங்கு வளர்க்கப்படும் சில Ginkgo மரங்கள், ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்த மரங்களின் சந்ததிகளாம். மனித வரலாற்றின் மிகப் பெரிய அழிவுகளில் ஒன்றைத் தாண்டி உயிர் வாழ்ந்த மரங்களின் வாரிசுகள் இன்று அமைதியாக அங்கே வளர்கின்றன. *மனிதர்கள் போர்களை உருவாக்குகிறார்கள், மரங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றன* என்ற உண்மை மனதில் தோன்றியது.
இந்தத் தோட்டத்தின் வரலாற்றில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் அத்தியாயம் இரண்டாம் உலகப்போரின் காலத்தில் எழுதப்பட்டது. Pearl Harbor தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஜப்பானியர்களுக்கு எதிரான மனநிலை அதிகரித்தது. பல ஆண்டுகள் பெருமையுடன் அழைக்கப்பட்ட *Japanese Tea Garden* என்ற பெயரே மாற்றப்பட்டது. *Japanese* என்ற வார்த்தை நீக்கப்பட்டு, *Oriental Tea Garden* என்ற பெயர் சூட்டப்பட்டது. அது வெறும் பெயர் மாற்றம் அல்ல, ஒரு கலாச்சார அடையாளத்தை மறைக்க முயன்ற ஒரு காலத்தின் பிரதிபலிப்பு.
அதே காலத்தில், இந்தத் தோட்டத்திற்காக வாழ்க்கையை *அர்ப்பணித்த ஹகிவாரா குடும்பமும் வெளியேற்றப்பட்டது.* அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் உருவாக்கிய நினைவுகள், அவர்கள் பராமரித்த தோட்டம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன. அவர்களால் மீண்டும் தங்கள் பழைய வாழ்க்கைக்கு திரும்ப முடியவில்லை.
காலம் மாறியது. போர் முடிந்தது. சமூகத்தின் மனநிலையும் மாறியது. ஒருகாலத்தில் மறைக்கப்பட்ட *Japanese* என்ற பெயர் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டது. *Oriental Tea Garden* என்ற பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் *Japanese Tea Garden* என்ற வரலாற்றுப் பெயர் வழங்கப்பட்டது. *ஹகிவாராவின் பங்களிப்பு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.* தோட்டத்தின் முன்புறச் சாலைக்கு *Hagiwara Tea Garden Drive என்று பெயரிடப்பட்டது.* வெளியேற்றப்பட்ட குடும்பம் திரும்பவில்லை, ஆனால் அவர்கள் உருவாக்கிய கனவு திரும்பி வந்தது.
தோட்டத்தை விட்டு வெளியேறியபோது, பயணத்தின் மற்றொரு காட்சி நினைவுக்கு வந்தது. கடற்கரையை ஒட்டிய சாலையில் நான் கண்டிருந்த *Tsunami Evacuation Route* என்ற பலகை. *ஒருபுறம் அமைதியைக் கற்றுத்தரும் ஜப்பானியத் தோட்டம், மறுபுறம் இயற்கையின் சக்தியை நினைவூட்டும் சுனாமி எச்சரிக்கை.* வாழ்க்கையும் அப்படித்தானோ? அழகும் அபாயமும், அமைதியும் அச்சமும், நினைவுகளும் நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று இணைந்தே இருக்கின்றன.
காற்றில் அசையும் ஒவ்வொரு இலைக்கும், குளத்தில் நீந்தும் ஒவ்வொரு கோய் மீனுக்கும், வளைந்த பாலத்தின் ஒவ்வொரு மரத்தட்டைக்கும் பின்னால் ஒரு வரலாறு மறைந்திருக்கிறது. அந்த வரலாறுதான் இந்தத் தோட்டத்தின் உண்மையான அழகு.
அது ஒரு தோட்டம் அல்ல. ஒரு உயிருள்ள வரலாற்றுப் புத்தகம்.
No comments:
Post a Comment