••••••••••••••••••••••••••••••••••••
மன அழுத்தம் குறைப்போம்
மகிழ்வுடன் வாழ்வோம்
••••••••••••••••••••••••••••••••••••
அடிப்படைத் தேவைகள் அவனியில் மூன்றாம்
உயிரினைக் காக்க உணவு வேண்டும்
மானம் காத்திட உடையும் வேண்டும்
பாதுகாப்புக்கு உறையுள் வேண்டும்
உலகில் இவற்றைப் பெற்றிடவே
உழைப்பு ஒன்றே வழியாகும்
உழைக்கும் இடத்தில் அழுத்தம் உண்டு
டார்கெட் என்ற பெயரில் அழுத்தம்
பணிச்சுமை மூலம் வந்திடும் அழுத்தம்
வீடும் காரும் வாங்கிடும் அழுத்தம்
வாழ்நாள் முழுதும் E.M.I. அழுத்தம்
காலையும் மாலையும் கணினியே துணையாம்
குடும்பம் முழுதும் கைபேசியே இணையாம்
மனைவியுடன் பேச நேரம் இல்லை
மழலையைக் கொஞ்ச காலம் இல்லை
முப்பது வயதில் சுகரும் பிரஷரும்
நாற்பது வயதில் இதய நோயும்
அழையாமல் வந்து அவனைச் சேரும்
இதற்குக் காரணம் மனதில் அழுத்தம்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே
நலமுடன் வாழ்ந்து மகிழ்ந்திடவே
கவலைக் குவியலை மனதினில் ஏற்றி
டென்ஷன் ஆகி வாழ்வினைத் தொலைத்து
இன்னலுறுதல் வாழ்க்கை இல்லை.
அழுத்தம் குறைக்க அமைதியாய் வாழ
அருமை வழிகள் பற்பல உண்டு
மனதை வருடும் இன்னிசை கேட்டல்
நல்ல நூலினை நலமாய் படித்தல்
ஓய்வறியாது உழைத்து ஓயாமல்
குடும்பத்தோடு பொழுதைப் போக்குதல்
இன்பச் சுற்றுலா தவறாது போதல்
இயற்கையோடு நேரம் கழித்தல்
இவையெல்லாம் இந்த வழிகளாகும்!
காலணி அணியா கால்களோடு
வலப்புறத்தில்
கடலின் அலைகள் 'ஹோஹோ'வென
ஆர்ப்பரிக்க
இடப்புறத்தில் தென்னங்கீற்று
'சட சட'வென
சலசலக்க
இல்லாள் குழந்தை கைகள் பிடித்து
கடற்கரை மணலில் பாதம் பதிய
உற்சாகத்துடன்
காலாற நடந்தால்
மன அழுத்தம்
மறைந்தே போகும்!
மனதில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்!
அழுத்தம் தன்னை குறைப்போம் காணீர்
அவனியில் மகிழ்வாய் வாழ்வோம் வாரீர்!
*உங்கள் தோழன் ஸ்ரீவி*
No comments:
Post a Comment