•••••••••••••••••••••••••••••••
*{18} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்றக் காதை*
*தண்ணுமை, யாழிசை, குழலிசை விவரணங்கள்*
•••••••••••••••••••••••••••••••
மாதவியின் ஆசான் பற்றி
மகிழ்வுடன் தொடர்கிறார்
இளவரசு பட்டம் துறந்து
குணவாயிற் கோட்டம் ஏகிய
இளங்கோ அடிகள்.
*ஆடல் பாடல் இசையே தமிழே பண்ணே பாணி தூக்கே முடமே....*
*....யாழும் குழலும் ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமை...*
*... அத்தகு தண்ணுமை அரும் தொழில் முதல்வனும்*
அதாவது ஆட்டம் பாட்டு இன்னிசை தமிழ் பெண் தாளம் சுரவரிசை குறை நிறை பன்னடைவு திசை சொல் வழக்கு எனும் அனைத்திலும் தெளிந்த ஞானம் இருந்தவன்
நடனத்திற்கான தாளக்கட்டுடன் யாழும் குழலும் ஒத்து ஒருங்கிணைந்து இசைக்க கற்றவன்
மத்தள வாசிப்பை செயற்பட இயக்கி பாட்டும் இசையும் நடனத்தை மீறும் இசையாக இல்லாமலும் தாழ்ந்து போகாமலும் பார்த்துக் கொள்ளும் இசைஞானமுள்ள *மத்தள வித்தகன்.*
மேலும் தொடர்கிறார்,
*சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை புல்லிய அறிந்து புணர்ப்போன்..*
" இசைக்குழலோன்
(இசை நூல்கள் வகுத்துள்ள முறையில் இசை கொள்ளும் எழுத்துகள் மேல் வல்லொற்று வருமாயின் அதனை மெல்லொற்று போல இசைக்கும் சித்திரப் புணர்ப்பை உணர்ந்தவன்)
*இன்புற இயக்கி இசைபட வைத்து.... ஈர நிலத்தின் எழுத்து எழுத்தாக வழுஇன்று இசைக்கும் குழலோன் தானும்*
(வேய்ங்குழல் இசைக்கையில் தாளம் தவறாது இசைக்கும் வித்தை காரன். யாழிசைக்கும் மத்தள இசைக்கும் ஏற்ப தன் குரல் வாசிப்பை கூட்டாமலும் குறைக்காமலும் இசை பாடலில் கற்பனைகளை கோடிட்டு காட்டும் திறமை வாய்ந்தவன். சுட்டுவிரல் முதலாக துளைகளை விட்டுப் பிடிக்கும் ஆரோகணமும் - சிறு விரல் முதலாக துளை விட்டுப் பிடிக்கும் அவரோகணமும், ஏழிசையும், ஏழு சுரமும் கைவரப் பெற்று சொல் சுத்தமாக வாசிக்கும் குழல் இசையில் *வேய்ங்குழல் வேந்தன்*)
இதற்கு மேலும் கூறுவது என்ன பார்ப்போம்:
*ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி... தாரபாகமும்... குரலின் பாகமும்.. கைக்கிளை ஒழித்த பாகமும்... செம்பாலை ஆயது.. அரும்பாலை எனக் குரல் குரலாக தற்கிழமை தெரிந்தபின்...*
(குழல் பற்றி கூறுகையில் ஏழிசை ஏழு சுரம் என விவரித்தவர், இப்பகுதியில் யாழின் இசை நரம்புகளை மீட்டி இசைக்கும் முறையையும் - பல்வேறு வகை பண்கள் நுட்பம் பற்றியும் விளக்குகிறார்.
ஏழு ஏழு என்று இரண்டு ஏழாக அமைந்த இசை பாடல்களில் செம்பாலை படுமழை செவ்வழி பாலை அரும்பாலை கோடி பாலை விளரிப்பாலை மேற்பாலை எனும் ஏழு பாலைகளை மட்டும் இணை நரம்புகளுடன் இசைக்க வல்லான்.)
*யாழ்மேற் பாலை இடமுறை மெலியக் குழல்மேற் கோடி வலமுறை மெலிய வலிவும் மெலிவும் சமனும் எல்லாம் பொலியக் கோத்த புலமை யோனுடன், எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது*
(யாழில் அரும்பாலை தன் இட முறை மெலியவும், குழலில் கோடிப்பாலை தன் வலமுறை மெலியவும், இப்படியாக வலிவும் மெலிவும் சமமாக அமையவும், நரம்புகளின் அடைவுகள் சிறிதும் கெடாமலும் பண் நீர்மை எதுவும் குறைவுபடாமல் எல்லாம் சீராக சிறப்பாக அமைந்திருக்கும் படி யாழ் நரம்புகளை பிணைத்து இணைத்து இன்னிசை மீட்ட வல்ல *யாழ் இசை வல்லான்*
இப்படியெல்லாம் சொல்லிவிட்டு ஆட அரங்கம் பற்றி துவக்குகிறார் நம் சமண அடிகள்.
தொடர்வோம் நம் மழலை கவி மோகன் ஐயா அவர்களுடன்:
ஐயா,
அரங்கேற்றக்காதையில் காவியத்தின் இரண்டாம் கதாநாயகி மாதவியின், பிறவி இரகசியமும், முறையாக, கற்ற ஆட்டத்திறன், கற்பித்த ஆசானின் சிறப்புகள் எனப்பல அருமையான விவரணங்களின் சுவையை இரசித்தபடி பயணித்து வந்தோம்.
ஆசான் சகலகலா வல்லவராக உள்ள ஒருவரா இல்லை ஆசானோடு மற்ற பல கலை விற்பன்னர்களும் ஒருங்கிணைந்த அரங்கேற்ற நிகழ்ச்சியா என்பதில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. முனைவர் பட்டம் வாங்க முனைவோர் செய்ய வேண்டிய ஆராய்ச்சி அது. நாங்கள் சக பயணிகள் இருவரும்,அடிகளின் தமிழ் அடிகளை இரசித்து எஙகள் கண்ணோட்டத்தில் மனதுக்கு" நச்" என்று
பட்டதைப் பட்டபடி, பட்டவர்த்தனமாகப் பதிவிடுகிறோம்.
இந்த பயணத்தில் நாம் "தண்ணுமை அரும் தொழில் முதல்வன்", "இசைக்குழலோன்", "யாழ் இசை வல்லான்" , "யாழ்ப்புலமையோன்" போன்ற
கலை வல்லுனர்களின் திறமைகள் , சிறப்புகள் பற்றி இப்பயணத்தில் காண நேருகிறது.
ஐயா, தாங்கள் மிக மிக விரிவாக இச்சிறப்புகளை , தங்கள் பார்வையில் கண்டபடி பதிவிட்டீர். பல விடயங்கள் நடன, இசைக் கலைகளுக்கு உரிய கலைச்சொற்கள். அவை பற்றித்தாங்கள விரிவாகவே பதிவிட்டீர்கள் . "திரும்பத் திரும்ப கூறுதல்" என்ற பிழை தவிர்த்து என் பார்வையில் பட்டவைகளை, மனதைத் தொட்டவைகளைப் பற்றி முடிந்த அளவுக்கு, கருத்திடுகிறேன்.
ஓர் ஆசானா, பலர் சேர்ந்த கூட்டிசையா என்ற போது, திருவிளையாடல் திரைப்படத்தில் நடிகர்திலகம்
"பாட்டும் நானே, பாவமும் நானே" பாடலின்போது , அவரே பாடகராகவும், மற்ற பக்க வாத்தியங்களை வாசிப்பவராகவும் காட்டும் காட்சி
நினைவுக்கு வந்தது.
எப்படி இருந்தால் என்ன?
நாமறிய வேண்டியது, ஒவ்வொரு வாத்தியக் கருவிகளின்/, நாட்டிய இசைக் கலைகளின் சிறப்புகளை முடிந்த அளவுக்கு எளிதாகப் புரிந்து, அறிந்து மகிழ்வது/ இரசிப்பது.
" தண்ணுமை" என்பது தோலால் ஆன மத்தளம் போன்ற ஆனால் மத்தளத்துக்கு முன்னோடியான இசைக்கருவி. முழவு, முழவம் என்ற பெயர்களும்உண்டு.
" முடமே"-முடம் என்பது நாட்டுப்புறக் கொட்டு பாணியில் தட்டும் தாள முறை அல்லது கையின் விரல்களை மடக்கி, நகத்தால் தட்டி இசையை எழுப்பும் நுட்பமான தாளக் கருவி
"தேசிகம்" என்பது தேசத்தில், அதாவது அப்போதைய வழக்கத்தில் இருந்த, மக்களுக்குப் பிடித்தமான நடன மற்றும் இசை மரபைக் குறிக்கும்.
"கூர்உகிர் கரணம்" -கூர்மையான நகங்களைக் (உகிர் - நகம்) கொண்டு, யாழ் போன்ற இசைக் கருவிகளை நுணுக்கமாக இசைக்கும் முறை.
சித்திரக் கரணம்-ஆடல் அல்லது இசை அமைப்பில் சிதைவு (தவறு) இல்லாமல், மிக நேர்த்தியாகவும் அழகாகவும் (சித்திரம் போல) இயக்கும் நுட்பமான முறை.
கூடை நிலம், வார நிலம் என்பன இசையின் நடை வகைகள் . தண்ணுமைக் கலைஞன் ஒரு நடையின் போது மிகுத்தும், மற்றொரு நடையின்போது குறைத்தும் வாசிக்க வேண்டும்-
"ஆக்கமும் அடக்கமும் மீத்திறம் மேம்படாமல்" - அழகு, ஆடல், பாடல் என்ற ஆக்கமும் அடக்கம், சீர்மையும் சேர்ந்த மாதவியின் இசையுடன் கூடிய நாட்டிய நிகழ்வில் முன்பாட்டு, பின்பாட்டு, யாழிசை இவற்றை ஒட்டி தாள வாத்தியத்தை இயக்குவது தண்ணுமைக் கலைஞனாம்.
அடுத்துக் குழலோன்- புல்லாங்குழல் வாசிப்பில் விற்பன்னர்.
இவர் "சித்திர வஞ்சனையின் புல்லிய அறிந்த" -வராம். அதாவது, , சித்திர வஞ்சனை எனப்படும் வல்லினம், மெல்லினம், பண்அமைதி போன்ற நுட்பங்களை துல்லியமாக உணர்ந்து முழவு, , யாழ் , வாய்ப்பாட்டு இவற்றுக்குத் தக்கபடி இணைந்து வேய்ங்குழல் இசைப்பவராம்.
"ஈர நிலத்தில் எழுத்து எழுத்தாக , துல்லியமாக எழுதுவது போல, " வழு இன்றி இசைக்கும் குழலோன்" இவர்.
அடுத்து, அட !
"யாழ்ப் புலமையோன்".
யாழ் நரம்புகளால் ஆனது. ஐவகை நன்னிலங்களுக்கும் தனிப்பட்ட யாழ்களும் , வாசிக்கும் பண்களும் உண்டாம். பூம்புகார் நகரம் மருதம், நெய்தல் நிலங்களில் பரந்து விரிந்த நகராதலால் இந்நிலங்களுக்கேற்ற பண்களை வாய்ப்பாட்டுடன் யாழும், குழலும் இசைந்து முழவன் தாளகதியில் மாதவி எனும் அழகு மகள் அழகுப் பெட்டகமாக ஆடும் நாட்டியத்தைக் காண ஆவலை அதிகரிக்க வைக்கிறாரே இந்த சமணத்துறவி!
பலவித பண்களை யாழில் மீட்ட வல்லான் இந்த யாழ்ப்பாணன்!யாழ் வகைகள், யாழ்ப்பண்கள், பண் இலக்கணங்கள் என பல நுட்பங்கள் பற்றி, விரிவாக கூறுகிறார் அடிகள்.
ஐயா ,நீரும் மிக அருமையாக இவற்றின் நுட்பங்களை விவரித்தீர். நானோ " யாழினிது எனக்கூறும் மழலை!
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமையோன்" என்பதில் இருந்து, இவன் அதிக, குறைந்த சமநிலை ஒலிகளை ஒருங்கணைக்கும் திறமையாளன் என அறிகிறோம்; வணங்குகிறோம்
கலைஞர்கள் யாவரும் அறிமுகம் ஆகிவிட்டார்கள்.
ஆடும்அரங்கம் எவ்வாறு அமைக்கப்பட்டது, ?
ஆட வல்லாள் ஆடப் போகும் அரங்கு கோணலாகவா இருக்கும்?!
அடிகள் அரங்கின் அடியளவுகள் முதற்கொண்டு , திரைகள், ஒளி அமைப்பு என அசத்தப் போகிறார்.
நம் பயணம் தொடரும்......
*குறிப்பு:*
இப்பகுதியின் பதவுரை பார்க்கையில் இரண்டு குறிப்புகளை தரவேண்டிய அவசியம் உள்ளது.
1. இளங்கோ அடிகளின் வரிகளுக்கு விளக்கம் சொல்ல வரும் பல்வேறு நூலாசிரியர்கள் நீண்ட நெடிய விளக்கங்களை கொடுத்துள்ளனர். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் இவை ஏழிசை. ஆ. ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ (உயிர் எழுத்துக்களின் நெடில்கள்) இவை ஏழு சுரம். இது போன்ற எண்ணற்ற குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பட்டியலிடுவது பயணத்தின் வேகத்தை தடைப்படுத்தும்.
2. மிக முக்கியமாக சிலப்பதிகாரத்திற்கு பல உரை எழுதிய ஆசிரியர்களில் ஒரு சிலர் மாதவி க்கு ஒரே நடன ஆசான் அத்தனை திறமைகளையும் பெற்றிருந்தான் என பொருள் படும்படி எழுதியுள்ளனர். வேறு சில நூலாசிரியர்கள் ஆடல் கலையின் ஆசான், இசையில் வல்லவன், நூலறிப்புலவன், மத்தள வித்தகன், வேய்ங்குழல் வேந்தன், யாழிசை வல்லவன் ஆகியோர் தனித் தனி நபர்கள் எனக் கூறுகின்றனர். இதன் மீது எனக்கும் மழலைக்கவி மோகன் ஐயா அவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடந்தது. எங்கள் பார்வையில் இருப்பதை பதிவு செய்வோம். முடிவு எடுப்பதை வாசகர்களிடம் விட்டுவிடுவோம் என்று முடிவு செய்தோம். விருப்பமுள்ளோர் இக்காப்பியக் கடலில் மூழ்கி முத்து எடுத்து எங்களுக்கு உதவுங்களேன்.
No comments:
Post a Comment