"ஒருவர் தனது வாழ்நாளில் பத்தாயிரம் மைல்கள் நடக்க வேண்டும்.
பத்தாயிரம் புத்தகங்களை வாசிக்க வேண்டும். அதுவே ஒருவரது முழுமையான வாழ்க்கை" என்கிறது சீனப் பழமொழி.
ஒரு நல்ல வாசகராக, கதை சொல்லியாக, எழுத்தாளராக, ஓவியராக என பன்முக செயல்பாடுகளை இந்த வாசிப்பு எனும் மந்திரம் மாயாஜாலம் செய்கிறது.
உலகப் புத்தகத் தினத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படையான செய்திகள்...
ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி 'உலக புத்தக தினம்' மற்றும் 'காப்புரிமை தினம்' கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கெளரவிக்கும் விதமாக இந்த நாள் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, காப்புரிமை போன்றவற்றை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
" உலகின் முதல் அச்சுப்புத்தகமாக கருதப்படுவது ' டயமண்ட் சூத்ரா எனப்படும் பெளத்த நூலாகும். சீனாவில் கையால் செய்யப்பட்ட அச்சாக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட பதினாறு அடி நீளமுள்ள இந்தச் சுருள் வடிவ நூல் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த நூல் 868 ஆம் ஆண்டில் கெளதம புத்தரின் பத்து முதன்மைச் சீடர்களில் ஒருவரான சுபூதி அவர்களோடு கெளதம புத்தர் உரையாடிய ஞானமொழிகளின் தொகுப்பே இந்நூல்.
அடுத்து தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் "பிரதாப முதலியார் சரித்திரம்." இது 1876 ல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டதாகும்.
அடுத்து வ.வே.சு. ஐயரின் " குளத்தங்கரை அரசமரம்" கதைதான் தமிழின் முதல் சிறுகதை.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள விவிலியம், பைபிள்க்கு அடுத்து மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . திருக்குறள் இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அச்சில் வெளியான முதல் தமிழ்ப் புத்தகம் 'திருமறைச் சிற்றேடு' என்னும் மதநூலாகும். 1554 -ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இந்நூல் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு எனும் மூவர்.
மாணவர்களின் வாசிப்பை வலுப்படுத்த தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் "இளம் வாசகர் வட்டம்" என்னும் அமைப்பு.
இவ் வாசகர் வட்டம் நூலகத்தை மேம்படுத்துதல், படைப்பாற்றலை வளர்த்தல், நூலகத்திற்கு ஒரு பாடவேளை ஒதுக்குதல் என நடைபெறுகிறது.
பாராட்டப்பட வேண்டிய விசயம்.
ஆனால் இதன் செயல்பாடுகள் ஆசிரியர்களைப் பொறுத்து சில பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. அது போல மாதம் ஒரு முறை இலக்கிய கூட்டங்கள் பள்ளிகளில் நடைபெறுகிறது.
இதுவும் சில பள்ளிகளில் மட்டுமே.
பரவலாக்கப் படவேண்டும் என்பதே வாசிப்பை நேசிக்கக் கூடிய அனைவரின் அக்கறையும், ஆதங்கமும்.
வாசிப்பை நேசித்து, அறிவை விசாலமாக்கி, சமூகத்தைக் கற்று, சமத்துவத்தை நோக்கி பயணிப்பதே ஏப்ரல் - 23 உலகப் புத்தகத் தினத்தில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உறுதிமொழி.
உலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள்..
- ஷங்கர்
No comments:
Post a Comment