மானுடத்தை பிரிக்கும் அகந்தை சுவராய் வீழாமல், உறவை இணைக்கும் தமிழ் பாலங்களாக எழுவோம்
வேர்கள் பின்னி நெஞ்சம் நிமிர்த்தி
நீர் மேல் வரைந்த கோலமே!
மூங்கிலும் கொடிகளும் கூடித் தழுவி
மனிதன் காற்றாய் கடந்த காலமே!
கல்லின் நெஞ்சில் காலால் மிதித்து
காலம் பதித்த கனவு கட்டிலே!
இரும்புக் கயிறுகள் இழுத்து பிடிக்க
பிரிவை பிணைத்த இதய தொட்டிலே!
நாலும் தெரிந்து ஞாலம் செழிக்க
ஞானம் தந்த கேள்வியின் பதிலே!
சாவை தவிர்த்து மருத்துவம் செய்ய
சேவை புரிந்த தீவுக்கான தீர்வே!
ஊரையும் ஊரையும் ஒன்றாய் இணைத்து
ஏரையும் தேரில் ஏற்றிய இதயமே!
நாகரிகம் நகர்ந்த நெடுந்தொடர் வழியே!
மலையும் மடுவும் மணந்த உறவே!
இன்றையும் நாளையையும் சுமக்கும் நேற்றே!
உலகத்தின் உயரத்தை உணர்த்திய சிகரமே!
சாலையின் நெரிசல் சன்னமாய் குறைய
சக்கரச் சுழற்சி நிற்காமல் சுழல
வாணிப வெள்ளம் வற்றாமல் பெருக
கரைகள் இரண்டும் கரங்கள் கோர்க்க
மேகத்தை வழித்து இமைகள் தீட்ட
நட்சத்திரம் கொய்து நெஞ்சில் பூட்ட
சிறகின்றி வானம் சட்டென தொட
வருவாய் மானுடம் சுமக்க வரவாய்!
No comments:
Post a Comment