•••••••••••••••••••••••••••••••
*{15} சிலம்பொடு ஒரு பயணம்*
*மனை அறம் படுத்த காதை*
*இன்பமான இல்லறமும் தனிக் குடித்தனமும்*
•••••••••••••••••••••••••••••••
பித்தன் சூடிய பிறையே நுதலாம்
காமன் எடுத்த வில்லே புருவமாம்
என கண்ணகி நல்லாளைப் புகழத் துவங்கி
மஞ்ஞையின் சாயலான மங்கை
கொண்டிருந்தாள் அன்ன நடை
கிளி யாழ் குழல் ஒத்த பேச்சு என வானளாவ புகழ்ந்ததோடு நில்லாது, அவளது அலங்காரத்தை - ஆடை அணிகளைப் பார்த்து
மேலும் தொடர்கிறான் கோவலன்:
*மறு இல் மங்கல அணியே அன்றியும் பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல்*
(இயற்கை வழங்கிய மங்கல அணி எனும் நிறை அழகு உன்னிடம் இருக்க பிற அணி மணிகளை ஏன் வீணாக பூட்டுகின்றனர்!)
*பல் இரும் கூந்தல் சின்மலர் அன்றியும், எல் அவிழ் மாலையோடு என் உற்றனர் கொல்*
(உன் பன்வகை கூந்தலில் சிறு அழகிய மலர்களைச் சூடினால் போதாதோ..! ஏன் வீணாகப் பெரிய மாலைகளை சூட்டுகின்றனர்!)
*சிறுகு இடை வருந்தவும்*
அதாவது அணிகலன்கள் ஆடை ஆபரணங்கள் பெரிய மாலைகள் எல்லாவற்றின் எடையையும் அவளது சிறிய இடை தாங்குமா என வேறு வருந்துகிறான்.
அத்தோடு நின்றானா! காதல் வயப்பட்டு மதி மயங்கித் தொடர்கிறான் விடாது:
*மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! அரும் பெறல் பாவாய் ஆருயிர் மருந்தே!*
என புகழ்ந்து மகிழ்கிறான். இவ்வரிகளைப் படிக்கும் கால், வாசகர்கள் செவிகளில் இவ் வரிகள் இன்பமாய் ரீங்காரமிடும். காரணம், பூம்புகார் எனும் திரைப்படத்தில் வரும் "பொன்னாள் இது போலே" - எனும் திரை இசைப் பாடலே. இளங்கோ அடிகளின் இவ் வைர வரிகள் டி. எம். சௌந்தரராஜன் குரலில் நம் செவிகளில் ஒலிப்பது இயற்கையே.
(இவ்விடத்தில் எனக்கு ஓர் ஐயம். வலம்புரி சங்கு உண்டு! வலம்புரி முத்து உண்டா?)
இதோடும் அவன் நிற்கவில்லை! இன்னும் புகழ்கிறான் பாருங்கள் :
*மலை இடைப் பிறவா மணியே அலை இடைப் பிறவா அமிழ்தே யாழிடைப் பிறவா இசையே*
என்று வர்ணனை மழையில் கண்ணகியை நனைவிக்கிறான். அடிகளும் தன் சொல்லாட்சியால் படிப்போர் மனங்களை மகிழ்விக்கிறார்!
இப்படி ஆடிப் பாடி காதலில் மூழ்கி திளைத்து மகிழ்ந்திருக்கும் வேளையிலே, அவர்தம் இல்லறத்தில் முக்கிய நிகழ்வு ஒன்று நடக்கிறது. என்ன அது?
*வார் ஒலி கூந்தலை பேர் இயல் கிழத்தி*
(நீண்டு வளர்ந்த நெடுங் கூந்தலும் போற்றுதலுக்குரிய உயர் பண்புகளும் கொண்ட கோவலனின் தாயார், மாசாத்துவானின் மனைவி)
*கேண்மையோடு அறப்பரிசாரமும் விருந்து புறந்தரும் பெருந்தண் வாழ்க்கையும்*
(அறநெறி உணர்ந்த சான்றோரை ஆதரித்துப் போற்றுதல் விருந்தென வந்தவருக்கு உண்டி கொடுத்து உபசரித்தல் ஆகிய இல்லற தர்மங்கள். இல்லறம் எப்படி நல்லறம் ஆகும் என்பதை இவ் வரிகளில் அடிகள் தெள்ளன விளக்குகிறார். இல்வாழ்க்கை இந்த அறங்களோடு இருப்பின் அந்த இல்லறம் நல்லறமாக இருக்கும் என்பது தமிழ்ச் சமூகம் உயர்த்திப்பிடித்த சமூகவியல் கோட்பாடு)
*ஒரு தனிப் புணர்க்க*
(தனிக்குடித்தனம் வைக்கிறாள். ஒருவேளை இது நடவாது இருந்திருந்தால், கோவலன் தடுமாறி - தடம் மாறிப் போகாமல் இருந்திருப்பானோ!?)
அவ்வாறு தனிக் குடித்தனம் வைக்கப் பட்ட பின்,
கோவலனும் கண்ணகியும்
*தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர் போல் நின்று*
(இல்லற வாழ்வில் இன்பம் பெருகி ஓட, காமனும் ரதியும் போல, அழகு நலம் கெடாத இல்லற இன்பத்தை இடையறாது துய்த்து மகிழ்ந்திருந்தனர். அதாவது, நிலையற்ற உலக வாழ்வினில், யாக்கை உள்ள போதே வாழ்க்கையை வாழ்ந்து விட வேண்டும் என்கின்ற பெரும் அவாவுடன் வாழ்ந்தனராம்)
இன்பத்தைச் சுவைத்து வாழ்ந்தனர் என்று விவரிக்கையில் *நிலையாமை* என்ற சொற்றொடரை உள்ளே நுழைத்து, கோவலனுக்கு நேரப் போகும் துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறார் இவ்விடத்திலும் அடிகள்.
தற்போது மழலைக் கவியின் பார்வை:
ஐயா,
இன்றைய பயணத்தில் கண்ணகி உடனுறை கோவலன் தம்பதியினரின்
இன்பமான இல்லறம் மற்றும் தனிக்குடித்தனம் தாங்கள் கண்ட விதம் பகிர்ந்தீர்.
என்பார்வையில் கண்டு உங்களுடன் பகிர விழைகிறேன்.
இல்லறம், குடித்தனம் இரண்டும் ஒன்றா ? அல்லது வெவ்வேறா?
இல்லறம் என்பது வாழ்வியலின் அறம் சார்ந்த கொள்கை, குடித்தனம் என்பது அந்த வாழ்க்கையை நடைமுறையில் நடத்தும் செயல்முறை எனக் கொள்ளலாம்.
அறக் கோட்பாடுகள் இல்லறத்தை வரையறுத்துக் கூற அந்த கோட்பாடுகளுக்கு உட்பட்டு நடைமுறையில் செயல் படுத்துவதே குடித்தனம்.
உயர்ந்த மாளிகையின் உச்சி மாடம் ஒன்றில் கோவலன் தன் அன்பு மனைவி கண்ணகியின் எழிலைப் பலவாறு புகழ்ந்த பின்னர் அவளது பாங்கு, நடை, பேச்சு என அணு அணுவாக அனுபவித்துப் போற்றும் காட்சிகளைக் கண்டோம். களித்தோம். இயற்கையிலேயே அழகு வாய்க்கப் பெற்ற கண்ணகியின் ஆடை அலங்காரம் பற்றி அவன் பேசாவிட்டால் எப்படி? அவள் நாணத்தால் பேசா மடந்தையாக இருந்தாலும், அவள் பெண் உள்ளம் "நான் அழகாக இருக்கிறேனா!" என்று கேட்கத் தூண்டுவதை அறிந்தவன் போல , கோவலன் தன் வர்ணனையைத் துவங்குகிறான்.
இயற்கையோடு இணைந்த மங்கல அழகு அவளுக்கு இயல்பாகவே உள்ளதால் *"பிறிது" அணிகள் "எவன் கொல்-"* ( எதற்காகவோ)!என வியக்கிறான். இந்த அணிகளில் ஒன்றுதானே பின்னர் கண்ணகி நீதியை நிலை நாட்ட உதவும் என நினைக்கத் தோன்றுகிறது!
இவளது அளகாபாரம், பாரமான மலர்களைத் தாங்குமா? அணிகலன்களின் எடை *"சிறுகு இடை"* யை வருத்துமோ எனப்பலப்பல எண்ணங்கள் காதல் வயப்பட்டவனுக்கு!
*இடை "இல்லாதது போல்"* இருப்பதால் "சிறகு இடை"
என்றானோ?!
ஐயா, அடுத்து பொன், முத்து போன்றவற்றை வைத்து அவன் அவளை " போற்றி போற்றி " என்று புகழுவதை நன்கு விவரித்தீர்.
ஓர் ஐயமும் உமக்கு உண்டாயிற்று.
வலம்புரி சங்கு உண்டு. வலம்புரி முத்து உண்டா என்று?
கவிஞர்களின் உயர்வு நவிற்சியாக, இம்முத்து இலக்கியங்களில் அறியப் படுகிறதாம். வலம்புரி சங்கே உயர்ந்தது. அதற்குள் முத்தும்இருந்தால் அருமைக்கு அருமை சேர்க்காதோ!வலம்புரி முத்தை விட குடும்பநலம் பேணும் நம் கண்ணகி உயர்ந்தவள்.
இந்தக் *"குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணி"* -
யைக் கோவலன் பலவாறாகப் போற்றுவதில் தாங்கள் அடிகளின் சொல்லாட்சி கண்டு உவகித்தீர். கூறியது கூறல் என்ற குற்றத்திற்கு ஆளாகாமல் மேலே செல்கிறேன்.
இந்த காதல் பறவைகள் அன்புச் சிறகுகளால் அணைத்து மகிழும் வாழ்வில் மேலும் இன்பம் சேர்க்கிறாள், காவிய நாயகியின் மாமியார். அட அப்படியா! ஆம் இவர்களுக்குத் தனிக் குடித்தனம் வைக்கிறார். இக்கால மருமகள்கள் ஆச்சரியப் படலாம் இதனைக் கேட்டு. ஆச்சரியம் ஆனால் உண்மை அக்காலத்தில் இது நடந்துள்ளது.
உற்றம், விருந்தினர் யாவரையும், இருவரும் மனையறம் வழுவாது, பெற்றோர் சொத்தை எதிர்பாராமல். தங்கள் ஈட்டும் செல்வத்தை வைத்து இல்லறம் நடத்த, மாநாய்கனின் பெருங்கிழத்தி
செய்த ஏற்பாடு!
இன்று தனிக்குடித்தனம் செல்லத் துடிப்பவர்கள் சற்றே நின்று உள்வாங்க வேண்டிய விடயம்.
இவ்வாறு இல்லறம்அது நல்லறம் என
இருவரும்,
*"தொலையாத இன்பம் எல்லாம் துன்னினார்". ........ நிலையாமை கண்டவர் போல்."*
இந்த நிலையாமை என்ற எண்ணம் பின்பு வரும் துயர
நிகழ்வுகளுக்குக்கட்டியம் கூறுகிறதா?
இல்லை , இன்று நிச்சயம் நல்ல வாழ்வு வாழ்வோம், நாளை பற்றி யாரறிவார் என" காமர் மனைவியெனக் கைகலந்தனரோ"!
அடுத்து அரங்கேற்றக் காதையில் பயணிப்போம். மாதவிப் பொன் மயிலாளைக் காணும் ஆர்வம் அதிகரிக்கிறது
*இதோடு மனை அறம் படுத்த காதை நிறைவுறுகிறது. அடுத்து அரங்கேறப் போவது *அரங்கேற்றக் காதை. அதில் நாமும் மாதவி என்னும் நல்லாளோடு அரங்கேறுவோம்.*
!
No comments:
Post a Comment