•••••••••••••••••••••••••••••••
*{16} சிலம்பொடு ஒரு பயணம்*
*அரங்கேற்றக் காதை*
*மாதவி அறிமுகம்*
•••••••••••••••••••••••••••••••
நம் பயணத்தில் இரண்டு காதங்கள் கடந்து மூன்றாவது காதம் அதில் அடி எடுத்து வைக்கிறோம்.
அதாவது மூன்றாவது காதைக்குப் போகிறோம்.
மூன்றாவது காதையில்தான் சிலம்பின் இன்னொரு நாயகி ஆடும் பொன் மயிலாள் மாதவி அறிமுகமாகிறாள்.
அவளுடன் அவளின் ஆடல் ஆசானும் அறிமுகம் ஆகிறான்.
அக்காலத்தில் ஆசான்களுக்கு கிடைத்த அதிக மரியாதை,
சமூகத்தின் உயரிய நிலையில் அவர்களை வைத்திட்ட சமூகவியல் நிலை சமண அடிகளின் வரிகளில் மிளிர்கிறது.
மாதவியின் அறிமுகம் பத்தே வரிகளில் அடங்கி விடுகிறது. ஆயின், ஆடல் அரசன் பற்றி 85 வரிகளில் விரிவாக விளக்குகிறார் அடிகள்.
*தெய்வமால் வரை திருமணி அருள எய்திய சாபத்து*
பொதிகை மலை உச்சியில் தவம் செய்து வாழ்ந்த அகத்திய பெருமுனி இட்ட சாபத்தால்
*இந்திர சிறுவனோடு தலைக்கோல் தானத்து சாபம் நீங்கிய.... வானவர் மகளிர்..*
தேவேந்திரன் மகன் சயந்தனும் தேவர் உலக நடனமாது ஊர்வசியும் மண்ணுலகில் வேணுவாகவும் அதாவது மூங்கில் ஆகவும், (புல்லாங்குழல் எனக் கொள்க) மாதவியாகவும் வந்து பிறந்தனர்.
அதாவது ஆடல் கலையில் வல்ல மாதவி தன் ஆடல் திறமையால் கோவலனை மட்டுமல்ல, இந்த உலகையே மயக்கினாள் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் தேவ உலகத்தையே தன் ஆடலால் மயக்கிய ஊர்வசிதானே மண்ணில் மாதவியாய் பிறந்திட்டாள்.
இப்படி அறிமுகமாகும் மாதவி பற்றிய அடிகளின் வரிகள் இதோ:
*பிறப்பில் குன்றா பெருந்தோள் மடந்தை தாது அவிழ் புரி குழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்று இக் கூறிய மூன்றின் ஒன்று குறை படாமல் ஏழாண்டு இயற்றி ஓர் ஈராண்டில்*
ஆடல், பாடல், அழகுருவம் என்ற மூன்றில் ஒன்றிலும் குறையா குடிப் பெருமை குன்றா குலக்கொடி மாதவியை அவள் தாய் சித்திராபதி ஏழு ஆண்டுகள் ஆடற்கலை பயிலச் செய்தாள். பின்னர் மாதவியை அவளது பன்னிரெண்டாவது வயதில் ஆடல் அரங்கில் அரங்கேற்றினாள்.
இப்பொழுது ஆடல் ஆசான் அறிமுகம் ஆகிறான். அள்ள அள்ளக் குறையாத சொல்லெடுத்து அவனி முழுதும் மகிழும் வகையில் இளங்கோவடிகள் அடுக்கடுக்காய் அவன் பெருமையை விளக்குகிறார்:
*இருவகை கூற்றின் இலக்கணம் அறிந்து பல வகை கூத்தும் விளக்கினிற் புணர்த்து*
(அறம் - புறம் எனும் இருவகையான நாட்டியத்தின் விதிமுறைகளையும் சாந்தி கூத்து, வசைக் கூத்து எனும் பலவகை கூத்து முறைகளையும் நன்கு அறிந்தவன்.)
*ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்*
*பிண்டியும் பிணையலும் எழிற் கையும் தொழிற்கையும் கொண்ட வகை அறிந்து கூத்து*
(கூத்து முறைகளான சாதி, விருத்தி சுவை, குறிப்பு, சத்துவம், அபிநயம், சொல், சொல் வகை, வண்ணம், வரி, சந்தி, சேதம் எனும் இலக்கண நுட்பம் நன்கு அறிந்தவன்.)
மேலும் தொடர்கிறார்:
*வாரம் செய்த கை கூடையில் கலைதலும், பிண்டி செய்த கை ஆடலில் கலைதலும், ஆடல் செய்த கை பிண்டியில் கலைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி*
(அவன் நடனம் ஆடும் போது பிண்டி, பிணையல், எழில் கை, தொழிற்கை எனும் நாட்டிய முத்திரைகள் பதிக்கும் ஞானம் உள்ளவன். நடன முத்திரை பதிக்கும்போதும் குவிந்த கை இரட்டைக் கை, ஒற்றைக் கை இருகை காட்டும் அவிநயம், பாடல் குறிப்புகளுக்கு ஏற்ப வடிவம் காட்டும் முத்திரைகளோடு, குரவைக் கூத்து, வரிப்பாடல் கூத்து எனும் அவிநயங்கள் சிறக்க செய்வதிலும் மேதை).
இதற்கு மேலும் அவன் சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகிறார். அதனை அடுத்த பதிவில் பார்ப்போம். இப்போது மழலைக்கவி என்ன சொல்கிறார் என பார்ப்போம்:
ஐயா,
தாங்கள் அரங்கேற்றக் காதையில் பிரவேசித்து, மாதவி என்னும் ஆடவல்லாள் மற்றும் அவள்தம் ஆசான், நடனக்கலை விவரங்கள் பற்றி , இளவல் அடிகளின் அடி தொடர்ந்து , கருத்திட்டு பகிர்ந்தீர்.
சக பயணி நான் என் கருத்துகளை, அரங்கேற்றுகிறேன்.
அரங்கேற்றம்- மாதவி , ஆசான் ஆசியுடன் முதல் முதலாக அரங்கம் ஏறி அறிமுகமாகும் காதை.
பார்வையாளர்கள்?கோவலனோடு, நாமும்தான்.
அவன் பார்வை வேறு நம்பார்வை வேறு. நாம் நல்லாசான் பயிற்றுவித்த ஆடல்மகளின் ஆட்ட சிறப்புகளைக் காண உள்ளோம்.
மன்னர் (கரிகால் பெருவளத்தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்) கூட அமர்ந்து காணும்பேறு நமக்கு!
ஊழ்வினை காரணமாக, தேவலோக ஊர்வசி இப்பிறப்பில் மாதவியாகப் பிறந்தாள் என்கிறார் அடிகள்.
ஊழ்வினை இக்காப்பியப் பாத்திரங்களோடு பின்னிப் பிணைந்தது போலும்.
தேவ உலக ஊர்வசியின் அழகை இவ்வுலகில் கொண்டு பிறந்த மாதவி, ஊர் வாசிகள் மெச்சும் அழகு படைத்தவள் என்பதில் என்ன வியப்பு!
ஆடல் -நல்ல ஆசானிடம் முறையாகப் பயின்றவள். ஐந்து வயதிலிருந்து பன்னிரெண்டு வயது வரை ஏழு ஆண்டுகள் ஆசானிடம் நடனக்கலை பயின்றவள், அவர் பாதங்களைத்தொட்டுக் கும்பிட்டு.
இனிமையாகப் பாடுபவள். இயற்கை அழகோடு ஒப்பனை செய்துகொண்டும் அழகுக்கு அழகு சேர்ப்பவள்.
வயது பன்னிரண்டு- மங்கை!- நம் கண்ணகியைப் போல்.
மாதவியின் அழகு அடவு (நடன அசைவு) கூடியது. கண்ணகியின் அழகு அமைதி நிறைந்தது. குத்து விளக்கும், தெரு விளக்கும் போல.
ஆடல் ஆசான்:
கற்பித்த ஆசான் - *"ஆடற்கு அமைந்தஆசான்"*
பாணி, பாங்கு, பாடல் இவற்றில் கரைகண்டவர்; நன்கு கற்பிப்பவர்.
பாணி என்பது கற்பித்தவரின் பெருமை பேசும். இக்காலத்திலும் வழுவூர் ராமையா பிள்ளை, பந்நல்லூர் எனப்பாணிகள் , கற்பித்தவரை , சிறப்பிக்கின்றன அன்றோ?!
இவர் பாணி, *"சூழ் கடல் மன்னற்குக் காட்ட வேண்டி,"* மாதவியின் அரங்கேற்றம் அமையும் அளவுக்கு ஏற்றம் வாய்ந்தது.
ஐயா, தாங்கள், கூத்து வகைகள், முறைகள், நாட்டிய முத்திரைகள்பற்றி நன்கு விவரித்தீர்.
நான் சில " கலைச்சொற்கள" பற்றி படித்து அறிந்ததைப்பகிர்கிறேன்.
பிண்டி:
இரண்டு கைகளையும் வெவ்வேறு வகையாக ஆட்டிக் காட்டுதல்
பிணையல்:
இரண்டு கைளையும் ஒன்று போல் ஆட்டிக்காட்டுதல் .
கூடை -,ஒற்றைக்கை அபினயம்
வாரம் - இரட்டைக்கை, பின்னல்அசைவுகளைக் குறிப்பது
ஆசானின் தகைமைத்திறன்:
பல வகையான கூத்துகளை அறிந்து வேண்டியவற்றை விலக்கி, வேண்டியவற்றை இணைத்துக்கொள்ளும் முறைமை தெரிந்திருக்க வேண்டும்.
11 வகையான ஆடல், வாயில் பாடும் இசைப்பாட்டு, தாளக் கொட்டு ஆகியவற்றை இலக்கணப் பாங்கு, இலக்கியப் பாங்கு ஆகியவற்றோடு அறிந்திருக்க வேண்டும்.
ஆடும் பாங்கு, பாடும் பாங்கு, தாளம் கொட்டும் பாங்கு, இசை கூட்டும் பாங்கு ஆகியவற்றைச் சொல்லித்தரத்தக்க அழகிய அசைவுகளைக் காட்டும் எழில்
வேண்டும்
கூடை செய்த கை வாரம் செய்யக்கூடாது வாரம் செய்த கை கூடல் செய்யக்கூடாது .
ஆடலுக்கு உரிய இது போன்ற பாங்குகளை ஆடல்-ஆசிரியன் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்தவர் மாதவியின் ஆடலுக்கு என அமைந்த ஆசான்.
கூத்து வகைகள், நாட்டிய முத்திரைகள் என்பவை மிக விரிவாக நம் இலக்கியங்களில் காணப்படுகின்றன. நம்பயணத்தில் அவற்றை விவரித்தால் " கொள்வார்" இல்லாது போகலாம்.
விவரம் வேண்டுவோர் சிதம்பரம் நடராசர்
கோவிலில் 108 கரணங்களை( நாட்டிய அசைவுகளை) சிற்பமாக,காணலாம் , வழிவகாட்டியின் துணையோடு.
பிற்காலச்சோழர்கள், ( 10 ஆம் நூற்றாண்டு) முந்தி இருந்த சோழர்களுக்கு( 2 ஆம் நூற்றாண்டு) செலுத்தும் அஞ்சலியோ, சிற்ப
வடிவில்?! நடன அரங்கேற்றம் கண்டு ரசிக்க வசதியாக அமர்ந்து உள்ளோம், ஆவலோடு, எதிர்பார்ப்புகளோடு.
*பயணம் தொடரும்*
No comments:
Post a Comment