Monday, September 30, 2024

முதியோர் தினம்

 °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    முதியோர் தினம்!

                அக். 1

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


தத்தம் பேரப் பிள்ளைகள்

மின்னணுச் சாதனங்களின்

பெரு மழையில் சிக்காமல்


புத்தகக் குடை பிடித்து

வழி நடத்திச் செல்லுதலே

மூத்தோரின் கடமையாம்!


உங்கள்_தோழன்_ஸ்ரீவி



உலக காஃபி தினம்

 ஏங்கச் செய்கிறாயே ! 


எத்தனை இந்நாளில் " நான், நீ " போட்டியாம்

   என்றாலும் எழுந்ததும் உன் நினைப்பே தான்


சுத்த சைவர்களும் விரும்பும் ஒன்றே

   சுகம் தருகிறாய் இரண்டறக் கலந்தே


கொத்துக் கைத்தாய்க் கனிகள், இரசங்கள்

   கொஞ்சமும் உன் அருகில் நில்லா பசங்கள் 


புத்துணர்ச்சி அதன் மொத்த உருவே ! 

   புலவன் வாய் பொய்யுரை  இலையே


ஒத்தையாக வரும் நீ தான் சிங்கம்

   ஓடி உனைக் கண்டு மற்றவை ஒளியும்


பத்தன் சொல்வேன் நீயோ தனிதான்

   பெருகப் பருகப் பரவசம் இனிதான்


குத்தனூரிலும் உன் அடிமைகள் உண்டே

   குதித்தால் தேர்தலில்  வெற்றி உனதே


உத்தம ஒன்றே ! உனக்கிணை இல்லையே! 

   உலக உன் (காஃபி) தினத்தில் உளரவில்லையே. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Sunday, September 29, 2024

காயம்

 உரித்தால் வரும் கண்ணீர் -வெங்காயம்...

பிரித்தால் வரும் கண்ணீர்... பெருங்காயம்.....🤪 சாயி 🤪

சாதனை

 🤔🤔🤔 சாதனை 🤔🤔🤔


டச்சில்  இருந்த உறவுகளை


டச்  இல்லாமல் செய்து விட்டு,


டச்  இல்லா உறவுகளை


டச்சில்  வைப்பதே -- இந்த                                  


டச்   போனின் சாதனை 😂


- ராஜா முஹம்மது

உயிர்

 சுருக்கு போட்டும் உயிர்                           

 வாழ்கிறது.......

   ஊசி போட்டால் உயிர் 

   விடுகிறது,...

   *பலூன்!*

- தியாகராஜன்


----------------------

 சுருக்கால் வாழும் உயிர்

சுருங்கினால் போகும் 

உயிர்

..பலூன்


- அமுதவல்லி

------------------------------

 உணவை சுருக்கினால் வாழும் உயிர்

நீரின்றி/காற்றின்றி சுருங்கினால் 

போகும் உயிர்


- சங்கீதா

-------------------------

 நாதஸ்வர வித்துவான் ஊதும் காற்றால் வருவது இசை! 

பொற்கொல்லர் ஊதும் காற்றால் வருவது நகை!

பலூன் வியாபாரி ஊதும் காற்றால் வருவது சிறுவர்களுக்கு புன்னகை!

இவை வெறும் காற்றல்ல அவர்தம் குடும்பத்திற்கு உயிர் காற்று!

சிகரெட் குடிப்பவர் ஊதும் காற்றால் வருவது புகை;

அது நமக்கு பகை!!!


- நாகராஜ் 

Thursday, September 26, 2024

உரிய தண்டனை

 உரிய தண்டனை


அதரமே ! உன்னால் அழகுத் தமிழ் பேசுவேன்

   அநியாயம் எதிராக உன்னோடு ஏசுவேன்


இதழாக இருந்து இனிய தேன் சுரப்பாய்

   ஈயாய் சுவைத்தாரை கவி பாட வைப்பாய்


கதவாக உள்ளே கண்டதை  அனுமதிப்பதில்லை

   கடுஞ்சொல் எளிதில் வெளி விடுவதில்லை


உதடே ! உன் மீது சாயமா ! அது குற்றம்

   உரிய தண்டனையோ பணி இடமாற்றம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Wednesday, September 25, 2024

ஆதியன்

 ஆதியன் வேதியன் ஐந்தெழுத் தாகியன் 

ஆலகால் நாடியன் அம்பலத் தாடியன் 

அண்டவள் பாதியன் கொண்டவள் சூடியன் 

அடிபணி அற்பணி வாய்என் மனமே 


அய்யனே அந்தணர் நூர்க்காதி யாய்நின்ற 

மெய்யனே மாயப் பிறப்ப றுத்த 

உய்யனே உய்யனே ஊழறுத்தாட்  கொண்ட 

பெய்யனே பெய்வேன் நின்புகழ் தனையே 


-  நேரிசை ஆசிரியப்பா

வெங்கட்ராமன்


Sunday, September 22, 2024

மப்பும், மந்தாரமாய்...

 மப்பும், மந்தாரமாய்... 


மப்பும், மந்தாரமாய் நாலைந்து நாளாம்

   மழையது " இதோ இதோ " ஏமாற்றுதாம்


தப்பித் தவறியும் இலைகள் அசையவில்லை

   தமிழாய் வருடும் தென்றலும் இல்லை


உப்பு வியர்வை பெருகி உடல் மிசை பூத்தது

   உப்பு மாங்காய் அன்று ஊரில் பார்த்தது


துப்பு கொடுங்களேன்! பிரதீப் ஜான்! ஐயா! 

   துயர் தீர மழை மேகம் அண்மையில் உண்மையா? 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Friday, September 20, 2024

தண்டனை போதும்

 தண்டனை போதும்


அரை கிலோ வாங்க அதே அளவு இலவசம்

   அதுவும் மைசூர்ப்பா ஒரு நாள் மட்டும்


கரையும் தன்னால் கடிக்கவே வேண்டாம்

   கட்டிய தங்கப் பல்லும் மேலும் மின்னும்


விரைந்து சென்று வாங்கணும் இராது மிச்சம்

   விஷம் இனிப்பென்று எத்தனை நாள் அச்சம்? 


தரையில் வந்தவர் ஒரு நாள் " டாடா " சொல்லணும்

   தன்னையே தண்டிப்பது போதும் போதும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Wednesday, September 18, 2024

உலக மூங்கில் தினம்

 உலக மூங்கில் தினம்

----------------------

ஓங்கி உயர்ந்து

காற்று மாசுகளைக்குறைக்கும்

இயற்கை மருத்துவர்கள்.


புல்லாங்குழல்களாக

தம்மூடே இன்னிசை

பாய்ச்சி செவிக்கு

இன்பமூட்டும் இயற்கையின் பிறப்புகள்.


மணப்பந்தலோ

மனிதனின் இறுதி

ஊர்வலமோ 

பாரபட்சம் இன்றித்

தம்மைப் பயன்படுத்த

உதவும்தத்துவ ஞானிகள்.


கூட்டமாக வளர்ந்து காற்றில் உராசி ஒலி எழுப்பினாலும் சுருதி பேதமின்றி  ஒற்றுமை

காட்டும் மூங்கில் நண்பர்களை இன்று

நன்றியுடன் நினைவு

கூர்வோம்.


- மோகன்


--------------------------

 புல்லாங்குழல் தரும் மூங்கில்

புல்தான் என தாவரவியல் சொல்கிறது

ஓங்கி உயரும் புல்லே

மூங்கிலாம்


வீடு கட்ட சாளரமாகும்

கூரைதனை தாங்கி நிற்கும்

ஏணியாய் மாறி மேலேற உதவும்

கோவில் வாசலில்

கடவுளர் உருவமாகி

வண்ண விளக்குகளில் மின்னி ஒளிரும்

ஞாலத்திலிருந்து

விடைபெறும் நாளில்

தூக்கிச் செல்லவும் உதவும்.


மனிதா,

மூங்கில் போல்

வாழ்வில் ஓங்கியுயர்தல்

வளர்ச்சியைக் காட்டும்.


மூங்கில் போல்

பிறருக்குப்

பயன்பட்டால்

நேயத்தைக்

கூட்டும்.


*மூங்கில் தின வாழ்த்து*


- ஸ்ரீவி


----------------

 உலக மூங்கில் நாளில்... 


ஓங்கி எம் சிந்தனை  உனைப் போல் வளரணும்

   ஒன்றாக இருப்பதையும் உன்னிடம் கற்கணும்


தாங்கிப் பொருளை தூக்கிச் செல்ல உதவுவாய்

   தரை இருப்பாரை மேலே ஆசிரியராய் ஏற்றுவாய்


தூங்க நிழல் தந்து சோம்பலை ஊக்குவதில்லை

   துளையிட்ட குழலாய் மயக்கத் தவறியதில்லை


மூங்கிலே ! உன் நாளாம் உலகம் இன்று கொண்டாடுது

   மூச்சு போனவர்க்காக நாளும் உனை துண்டாடுது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Tuesday, September 17, 2024

கவியரங்கக் கலந்துரையாடல்

 கவியரங்கக் கலந்துரையாடல்


கவியரங்கம் பற்றிய முதல் கலந்துரையாடல்

   கன்னித் தமிழ் நேசி திரு. தியாகராசன் வீட்டில்


செவிக்குணவு வரும் முன் அவர் இணையர் தந்தது

   சிவக்கப் பொரிந்த வடை, காஃபி என்பது


தவிக்க வைக்கும் தலைப்புகள் சிலவாம்

   தமிழுக்கே உரிய " ழ " அனைத்திலாம்


புவியில் ஏதுமுண்டோ சாத்தியப் படாதது? 

   புரட்சி பாரதி பிள்ளைகளால் ஆகாதது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Monday, September 16, 2024

மாளயம்

 மாளயம் நாளை முதல்... 

   

புரட்டாசி அமாவாசை,  தேய்பிறை, பிரதமை முதல்

   பூமி வரும் முன்னோரின் மாளயம் ஆரம்பம்


திரளாக வருவார் தெரிந்தோர், தெரியாதோர்

   தெய்வங்களாய் வாழ்த்துவர், வழி நடத்துவார்


அரிசி, எள், நீரில் அன்னார்க்கு விடும் தர்ப்பணம்

   அதுவே போதும் அடைவர் அளவிலா ஆனந்தம்


பரிசாக நாம் செய்த பாவங்கள் தொலையும், 

   பாலகன் தவழும், *பதினாறும் பெருகும்


துரித உணவுகள் இந்நாளில் தவிர்க்கவும்

   தூரத்திலிருந்து வந்த கேரட், பீட்ரூட்டும்


உரியும் வெங்காயம், பூண்டும் வேண்டாமே

   உள்ளூர் வாழை, அவரை, கொத்தவரை உண்போமே


*பரியாம் பந்தல் ஏறும் பாகற்காய், புடலை

   பசியாரப் போதும் பதினாறே நாளும்


உருளைக் கிழங்கு, பூரி நாவது கேட்கும்

   " உரிப்பேன் தோலை " என மிரட்டி வையும். 


*பதினாறு செல்வங்கள், குதிரை


__  குத்தனூர் சேஷுதாஸ்

முத்தே முத்தமிழே

 முத்தே  முத்தமிழே மூத்தவளே  மூழ்கடித்தவளே


மாற்றத்தை ஏற்றவளே மாறாத இனிமையுடையவளே


செழுமை மிக்கவளே  அனைத்திலும் தடம்பதித்தவளே


எண்வடிவைக் கொண்டவளே எண்ணில் வசிப்பவளே


ஜி. யூ. போப் கால்டுவெல் ஜோசப் பெஸ்கி தொடர்ந்து


நின்னை யாவரும் மொழிவதில் வியப்பில்லை


என்றும் இளமைப்புதுமையுடன் வளம் வருகிறாய்!


எட்டையப்புர மன்னர் எட்டப்பபூபதி அவைப்புலவர்


அமுதக்கவி இசுலாமியக் கம்பர் தமிழ்ப்புலவர்


ஆதரித்தவன் சீதக்காதி வள்ளல் *தமிழன்* உமறுப்புலவர்


படைப்புகள் சீதக்காதி தொண்டி நாடகம் 


முதுமொழி மாலை சீறாப் புராணம்


அறிவீரோ தமிழன்னை இனம்கடந்து அமுதூட்டியவள்...


- சுல்தானா

அன்புடன் வாழ்ந்து பயிர்

 மலர்ந்து வந்தது காலை,  

மலர்கள் புன்னகை சுமந்து,  

பறவைகள் பாடும் பாட்டு,  

புது நாளை வரவேற்று.


நதி ஓடும் நிசப்தத்தில்,  

நிம்மதியும் வந்து சேரும்,  

பூமியின் வாசம் மெல்ல,  

புதுத் தொடக்கத்தைக் கூறும்.  


இன்றையது இனிய நாள்,  

இயற்கையின் இன்முகம்,  

அழகே வானம் தழுவ,  

அன்புடன் வாழ்ந்து பயிர்


- தியாகராஜன்

மேகமாய் வாழ்க்கை.......

 மேகமாய் வாழ்க்கை.......


மரங்கள்தான் தர வேண்டுமென்பதில்லை. சில சமயங்களில் மேகமும் தருவதுண்டு.... நிழல்


மிதமாய் மிதந்து செல்லும். 

வெண்மையானால் நிழல். சிறிது கருத்தால் மழை.


மலைகளில் படரும் வெண்மேகம் தரும் நிழல் கருமையாய்.....

மேகமில்லா வெறுமை வெயிலாய் வெண்மையாய் 


வெண்மேகம் நகரும்..... நிழலின் கருமை. குதூகலிக்கும் மனம், கருமையாகி  மழை பொழிந்தால் நிழல் தேடி ஓடும்.

முரண்பாடுகள் முட்டி நிற்கும்.


மழையும் நிழலும் மாறி மாறி...

மேகம் ஒன்றே


முரண்பாடுகளே முறையான வாழ்க்கையாகியதால்.....

நிறத்தினை அறிந்து நிழலைத் தேடு. 

நிம்மதியான நித்திரை நிதர்சனமாகும்......


அகல்யா

Sunday, September 15, 2024

ஆண்டு விழா - வாழ்த்துப் பா

 பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் - பல்வகை விழாக்கள்- 

வாழ்த்துப் பா…….

எத்திசையும் புகழ் மணக்கும் எட்டைய புரச் செம்மல்! மகாகவி பாரதியின் பெயராலே மகாதமிழுக்கு ஒரு சங்கமுண்டு! பூர்வாவில் இது பூத்ததையா! பூவுலகே இதைப் போற்றுதையா! வாழிய வாழிய வாழியவே! வளர்பிறையாய்ச் சங்கம் வாழியவே!


எத்திக்கும் புகழ் மணக்கும் நித்திக்கும் தமிழ்த் தாசர்! திருமலை மேல் உதித்த திரு வளர் 'வெங்கடேசர்!' தலைமைக்கும் நன்றிக்கும் தகைசால் உரை தந்தார்! வாழ்த்தி யானும் மகிழ்கின்றேன்! வாழிய நீர் பலநூறாண்டு!


சிறப்பித்த சிலம்பாட்டம் சித்திரமாய்ப் பதிந்ததையா! வாழட்டும் சிலம்பாட்டம்! வாழ்த்தட்டும் தலைமுறையாய்!


சிறப்பாக உரை பெய்து சிறப்புமிகு விருந்தினர்க்கு மல்லிகைப்பூ சொற்களாலே வில்லாய் வளைந்து வாழ்த்துகின்றேன்!.


எட்டில் தொடங்கிய நிகழ்வு எண்பதில் முடிந்த நிறைவு! திரை இசைப் பாடல்களோ திரை இட்டன நித்திரைக்கு! புத்திக்குள் உண்ணப்படும் தேனாய்ப் புறப்பட்டுக் கரவொலி மீட்டின! தொகுப்பாளர் மலர்விழியார் தொகுப்புரையோ மலர்க்கிரீடம்! வளரட்டும் நூறாண்டு! வாழட்டும் நிறையாண்டு!


சங்கத்து நல் பொருளராம் 'சன்' தொலைக் காட்சியின் நெடுந் தொடர் நடிகருமாம்! கடும் உழைப்பால் வாழுநராம்!


ஒரு பக்கம் சாராப்


பெரும் புகழ் 'சாய்ராம்!' விழா நிகழ்வின் நல் கதா நாயகராம்! முதலாம் ஆண்டு விழா முத்தாய்ப்பாய் இருந்தமைக்குப் பேரறிவாளர் இவர்தம் பெருத் தொண்டே காரணமாம்! மின்னணு சாதனங்கள் நமக்குக் கண்ணின் கருவிழியாய் - வரமா? விண்ணின் பேய் மழையாம் - சாபமா? பட்டி மண்டபத்தைப் பாங்குடனே ஒட்டியும் வெட்டியும் பேசி, மணக்கும் தமிழாலே, பருக இனிக்கும் சுவை தந்தார்! ஈர்க்கும் கடலலை போல் ஈரணியர் சொற்போரில் ஈர்த்துவிட்டார் நம் மனத்தை! போற்றுதல் நிறைந்த கலைமாமணி ஆற்றலால் நமை வென்று விட்டார்! வரமாம் அவர் வருகைபோல் தரமான தம் முடிவாலே! செந்தமிழின் சொற்சுவையாய்ச்


செம்மாந்து நீவிர் வாழியவே !


நன்றியுரை நிகழ, நாளின் விழா


நனிதிகழ் நாட்டுப் பண்ணுடணும்


நல்லுணவுடனும் இனிதே முடிய.


நல்லுணர்வுடன் கலைந்த நம்மவர்க்கு...


'வாழ்த்துப் பா'வழங்குகின்றேன்


முல்லைப் பூ சொற்களாலே


முகம் மலர்ந்து வாழ்த்துகின்றேன்!


ஆவாரம் பூ சொற்களாலே


அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்!


வாழிய!வாழிய! பல்லாண்டு!


வையைத் தமிழாய் நிறையாண்டு


- ராஜா முஹம்மது



Saturday, September 14, 2024

உலக தாத்தா பாட்டிகள் தினம்

 பாட்டி, தாத்தா தினத்தில்... 


கூட்டுக் குடும்பம் அன்று கொடி கட்டிப் பறந்தது

   குஞ்சுகள் ஐந்தாறு வீடுதோறும் இருந்தது


பாட்டி, தாத்தா கையில் செங்கோலும் இருந்தது

   பாசம், கண்டிப்பு பாம்புகளாய் பிணைந்தது


காட்டி நிலவை பாட்டி சோறும் ஊட்டுவாள்

   கதைகள் சொல்லி பிள்ளை கற்பனை வளர்ப்பாள்


ஆட்டுக்கல் சுழற்றுவாள், அம்மிக்கல் உருட்டுவாள்

   அடுத்து, அடுத்து என அழகாய் திட்டமிடுவாள்


தோட்டத்தில் மூக்கிரட்டை தாத்தா அறிமுகம் செய்வார்

   தோளில் உட்கார வைத்து ஜல்லிக்கட்டு காட்டுவார்


மாட்டுத் தொழுவத்தில் கால்நடை பராமரிப்பு

   மாலை கோயிலுக்கு போவதும் நிற்காது


" தீட்டு புத்தியை, கத்தியை அல்ல " என்பார்

   திருவிழாவில் கமர்கட், கரும்பு வாங்கித் தருவார்


வீட்டுக்கு அவசியம் பாட்டி, தாத்தா வேண்டும்

   வீணாகாமல் குழந்தைகள் காக்கப் பட வேண்டும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

------------------------------ 

உலக தாத்தா பாட்டிகள் தினம்.

---------------

அன்பு மயமான உலகைக் காட்டிய

மனித தெய்வங்கள்


பொக்கை வாய் சிரிப்பினாலேயே

மனம கவர்ந்த தாத்தா


தள்ளாத வயதிலும்

நளபாகமாக சமைத்து

தன் நடுங்கும் கையால் 

எமக்கு ஊட்டி விட்ட 

அன்னபூரணி பாட்டி


ஒருவருக்கொருவர்

துணையாய் ஒரு குடைக்குக் கீழ் செல்லும்அன்பினால்

ஒன்றாக இணைந்த உள்ளங்கள்


கை வைத்தியம் பார்த்தே வியாதிகளை ஓட்டி விட்ட பாட்டி

மருந்தை விட கரிசனமே நோயைப்

புறமுதுகிட்டு ஓடச்செய்யும்!


கதைகள் பல சொல்லி

பாரம்பரியத்தை உணர வைத்த தாத்தா


இவர்கள் சண்டையிட்டாலும்

ஒற்றமையில்தான் முடியும்!


காலம் பல கடந்தாலும்

கண்களைப்பனிக்கச்

செய்யும்குல முன்னோடிகள்


- இ.ச.மோகன்


------------------------------

 தாத்தா பாட்டி இருக்கும் வீடு

பூவுலக சுவர்க்கம்

என்பதைப் பாடு


வளரும் குழந்தைகள்

வழி மாறிப் போகாமல்

வாஞ்சையோடு வழி காட்டும்

கலங்கரை விளக்கம் அவர்களே


கதை சொல்லி நீதி சொல்வார்

கைவைத்தியமும் நலமாய்ச் செய்வார்

விளையாட்டுத் தோழன் ஆவார்

கற்பிக்கையில் நல்லாசான் ஆவார்


அன்போடு பண்பும் வளர

அருமையான தாத்தா பாட்டி

அகமகிழ்வோடு இருக்கும் வீடே

நல்லதொரு பல்கலைக் கழகமாகும்.


போற்றிடுவோம் இருவரையும்

வளர்த்திடும் நல் விழுமியங்களை!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

-------------------------------------

Thursday, September 12, 2024

வல்லினம் மிகுமா?

 வல்லினம் மிகுமா? 


" குழுவாய் ", " பெறுவோம் " இங்கு வல்லினம் மிகுமா? 

  கொளுத்திப் போட்டது நான் தான் போதுமா? 


பழமாய் நினைத்து பறவைகள் பல வந்தன

   பாதியில் அம்போவென விட்டுப் பறந்தன


அழகாக நடுநிசி அம்புட்டும் பகிர்ந்த (சண்முக சுந்தரம்) ஐயா

   ஆனாலும் குட்டையது தெளியவில்லை மெய்யாய்


கழுவித் துடைத்தது போல் எல்லாம் மறந்தது

   காத்திருந்த கனவழைக்க கண்ணும் மூடியது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்

Tuesday, September 10, 2024

மகா கவி பாரதி

 மகா கவி பாரதி

-----------------

கவிதையும் நாட்டுக்குழைத்தலும்

தொழிலாகக் கொண்டவர்

இமைப்பொழுதும்

சோராதிருப்பார்

எமது முண்டாசுக் கவிஞர்.


நம்நினைவை விட்டு 

நீங்கினால்தானே

நினைவு தினம் என்று

கொண்டாடு வதற்கு?


நாவிலும் நெஞ்சிலும்

என்றென்றும் நினைந்திருப்பவரை

தினமுமே போற்றிக்கொண்டாடுவோம்.


இன்று அவர் இருந்தால் சிறுமை கண்டு சீறி எழுந்தாலும்

இன்றையப் புதுமைப்பெண்களைக் கண்டு பெருமிதமும்

கொண்டிருப்பார்.


- இ.ச.மோகன்


------------------------------

 மகாகவி..

பா(டல்)க்களுக்கு அழகு சேர்த்த,

பா - ரதி !


பா-ரதி-யாரென 

பார்(உலகம்) -அதிர,

பாரதி(சரஸ்வதி) தந்த

பா-ரதி அவர்.. 


அவர் நினைவில் ,

மதியால் விதி வெல்ல ,

இனியொரு விதி செய்வோம்..


- இலாவண்யா


பாரதியின் நினைவில்...

 பாரதியின் நினைவில்... 


மண்ணில் நம் பாரதமே மகத்தான தேசம் என்றாய்

   மறைகள், மற்றவை பல கண்டிங்கு வியந்தாய்


கண்ணில் வெள்ளையரை விரல் விட்டாட்டினாய்

    காலன் முன் கால் காட்டி  நாராணன் என மிரட்டினாய்


பெண் விடுதலை உண்மையாக விரும்பியது நீ தானே

   பெயருக்கு பேசித் திரியும் போலிகள் பலராமே


தண்ணிலவாய், தெள் தேனாய் தமிழைச் சுவைத்தாய்

   தரணியில் அதற்கு இணை வேறிலை என்றாய்


பண்கள் பல நூறால் தண் தமிழை அர்ச்சித்தாய்

   படகு ஏறி, சிந்து மிசை பாரதத்தை சிலாகித்தாய்


வண்ணம் அதில் உனக்கு கருமை தான் பிடிக்கும்

   வாயார கண்ணன் பாட்டு, குயில் பாட்டு சொல்லும்


உண்ண உணவின்றி உன் வாழ்க்கை இருந்தது

   உணர்ச்சி, தோற்றம், மீசை அதை பொய்த்தது


அண்ணலே! பாரதி! அவசரமாய் சென்றதெங்கே? 

   ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் இங்கே. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


-----------------

 உந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய

செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாய்ந்ததுன் காதினிலே!


தேடி சோறு நிதம் தின்று

பல சின்னஞ் சிறுகதைகள் 

பேசும் பல வேடிக்கை மனிதரைப் போல

நீ வீழ்ந்திடாமல்

நீ உதித்த தேசம்

பரங்கியரின் கைகளில்

சிக்குண்டதை எண்ணி

வெந்து தணியா உன்

மனம் அக்கினிக் குஞ்சென

வந்தேமாதரம் வந்தேமாதரம்

என்று அறைக்கூவல் 

விட்டதன்றோ!


நாடு காக்க 

பாஞ்சாலி போல் 

சபதம் பூண்ட நீ

குயிலின் துயரையும்

கேட்டாய் !

கண்ணனை உன் கண்ணம்மாவாகவும் ஆக்கிக் கொண்டாய்!

 

ஆணாகப் பிறந்தும்

கற்பு நெறியை

இரு பாலருக்கும்

பொதுவில் வைத்தாய்!

ஆணுக்கிங்கே நான்

இளைப்பில்லை 

என்று கும்மியடித்துப் புரிய வைத்தாய்!


போனதெல்லாம் கனவினைப் போல்

புதைந்தழிந்தே போனதனால் 

நீயும் ஓர் கனவா???!!!!

அல்ல!!! அல்ல!!!

உன் படைப்புகளில்

என்றென்றும் வாழ்வாய்!

அழிவற்ற நம் தமிழ் வாழும் வரை!!!


- சங்கீதா

--------------------------

 *பாரதி நினைவு நாளில் மன ஓட்டம்*


*எதுகை மோனை ஏதும் அறிகிலேன்* யான் 

*எது கை வருமோ அதுவே எதுகை* என்பேன் 


மலைக்கும் *பாரதி*

முதிர்ந்த 

மழலைக்கும் *பாரதி*


கற்றாற்கும் *பாரதி*

கற்றிலார்கும்  *பாரதி*


மங்கையர்கும் *பாரதி*

மணாளனுக்கும் *பாரதி*


வீரத்திற்கும் *பாரதி*

விவேகத்திற்கும் *பாரதி*


விர சுதந்திரத்ற்கும் *பாரதி*

விறுநடை போடவைத்தான் *பாரதி*


முதல் படைப்பு தவறு இருப்பின்.....

- திருவீழிமிழலை ஸ்ரீனிவாசன்

-------------------------------


Saturday, September 7, 2024

விநாயகர் சதுர்த்தி நாளில்...



கோலம், குதூகலம் நிரம்பி இங்கு வழிந்தது

   கொழுக்கட்டை பிரியர் விநாயக சதுர்த்தி அது


ஆலமரமாய்த் தழைத்த அரச மரம் கீழே

   ஆநந்தமாய் அருளும் ராஜ விநாயகரே


காலை விடியலில் தொடங்கியது ஹோமம்

   காஃபி நினைவே வரவில்லை ஏனாம்? 


பால், தயிர், தேனென அபிஷேகம் பலவாம்

   பாடல், அலங்காரம், அர்ச்சனை வேறாம்


மாலையில் வேத பாராயணம் ஒலித்தது

   மன்னர் விநாயகர் கோலம் சந்தனத்தில் ஜொலித்தது


தோளில் ஏந்தியவாறு வீதி உலா புறப்பட்டது

   தொண்டை வீச்சு காட்டிய ஹரீஷ், மற்றவர் பாட்டு


வால் கொண்ட அனுமன் வண்ணங்களில் மின்னினார்

   "வருவேன் நானும் ஒருநாள் வீதிவுலா" எண்ணினார்


சாலையில் மக்கள் வெள்ளம் கரை புரண்டது

   சுண்டல், சர்க்கரைப் பொங்கல் கையைச் சுட்டது. 


__  குத்தனூர் சேஷுதாஸ்


பரிதாபமாம்


கூட்டுக் குடும்பத்தில் கடைசி இடமாம்

   குத்து விளக்கு என்று குத்திக் காட்டுமாம்


மாட்டுப் பெணென்று மற்றொரு பெயராம்

   மாட்டி வர வேண்டும் இதன் பொருளாம்


காட்டும் படத்தில் ஒரே பெண் என்றால்

   கண்டிப்பாக அது இவள் இல்லையாம்


பாட்டுக்கொரு புலவன்  உயர்த்திப் பிடித்தும்

   பாவம் மனைவி நிலை பரிதாபமாம்.


__  குத்தனூர் சேஷுதாஸ்


-------------------------------------------------------

Friday, September 6, 2024

அன்னையும் பண்டிகைகளும்

 ★०★०★०★०★०★०★०★०

*அன்னை எப்போது சாப்பிடுவாள்...!*

★०★०★०★०★०★०★०★०


பண்டிகை ஒன்று வந்து விட்டால்

கொண்டாட்டங்கள்

சேர்ந்து வரும்

உண்டு மகிழ்ந்து இருந்திடவே

கொண்டு வருவாள்

நம் அன்னை.


தும்பிக்கையானை துதித்திடவே

கொழுக்கட்டையும் செய்திடுவாள்

சக்கரை நோய் தாத்தாவிற்கு

உப்புக் கொழுக்கட்டை

உடன் வருமே


கருக்கலில் எழுந்து

சமையல் செய்து

வாய்க்கு உருசியாய்

நாம் உண்ண

தேனீ போல பணி செய்வாள்

பெரியவர்களோடு

குழந்தைகளை


அமர வைத்துப் பரிமாறுவாள்

ஆற அமர நாம் உண்ண

அழகாய் விருந்து படைத்திடுவாள்


அதெல்லாம் சரி..


*அன்னை எப்போது சாப்பிடுவாள்..?*


- ஸ்ரீவி


-----------------------

 பிள்ளையாருக்கு படைப்பதைவிட....

யார் பிள்ளைக்கும் அன்புடன் ஆக்கி படைப்பவளே.....


அன்னை அன்றோ

🙏 சாயி 🙏


-----------------------------

தாய்/ தந்தை..இக்கால தந்தையை எண்ணி எழுதியது

------------------------------------------------------------------------------------

 உள்ளம் துள்ளும் வரும் பண்டிகை  காலம்


விருந்து படைக்க சந்தையே வாங்கி வருவீர்


சிறார் விரும்பியதைத் தேடித் தேடிப் பிடிப்பீர்



பெரியோர் தேவையை அறிந்து பூர்த்தி செய்திடுவீர்


விருந்து சமைக்க துணைக்கு துனண  நிற்பீர்


அனைவரின் உள்ளமும் உயிரும் ஒன்றாய் மகிழ்ந்திட


எங்கள் கொணடாட்டத்தையே கொண்டாட்டமாக கொள்ளும் நீயும் அன்னையே!


- சுல்தானா


-------------

 கோகுலாஷ்டமியா...

மகனே கண்ணன்!

மகளே இராதை!

தலைவாசல் முதல்

பூசை அறை வரை

தன் மகனின்

அரிசி மாவுப் *பாதங்களை* 

அச்சேற்றும் அன்னை அவள்.. 

கணவனல்ல கண்ணன்!


காரடையான்/ கெளரி நோன்பா....

கணவனின் ஆயுள் நீள உண்ணா நோன்பும் நீளுமன்றோ!

கணவனே கண்கண்ட தெய்வமன்றோ!

வாதங்கள் செய்யாமல்

 *பாதங்கள்* தொட்டு

வணங்குவாள் அன்றோ!(அன்று மட்டும்😀)

 

இவள் பெண் அன்றோ!

இவளை முழுமையாகப்

புரிந்து கொண்டவர் 

புவியில் உண்டோ!?



- சங்கீதா


------------------------

 ஒவ்வொரு நாளும் 

ஒவ்வொருவருக்கும் 

பார்த்து பார்த்து 

செய்வாள் அம்மா 


பண்டிகை என்றால் 

கடவுளுக்கும் சேர்த்து 

பார்த்து செய்வாள் 

அம்மா 


பள்ளிக்கு விடுமுறை

அலுவலுக்கு விடுமுறை 

அம்மாவுக்கு அன்று

கூடுதல் வேலை


சில அம்மாக்களுக்கு 

வேலைதான் ஊக்கம் 

முத்தான வியர்வையில் கூட

முகமெல்லாம் புத்துணர்ச்சி


சில அம்மாக்களுக்கு

அயர்ச்சி தான் என்றாலும் 

அன்பாலும் ஆசையாலும்

முகமெல்லாம் மலர்ச்சி 


மலர்ச்சி பழகியதால் 

தெரிவதே இல்லை

அயர்ச்சி ஆசை

ஏக்கங்கள்...


வேலை பகிர்ந்து 

மனதும் பகிர்ந்து 

கொண்டாடும் பண்டிகைகள்

மேலும் சுவை கூடின

பகிர்ந்து பன்மடங்கான

அன்பு வெள்ளத்தால்....


- அமுதவல்லி




Thursday, September 5, 2024

பள்ளிக்கு நடந்து போகும் சுகானுபவம்

 ★०★०★०★०★०★०★०★

பள்ளிக்கு நடந்து போகும் சுகானுபவம்

★०★०★०★०★०★०★०★


வீட்டு வாயிலில் வந்து நிற்கும்

பேருந்தில் ஏறி பள்ளி போகும்

குழந்தைகள் அறிவரோ

காத தூரம் நடந்து போய்

கல்வி கற்ற குழந்தைகளின்

ஆனந்தத்தை!


இரு புறமும் பசேலென வயல்வெளிகள்

ஒரு புறத்தில்

சலசலத்து ஓடும்

நீரோடை

இடையிலே வளைந்து செல்லும் சர்ப்பமாய்

ஒத்தையடிப் பாதை

சாலையோரம் ஓங்கி உயர்ந்து நிற்கும்

விருக்ஷங்கள்

தூரத்தில் விண்ணை முட்டும் மலைச்சரிவு


எறும்புகள் போல் சாரை சாரையாய்

அணிவகுத்து நடந்து போகையில்

ஆட்டம் ஆடி பாட்டுப் பாடி 

குதித்தோடும் மகிழ்ச்சி


இக்காலக் குழந்தைகட்கு கிடைக்குதோ..!?

Wednesday, September 4, 2024

ஆசிரியர் தினம்

 அறிவில் சிறியோரை பெரியோர் ஆக்குவது 

ஆ(சிரியர்).


...🙏 சாய் 🙏

-----------------------------------------

 ●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●

*நல்வழி காட்டும் நல்லாசிரியரே*

*நற்றுணையாவார் மாணாக்கருக்கு*

●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●०●


நாடே போற்றும் உத்தமராய்

நாட்டை உயர்த்தும் நல்லவராய்

உலகம் வியக்கும் வல்லவராய்

இன்றைய மாணவர் ஆவதெப்படி?


மண்ணில் விழும் விதைகள் யாவும்

கனிகள் தரும் விருட்சமாய் முளைக்க

சூரியக் கதிரும் நீரோட்டமும்

இன்றியமையாக் காரணிகளாம்


பள்ளி செல்லும் மாணவரெல்லாம்

பண்புகளோடு வாழ்வில் உயர 

நல்வழி காட்டும் நல்லாசிரியரே

நற்றுணையாகும் காரணியாவார்.


தேர்வில் நல்ல மதிப்பெண் பெற

பாடங்களைக் கற்பிப்பதோடு

நல்லொழுக்கமும் நல் அறமும்

போதிப்பவரே நல்லாசிரியராம்


பாடப் புத்தகங்களையும் தாண்டி

மற்றப் புத்தகங்களையும் வாசிக்கப்

பழக்குவதோடு விவாதம் செய்யவும்

கற்பிப்பவரே நல்லாசிரியராம்


களிமண்ணை சிலைகளாக்கும்

உளிகொண்டு

சிற்பம் வடிக்கும்

அற்புத சிற்பிகள்

ஆசிரியர்களாம்.


வைரங்களை பட்டை தீட்டி

ஜொலிக்க இவர்கள் வைத்தாலும்

ஏற்றி விட்டு அழகு பார்க்கும்

ஏணிகளாக இருந்திடுவார்

ஆற்றைக் கடக்க உதவி செய்யும்

தோணிகளாக 

உதவிடுவார்.


சாதி மத இன மொழி பேதங் கடந்து

யாதும் ஊரே யாவருங் கேளிர் என

விளையும் பயிருக்கு நன்னீர் ஊற்றினால்

ஞாலம் போற்றும் ஆசிரியர் அவரே!


மொத்தத்தில் சமூகம் தழைக்க

நற்றுணையாவது நல்லாசிரியரே!


இக்குழுவிலுள்ளோரை செதுக்கிய ஆசிரியர்களுக்கும்,

இக்குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும்

*ஆசிரியர் தின நல் வாழ்த்துகள்*


*உங்கள்_தோழன்_ஸ்ரீவி*

----------------------------------

 வேண்டுவது நல்வழி காட்டி கற்பி

கல்லை  அற்புத சிலையாக்கும்  சிற்பி


ஆசிரியர் வழி நடக்கும் மாணவர்கள்

நிச்சயம் வெற்றிக்கு தகுதியானவர்கள்


ஒழுக்கம் ஊக்கம் நற்பயிற்சி

ஆதலால் அடைவது மேன்மேலும் வளர்ச்சி


பாடங்கள் பற்பல கற்று தந்தார்

மதிப்பெண்களுடன் மதிப்பைப் பெற்று தந்தார்


அடிக்கடி வலியுறுத்துவது நன்றாக படி

வாழ்வில் உயர வைக்கும் ஏணி படி

ஆரம்பத்தில் வருகிறோம் வெற்று பத்திரமாய்

சரித்திர நூல்கள் ஆக மாற்றுவீர் பத்திரமாய்


செப்டம்பர் 5 கொண்டாடும் ஆசிரியர் தினம்

உண்மையில் கொண்டாட படவேண்டும்  தினம் தினம்


ஹரிஷ்

வாயூறும் வடாம்

 வாயூறும் வடாம் 


பட்டை உரியும் வெயிலதன் தொடக்கம்

   பாட்டி, அம்மாவின் கைகள் பரபரக்கும்


மொட்டை மாடி அது சுத்தமாகக் படும்

   முதல் நாளே ஜவ்வரிசி  பிரண்டை  வரும்


பட்டாக வெள்ளை வேட்டி விரிக்கப் படும்

   பாதுகாப்பு நடவடிக்கை ஏற்பாடாகும்


வட்டமாய், நீளமாய் வடிவங்கள் பெறும்

   வட்டமிடும் காக்கைகள் விரட்டப் படும்


தொட்டு விடத் துடிக்கும் அணில்கள் சுற்றும்

   துரத்தும் போது காலடிகள் பதித்தோடும்


கட்டுப்பாடாய் இருந்த வாயும் தோற்கும்

   கணக்கிலா மாவால் வயிறு வலிக்கும்


சட்டென விருந்தினர் வர கை கொடுக்கும்

   " சாப்பாடு பிரமாதம் " சான்றிதழ் கிடைக்கும்


துட்டு தந்து வாங்குகிறார் இந்நாளில் கொஞ்சம்

  தூக்கிக் கொண்டு காகம் போகுமே அதிகம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

வாயூறும் வடாம்

 கோடை வந்தால் கதிரவன் காய்வான்

மொட்டைமாடி வெயிலிலே வத்தல் காயும்

அரிசி மாவு வடாமாய் மாறும்

வெள்ளைத் துணியை வாகாய் விரித்து

காற்றில் பறக்காதிருக்க முனைகளில் கற்களை வைத்து

கோலம் போட புள்ளிகள் வைப்பது போல்

ஜவ்வரிசி வடாமைக் கையால் வைத்து

பிழியும் அச்சில் மாவைப் போட்டு 

ஓமப்பொடியும், ரிப்பன் வடாமும்

பக்குவமாய்ப் பிழிந்து

கொத்தித் தின்ன பறந்து வரும்

காக்கைகள் விரட்ட கம்பு எடுத்து சுழற்றி விரட்டி

உச்சி வெயிலில் காயும் வத்தலுடன்

தானும் காய்ந்து

மாலை வந்ததும் 

பத்திரமாக மடித்து வைத்து


நான்கைந்து நாட்கள்

காயவைத்து

நன்றாய்க் காய்ந்ததும்

துணியிலிருந்து பிரித்து எடுத்து

தகர டின்களில் நன்றாய் அடைத்து

நாள்பட வைப்பர் 

நமது அம்மாக்கள்


பிறிதொரு நாளில் எண்ணெயில் பொரித்தால்

நான்கு வீதிகள் முழுதும் மணக்கும்

மொருமொருவென வடாம் இருக்க

சாப்பிடும் உணவோ நான்கு கவளம் 

அதிகம் இறங்கும்.


அடுக்குமாடி குடியிருப்பில்

சாத்தியமோ இதெல்லாம்?


- ஸ்ரீவி



-------------------------------

 வாயூறும் வடாம் 


பட்டை உரியும் வெயிலதன் தொடக்கம்

   பாட்டி, அம்மாவின் கைகள் பரபரக்கும்


மொட்டை மாடி அது சுத்தமாகக் படும்

   முதல் நாளே ஜவ்வரிசி  பிரண்டை  வரும்


பட்டாக வெள்ளை வேட்டி விரிக்கப் படும்

   பாதுகாப்பு நடவடிக்கை ஏற்பாடாகும்


வட்டமாய், நீளமாய் வடிவங்கள் பெறும்

   வட்டமிடும் காக்கைகள் விரட்டப் படும்


தொட்டு விடத் துடிக்கும் அணில்கள் சுற்றும்

   துரத்தும் போது காலடிகள் பதித்தோடும்


கட்டுப்பாடாய் இருந்த வாயும் தோற்கும்

   கணக்கிலா மாவால் வயிறு வலிக்கும்


சட்டென விருந்தினர் வர கை கொடுக்கும்

   " சாப்பாடு பிரமாதம் " சான்றிதழ் கிடைக்கும்


துட்டு தந்து வாங்குகிறார் இந்நாளில் கொஞ்சம்

  தூக்கிக் கொண்டு காகம் போகுமே அதிகம். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

--------------------------------------------

 முழிச்சு பாக்கும் ஜவ்வரிசி..

முழுசா கரைந்த பச்சரிசி..

உப்பு காரம் ஊற ,

சூடாகி பளபளப்பாய்  மாற 

எலுமிச்சையும் அதனோடு சேர,

நாவிலதன்  ருசியே வேற..


கரண்டி வரைந்த ஓவியம்,

சுவையில் அதுவொரு காவியம்.. 

துணியெங்கும் குட்டி வட்டநிலா,

காணவந்ததோ கதிரவன் உலா..


பகல்நிலவைக் கண்டு ரசித்தேன்,

வெய்யிலதனை வாட்ட , துடித்தேன்..

நாவில் நீர் சுரக்க,

நிலவை அதில் வைத்தேன்..

பூமியின் நிலவுகள் செவ்வாயில்,

கோபத்தில் கதிரவன், உச்சிவெயில்..


வந்தாள் அன்னை..

எண்ணிக்கை குறைந்ததேன் என்றாள்!!!

எண்ணிஎண்ணிக்  குறைந்தது என்றேன்..


(இவ்வளவு இருக்கே..ஒன்றைத் தின்றால் என்ன என எண்ணி எண்ணி - counting and thinking.. ஒவ்வொன்றாய்க் குறைந்தது..)


- இலாவண்யா

Monday, September 2, 2024

ஐந்திணை கவிதைகள்

ஐந்திணை கவிதைகள் - ஸ்ரீவி

 குறிஞ்சித் திணையெனில்

மலையும் மலை சார்ந்த இடமுமாம்

- அது அன்று.

மலையுடைக்கும் குவாரிகளும் குவாரிகள் மட்டும் உள்ள இடமுமாம்.

- இது இன்று.

 

முல்லைத் திணையெனில்

காடும் காடு சார்ந்த இடமுமாம்

- அது அன்று

முழுதாய்த் துறந்த சத்குருக்களின் மையங்களும் அவை சார்ந்த இடமுமாம்

- இது இன்று

 

மருதத் திணையென்பதோ

வயலும் வயல் சார்ந்த இடமுமாம்

- அது அன்று

வீட்டுமனை லேஅவுட்டுகளும்

அவை மட்டும் இருக்கும் இடமாம்

- இது இன்று

 

நெய்தல் திணையோ

கடலும் கடல் சார்ந்த இடமுமாம்

- அது அன்று

ஆலைக் கழிவுகளும், அமிலக் கழிவுகளும் சங்கமமாகும்

சேமிப்புக் கிடங்கான இடமாம்

- இது இன்று

 

பாலைத் திணையென்பது

மணலும் மணல் சார்ந்த இடமுமாம்

- அது அன்று

டிப்பர் லாரிகளில் மணல் சுரண்டி

விற்கும் மாஃபியாக்களின்

அமுத சுரபி போன்ற இடமாம்

- இது இன்று

 

ஐந்திணைகளின்

அர்த்தத்தினை இக்கால

ஜந்துக்கள் புரட்டி போட்ட

கொடுமை பாரீர்!

 

இயற்கையை சீரழித்து

அதனது சீற்றத்துக்காளாகி

நிலநடுக்கம், சூறாவளி, சுனாமி

என பேரழிவில் தள்ளாடும்

நிலைமை காணீர்..

 

ஓஸோனில் ஓட்டையோ

புவிச்சூட்டின் கடுமையோ

காடுகளின் பெருந்தீயோ

காரணம் நாம்தானென

 

உணர்ந்து நாமும் திருந்தாவிட்டால்

வருந்தும் நிலையே வந்திடுமே

மகிழ்ந்து வாழ வேண்டுமெனில்

திருந்தி நாமும் வாழ்வோமே

இயற்கையைப் பேணி காப்போமே

-----------------------------------

 ஐந்திணை கவிதைகள் - அமுதவல்லி

இயற்கையை

அறிந்த மனிதர்கள்

நிலம் ஐவகை என்றனர்

வாழ்வியலை இணைத்து

ஐந்திணை என‌ப்

 பண்பாடினர்

வாழ்க்கை கொண்டாட்டமானது

 

இயற்கையை

அரித்த மனிதர்கள்

சுயநலமாக வாழ்ந்து

மண்ணுலகை வருத்தி

நானிலமும் பாலையாக

பாழ்செய்ய

வாழ்க்கை திண்டாட்டமானது


*****************************************************************************

மலையைத் தெய்வமாகக்

கொண்டாடி வளம்காக்க

மழை பொழிந்தது

மரங்கள் வளர்ந்தன

மலை தான் என

பந்தாடுகிறான் மனிதன்

மண் சரிந்தது

மரங்கள் வீழ்ந்தன

குறிஞ்சி நிலம் ...

நஞ்சென மாறுமோ?

 

 

மானுண்டு மயிலுண்டு

மந்தியுண்டு களிறுண்டு

வனவளம் மிகுதி உண்டு

மனிதன் ஆசை கொண்டு

அளவுக்கு மீறிக் கொண்டு

முல்லை நிலம்...

இல்லை என்றாகுமோ?

 

பசுந்தாவரங்கள் சிலிர்த்தாட

ஆவினங்கள் அசைபோட

நீரோடைகள் நிறைந்தோட

செழித்து மலர்ந்திருக்க

அழித்துப் பார்க்கிறான் மனிதன்

மருத நிலம்...

கருகிடுமோ அதன் வளம்?

 

 

கடலின்றி பூமியில்லை

அதன் அழகுக்கோர் எல்லை இல்லை

பல்லுயிர் வாழும் உலகமது

காற்றும் அலைகளும் சொன்னால்தான்

காலங்கள் நமக்கு இசைவாகும்

காக்கும் கடல்... மனிதனால்

இன்று குப்பைத் திடல்

நெய்தல் நிலம்...

தொய்வதும் முறையோ?

 

 

திரிந்து வரும் நிலமெல்லாம்

பாலையானால்

பூவுலகின் அழிவன்றோ...

கொற்றவையை வேண்டி‌ நின்றேன்

நகைத்தாள் அவள்

 

சுற்றும் இந்த பூமி

பல்லாயிரம் ஆண்டுகள்

பல்லுயிர்களைக் கொண்டது

பூமகளுக்குத் தெரியும்

தன்னைக் காத்துக்கொள்ள

 

வளங்களைக் காத்தால்

மனிதகுலம் வாழும்

வளங்களை அழித்தால்

மனிதகுலம் அழியும்

 

பெருமழையொன்றில்

தன்னை மீட்டுக் கொள்ளும்

ஆற்றைப் போல்

பூமி தன்னை மீட்டுக்கொள்ளும்

 

நீ அழித்துக் கொண்டிருப்பது

உன் இருப்பிடத்தை அல்ல

உன் இருப்பை...

நீ மீளும் வழி உன் கையில் ...

என்றே சிரித்தாள் அன்னை


 

-------------------------------------------------------

 ஐந்திணை கவிதைகள் - சங்கீதா


குறிஞ்சி

மண் சரிஞ்சி(சரிந்து)   முறிஞ்சி(முறிந்து) போச்சி! (போச்சு)

 

முல்லை இல்லை

என ஆச்சு!

வில்லைகளாகி "வில்லா"க்கலாச்சு!

 

மருதம் மாறிப் போச்சு!

வயல்கள் மாயமாச்சு!

நீர் வற்றிப் போச்சி

தண்ணீர் லாரி சாட்சி!

 

நெய்தலில் சுனாமி

பாய்தல் ஆச்சு!

மீன் வயிற்றிலும்

நெகிழி போச்சு!

 

பாலை மேலும்

கண் படலாச்சு!

சுரண்ட ஏதும் கிடைக்குமா என்று

ஆராய்ச்சி நடக்கலாச்சு!

 

திரிந்த என் சொற்கள்

போல...

ஐந்திணை திரிந்தும்

திருந்தாத திருத்தாத உயர்திணை...

அஃறிணையாக

திரிஞ்சி போச்சி!

 

ஐந்திணை மரபு

எப்போதும் சிறப்பு!

உணராமல் போனால்

வாழாதே பிறப்பு!!!

பாலை (II)

 பாலை - குத்தனூர் சேஷுதாஸ்

பாலைத் திணை

வற்றிய, பயனற்ற நிலமதுவே பாலையாம்

   வாட்டும் வெயில் தான், பல உயிர்கள் வாழுமாம்

 

உற்றுக் கீழ் நோக்கியபடி வானில் வட்டமிடும்

   ஊளையிடும் செந்நாய், கழுகு, பருந்து உறவாம்

 

புற்றும் கரையான் வாழக் கட்டித் தராதாம்

   புதைந்து மணலில் பாவம் பாம்பு வாழுமாம்

 

வெற்றியுடன் பகை முடிக்க முன்னும், பின்னும்

   விடலை, காளை, மறத்தியர் தாம் வழிபடும்

 

கொற்றவையே இந்நிலத் தெய்வம் ஆகும்

   கோபம், குருதி என்பன அடையாளம் ஆகும்

 

குற்றமில்லை வழிப்பறி, கொள்ளை, கொலை இங்காம்

   குலத் தொழில் என்றே கொள்ளப் படுமாம்

 

மற்றுமிங்கே மரா, குரா, பாதிரி மலரும்

   மல்லிகை, முல்லையோ மண்ணாகிப் போம்

 

சுற்றுலாத் தலமாய் இந்நாள் மாறுது பாலையும்

   சுழலும் பூமியில் மனிதன் விட்டானா ஏதும்?


---------------------------------

 பாலை - மோகன்

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்.

 

குறிஞ்சியும் அல்லாது

முல்லையும்அல்லாது

இடைப்பட்ட இரண்டும் கெட்டான் நிலம்.

 

ஆனால் அரபு மக்களின்வாழ்வாதாரம்;நமக்கு எல்லை காக்கும் பரப்பு.

 

இறைவன் படைப்பில்

எந்த நிலமும் வீண் போகாது-ஒட்டகத்தைக் கேளுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டும் பால் தந்து இந்த உண்மையை உணர்த்தும்.

 

பாலையின் கடும் வெயில் நடு அமர்ந்து

அடியார் தமக்கு அருள்

குளுமை செய்யும்

கொற்றவைத்தாய்.

 

மணல் திருடுவோர்க்குசொர்க்கம! அதனால் என்னவோ

இங்கு நன்னிலங்கள்

பாலையாகின்றன?

 

இன்றயப் பாலை வனங்கள் பல ஆயிரமாண்டுகள் முன்

பெரிய நீர் நிலைகளாக

இருந்தன என்ற உண்மை நிலப்பண்புகளை மாற்ற முயலோர்க்கு ஓர் எச்சரிக்கை மணி.


Sunday, September 1, 2024

பாலை (I)

 

பாலை - ஸ்ரீவி


இயற்கையன்னை கொடையாய் அளித்த

நிலப்பரப்பில் வறட்சியின் இருப்பிடம்

வெப்பத்தின் உறைவிடம்

நீரில்லா மணற்பரப்பில்

கானல்நீரே

காணக் கிடைக்கும்

வெப்பக் காற்றில் உடலே தகிக்கும்.

ஈக்கி மணலும்

அனல்போல் எரிக்கும்

யார்யார் வாழ்விலோ பொன்மழை பெய்தாலும்

பாலைவனத்தில் ஒட்டகம் மட்டும் பொதி சுமக்கும்.

 

மதிகெட்ட மனித குலத்தால்

பிற திணைகளும் பாலைகளாகும்

பாலைவனமே உலகம் என்றால்

உயிர்கள் எப்படி

உலகில் வாழும்?


 -------------------------------------

 

பாலை - சாய் ராம்

பாலை நம்மை காய்ச்சி எடுத்தால்-வறட்சி...

பாலை நாம் காய்ச்சி புது மனைபுகுதல்-மகிழ்ச்சி



--------------------------------

காடு இல்லை!

மலை  இல்லை!

குறிஞ்சிக்கும்

முல்லைக்கும்

இடைப்பட்ட

பாழ் நிலமாம் பாலை!

சொன்னதே

சங்க கால ஓலை!

 

உடல் வெப்பமானால் ஜுரம்!

மலையும் காடும்

மழை குறைந்து

மண் வறண்டு

வளி வறண்டு

வெப்பமானால் சுரம்!

நீர் குன்றி

பாலை - சங்கீதா

பசுமை குன்றிய

சுரமதில்

சுடச் சுட வாழ

வேண்டும் நெஞ்சுரம்!

மாலையில் குளிரடிக்கும்

பாலையும் உண்டாம்!

 

"அடி கள்ளி" என்று

செல்லமாகக் கொஞ்சுவதில்

இருக்கிறதே செல்லமான வஞ்சம்!

அங்கு இல்லையாம் லஞ்சம்!!!!!

ஒட்டகப் பாலை அருந்தி

கடும் பாலையில் வாழ

போகலாமா???

என்ன சொல்கிறது உங்கள் நெஞ்சம்??? 

உலக கடித தினம்(IV)

தபாலில் கடிதம்.. அஞ்சல் அட்டை. .

நமக்கா என ஆசையாய்  படித்தால் ..சாமியின்  பெயரில் ஆசாமியின் கடிதம்..இக்கடிதம் படித்தவுடன் நூறு பேருக்கு இதே செய்தி அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவும்.. இல்லையேல் ....என மிரட்டல் ..இது அன்று..


இதே இன்று.. புலனத்தில் முன்னனுப்புச் செய்தியாய்..

 

தொடர்பு கொள்ளும் முறை மாறினாலும் ..

செய்தி மாறவில்லை..🙄


ஒரு முன்னேற்றம் ..

இப்பொழுது இச்செய்தியை கையொடிய எழுதாமல் மொத்தமாக புலனத்தில் பகிர்ந்து விடலாம்..👍🏻


செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் இயற்கை நுண்ணறிவில் இன்றும் அவ்வப்போது ஓரறிவு மறைந்து விடுகிறது..🙄


- இலாவண்யா


----------------------------------

 #Sunday trending#

நான் எழுதும் 

ஒரு கடிதம் 🌹🌹


என் அன்புள்ள அப்பா, அம்மா, பாட்டி, அம்பை அம்மா (என் மாமியார் ) எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள் 🌹🌹

நீங்கள் எல்லோரும் என் கணவரும் சேர்ந்து உங்கள் உலகத்தில் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏


இங்கு பூலோகத்தில் நாங்கள் எல்லோரும் நலம்,,,, எப்போதும் உங்களை நினைக்கிறோம்,,,, நீங்கள் அமைத்து குடுத்த பாதையில் எங்கள் வாழ்க்கை நல்லபடியாக நடத்தி கொண்டு நிம்மதியாக இருக்கிறோம்,,,,


இந்த வயதில் எங்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டு இருக்கிறோம்,


சுலோகம், கோவில்,வாக்கிங்,உடற்பயிற்சி எல்லாம் செய்கிறோம்..... சோசியல் நெட்ஒர்க்கில் பழைய அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறோம்,,,,,


எங்கள் காம்ப்ளெக்ஸில் நடக்கும் 

சாம்பிராதய பஜனைகளிலும் மற்ற தெய்வ திருமணங்களிலும், பாரதி தமிழ் சங்க நிகழ்ச்சிகளிலும்,,,, கலந்து கொண்டு சந்தோசமாக இருக்கிறோம் 😊


இங்கு உங்கள் குழந்தைகள்,மாப்பிள்ளைகள், மருமகள்கள்,,,

உங்கள் பேரன், பேத்திகள், அவர்கள் குடும்பம் 

கொள்ளு பேரன்,, பேத்திகள்

 எல்லோரும் நலம் 

எல்லோரும் உங்கள் போட்டோ பார்த்து உங்களை எல்லாம் நன்கு தெரிந்து கொண்டு உள்ளார்கள் 😘😘🙏


நீங்கள் எங்களுக்கு சொல்லி குடுத்த நல்ல விஷயம்களையும்,, அறிவுரைகளையும் ,, கதைகளையும் நாங்கள் அவர்களுக்கு இப்போ சொல்லுகிறோம்,,,, காலத்தை பின் நோக்கி பார்க்கிறோம்,,,


மொத்தத்தில் உங்கள் எல்லோருடைய ஆசிர்வாததால் எல்லோரும் நன்றாக,, நலமாக இருக்கிறோம் 🌹🙏


எங்களை பற்றி கவலை படாமல் நீங்கள் எல்லோரும் நிம்மதியாக இருங்கள் 🌹🌹🙏🙏


ஆனந்த கோடி 

நமஸ்காரங்கள் 🙏🙏🙏


இப்படிக்கு 

உங்கள் அன்புள்ள 

குழ்ந்தைகள் 🌹🌹


- மைதிலி நீலகண்டன் 

உலக கடித தினம்(III)

 த.பால் என்பவரும் தனபால் என்பவரும் அக்கம்பக்கத்தினர்.

இருவரும் " தபேலா" கலைஞர்கள்.

"த.பால்" லுக்கும் 

"தனபால்" லுக்கும்

தபால் தர வரும் 

தபால்காரர்,

"த.பால்" லுக்கு தபால்...

"தனபால்" லுக்கு தபால்.... என்று அழைக்கும் போதெல்லாம்

த.பால்,தனபால் இருவருமே தனக்குத் தான்  தபாலென்று தடாலென்று கதவைத் திறப்பர்.  

"பால்" என்று பால்காரர் கூவி அழைக்கும் போதும் காலையிலேயே தபாலா  என்று  தபேலா வாசிப்பதை நிறுத்தி விட்டு தடாலென்று  கதவைத் திறப்பர்.

பின் த.பால், தனபால் இருவரும் தபால்காரரிடமிருந்து தபால் வாங்கிக் கொண்டோ வாங்காமலோ..... (பால்காரரிடம் பால் வாங்கிக் கொண்டு) தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தபேலா வாசிக்க சென்று விடுவர்.

- சங்கீதா


அந்தத் தபாற்காரர் பெயர் ஜெயபால்.

-ஸ்ரீவி 


வசித்த இடம் இம்பால்

- மோகன்


படித்தது "மணிபால்"

குடிப்பது  ஆ வின் பால்.. இம்பாலில் "ஆவின்" பால் கிடைக்குமோ???

- சங்கீதா


பசும்பால் எனச் சொல்லி விட்டால் சரியாகிடும்

-ஸ்ரீவி 


கிடைக்கும் ஆ

'ஆ'வின் பால்

சுத்தமான மலைப்புல்லை உண்ட ஆவினங்கள்மூலம்!

- மோகன்


தொடர்பு எல்லைக்கு அப்பால் 

என அலைபேசி சொன்னாலும்

த.பால் தனபால் கையில்

ஜயபால் சேர்ப்பார் தபால்

- அமுதவல்லி


ஆம்.. தப்பாமல்  சேர்ப்பார் தபால்.

- சங்கீதா


உலக கடித தினம்(II)

 உலக கடித தினத்தில்... 


வடிகாலாம் கடிதமதில் உணர்வுகள் ஓடின

   வாழும் இதயங்களை  பாலமாய் இணைத்தன


முடியாத ஒன்றாக இரவு அது தோன்றும்

  முகம் காட்டும் கண்ணாடி சுட்டும் வீக்கம்


விடிந்ததும் அடிக்கடி வாசல் நோக்கும்

   வேலு, தபால் காரர் ஏன் வரல? கேட்கும்


துடி துடிக்கச் செய்யும் கடிதமும் உண்டாம்

   தோளோடு உரசியவள் திருமண அழைப்பாம்


வடித்த கவிதைகள் எலாம் திருப்பி அனுப்பப் படும்

   வருந்துகிறோம் என்ற வார்த்தையும் கொல்லும்

   

படித்துச் சொன்னால் ஊரில் பால், மோர் தருவார்

   பாகற்காய், வெண்டை பையிலே போடுவார்


கொடுத்த கடன் கேட்கும் கடிதம் என்றால்

   கொடுத்தவர், படித்தவர் இருவரையும் வைவார்


கடிதங்கள் பலவகை தெரியும் நேக்கும்

   காரணம் என் தந்தை தபால்காரராக்கும்


__  குத்தனூர் சேஷுதாஸ்


-----------------------

 உலகக் கடித தினம்

------------

அன்னம் விடு தூது, மேகம் விடு தூது போன்றன கடிதத்தின்

முன்னோடிகள் 


கடிதங்கள் காகிதங்கள் அல்ல;

உணர்ச்சிகளின்  வெளிப்பாடுகள்!


ருக்மணித்தாயை

கண்ணணோடு

இணைத்தது ஒரு கடிதம் அல்லவா!



கிராமங்களில் நல்ல செய்தி கெட்ட செய்தி என்ற பாரபட்சமின்றி

கடிதங்களை வழங்கிய

கர்ம யோகி அல்லவா நமது  தபால்கார ஐயா!


அவருடைய மிதி வண்டியின்

 மணியோசை  இளமை , முதுமை, தள்ளாமை என வயது வித்தியாசம் பாராது

யாவரையும் ஈர்த்த காலங்கள் பொற்காலங்கள் அல்லவா!


மனிதர்கள் மறைந்தாலும் அவர்தம்

லிகிதங்கள் அழியா

நினைவுச்சின்னங்கள்

கையில்எடுக்கும்

காலை அவரைக்கண்முன்

கொண்டு நிறுத்தும்

காணொளிக்காட்சிகள்.


ஆயிரம் மின்னஞ்சல்

கள் ஒரு கடிதத்துக்கு

ஈடாகுமா?



கடிதம் என்பது வருடத்துக்கு ஒரு முறை நினைவு கூற

வேண்டிய நிலைக்குத்

தள்ளப்பட்டாலும்

அதன்காலம் திரும்பி

வரும்,கோலி சோடாவைப்போல!



- மோகன்

---------------------------------------------

 கடிதம் என்றவுடன்

சிறகடிக்கும் மனது...

உறவுகளின்... உணர்வுகளின்...

சிறகல்லவோ அவை?


தூரத்தால் பிரிந்த

 உறவுகளைப் பிணைத்த 

காகித இழையன்றோ?


தபால் அட்டையில்

நுணுக்கிய எழுத்துக்கள் 

எழுத இடமின்றி

எழுதாத சொற்களைத்

தேடும் மனம்


கொஞ்சம் காசிருந்தால்

நீலக் காகிதம்

பிறர் அறியாமல் கதைக்கவோ

மிக முக்கியம் என சொல்லவோ...

என்றாலும்

இடப் பற்றாக்குறை தான்



சுழியுடன் துவங்கி..

நலம் விசாரித்து..

செய்திகள் பகிர்ந்து ..

அன்பான கையெழுத்துடன்

உள்ளம் தொட்ட கடிதங்கள் 


பிறப்பு இறப்பு

கொண்டாட்டங்கள் சண்டைகள்

என நம் வாழ்வின் சுவடுகள்

கடிதங்கள் 


கையெழுத்தின் உணர்வுகளை

மின்னெழுத்துக்கள் பிரதிபலிப்பதில்லை

கோபத்தில் கடிதத்தை

கிழிக்கும் திருப்தி

மின்னுருவை அழிப்பதில் 

கிடைப்பதில்லை 


எப்பொழுதோ எடுத்து வைத்த

ஒற்றைக் கடிதமொன்று

எழுதியவர் இல்லை என்றாலும் 

இன்றும்  சொல்கிறது 

அவரின் அன்பை...


***********************

பாட்டிக்கு எழுதத் தெரியாது 

பேரப்பிள்ளைகள் 

கையெழுத்தில்

செய்தி வரும்


அம்மாவின் கையெழுத்து

முத்து முத்தாக 

நலம் விசாரிக்கும்


அப்பாவின்

கையெழுத்து 

கிறுக்கலாக

ஆறுதல் சொல்லும்


கையெழுத்து 

எப்படி இருந்தாலும் 

மனதின் மொழி

புரிந்து விடும்


- அமுதவல்லி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...