Monday, September 2, 2024

பாலை (II)

 பாலை - குத்தனூர் சேஷுதாஸ்

பாலைத் திணை

வற்றிய, பயனற்ற நிலமதுவே பாலையாம்

   வாட்டும் வெயில் தான், பல உயிர்கள் வாழுமாம்

 

உற்றுக் கீழ் நோக்கியபடி வானில் வட்டமிடும்

   ஊளையிடும் செந்நாய், கழுகு, பருந்து உறவாம்

 

புற்றும் கரையான் வாழக் கட்டித் தராதாம்

   புதைந்து மணலில் பாவம் பாம்பு வாழுமாம்

 

வெற்றியுடன் பகை முடிக்க முன்னும், பின்னும்

   விடலை, காளை, மறத்தியர் தாம் வழிபடும்

 

கொற்றவையே இந்நிலத் தெய்வம் ஆகும்

   கோபம், குருதி என்பன அடையாளம் ஆகும்

 

குற்றமில்லை வழிப்பறி, கொள்ளை, கொலை இங்காம்

   குலத் தொழில் என்றே கொள்ளப் படுமாம்

 

மற்றுமிங்கே மரா, குரா, பாதிரி மலரும்

   மல்லிகை, முல்லையோ மண்ணாகிப் போம்

 

சுற்றுலாத் தலமாய் இந்நாள் மாறுது பாலையும்

   சுழலும் பூமியில் மனிதன் விட்டானா ஏதும்?


---------------------------------

 பாலை - மோகன்

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்.

 

குறிஞ்சியும் அல்லாது

முல்லையும்அல்லாது

இடைப்பட்ட இரண்டும் கெட்டான் நிலம்.

 

ஆனால் அரபு மக்களின்வாழ்வாதாரம்;நமக்கு எல்லை காக்கும் பரப்பு.

 

இறைவன் படைப்பில்

எந்த நிலமும் வீண் போகாது-ஒட்டகத்தைக் கேளுங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டும் பால் தந்து இந்த உண்மையை உணர்த்தும்.

 

பாலையின் கடும் வெயில் நடு அமர்ந்து

அடியார் தமக்கு அருள்

குளுமை செய்யும்

கொற்றவைத்தாய்.

 

மணல் திருடுவோர்க்குசொர்க்கம! அதனால் என்னவோ

இங்கு நன்னிலங்கள்

பாலையாகின்றன?

 

இன்றயப் பாலை வனங்கள் பல ஆயிரமாண்டுகள் முன்

பெரிய நீர் நிலைகளாக

இருந்தன என்ற உண்மை நிலப்பண்புகளை மாற்ற முயலோர்க்கு ஓர் எச்சரிக்கை மணி.


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...