ஐந்திணை கவிதைகள் - ஸ்ரீவி
குறிஞ்சித் திணையெனில்
மலையும்
மலை சார்ந்த இடமுமாம்
-
அது அன்று.
மலையுடைக்கும்
குவாரிகளும் குவாரிகள் மட்டும் உள்ள இடமுமாம்.
-
இது இன்று.
முல்லைத்
திணையெனில்
காடும்
காடு சார்ந்த இடமுமாம்
-
அது அன்று
முழுதாய்த்
துறந்த சத்குருக்களின் மையங்களும் அவை சார்ந்த இடமுமாம்
-
இது இன்று
மருதத்
திணையென்பதோ
வயலும்
வயல் சார்ந்த இடமுமாம்
-
அது அன்று
வீட்டுமனை
லேஅவுட்டுகளும்
அவை
மட்டும் இருக்கும் இடமாம்
-
இது இன்று
நெய்தல்
திணையோ
கடலும்
கடல் சார்ந்த இடமுமாம்
-
அது அன்று
ஆலைக்
கழிவுகளும், அமிலக் கழிவுகளும் சங்கமமாகும்
சேமிப்புக்
கிடங்கான இடமாம்
-
இது இன்று
பாலைத்
திணையென்பது
மணலும்
மணல் சார்ந்த இடமுமாம்
-
அது அன்று
டிப்பர்
லாரிகளில் மணல் சுரண்டி
விற்கும்
மாஃபியாக்களின்
அமுத
சுரபி போன்ற இடமாம்
-
இது இன்று
ஐந்திணைகளின்
அர்த்தத்தினை
இக்கால
ஜந்துக்கள்
புரட்டி போட்ட
கொடுமை
பாரீர்!
இயற்கையை சீரழித்து
அதனது
சீற்றத்துக்காளாகி
நிலநடுக்கம்,
சூறாவளி, சுனாமி
என
பேரழிவில் தள்ளாடும்
நிலைமை
காணீர்..
ஓஸோனில்
ஓட்டையோ
புவிச்சூட்டின்
கடுமையோ
காடுகளின்
பெருந்தீயோ
காரணம்
நாம்தானென
உணர்ந்து
நாமும் திருந்தாவிட்டால்
வருந்தும்
நிலையே வந்திடுமே
மகிழ்ந்து
வாழ வேண்டுமெனில்
திருந்தி
நாமும் வாழ்வோமே
ஐந்திணை கவிதைகள் - அமுதவல்லி
இயற்கையை
அறிந்த மனிதர்கள்
நிலம் ஐவகை என்றனர்
வாழ்வியலை இணைத்து
ஐந்திணை எனப்
பண்பாடினர்
வாழ்க்கை கொண்டாட்டமானது
இயற்கையை
அரித்த மனிதர்கள்
சுயநலமாக வாழ்ந்து
மண்ணுலகை வருத்தி
நானிலமும் பாலையாக
பாழ்செய்ய
வாழ்க்கை திண்டாட்டமானது
*****************************************************************************
மலையைத் தெய்வமாகக்
கொண்டாடி வளம்காக்க
மழை பொழிந்தது
மரங்கள் வளர்ந்தன
மலை தான் என
பந்தாடுகிறான் மனிதன்
மண் சரிந்தது
மரங்கள் வீழ்ந்தன
குறிஞ்சி நிலம் ...
நஞ்சென மாறுமோ?
மானுண்டு மயிலுண்டு
மந்தியுண்டு களிறுண்டு
வனவளம் மிகுதி உண்டு
மனிதன் ஆசை கொண்டு
அளவுக்கு மீறிக் கொண்டு
முல்லை நிலம்...
இல்லை என்றாகுமோ?
பசுந்தாவரங்கள் சிலிர்த்தாட
ஆவினங்கள் அசைபோட
நீரோடைகள் நிறைந்தோட
செழித்து மலர்ந்திருக்க
அழித்துப் பார்க்கிறான் மனிதன்
மருத நிலம்...
கருகிடுமோ அதன் வளம்?
கடலின்றி பூமியில்லை
அதன் அழகுக்கோர் எல்லை இல்லை
பல்லுயிர் வாழும் உலகமது
காற்றும் அலைகளும் சொன்னால்தான்
காலங்கள் நமக்கு இசைவாகும்
காக்கும் கடல்... மனிதனால்
இன்று குப்பைத் திடல்
நெய்தல் நிலம்...
தொய்வதும் முறையோ?
திரிந்து வரும் நிலமெல்லாம்
பாலையானால்
பூவுலகின் அழிவன்றோ...
கொற்றவையை வேண்டி நின்றேன்
நகைத்தாள் அவள்
சுற்றும் இந்த பூமி
பல்லாயிரம் ஆண்டுகள்
பல்லுயிர்களைக் கொண்டது
பூமகளுக்குத் தெரியும்
தன்னைக் காத்துக்கொள்ள
வளங்களைக் காத்தால்
மனிதகுலம் வாழும்
வளங்களை அழித்தால்
மனிதகுலம் அழியும்
பெருமழையொன்றில்
தன்னை மீட்டுக் கொள்ளும்
ஆற்றைப் போல்
பூமி தன்னை மீட்டுக்கொள்ளும்
நீ அழித்துக் கொண்டிருப்பது
உன் இருப்பிடத்தை அல்ல
உன் இருப்பை...
நீ மீளும் வழி உன் கையில் ...
என்றே சிரித்தாள் அன்னை
ஐந்திணை கவிதைகள் - சங்கீதா
குறிஞ்சி
மண் சரிஞ்சி(சரிந்து) முறிஞ்சி(முறிந்து) போச்சி! (போச்சு)
முல்லை இல்லை
என ஆச்சு!
வில்லைகளாகி "வில்லா"க்கலாச்சு!
மருதம் மாறிப் போச்சு!
வயல்கள் மாயமாச்சு!
நீர் வற்றிப் போச்சி
தண்ணீர் லாரி சாட்சி!
நெய்தலில் சுனாமி
பாய்தல் ஆச்சு!
மீன் வயிற்றிலும்
நெகிழி போச்சு!
பாலை மேலும்
கண் படலாச்சு!
சுரண்ட ஏதும் கிடைக்குமா என்று
ஆராய்ச்சி நடக்கலாச்சு!
திரிந்த என் சொற்கள்
போல...
ஐந்திணை திரிந்தும்
திருந்தாத திருத்தாத உயர்திணை...
அஃறிணையாக
திரிஞ்சி போச்சி!
ஐந்திணை மரபு
எப்போதும் சிறப்பு!
உணராமல் போனால்
வாழாதே பிறப்பு!!!
No comments:
Post a Comment