கோடை வந்தால் கதிரவன் காய்வான்
மொட்டைமாடி வெயிலிலே வத்தல் காயும்
அரிசி மாவு வடாமாய் மாறும்
வெள்ளைத் துணியை வாகாய் விரித்து
காற்றில் பறக்காதிருக்க முனைகளில் கற்களை வைத்து
கோலம் போட புள்ளிகள் வைப்பது போல்
ஜவ்வரிசி வடாமைக் கையால் வைத்து
பிழியும் அச்சில் மாவைப் போட்டு
ஓமப்பொடியும், ரிப்பன் வடாமும்
பக்குவமாய்ப் பிழிந்து
கொத்தித் தின்ன பறந்து வரும்
காக்கைகள் விரட்ட கம்பு எடுத்து சுழற்றி விரட்டி
உச்சி வெயிலில் காயும் வத்தலுடன்
தானும் காய்ந்து
மாலை வந்ததும்
பத்திரமாக மடித்து வைத்து
நான்கைந்து நாட்கள்
காயவைத்து
நன்றாய்க் காய்ந்ததும்
துணியிலிருந்து பிரித்து எடுத்து
தகர டின்களில் நன்றாய் அடைத்து
நாள்பட வைப்பர்
நமது அம்மாக்கள்
பிறிதொரு நாளில் எண்ணெயில் பொரித்தால்
நான்கு வீதிகள் முழுதும் மணக்கும்
மொருமொருவென வடாம் இருக்க
சாப்பிடும் உணவோ நான்கு கவளம்
அதிகம் இறங்கும்.
அடுக்குமாடி குடியிருப்பில்
சாத்தியமோ இதெல்லாம்?
- ஸ்ரீவி
-------------------------------
வாயூறும் வடாம்
பட்டை உரியும் வெயிலதன் தொடக்கம்
பாட்டி, அம்மாவின் கைகள் பரபரக்கும்
மொட்டை மாடி அது சுத்தமாகக் படும்
முதல் நாளே ஜவ்வரிசி பிரண்டை வரும்
பட்டாக வெள்ளை வேட்டி விரிக்கப் படும்
பாதுகாப்பு நடவடிக்கை ஏற்பாடாகும்
வட்டமாய், நீளமாய் வடிவங்கள் பெறும்
வட்டமிடும் காக்கைகள் விரட்டப் படும்
தொட்டு விடத் துடிக்கும் அணில்கள் சுற்றும்
துரத்தும் போது காலடிகள் பதித்தோடும்
கட்டுப்பாடாய் இருந்த வாயும் தோற்கும்
கணக்கிலா மாவால் வயிறு வலிக்கும்
சட்டென விருந்தினர் வர கை கொடுக்கும்
" சாப்பாடு பிரமாதம் " சான்றிதழ் கிடைக்கும்
துட்டு தந்து வாங்குகிறார் இந்நாளில் கொஞ்சம்
தூக்கிக் கொண்டு காகம் போகுமே அதிகம்.
__ குத்தனூர் சேஷுதாஸ்
--------------------------------------------
முழிச்சு பாக்கும் ஜவ்வரிசி..
முழுசா கரைந்த பச்சரிசி..
உப்பு காரம் ஊற ,
சூடாகி பளபளப்பாய் மாற
எலுமிச்சையும் அதனோடு சேர,
நாவிலதன் ருசியே வேற..
கரண்டி வரைந்த ஓவியம்,
சுவையில் அதுவொரு காவியம்..
துணியெங்கும் குட்டி வட்டநிலா,
காணவந்ததோ கதிரவன் உலா..
பகல்நிலவைக் கண்டு ரசித்தேன்,
வெய்யிலதனை வாட்ட , துடித்தேன்..
நாவில் நீர் சுரக்க,
நிலவை அதில் வைத்தேன்..
பூமியின் நிலவுகள் செவ்வாயில்,
கோபத்தில் கதிரவன், உச்சிவெயில்..
வந்தாள் அன்னை..
எண்ணிக்கை குறைந்ததேன் என்றாள்!!!
எண்ணிஎண்ணிக் குறைந்தது என்றேன்..
(இவ்வளவு இருக்கே..ஒன்றைத் தின்றால் என்ன என எண்ணி எண்ணி - counting and thinking.. ஒவ்வொன்றாய்க் குறைந்தது..)
- இலாவண்யா
No comments:
Post a Comment