பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் - பல்வகை விழாக்கள்-
வாழ்த்துப் பா…….
எத்திசையும் புகழ் மணக்கும் எட்டைய புரச் செம்மல்! மகாகவி பாரதியின் பெயராலே மகாதமிழுக்கு ஒரு சங்கமுண்டு! பூர்வாவில் இது பூத்ததையா! பூவுலகே இதைப் போற்றுதையா! வாழிய வாழிய வாழியவே! வளர்பிறையாய்ச் சங்கம் வாழியவே!
எத்திக்கும் புகழ் மணக்கும் நித்திக்கும் தமிழ்த் தாசர்! திருமலை மேல் உதித்த திரு வளர் 'வெங்கடேசர்!' தலைமைக்கும் நன்றிக்கும் தகைசால் உரை தந்தார்! வாழ்த்தி யானும் மகிழ்கின்றேன்! வாழிய நீர் பலநூறாண்டு!
சிறப்பித்த சிலம்பாட்டம் சித்திரமாய்ப் பதிந்ததையா! வாழட்டும் சிலம்பாட்டம்! வாழ்த்தட்டும் தலைமுறையாய்!
சிறப்பாக உரை பெய்து சிறப்புமிகு விருந்தினர்க்கு மல்லிகைப்பூ சொற்களாலே வில்லாய் வளைந்து வாழ்த்துகின்றேன்!.
எட்டில் தொடங்கிய நிகழ்வு எண்பதில் முடிந்த நிறைவு! திரை இசைப் பாடல்களோ திரை இட்டன நித்திரைக்கு! புத்திக்குள் உண்ணப்படும் தேனாய்ப் புறப்பட்டுக் கரவொலி மீட்டின! தொகுப்பாளர் மலர்விழியார் தொகுப்புரையோ மலர்க்கிரீடம்! வளரட்டும் நூறாண்டு! வாழட்டும் நிறையாண்டு!
சங்கத்து நல் பொருளராம் 'சன்' தொலைக் காட்சியின் நெடுந் தொடர் நடிகருமாம்! கடும் உழைப்பால் வாழுநராம்!
ஒரு பக்கம் சாராப்
பெரும் புகழ் 'சாய்ராம்!' விழா நிகழ்வின் நல் கதா நாயகராம்! முதலாம் ஆண்டு விழா முத்தாய்ப்பாய் இருந்தமைக்குப் பேரறிவாளர் இவர்தம் பெருத் தொண்டே காரணமாம்! மின்னணு சாதனங்கள் நமக்குக் கண்ணின் கருவிழியாய் - வரமா? விண்ணின் பேய் மழையாம் - சாபமா? பட்டி மண்டபத்தைப் பாங்குடனே ஒட்டியும் வெட்டியும் பேசி, மணக்கும் தமிழாலே, பருக இனிக்கும் சுவை தந்தார்! ஈர்க்கும் கடலலை போல் ஈரணியர் சொற்போரில் ஈர்த்துவிட்டார் நம் மனத்தை! போற்றுதல் நிறைந்த கலைமாமணி ஆற்றலால் நமை வென்று விட்டார்! வரமாம் அவர் வருகைபோல் தரமான தம் முடிவாலே! செந்தமிழின் சொற்சுவையாய்ச்
செம்மாந்து நீவிர் வாழியவே !
நன்றியுரை நிகழ, நாளின் விழா
நனிதிகழ் நாட்டுப் பண்ணுடணும்
நல்லுணவுடனும் இனிதே முடிய.
நல்லுணர்வுடன் கலைந்த நம்மவர்க்கு...
'வாழ்த்துப் பா'வழங்குகின்றேன்
முல்லைப் பூ சொற்களாலே
முகம் மலர்ந்து வாழ்த்துகின்றேன்!
ஆவாரம் பூ சொற்களாலே
அகம் மகிழ்ந்து வாழ்த்துகின்றேன்!
வாழிய!வாழிய! பல்லாண்டு!
வையைத் தமிழாய் நிறையாண்டு
- ராஜா முஹம்மது
No comments:
Post a Comment