Saturday, September 14, 2024

உலக தாத்தா பாட்டிகள் தினம்

 பாட்டி, தாத்தா தினத்தில்... 


கூட்டுக் குடும்பம் அன்று கொடி கட்டிப் பறந்தது

   குஞ்சுகள் ஐந்தாறு வீடுதோறும் இருந்தது


பாட்டி, தாத்தா கையில் செங்கோலும் இருந்தது

   பாசம், கண்டிப்பு பாம்புகளாய் பிணைந்தது


காட்டி நிலவை பாட்டி சோறும் ஊட்டுவாள்

   கதைகள் சொல்லி பிள்ளை கற்பனை வளர்ப்பாள்


ஆட்டுக்கல் சுழற்றுவாள், அம்மிக்கல் உருட்டுவாள்

   அடுத்து, அடுத்து என அழகாய் திட்டமிடுவாள்


தோட்டத்தில் மூக்கிரட்டை தாத்தா அறிமுகம் செய்வார்

   தோளில் உட்கார வைத்து ஜல்லிக்கட்டு காட்டுவார்


மாட்டுத் தொழுவத்தில் கால்நடை பராமரிப்பு

   மாலை கோயிலுக்கு போவதும் நிற்காது


" தீட்டு புத்தியை, கத்தியை அல்ல " என்பார்

   திருவிழாவில் கமர்கட், கரும்பு வாங்கித் தருவார்


வீட்டுக்கு அவசியம் பாட்டி, தாத்தா வேண்டும்

   வீணாகாமல் குழந்தைகள் காக்கப் பட வேண்டும். 


__  குத்தனூர் சேஷுதாஸ்

------------------------------ 

உலக தாத்தா பாட்டிகள் தினம்.

---------------

அன்பு மயமான உலகைக் காட்டிய

மனித தெய்வங்கள்


பொக்கை வாய் சிரிப்பினாலேயே

மனம கவர்ந்த தாத்தா


தள்ளாத வயதிலும்

நளபாகமாக சமைத்து

தன் நடுங்கும் கையால் 

எமக்கு ஊட்டி விட்ட 

அன்னபூரணி பாட்டி


ஒருவருக்கொருவர்

துணையாய் ஒரு குடைக்குக் கீழ் செல்லும்அன்பினால்

ஒன்றாக இணைந்த உள்ளங்கள்


கை வைத்தியம் பார்த்தே வியாதிகளை ஓட்டி விட்ட பாட்டி

மருந்தை விட கரிசனமே நோயைப்

புறமுதுகிட்டு ஓடச்செய்யும்!


கதைகள் பல சொல்லி

பாரம்பரியத்தை உணர வைத்த தாத்தா


இவர்கள் சண்டையிட்டாலும்

ஒற்றமையில்தான் முடியும்!


காலம் பல கடந்தாலும்

கண்களைப்பனிக்கச்

செய்யும்குல முன்னோடிகள்


- இ.ச.மோகன்


------------------------------

 தாத்தா பாட்டி இருக்கும் வீடு

பூவுலக சுவர்க்கம்

என்பதைப் பாடு


வளரும் குழந்தைகள்

வழி மாறிப் போகாமல்

வாஞ்சையோடு வழி காட்டும்

கலங்கரை விளக்கம் அவர்களே


கதை சொல்லி நீதி சொல்வார்

கைவைத்தியமும் நலமாய்ச் செய்வார்

விளையாட்டுத் தோழன் ஆவார்

கற்பிக்கையில் நல்லாசான் ஆவார்


அன்போடு பண்பும் வளர

அருமையான தாத்தா பாட்டி

அகமகிழ்வோடு இருக்கும் வீடே

நல்லதொரு பல்கலைக் கழகமாகும்.


போற்றிடுவோம் இருவரையும்

வளர்த்திடும் நல் விழுமியங்களை!


*உங்கள் தோழன் ஸ்ரீவி*

-------------------------------------

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...