உலக கடித தினத்தில்...
வடிகாலாம் கடிதமதில் உணர்வுகள் ஓடின
வாழும் இதயங்களை பாலமாய் இணைத்தன
முடியாத ஒன்றாக இரவு அது தோன்றும்
முகம் காட்டும் கண்ணாடி சுட்டும் வீக்கம்
விடிந்ததும் அடிக்கடி வாசல் நோக்கும்
வேலு, தபால் காரர் ஏன் வரல? கேட்கும்
துடி துடிக்கச் செய்யும் கடிதமும் உண்டாம்
தோளோடு உரசியவள் திருமண அழைப்பாம்
வடித்த கவிதைகள் எலாம் திருப்பி அனுப்பப் படும்
வருந்துகிறோம் என்ற வார்த்தையும் கொல்லும்
படித்துச் சொன்னால் ஊரில் பால், மோர் தருவார்
பாகற்காய், வெண்டை பையிலே போடுவார்
கொடுத்த கடன் கேட்கும் கடிதம் என்றால்
கொடுத்தவர், படித்தவர் இருவரையும் வைவார்
கடிதங்கள் பலவகை தெரியும் நேக்கும்
காரணம் என் தந்தை தபால்காரராக்கும்
__ குத்தனூர் சேஷுதாஸ்
-----------------------
உலகக் கடித தினம்
------------
அன்னம் விடு தூது, மேகம் விடு தூது போன்றன கடிதத்தின்
முன்னோடிகள்
கடிதங்கள் காகிதங்கள் அல்ல;
உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள்!
ருக்மணித்தாயை
கண்ணணோடு
இணைத்தது ஒரு கடிதம் அல்லவா!
கிராமங்களில் நல்ல செய்தி கெட்ட செய்தி என்ற பாரபட்சமின்றி
கடிதங்களை வழங்கிய
கர்ம யோகி அல்லவா நமது தபால்கார ஐயா!
அவருடைய மிதி வண்டியின்
மணியோசை இளமை , முதுமை, தள்ளாமை என வயது வித்தியாசம் பாராது
யாவரையும் ஈர்த்த காலங்கள் பொற்காலங்கள் அல்லவா!
மனிதர்கள் மறைந்தாலும் அவர்தம்
லிகிதங்கள் அழியா
நினைவுச்சின்னங்கள்
கையில்எடுக்கும்
காலை அவரைக்கண்முன்
கொண்டு நிறுத்தும்
காணொளிக்காட்சிகள்.
ஆயிரம் மின்னஞ்சல்
கள் ஒரு கடிதத்துக்கு
ஈடாகுமா?
கடிதம் என்பது வருடத்துக்கு ஒரு முறை நினைவு கூற
வேண்டிய நிலைக்குத்
தள்ளப்பட்டாலும்
அதன்காலம் திரும்பி
வரும்,கோலி சோடாவைப்போல!
- மோகன்
---------------------------------------------
கடிதம் என்றவுடன்
சிறகடிக்கும் மனது...
உறவுகளின்... உணர்வுகளின்...
சிறகல்லவோ அவை?
தூரத்தால் பிரிந்த
உறவுகளைப் பிணைத்த
காகித இழையன்றோ?
தபால் அட்டையில்
நுணுக்கிய எழுத்துக்கள்
எழுத இடமின்றி
எழுதாத சொற்களைத்
தேடும் மனம்
கொஞ்சம் காசிருந்தால்
நீலக் காகிதம்
பிறர் அறியாமல் கதைக்கவோ
மிக முக்கியம் என சொல்லவோ...
என்றாலும்
இடப் பற்றாக்குறை தான்
சுழியுடன் துவங்கி..
நலம் விசாரித்து..
செய்திகள் பகிர்ந்து ..
அன்பான கையெழுத்துடன்
உள்ளம் தொட்ட கடிதங்கள்
பிறப்பு இறப்பு
கொண்டாட்டங்கள் சண்டைகள்
என நம் வாழ்வின் சுவடுகள்
கடிதங்கள்
கையெழுத்தின் உணர்வுகளை
மின்னெழுத்துக்கள் பிரதிபலிப்பதில்லை
கோபத்தில் கடிதத்தை
கிழிக்கும் திருப்தி
மின்னுருவை அழிப்பதில்
கிடைப்பதில்லை
எப்பொழுதோ எடுத்து வைத்த
ஒற்றைக் கடிதமொன்று
எழுதியவர் இல்லை என்றாலும்
இன்றும் சொல்கிறது
அவரின் அன்பை...
***********************
பாட்டிக்கு எழுதத் தெரியாது
பேரப்பிள்ளைகள்
கையெழுத்தில்
செய்தி வரும்
அம்மாவின் கையெழுத்து
முத்து முத்தாக
நலம் விசாரிக்கும்
அப்பாவின்
கையெழுத்து
கிறுக்கலாக
ஆறுதல் சொல்லும்
கையெழுத்து
எப்படி இருந்தாலும்
மனதின் மொழி
புரிந்து விடும்
- அமுதவல்லி
No comments:
Post a Comment