Thursday, July 31, 2025

கொசுறு

 கொசுறு கேட்கும் முன்....


வசதிகள் பல உள்ளதாம் பெரிய அங்காடி 

   வண்ண விளக்குகள், எங்கும் கண்ணாடி 


தசை நோகும் கால்களில் பொருள் வாங்குவோம் 

   தவறாமல் விலை கேட்கும் ஒவ்வொரு கிராமும் 

                

அடுத்து .....


பசியின் வாயடைக்க பாதையில் கடை விரிப்பார் 

   பச்சைக் காய்கறிகள், கிழங்குகள் விற்பார் 


அசந்து ஒரு குழந்தை அங்கேயே உறங்கும் 

   அதன் பற்கள் அரை ப்ரட்டில் (bread) பதிந்திருக்கும் 


விசும்புக் குடையே வெய்யிலும், மழையிலும் 

   விற்றால் தான் வீட்டில் வேகுமாம் சோறும்


மசியல் செய்ய சேனைக்கிழங்கு அங்கு வாங்குவோம் 

   மறக்காமல் விலை குறைத்து, கொசுறும் கேட்போம் 


உசுரு முடியும் காலம் ஓலையும் வரும்

   உயிர் சுமந்த உடலை உதறும் நேரம் 


கொசுறு கேட்டு வாழ்நாளைக் கூட்ட முடியுமா ?

   கொஞ்சம் சிந்தித்தால் கொசுறும் கேட்போமா ?


__. குத்தனூர் சேஷுதாஸ் 31/7/2025


-------------------------

*கொசுறு*


இது ஏதோ இலவசம் இல்லை.. .

இரந்து பெரும் யாசகம் இல்லை. . .


கடைக்கார அண்ணாச்சிக்கும்..

வாங்க வரும் சிறுவர்களுக்கும் 

இடையிலான ஒரு அன்பின் வெளிப்பாடு...


அக்கால கடைக்காரர்களுக்கு 

வாடிக்கையாளர்களுடன் இருந்த நல்லெண்ண அடிப்படையிலான உறவின் வெளிப்பாடு..


மாதாமாதம் வாங்கும் பல சரக்கில் 

பட்டியலில் இல்லாத கல்கண்டு நிச்சயம் இருக்கும்..


கடைக்கு சாமான் வாங்க போனால் கை நிறைய பொட்டுக்கடலை நிச்சயம் கிடைக்கும்..


வாடிக்கையாளர் குழந்தையோடு வந்தால் ..

குழந்தை தின்ன தேன் மிட்டாய் கேட்காமலே கிடைக்கும்...


கொசுறு.. 

நல்லெண்ண உறவின் சின்னம்..

வணிக நோக்கில்லா அன்பின் அடையாளம்..


இதையெல்லாம் மீறி லாபமே குறிக்கோள் என பல சரக்கு கடை அண்ணாச்சி இருந்ததாக நினைவில்லை. 


சாலையில் போகும் பள்ளி சிறுவன் கீழே விழுந்து அழுதால் அவனை கூப்பிட்டு மிட்டாய் தந்த செட்டியார் எங்கே...


குழந்தை விரும்பி கேட்டு பெற்றோர் வாங்கி தரா நிலையில், சாக்லேட் எடுத்து கையில் கொடுத்த நாட்டார் அண்ணாச்சி எங்கே 


முகம் கொடுத்து பேசாத ...

புன்முறுவல் கூட பூக்காத...

இக்கால அங்காடி நிறுவனங்கள் எங்கே?


இதனை எல்லாம் இக்கால அங்காடியில் எதிர்பார்க்க முடியுமா? 


பளபளக்கும் கண்ணாடிகள்..

மினுமினுக்கும் அலங்காரங்கள்..

மினுக்கி நிற்கும் மாலில் (mall)

அன்பும் கிடையாது..

புன் முறுவலும் கிடையாது.. அரவணைப்பும் கிடையாது.. நல்லெண்ணமும் கிடையாது..


ஆதலால் உலகத்தீரே கொசுறுவை இழிவாக நினைக்காதீர்..


-ஸ்ரீவி

***********************

அண்டங்காக்கைகள் தந்த கொசுறு!



சிறு வயது விளையாட்டு!

இரண்டு அண்டங்காக்கைகளைக்

கண்டால் இன்பம்..

ஒன்று குறைந்தால் துன்பம்..

நம்மைக் கண்ட அண்டங் காக்கைகளுக்கு

இன்பமா? துன்பமா?

யாரறிவார்???


பார்த்துவிட்டால்

தலைமுடி தொட்டுக்கொண்டே ஓடித் தொட்டு அடுத்தவருக்கு துன்பத்தைக் கடத்திவிட்டால் 

துன்பம் நம்மைத் தொடுவதில்லை..

இன்பத்தைப் பரிசளிக்க

ஏனோ அந்த விளையாட்டுக்கு விருப்பமில்லை..

ஒரு நன்னாள் ...

இரு அண்டங்காக்கைகள்....

கண்டுவிட்டேன்.. கண்டுவிட்டேன்.. 

"இன்பத்திற்கு இரண்டு"

(*Two for joy, one for sorrow)

ஒன்றுக்கு இரண்டுமுறை சொல்லிவிட்டேன்.

அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!

அம்மா பூக்காரரிடம் 

பூ வாங்கச் சொன்னாள்..

கிடைத்தது கொசுறாய்

ஒரு ஒற்றை ரோஜா!

பூக்காரரிடம்

இரு அண்டங் காக்கைகள்   என்னிடம் சேர்க்கச் சொன்ன 

ஒற்றை ரோஜா!

அண்டங்காக்கா கொண்டைக்காரியாய் 

கூந்தலை அள்ளி முடித்திருந்த அம்மாவுக்குக் கொடுத்தேனா? 

என் "ஜிட்டு"கள்

ஒன்றுக்குள் யாருக்கும் தெரியாமல் செருகி மறைத்தேனா?

நினைவில் இல்லை..


- சாய்கழல் சங்கீதா


*ஜிட்டு- சிறுமிகளுக்கான  சிகை அலங்காரம்...

தலையின் இரு பக்கமும்..


****************

இளம் அம்மாவுக்கு கொசுறு..


மதிய உணவுடன்

அவள் பிள்ளை

மிச்சம் வைத்த 

நெய்ச் சோறு!


- சாய்கழல் சங்கீதா


***********



Monday, July 28, 2025

பயண அனுபவம்.

 ஜெயச்சந்திரனிலிருந்து 

தியாகராயநகர் வரை 

ஒரு நகரப் பேருந்துப் 

பயண அனுபவம்.


ஓட்டுனரின் அருகே

முன்னிருக்கை.


மகளிர் விடியல் பயணம்.

பேருந்தில் பெண்கள் 

கூட்டம்.


இள மாலை நேரம்.

கதிரவனின் இதமான 

அரவணைப்பு. 


மாலை வெயில் 

மாந்தர்க்கு நல்லதாம்.

விலையில்லா 

விட்டமின் டி.


வடிவேலு பாணியில்

பயண ஆரம்பம் 

என்னவோ

அமர்க்களம்.

ஆனா‌ல் முடிவுதான்

பயங்கரம்.


இராஜபாட்டை 

தந்தை போட்ட

நினைப்பில்

பாதையின் நடுவே

கைப்பேசியுடன்

ஒய்யாரமாய்

ஊர்ந்து செல்லும் 

இரு சக்கர வாகன ஓட்டி.


அவசரமாய் குறுக்கே 

வரும் பயணியர்

மூன்று சக்கர வாகனம்.


ஆங்காங்கே 

இடப்புறம் 

வேகமாய் முந்தும்  

ஸ்விக்கி,ஸொமாட்டோ 

ஊழியர்கள்.


சட்டெனக் குறுக்கிடும்

பாதசாரிகள்.


இடித்து விடுமோ என்று 

இல்லாத பிரேக்கைக் 

காலால் போடும் நான்.


ஓட்டுனருக்கோ 

அவரது

திறமையில் 

நம்பிக்கை.


எனக்கோ

இறங்கும் வரை 

எதிரில் எமன்.

.

மூத்த குடிமக்களுக்கு

என் கனிவான 

வேண்டுகோள்.


இருக்கை 

கிடைத்ததென்ற 

இறுமாப்பில் 

பேருந்தின் 

முன் இருக்கையை 

தெரிவு செய்யாதீர்.


இரத்தக் கொதிப்பு 

மாத்திரை ஒன்றைக் 

கூடுதலாய்ப் போடாதீர்.


- முகம்மது சுலைமான்,

Sunday, July 27, 2025

இரண்டாம் ஆண்டு விழா விவரணம்

 *நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்தின் மணிமகுடத்தில் இன்னும் ஒரு வைரம். வெற்றி வாகை சூடிய இரண்டாம் ஆண்டு விழா விவரணம்*


27 ஜூலை 2025 ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக ஒன்பதரை மணிக்கு சென்னை அடையாரில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் இயக்குனர் கே சுப்பிரமணியம் அரங்கத்தில் நமது இரண்டாம் ஆண்டு விழா கோலாகலமாக துவங்கியது. 


முதல் நிகழ்ச்சியாக குத்து விளக்கை  திரு காத்தாடி ராமமூர்த்தி அவர்களும் நமது உறுப்பினர்கள் முகமது சுலைமான் சுமதி உஷா தேவி மற்றும் கணேசன் ஏற்றி வைத்தார்கள். தமிழ்த்தாயின் வாழ்த்தினை திருமதி விஜயலட்சுமி பாலாஜி அவர்களும் திருமதி துர்கா சாய்ராம் அவர்களும் இணைந்து பாட அரங்கமும் அவருடன் சேர்ந்து தமிழ்ப் பண்ணை இசைத்தது. 


பல் சுவை நிகழ்ச்சிகளின் துவக்கமாக முதலாவதாக நமது மகாகவி பாரதி தமிழ் சங்க பாடல் இசைக்கப்பட்டது.  திருமதி.சங்கீதா அவர்கள்  எழுதி திரு.சாய்ராம் அவர்கள் இசையமைத்த நமது சங்கப் பாடலைப் திருமதி விஜயலட்சுமி அவர்களும் செல்வி இனியா அவர்களும் பாடினார்கள்.


நமது பல்சுவை நிகழ்ச்சிகளின் நல்ல துவக்கமாக அது அமைந்தது பிறகு மெல்லிசை பாடல்கள், கவியரங்கம், குறு நாடகம், நடனம், பட்டிமன்றம் என ஆண்டு விழா களை கட்டியது.


*மேடையில் இன்னிசைத்த குயில்கள்:*

டாக்டர் செல்வன், இனியா, 

துரைராஜ், 

பானுமதி, 

பவானி, 

வாசலக்ஷ்மி, 

ஐ பி ஸ்ரீனிவாசன், சுஜாதா 


ஆகியோர் இவர்களுக்கு நமது வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.

பாடல்களுக்கு பயிற்சி அளித்து வழிகாட்டிய திரு சாய்ராம் அவர்களுக்கு நன்றி. 


கவியரங்கம் பாரதி தந்த வைர வரிகளை தலைப்புகளாக கொண்டு சிறப்பாக நடந்தது: 


*1) மனதிலுறுதி வேண்டும்* : சங்கீதா


*2) வாக்கினி லேயினிமை வேண்டும்;* : மோகன்


*3) நினைவு நல்லது வேண்டும்,* : அமுதவல்லி


*4) நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;* : கணேசன்


*5) கண் திறந்திட வேண்டும்,* : மலர்விழி


*6) மண் பயனுற வேண்டும்,* : ராஜேஸ்வரி


இந்த ஆறு  கவிஞர்களும் தமிழ் சங்கத்தின் ஆறு ரத்தினங்களாக மேடையில் ஒளிர்ந்தார்கள் என்பதில் தமிழ்ச்சங்கம் பெருமை கொள்கிறது.


தமிழ்ச்சங்க மேடை என்றால் பட்டிமன்றம் இல்லாமலா இதுவரை நமது மேடையில் நடந்த பட்டிமன்றங்கள் அனைவரின் ஏகோபித்த வரவேற்பையும் பாராட்டுதல்களையும் பெற்றது அதைப்போலவே இந்த விழாவின் பட்டிமன்றமும் மிக அருமையாக நடந்ததோடு அனைவரின் பாராட்டுதல்களை பெற்றது: 


*திரைப்படப் பாடல்களில் தத்துவ முத்துக்களை அள்ளித் தெளித்தது கண்ணதாசனா?வாலியா? என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தின் நடுவர் திரு சி ஹரிஷ். 


பட்டிமன்ற பங்கேற்பாளர்கள்:


கண்ணதாசன் அணி:


1.பிச்சை மணி 

2.மல்லிகா மணி 

3.சுல்தானா 



வாலி அணி:


1.நாகராஜ் 

2.தேவி 

3.ஶ்ரீவித்யா


பட்டிமன்றத்தின் பொறுப்பாளராக தலைவர் ஸ்ரீவி அவர்கள் இருந்தார்கள் அவருக்கு உதவியாக மகாலட்சுமி செயல்

 பட்டார்கள்.


சிறார்கள் நடித்து அனைவரின் மனங்களையும் கவர்ந்த இரண்டு குறு நாடகங்கள் மிகச் சிறப்பாக அரங்கேறின சுட்டதா சுடாததா என்கின்ற தலைப்பிலும் தோசைக்கு ஜீனி கிடையாது நாடகத்திலும் சிறார்கள் நடிப்பும் காவலராக வந்த திருமதி பத்மா அவர்களின் மிரட்டும் குரலும் அரங்கத்தை கட்டிப் போட்டது. நடிகர்கள்: 


திருமதி.பத்மா 

செல்வன்.முகமது அர்மான்,

செல்வன். அகரன்,

செல்வன். மகிழ் மித்ரன்,

செல்வன். ரக்ஷித்,

செல்வன். ஆதவன்.


இவர்களின் நடிப்பு அரங்கத்தை சிரிப்பு மழையில் நனைத்ததோடு ஆரவாரமான கைத்தட்டலையும் பெற்றது.


கல்யாணிக்கு கல்யாணம் என்கிற தலைப்பில் இரண்டு நிமிடம் மள மளவென பேசி எஸ் பி எம் அய்யாவின் பைத்தியக்கார டாக்டர் வசன பாணியை மீண்டும் அரங்கேற்றிய செல்வன். கௌசலேஸ், அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றான்.


இவர்களுக்கு முழு அர்ப்பணிப்போடு அயராது உழைத்து பயிற்சி கொடுத்த நிதி செயலர் திரு சாய்ராம் அய்யா அவர்களுக்கு தமிழ் சங்கத்தின் நன்றிகள்.


எட்டு வயது சிறுமியிலிருந்து 60 வயதைக் கடந்த இல்லத்தரசி வரையில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என அரங்கத்தையே ஆரவார மகிழ்ச்சி கூச்சலில் மூழ்கடித்து தங்களது நடனத்தால் அனைவரின் மனங்களையும் வென்றனர் நமது நடன மணிகள்:



திருமதி.பிரபு குமாரி, 

திருமதி.துர்கா சாய்ராம், 

திருமதி.ரமா கிருஷ்ணன், 

திருமதி.விமலா தேவி, திருமதி.மல்லிகா

திருமதி.சிந்து, 

 திருமதி.மஞ்சுளா, 

திருமதி.ஜெயந்தி ராஜன்,

திருமதி. விஜயகுமாரி

செல்வி.சம்யுக்தா, 

செல்வி.அர்பா, 

செல்வி.மோனிஷா, 

செல்வி.ரோஷனா, 

செல்வி.ஆயிஷா,  

செல்வி.ஆராதனா, 

செல்வி.நிவர்சனா, 

செல்வி.சாதனா ஸ்ரீ,

செல்வி.ஆதிரா.


இவர்களை பம்பரமாக சுழல விட்டு ஆடுவதற்கு பயிற்சி கொடுத்த நம் பூர்வாகுடி வாசி இளவல் உமேஷ் அவர்களையும் இதற்கு முழு முயற்சி எடுத்து பயிற்சி கொடுத்த திருமதி பிரபுகுமாரி அவர்களையும் தமிழ்ச்சங்கம் நன்றி பாராட்டி மகிழ்கிறது.


இரண்டாம் ஆண்டு விழா மாபெரும் வெற்றியை ஈட்டியது என்று சொன்னால் அந்த வெற்றிக்கு அணி சேர்த்தது போல நான்கு சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரைகள் நம்மை வாழ்த்தும் விதமாகவும் நமது இளைய தலைமுறைக்கு அறிவுரை கூறும் நிறமாகவும் சிறப்பாக அமைந்திருந்தது. 


இயக்குனர் திரு. எஸ். பி. முத்துராமன் ஐயா நமது சங்கத்தின் உடைய செயல்பாடுகளை வாழ்த்தியதோடு ழகரக் கவியரங்கத்தை குறிப்பிட்டுச் சொன்னதும், நமது செயல்பாடுகளை மனம் திறந்து பாராட்டியதும் நமக்கு உற்சாகம் தந்தது. அதோடு இல்லாமல் அவருடைய திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதன் மூலமாக வாழ்வில் வெற்றி பெற 

*ஈடுபாடு* *தன்னம்பிக்கை* *ஒழுக்கம்* 

*உழைப்பு*

 இந்த நான்கு விஷயங்களும் அடிப்படை என்று கூறினார். நமது பார்வையாளர்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த அறிவுரை மூலம் நல்ல வழி காட்டினார். அவருக்கு நம் நன்றி. 


திரு எஸ் பி எம் ஐயா தனது திருக் கரங்களால் *ஸ்ரீவி எழுதிய பாரதியின் வைர வரி கதைகள்* என்ற நூலையும் *திரு கணேசன் எழுதிய ஊர்க் குருவி* என்ற நூலையும் வெளியிட்டார். இது நமக்கு கிடைத்த பெரும் பாக்கியம். அதோடு கடந்த இரண்டு வருடங்களின் சிறந்த பங்கேற்பாளர்களுக்கான  *பாரதி விருதையும்* அவர் வழங்கினார்.


நகைச்சுவை சரவெடிகளால் நாடக மேடை உலகை அதிரசெய்த திரு. காத்தாடி ராமமூர்த்தி அவர்களுடைய வாழ்த்துரையில், தமிழ்ச் சங்கத்தை பாராட்டி வாழ்த்தியதோடு நகைச்சுவை அலைகளால்  அனைவரையும் மகிழ்வித்ததோடு தனது முத்திரையை பதித்தது மிகச் சிறப்பாக இருந்தது. அவருக்கும் நம் நன்றி. *ஶ்ரீவி அவர்கள் எழுதிய கோடையிடக் காமுவும் தொடை நடுங்கி சோமுவும்* என்கின்ற நகைச்சுவை நூலை நகைச்சுவை மன்னர் திரு காத்தடி ராமமூர்த்தி வெளியிட்டது ஒரு சிறப்பம்சம். அந்த நூலை சாம்பசிவம் பெற்றுக் கொண்டார்கள்.

இவரும் 11 நபர்களுக்கு பாரதி விருது வழங்கினார். 


பிறகு, மெல்லிசை மேடையில் ஒரு வலம் வந்த திரு அபஸ்வரம் ராம்ஜி அவர்கள் சங்கத்தின் நூலான *ழகரக் கவியரங்க* நூலையும் *திருமதி என் அமுதவல்லி அவர்கள் எழுதிய என்னை நான் அறியேன்* என்ற நூலையும் வெளியிட்டார். பிறகு 13 நபர்களுக்கு *பாரதியார் விருது* வழங்கினார். அவரது உரையில், காத்தாடி ராமமூர்த்தி அவர்களுக்கு தான் சற்றும் சளைத்தவர் அல்ல என்பது போல நகைச்சுவைத் தோரணங்களால் அரங்கத்தில் கலகலப்பை ஏற்படுத்தினார். நமது மகாகவி பாரதி தமிழ் சங்கத்துடன் அவருக்கு இருக்கும் உறவினை சுட்டிக்காட்டி நமது சங்கத்தின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டியதோடு மேலும் மேலும் நமது சங்கம் வளர்ந்திட நல்லாசிகளும் கூறினார். 


நமது நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய நிரலான *வலையொளி துவக்கத்தை* ஸ்ரீவித்யா அவர்களின் ஆசிரியை *திருமதி தீபிகா அருண்* துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். அவரது உரையிலே தமிழ் மொழி சற்றே தனது மகத்துவத்தை இழந்து வருகிற இந்தக் காலத்திலே குழந்தைகள் மத்தியிலே தமிழை பிரபலப் படுத்துவதற்காக தான் எடுத்த முயற்சியான வலையொலி துவக்கத்தை குறிப்பிட்டு நமது சங்கத்தின் செயல்பாட்டினால் மிகவும் கவரப் பட்டதாக கூறி நமது மகாகவி பாரதி சங்கத்தை வாழ்த்தி பேசினார்.


இரண்டாம் ஆண்டு விழாவின் தொகுப்பாளினி மகாலட்சுமி அவர்களுக்கும்,

நமது அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொளி எடுத்து youtube சேனலில் பதிவேற்றுகின்ற திரு. விஜய் கணேஷ் அவர்களுக்கும், 

நடனப் பயிற்சியாளராக இருந்து மிகச் சிறப்பானதொரு நிகழ்ச்சியை அரங்கேற்றிய திரு உமேஷ் அவர்களுக்கும் 

நம் சங்கத்தின் அன்பளிப்பான  நூல்களை அவர் வழங்கினார்.


நிறைவாக ஒரு மிகச்சிறந்த நன்றி உரையை திரு வெ. நாகராஜன் அவர்கள் ஆற்றிய பின்பு தேசியப் பண் இசைக்கப் பட்டு விழா இனிதே முடிந்தது. 


*நன்றி நவிலல்:* ~கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த ஐந்து நிகழ்ச்சிகளுக்காகவும் பயிற்சி அளித்த பயிற்சியாளர்களுக்கும்,

~ மிகுந்த ஆர்வத்தோடு பயிற்சிகளை மேற்கொண்ட பங்கேற்பாளர்களுக்கும், 

~ இந்த நிகழ்ச்சி சிறப்புற நடத்திட உழைத்திட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும், ~ தன்னார் வலர்களுக்கும்,

~ இந்த நிகழ்ச்சியை மாபெரும் வெற்றி விழாவாக மாற்றிய நமது தமிழ் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றியை மகாகவி பாரதி தமிழ் சங்கம் தெரிவிக்கிறது.


*குறிப்பு: நிகழ்ச்சியில் நிறைவுப் பகுதியில் தலைவர் ஶ்ரீவி அவர்கள் குறிப்பிட்டதைப் போல, காலத்தின் அருமை கருதி இன்றைய நிகழ்வுகளில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு நூல்கள் வழங்கிட இயலாமல் போனது. ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நமது நிகழ்ச்சியில் அவர்களுக்கு அந்த நூல்கள் வழங்கப்படும்.*

மூன்றாவது பிறந்தநாள்

 மூன்றாவது பிறந்தநாள்

கண்டது நம் தமிழ்ச் சங்க கன்று!

எத்தனை பேரின் கனவு 

நனவானதோ தெரியவில்லை இன்று!


வாசலில் சந்தன பன்னீர்!

சிலர் கண்களில் ஆனந்த கண்ணீர்!


தலைமுறைகளை இணைத்த  நிகழ்ச்சி! நெஞ்சமெல்லாம்

நெகிழ்ச்சி!


வீட்டில் முடங்கிய திறமை..

வெளிச்சத்திற்கு வந்தது .....அருமை!


தமிழ்ச்சங்கத்திற்கென ஒரு பாடல் ..தொட்டது பல இதயம்!

இசையமைத்தவரும் பாடியவர்களும்  வரிகளுக்கு உயிர் கொடுத்த மாயம்!


கவிதைகளை அள்ளி வந்த கவிஞர்கள்!

கருத்து விதைகளையும் 

தூவி சென்ற வித்த(து)கர்கள்!


பட்டிமண்டபத்தில்

இரு அணி போர் வீரர்களின் மோதல்!

வெள்ளை கொடி 

காண்பித்த நடுவருக்கு

கண்ணதாசன்,வாலி

இருவர் மீதும் காதல்!



பார்த்தசாரதி சுடலை

சுடலை சுட்டதை பார்த்த சாரதி

மூவரையும் காவல் அதிகாரி விசாரிக்காமல் விடலை!

மூன்று சிறு கடலை!

நால்வரும் நடிப்பில் மலைக்க வைத்த மலை!


தோசைக்கு சீனி ...

நடிகர்கள் எந்த நாடகக் கம்பெனி?😀

இருவரும் போட்டனர் சிரிக்க நல்ல தீனி..


கல்யாணிக்கு கல்யாணம்...

கல்யாண் ஜூவல்லர்ஸில் தங்கம்

வாங்க முடியாமல் போனாலும்

கல்யாணி கவரிங்கிலாவது வாங்கி

தமிழ்த் தங்கத்துக்கு

நகை போட வேண்டும்

நம் சங்கம்😁


ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

குட்டி மயில்கள் முதல் 

பாட்டி மயில்கள் வரை..

பூர்வாவில் நடன மயில்களுக்கு இல்லை

திண்டாட்டம்!


இசையரசர்களும் இசையரசிகளும் 

சொற்களை மெல்லாமல் அசைத்த மெல்லிசை..

அவையோரை கட்டி இழுத்த இசை விசை!


வலையொளி இன்று எழுப்பியது முதல் ஒலி!

புத்தகங்களுக்கு இல்லை ஈடு..

மூன்று ஆசிரியர்களின் ஈடுபாட்டால்

புத்தகங்கள் வெளியீடு!


நன்றி உரைத்த நாகராஜ் ஐயா..

உங்க  நன்றியுரை

புது தினுசய்யா..


மகாலட்சுமியின் தொகுப்பு..

இதனால் நிகழ்ச்சி நகர்ந்தது..சிறப்பு!


நான்கு சிறப்பு விருந்தினர்..

சிரிப்பில் ஆழ்த்திய இருவர்..

வலையொளியில் ஆழ்த்த ஒருவர்...

நால்வரில் அறிவுரை தந்தவரே அகவையில் பெரியவர்..



மூன்றெழுத்து "நன்றி"..

மூன்று தலைவர்களுக்கும்

மூச்சிரைக்க ஓடி களைத்தவர்களுக்கும்

மூவாயிரம் முறை...

கை தட்டி பாராட்டியவர்களுக்கு 

பத்தாயிரம் முறை..

ஊக்கமளித்தோருக்கு

உயிருள்ளவரை!


- சாய்கழல் சங்கீதா

***************

எம்ஜிஆர் ஜானகி 

கல்லூரியில் 

ஒரு விழா.


எங்கள் 

பாரதி தமிழ்ச்சங்கம்

கண்ட

ஈராண்டு 

நிறை விழா.


அனைவரும் 

அகம் மகிழ்ந்த 

திருவிழா.


எட்டிலிருந்து 

எண்பதும் 

அதற்கு மேலும் 

ஆடிக் கொண்டாடிய 

பெருவிழா.


விழி, செவியன்றி 

வயிற்றுக்கும் ஈந்த

நன் விழா.


மேலும்

பதின் ஆயிரம் 

விழாக்கள் 

காண 

வாழ்த்துகள்.

- முகம்மது சுலைமான்


பட்டை கிளப்பிய விழா

 மூன்றாம் ஆண்டில் 

மகாகவியின் பெயரோடு

அடியெடுத்து வைத்தது

நம் தமிழ் சங்கம் 


ஒருவர் பாடல் எழுத

ஒருவர் இசையமைக்க

இருவர் இணைந்து பாட

அழகாக துவங்கியது விழா


இயல் இசை நாடகம்

சிறப்பு விருந்தினர் வருகை

தமிழ்ச்சங்கம் படைத்த விருந்தும்

இயல் இசை நாடகம்


மகாகவியின் நல் வரிகள்

கவிஞர்களின் பாவாக

கவியரங்கில் அரங்கேற

களைகட்டியது அரங்கம் 


தமிழோடு விளையாடி

நாடகத்தில் புகுந்தாடி

அசத்தினர் சிறுவர்கள்

சிலிர்த்தது அரங்கம் 


மெல்லிசை பாடகர்கள் 

இன்குரலால் மயக்க

இசை மழையில் 

நனைந்தது தமிழ் உலகம் 


பட்டி மன்றத்தில்...

அணி பிரிந்து வாதாடினாலும்

இணைந்து சுவையேற்ற

நடுவரின் பேச்சும் சுவை கூட்ட

இரசித்து போற்றியது அவை


துள்ளி ஆடும் சிறாரோடு

துடிப்பாக ஆடிய மகளிர் 

பயிற்சி கொடுத்தவரின் நடனத்துடன்

அதிர்ந்தது மேடை மட்டுமல்ல...


கதைகள் கவிதைகள் என

முத்து முத்தாக நூல்கள்

நூல் வெளியீட்டுடன்

மிளிர்ந்தது விழா


வலையொலியும்

பாரதி விருதுகளும் 

அணி சேர்க்க

ஒளிர்ந்தது தமிழ் சங்கம் 


பூமாலையாக நிகழ்ச்சிகள் தொகுத்த

தொகுப்பாளரின் சொல்வளம்

முத்தாய்ப்பாக நன்றியுரைத்தவரால்

நிறைவடைந்தது விழா


திரைக்கு பின்னால்

ஒலி ஒளி உணவு  என

ஓடியாடிய நல்லிதயங்களால்

மிளிர்ந்தது கொண்டாட்டம் 


தலைவர்களின் விடாமுயற்சி 

அயற்சி இல்லா உழைப்பு

உறுப்பினர்களின்‌‌ ஊக்கம்

இவற்றால் 

தமிழ் சங்கம் எட்டியதோ அடுத்த படி


தமிழ் அன்னை ஆசிபெற்று

மேலும் விழாக்கள் சிறக்கட்டும்

உறுப்பினர்கள் உயரங்கள் தொடட்டும்

தமிழ்ச்சங்கம் துருவ நட்சத்திரமாக வழிகாட்டும் 🙏

- அமுதவல்லி


********************

பட்டை கிளப்பிய விழா 


இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இன்று 

   எம் பாரதி தமிழ்ச் சங்கக் குழந்தைக்கு


திரண்டது பூர்வா தமிழார்வம் எல்லாம் 

   திகைக்க வழிந்த விழா அரங்கமாம்


கரைகண்ட சிறப்பு விருந்தினராம் நால்வர் 

   காண வந்தாரை வாய் பிளக்க வைத்தனர் 


முரட்டு சுடலை, பிறரை மறக்க முடியாது 

   மூத்த குடிகள் பொழிந்த இன்னிசை ஓயாது


அரங்கம் அது சூடாக நடனம் இருந்தது 

   அகவை எண்களும் காணாமல் போனது


திரையில் அன்று தெளித்த தத்துவ முத்துக்கள் 

   தெளிந்தோம் கவியரசும், வாலியும் நம் சொத்துக்கள் 


கருத்தாழக் கவியரங்கம், நன்றி உரையும் 

   கண்டோம் ஒரு பூனை பால் குடித்ததையும் 


கரண்டி கரண்டியாய் சாம்பார், தயிர் சாதம் 

   கம்பாஸால் வரைந்த சப்பாத்தி, குருமாவும்.


   " சுருக்கமாக பட்டை கிளப்பியது "


__. குத்தனூர் சேஷுதாஸ் 27/7/2025

**************************



Saturday, July 26, 2025

மண் பயனுற வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 மண் பயனுற வேண்டும்


விடுமுறைக்கு ரயிலேறி

ஊருவரும் செல்லப் பேரான்டி 

நீ வரும் வழியில் 

பார்த்த காட்சி 

சொல்லு பேரான்டி 


அடுக்கடுக்கா 

பெட்டி போல 

வீடு பார்த்தியா ?

அத தாங்கி நிற்கும்

அழகு பெற்ற

நிலத்த பார்த்தியா ?


தலைக்கு மேலே 

உசந்து போகும்

புகைக்கூண்டு பார்த்தியா?

அதிலிருந்த அமிழக்கழிவின் 

வாசம் பிடிச்சியா?


அக்கழிவு நீரில 

கருகிப்போன தாய பார்த்தியா?

பூமித்தாய பார்த்தியா?


கொஞ்ச நேரம்  பொறுத்திடு கண்ணு 

நம்ம ஊரு வந்துடும்  பக்கமா 

கண் குளிர பார்க்கலாம் 

பச்சைப் பயிரெல்லாம் மொத்தமா


பாத்தி கட்டி உழவு செஞ்சு 

மண்ண நானும் பார்த்ததால 

பாட்டி வீடு நீயும் வந்து 

சப்புகொட்டி சாப்பிடலாம் 

பலவிதமான சோற 


உருளை கருணை அவரையெல்லாம் 

உனக்கு பிடிச்ச காயி 

மண்ணில் உருவாக்க நானிடுவேன் 

இயற்கை உரம் சாமி.

செயற்கை உரம் நெகிழியெல்லாம் 

மண்ணுக்காகும்  நோயி 

இதை புரிஞ்சு நீயும் வளர்ந்திடணும் 

தாயின் மனசுக்கோணாம நீயி

பூமித்தாயின் மனசு கோணாம நீயி.


படிச்சபுள்ள உனக்கு தெரியும் 

மண்ணின் வளம் காக்க 

பார்த்து நீயும் நடந்துக்க 

நம் மனித நலம் செழிக்க. 


ஏர்பூட்டி உழவு செய்யும் 

எங்க செல்ல தாத்தா

ஏழூறு தாண்டி வரேன் 

உன் முகத்த பார்க்க

எப்போதும் நினைவிருக்கும் 

நீ சொன்ன சேதி 

நம் மண்ணபத்தி நீ சொன்ன சேதி


பயிறும் மண்ணும் பயனுற 

இயற்கை வேளாண் வேணும்

இளைப்பாற  மரங்கள் வேணும்

நஞ்சற்ற உணவு வேணும்

நம்மாழ்வார் சொல் வேணும்

என்னைக்குமே வேண்டாம் 

அமிலக்கழிவும் நெகிழிக்கழிவும்


நீ சொன்ன வார்த்தைகள் தாத்தா

நெக்குருட்டி வச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள 


இன்னுங்கொஞ்சம் 

என் கருத்து சொல்லிடுறேன் 

உன் இருகாது குளிர கேட்டுக்கோ 


உணவு கல்வி மனித உயிர்கள்

அனைத்திற்கும் கிடைத்திடணும் 

நல் உழைப்பினிலே 

பிரிவினைகள் அகன்றிடணும் 


காற்றும் நீரும் கலங்கமற்று 

காசின்றி கிடைத்திடணும்

காடு கடல் வான்வாழ் உயிர்கள்

களிப்போடு வாழ்ந்திடணும் 


கண்ணுக்கு புலனாகா

 உயிர்காக்கும் நுண்ணுயிர்கள் 

கல்லறையில் உறங்கிடணும்

அணு ஆயுத பீரங்கி

அன்பின்முன்  புதைஞ்சிடணும்


தொழில்நுட்ப வளர்ச்சியிலே 

மக்கள் தொல்லையெல்லாம் 

ஒழிஞ்சிடணும் 

அறநெறிப் பாதையிலே 

அவனியெல்லாம்  செழித்திடணும் 

உன் ஆசைப்பேரான்டி நான் 

இதிலே அமைதியாய் வாழ்ந்திடணும்


கலங்காம  நீ இரு தாத்தா

மண்பயனுற வாழ்ந்திடுவேன் 

நம் சந்ததிய காத்திடுவேன்.







மண் பயனுற வேண்டும்


விடுமுறைக்கு ரயிலேறி

ஊருவரும் செல்லப் பேரான்டி 

நீ வரும் வழியில் 

பார்த்த காட்சி 

சொல்லு பேரான்டி 


அடுக்கடுக்கா 

பெட்டி போல 

வீடு பார்த்தியா ?

அத தாங்கி நிற்கும்

அழகு பெத்த

நிலத்த பார்த்தியா ?


தலைக்கு மேலே 

உசந்து போகும்

புகைக்கூண்டு பார்த்தியா?

அதிலிருந்த அமிழக்கழிவின் 

வாசம் பிடிச்சியா?


அக்கழிவு நீரில 

கருகிப்போன தாய பார்த்தியா?

பூமித்தாய பார்த்தியா?


கொஞ்ச நேரம்  பொறுத்திடு கண்ணு 

நம்ம ஊரு வந்துடும்  பக்கமா 

கண் குளிர பார்க்கலாம் 

பச்சைப் பயிரெல்லாம் மொத்தமா


பாத்தி கட்டி உழவு செஞ்சு 

மண்ண நானும் பார்த்ததால 

பாட்டி வீடு நீயும் வந்து 

சப்புகொட்டி சாப்பிடலாம் 

பலவிதமான சோற 


உருளை கருணை அவரையெல்லாம் 

உனக்கு பிடிச்ச காயி 

மண்ணில் உருவாக்க நானிடுவேன் 

இயற்கை உரம் சாமி.

செயற்கை உரம் நெகிழியெல்லாம் 

மண்ணுக்காகும்  நோயி 

இதை புரிஞ்சு நீயும் வளர்ந்திடணும் 

தாயின் மனசுக்கோணாம நீயி

பூமித்தாயின் மனசு கோணாம நீயி.


படிச்சபுள்ள உனக்கு தெரியும் 

மண்ணின் வளம் காக்க 

பார்த்து நீயும் நடந்துக்க 

நம் மனித நலம் செழிக்க. 


ஏர்பூட்டி உழவு செய்யும் 

எங்க செல்ல தாத்தா

ஏழூறு தாண்டி வரேன் 

உன் முகத்த பார்க்க

எப்போதும் நினைவிருக்கும் 

நீ சொன்ன சேதி 

நம் மண்ணபத்தி நீ சொன்ன சேதி


பயிறும் மண்ணும் பயனுற 

இயற்கை வேளாண் வேணும்

இளைப்பாற  மரங்கள் வேணும்

நஞ்சற்ற உணவு வேணும்

நம்மாழ்வார் சொல் வேணும்

என்னைக்குமே வேண்டாம் 

அமிலக்கழிவும் நெகிழிக்கழிவும்


நீ சொன்ன வார்த்தைகள் தாத்தா

நெக்குருட்டி வச்சிருக்கேன் நெஞ்சுக்குள்ள 


இன்னுங்கொஞ்சம் 

என் கருத்து சொல்லிடுறேன் 

உன் இருகாது குளிர கேட்டுக்கோ 


உணவு கல்வி மனித உயிர்கள்

அனைத்திற்கும் கிடைத்திடணும் 

நல் உழைப்பினிலே 

பிரிவினைகள் அகன்றிடணும் 


காற்றும் நீரும் கலங்கமற்று 

காசின்றி கிடைத்திடணும்

காடு கடல் வான்வாழ் உயிர்கள்

களிப்போடு வாழ்ந்திடணும் 


கண்ணுக்கு புலனாகா

 உயிர்காக்கும் நுண்ணுயிர்கள் 

கல்லறையில் உறங்கிடணும்

அணு ஆயுத பீரங்கி

அன்பின்முன்  புதைஞ்சிடணும்


தொழில்நுட்ப வளர்ச்சியிலே 

மக்கள் தொல்லையெல்லாம் 

ஒழிஞ்சிடணும் 

அறநெறிப் பாதையிலே 

அவனியெல்லாம்  செழித்திடணும் 

உன் ஆசைப்பேரான்டி நான் 

இதிலே அமைதியாய் வாழ்ந்திடணும்


கலங்காம  நீ இரு தாத்தா

மண்பயனுற வாழ்ந்திடுவேன் 

நம் சந்ததிய காத்திடுவேன்.

கண் திறந்திட வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 கண் திறந்திட வேண்டும் 


               தமிழா 


பிறமொழி பேச

தமிழ்மொழி கலவாது 

தமிழ்மொழி பேச 

பிறமொழி கலவை

 ஏனோ? 


இன்று 

பேசும் வரியில் 

தமிழ் பாதி 

பிறமொழி மீதி 

 

நாளை 

பிறமொழி முக்கால் 

தமிழ்மொழி கால்


அடுத்து??


கண் திறந்திட  

வேண்டும் தமிழா 

தமிழை நீ

 காத்திட வேண்டும் 

தமிழை நீ 

வளர்த்திடவும் வேண்டும்.

 

                  பெண்ணே


பேசினால் வாயாடி 

பேசாவிட்டால் ஊமை 

சிரித்தால் பேதை 

சிரிக்கவிட்டால் முசுடு 


நித்தம் உன்னை 

விமர்சிப்போர் ஆயிரம் 


நினைவில் கொள் 

வேடிக்கை பார்பவருக்கும்

விமர்சனம் செய்வோருக்கு.

சரித்திரத்தில் ஒரு 

வரி கூட கிடையாது. 


சரித்திரம் படிக்க அல்ல

சரித்திரம் படைக்க

 பிறந்தவள் நீ 

தடைகளை உடைக்க

 பிறந்தவள் நீ 


கண் திறந்திட 

வேண்டும் பெண்ணே 


சாதனைகள்

 புரிந்திட வேண்டும் 

 பெண் கல்வி 

கற்றிடவும் வேண்டும்


              மனிதா 


சாலையோரம் விபத்து 

பாய்ந்தோடும் குருதி 

குருதியை சுடச்சுட 


படம் எடுக்கும் 

ஒரு கூட்டம் 

வேடிக்கை பார்க்கும் 

ஒரு கூட்டம்


உதவும் கரங்கள் 

எங்கே 

உருகும் உள்ளங்கள்    

எங்கே 


நினைவில் நிறுத்து 

நாளை நமக்கும் 

நிகழலாம் விபத்து 


கண் திறந்திட 

வேண்டும் மனிதா 


பிறர் துயர் 

துடைத்திட வேண்டும் 

பிறர் வாழ

உதவிடவும் வேண்டும் 


                  குழந்தைகளே


உண்ணும் வரமின்றி 

பசியை பரிசாக்கி 

மண்ணுக்கு உரமாகி 

மாண்டவர்கள் பல கோடி 


பசி இன்றியும்

பசிக்கு உணவின்றியும் 

அழும் பிள்ளைகள் 

பாரினில் பலருண்டு 


கண் திறந்திட 

வேண்டும் குழந்தைகளே 


உணவினை

 பகிர்ந்திட வேண்டும் 

விவசாயம்

 போற்றிடவும் வேண்டும் 


              சமூகமே 


ஐந்து பெரிதா 

ஆறு பெரிதா...?


ஐந்து என்பேன்

 நான்


மதம் பிடித்து 

 பிளிரும் ஐந்தறிவு

 களிரினும் கொடியது 


மதம் பிடித்து 

பிளிரும் ஆறறிவு

 மானுடம் 


மதிகெட்டு 

மதம்கொண்டு

காணிக்கை கேட்பது 

முடி என்றால் சரி 

தலை என்றால்??


கண் திறந்திட 

வேண்டும் சமூகமே 


மதம் மறந்திட

 வேண்டும் 

மனிதம் போற்றிட

 வேண்டும் 


                    நாம் 


கண் திறந்திட

 வேண்டும் நாம் 

அகக்கண் திறந்திட

 வேண்டும் 


குற்றம் களைந்திட 

ஊழல் அகற்றிட 


ஒற்றுமை ஓங்கிட 

வேற்றுமை ஒழித்திட 


பண்புடன் வளர்ந்திட 

உயிர்ப்புடன் வாழ்ந்திட 

 

மதிகொண்டு முயற்சிப்போம் 

விதியென்று

இங்கு ஏதுமில்லை 


கொண்டுபோகவும்

 இங்கு ஏதுமில்லை 

கொடுத்து போனால் 

நமக்கு ஈடில்லை 


கண் திறந்திடுவோம் நாம் 

கண் திறந்திடுவோம்


நம்மில் மாற்றம்

 கண்டு பாரதியே மீண்டும்

 கண்திறந்திட வேண்டும்


                               அ .மலர்விழி

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் 


தமிழார்வலர் அனைவருக்கும் வணக்கம் 


எண்ணெண் கலைகள் அருள் என் தாய் சரஸ்வதி போற்றி ! 


விண்ணாய், மண்ணாய் பலவாய் விரி இயற்கை போற்றி ! 


புண்ணியமே நிறை எம் புனித பாரதமே போற்றி ! 


வண்ணத் தமிழே ! உன்னால் வாழ்கிறேன் போற்றி ! போற்றி!! 


____________


யாருக்குக் கிட்டும் இனிய இத் தமிழ் மேடை 

   எனக்கும் வாய்த்தது, என்னே! தமிழின் கொடை


பாருக்குள்ளே நமது பாரதமே சிறந்தது 

   பாரதி வியந்தது இன்னுமாம் ஒன்று 


நேரென வேறொன்று இல்லாத தமிழ் நமது

   நினைக்கும் போதே தேனும் உள்ளே ஊறுது 


போரில் அன்று அறம் சொன்னான்  பார்த்தசாரதி 

   புவியில் பல எல்லார்க்கும் வேண்டினான் நம் பாரதி

________


ஒன்றல்ல இரண்டல்ல வேண்டியவை பலவாம்

   ஒவ்வொன்றும் நற்கருத்து உள்ள நல் முத்தாம் 


மனதில் உறுதி வேண்டும் அதுவும் ஒன்றாம் 

   மண் பயனுற வேண்டும் என்பதும் உண்டாம் 

   

சின்னக் கவிஞனாம் என் கையிலும் ஒன்று 

   செப்ப வேண்டும் அதைக் கவிதையில் இன்று 


நினைக்கும் போதே எனக்குப் புல்லரிக்கிறது 

   "நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்" அது 


_______


நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

   நேரம் எனக்கிதற்கு மூன்றே நிமிடம் 


விரும்பும் பொருளெல்லாம் நெருங்கினவாம்

   விண்ணை முட்டும் மனிதன் தேவைகளாம்


வருந்தாமல், நோகாமல் எல்லாம் இன்று வேண்டும் 

   வாரிசுகள் வழிவழியாய் வசதியாக வாழணும் 


விரைந்து சொல்வேன் இன்று விரும்பும் சில பொருளாம் 

   வேறெந்த உயிர்க்கும் இத்தனை வேண்டாவாம்

_______


கழுத்து கொள்ளாத தங்கம் காரிகை விருப்பம் 

   களவு போகா நிலை கழுத்து கேட்கும் இன்னும் 


கொழுப்பது உடலில் குறைக்க வேண்டுவார்

   தெருக்கோடி தான் பயிற்சிக் கூடம் வண்டி ஏறுவார் 


பழுத்து கனிகள் எங்கும் குலுங்க வேண்டுவார்

   பாரபட்சமின்றி வெட்டி மனைகள் வரைவார் 


எழுத்து ,எண் இரு கண் எல்லோர்க்கும் வேண்டுவார் 

   ஏழைக்கு அக் கண்கள் எட்டாத தூரம் வைப்பார் 

________


இரவில் என் கனவில் நம் பாரதியும் வந்தான் 

   " இதுவா நீர் வேண்டிய நெருங்கிய பொருள்? "_ இது நான் 


கருகருமீசைக்காரன்  கண்கள் சிவந்தன உடனே 

   " கடவுளிடம் நான் கேட்டது எல்லார்க்கும் பொதுவே


திருநாடாம் பாரதம் நம் இன்னொரு தாயாம் 

   திரண்டோம் நெருங்கிய விடுதலையும் பெற்றோம் 


அரண்மனை வாழ்வு அனைவர்க்கும் வேண்டவில்லை 

   அரைவயிறு உணவாவது அன்றாடம் தேவை 


குருவியும் குடும்பத்துடன் கூட்டில் வாழ்கிறது

   குழந்தையுடன் மனிதன் வீதியிலா உறங்குவது?


பருத்தி ஆடைகள் சில உடல் மறைக்கப் போதும் 

   பட்டாடை எல்லார்க்கும் வேண்டவில்லை நானும் 


பிரித்தாயும் கல்வியோ மிகமிக முக்கியம் 

   பெரிய வீட்டுக்கு மட்டுமா சாத்தியம் ?


உரிமை இது ஊரார் எல்லோர்க்கும் வேண்டும் 

   உயரும் நம் தேசம் காண உயிரும் வேண்டும் 


வருத்தும் நோய்வந்து வாட்டும் அந்நேரம் 

   வறுமை குறிக்கிடாது தேவை  மருத்துவம் 


அருந்தும் நீர், சுற்றுச்சூழல் சிறந்ததாக வேண்டும் 

   அத்தனை பேருக்கும் வேலை அரசின் கடமையாகும் 


பருந்தாய்ப் பறந்து, திரிய ஆசை எனக்கும்  

   பாகுபாடிலா பயணம் பாமரனுக்கும் வேணும் 


புரிந்ததா நான் வேண்டிய நெருங்கின பொருள் ?" கேட்டான் 

   பொழுது புலர்ந்தது, என்னுள்ளும் புரிந்தது 


_______

நெருங்கிய பொருள் எனக்கு இன்னும் சிறிது நேரம் 

   நிற்கிறார் தம் கவிதையோடு இவர்களும் பாவம்


எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன் 

    நன்றி நன்றி


__. குத்தனூர் சேஷுதாஸ்  27/7/2025

நினைவு நல்லது வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 நினைவு நல்லது வேண்டும் 


தமிழ்த் தாய்க்கு 

முதல் வணக்கம் 

நற்றமிழ் போற்ற

கூடி இருக்கும் அவையோர்க்கு

தமிழ் வணக்கம் 


இன்று தமிழ் அன்னை எனக்களித்த தலைப்பு 

மகாகவியின் நல் வரிகள் ...

'நினைவு நல்லது வேண்டும் ' 


நினைவு என்று எதைச் சொல்வீர்?


கடந்த காலத்தின் தடங்களா?

இக்கணத்தின் மனதின் துடிப்பா?

இல்லை

நாளைய பொழுதின் கனவா?


நினைவென்பது

நனவின் முத்திரைகளா?

அல்லது 

கனவின் சித்திரங்களா?


பாரதி கூறும் நினைவோ...

கனவுகளை மெய்ப்படுத்தும்...(2)


நினைவை

 சிந்தையில் நிறுத்தினால் அன்றோ

கனவுகள் நனவாகும்


 நிகழ்வுகள் நலமாக...

உலகம் உய்ய...

நினைவு நல்லது வேண்டும்


உயிரின் படைப்பில்..

உடலுக்கு உருவம் உண்டு 

மனதிற்கு வடிவம் இல்லை...


மனதை...நாம்

வடிவமைக்க வேண்டும் ...

சுயமாக சிந்தித்து 


செதுக்க வேண்டும் ...

சிந்தையில் 

எண்ணங்கள் நிலைக்க செய்து


எனவே...

வாழ்வை நிர்ணயிக்கும்...

மனதிற்கு வடிவம் இல்லை 


மனம் ஒன்று இல்லை எனில்

மனிதன் என்று சொல்வோமா?

குணம் அது திரிந்து விட்டால்

மனிதம் மறைந்து போகாதோ? 


உண்பது நாழி உடுப்பவை இரண்டே 

என்பதே வாழ்க்கை என்றானால்

தமிழில் திளைத்து மனமுருக

சங்கமம் இங்கே நடந்திடுமா? 


மிருகங்களுக்கும் மனமுண்டு

அவற்றுக்கென குணமுண்டு

மனிதனின் குணமென எதைச் சொல்வீர்?

தங்கக் கோட்டையில் வாழ்ந்தாலும் 

கள்ளமும் கயமையும் நிறைந்திருந்தால்

உதடுகள் மட்டும் புகழ் பாடும்

உள்ளம் அதையே நகையாடும்


மனிதம் தழைக்க உலகம் சிறக்க

நினைவு நல்லது வேண்டும் crescendo - 2


அல்லவை சொல்ல தேவையில்லை 

தரணி அறிய தானாக வலம்வரும்

நல்லவை சொல்வது அரிதென்றாலும்

காரிருள் சூழ்ந்தாலும்

ஒற்றை தாரகையாக வழிகாட்டும்


இருள் படர்கிறது என

இருளோடு உறைவீரோ?

மின்னும் நட்சத்திரத்தின்

ஒளித்துகளாய் ஒளிர்வீரோ?

ஒளித்துகளாக நினைத்தால் அன்றோ

கதிராக இருள் விலக்க

வழி தோன்றும் 


வாழ்வும் மிளிரும் உலகும் ஒளிரும்

நினைவு நல்லது வேண்டும்


உடலின் திண்மை ஊன் வளர்க்கும்

மனதின் திண்மை உயிர் வளர்க்கும்

நன்மை பயக்கும் செயலால் தான்

திண்மை என்பதே மேன்மையுறும்

செயல்கள் நலமாய் அமைந்திட

நினைவும் நலமாய் வேண்டும் 

உணர்ந்தே வரம் வேண்டினான் மகாகவி 

நினைவு நல்லது வேண்டும்  என...


எண்ணியது ஈடேற்றும்

நினைவென்பது...

காலத்தின் முகவரி

மனதின் முகம்

உயிரின் நாதம்

உடலின் மறைபொருள் 

வாழ்வின் நிலை 

இன்று கனவின் பிம்பம் 

அதுவே

நாளை நனவின் உருவம்..


எனவே நாளை

நாமும் நலம்பெற

உலகில் யாவும் நலம்பெற

நினைவு நல்லது வேண்டும் 


வாழ்வது ஒருமுறை தான்

அதில்

பாரதி சொன்ன

வேடிக்கை மனிதராக வீழ்ந்திட வேண்டாம் 

வழி காட்டும் 

துருவ நட்சத்திரமாக வாழ்ந்திட வேண்டும்(2)

அதற்கு

நமக்கும் வரம் வேண்டும் 

நினைவு நல்லது வேண்டும்


மகாகவியின் வரிகளைப் பகிர நல் வாய்ப்பளித்ததற்கு நன்றி. வணக்கம்


- அமுதவல்லி,


வாக்கினிலே இனிமை வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 வாக்கினிலே இனிமை வேண்டும்

இ ச மோகன்


எத்திசையும் புகழ் மணக்கும் தமிழ்த்தாயின் சீரிளமைத்திறம் கண்டு அடி பணிந்தேன். 


இங்கு வருகை்தந்து எம்மைப்பெருமைப்படுத்தும் சிறப்பு விருந்தினருக்கும், அவையோருக்கும் என்தலை தாழ்ந்த வணக்கங்கள்.



சிறியேன் என்னையும் நாவில் தமிழ்த் தேனைத் தடவி அரங்கேற்றினாள் தமிழன்னை

தலைப்போ வாக்கினிலே இனிமை வேண்டும்!


வாக்கு என்பது மக்களுக்கு மட்டுமே , இறைவன் அளித்த வரம், மாக்களுக்கு அல்ல.

அதிலும் இனிமை கலந்தால் , அது வரம்மட்டும்அல்ல , வரப்பிரசாதம்.


இனிமையோடு கலந்த வாக்கு , பொன்மலர் வாசம் பெற்றது போலன்றோ!


மனத்தினிலேயும் வாக்கிலேயும்இனிமை உண்டாயின் மெய்யும்

நேர்வழி செல்லும், இலட்சியப்பாதையில் எதிர்படும்தடைகளத் தகர்த்து எறிந்து.


வாக்கின் அன்னை நாக்கு

வன்சொல்தவிர்த்து இனிய 

வாக்கு  நா கூற தவறுவோர்,

சோகாத்து சோர்வடைவர், சொல்லிழுக்கும் பட்டு.


வன்சொல் சுடும்; வடு ஆறாது.

இன்சொல்லோ,தொடும் உள்ளத்தை.


 காக்க காக்க நா காக்க

இல்லை எனின்

ஆறடி மனிதனை ஆறு அங்குல நா கீழே தள்ளும்.


நா என்ன துடைப்பமா மற்றவர்

குறைகளைப் பெருக்கித் தள்ள ?


வாக்கினிலேஇனிமை கொண்டால் , கேட்பவர்க்கு மயிற்பீலியால் வருடிய உணர்வுண்டாகாதா!


 உழைத்துக்களைத்த கணவருக்கு வாக்கினிலே ,  இனிமையுடன் இல்லக்கிழத்தி குளம்பி அளித்தால், தினமுமே காதலர் தினம்தானே!


போக்குவரத்து நெரிசலில்

வாக்கினிலே இனிமையுடன்

கேட்டால்  காவலர் சீட்டி அடித்து வழி விடுவாரே.


நீட் தேர்வில் தோல்வியுற்ற பிள்ளையை வாக்கினிலே இனிமை கொண்டு அரவணைத்தால்

தோல்வியே வெற்றிக்கு முதல்படி

என்றுணர்வார் வருங்கால மருத்துவர்!


கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எதற்கு?


தண்டங்கள்!


 வாக்கினிலே இனிமை கொண்டு அமர்ந்து பேசினால், போர் மேகங்கள் விலகி கார்மேகங்களாக அமைதி மழை பொழியாதா!


உடலில் சர்க்கரை சேர்ப்பதை விட்டு வாக்கினிலே இனிமை கொண்டால் , உடலும் உள்ளமும்

நலம்பெறும்; உற்றமும் சுற்றமும்

கூடி இருந்து மகிழும்.


நாக்குக்கு நரம்பில்லை என்பர் ஆனால் வரம்பு வேண்டும்.

நாலும் பேசும், நாற்பதும் பேசும் நாக்கு இனிய மொழியே பேசினால் கேட்பவர் காதுகளில் இன்பத்தேன் பாயாதா!


மனதில் உறுதியும், நினைவில் நல்லதும் கொண்டு, வாக்கினிலே இனிமையும் அமைந்தால், நெருங்கின பொருள் கைப்படாதோ!- நிச்சயமாக,

என் மொழியல்ல, 

பாரதியின் பொன்மொழி!


- மோகன்

மனதிலுறுதி வேண்டும் ((ஆண்டு விழா கவியரங்கம்)

 மனதிலுறுதி வேண்டும்!



கமழும் தமிழ் மணம் நுகரும் தமிழ் மனங்களுக்கு என் மனம் கமழ்ந்த காலை வணக்கம்!


மனதிலுறுதி வேண்டும்!

 

மனங்களை வெல்லும் மகாகவி 

பார தீ யின் ஒரு அணல் பொறி என் தலைப்பு

அவல் பொறி மெல்லும் நானும் ஒரு கவி என கொண்டு வந்தேன் ஒரு படைப்பு


மனதிலுறுதி வேண்டும்

இம்மண்ணுலகில் மாண்புற வாழ்வதற்கே!


மலரைத் தாங்கும் மலர்த்தண்டைப் போல் 

மனதைத் தாங்கும் மாயத் தண்டாய் 

மனதிலுறுதி வேண்டும்


உளி தாங்கும் மனிதர்கள் 

உலகத்தையே வெல்லுவர்!

உறுதியற்ற மனிதர்களோ

ஏதோ காரணம் சொல்லுவர்!

உறுதி பூண்ட இம்மனிதர்கள் 

உங்கள் உள்ளங்களையும் அள்ளுவர்!


* மிதிவண்டி கேட்ட மகனுக்குக்காய் உழைக்கும் உழைப்பாளி

* முதலாளியாய் உயர உழைக்கும் 

தொழிலாளி

* பாராட்டுகளின்றி படைத்துக் கொண்டே இருக்கும் படைப்பாளி

*அகராதியில் விடாமுயற்சிக்கு மாற்றாய்  மாறும் மாற்றுத்திறனாளி 

*இனிப்பை கையில் கொடுத்தாலும் வாய்க்கு பூட்டு போடும் சர்க்கரை நோயாளி.. 

இவர் நோய்க்கு எதிராளி!

*குருதிக்காய் காத்திருந்து கூந்தலை முடியாமலிருந்த பாஞ்சாலி

*வங்காளியாய் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் எனும் சுதந்திரப் போராளி

அடக்கியோரை அலற விட்டதால் பாரதிக்கு இவர் பங்காளி!

வைரம் பாய்ந்த இம்மனங்கள் எழுப்புவது 

வைராக்கியம் எனும் ஓயாத ஓலி!


நோக்கம் எதுவாயினும்

குரங்கு மனதைக் கட்டிப்போட்டு

குறிக்கோள் கனியை எட்டிப் பிடிக்க

மனதிலுறுதி வேண்டும்

எனினும்...

பிடிக்க வேண்டியதை விரட்டிப் பிடிக்க

பிடிக்கக் கூடாததை விரட்டி அடிக்க

அறம் சார்ந்த அறிவும் வேண்டும்


அடங்காத மனமோ நம்மையே ஆளும்

மனக்குதிரைக்கு இட வேண்டும் கடிவாளம்

அலைபாய்வது மனதின் உரிமை

அடக்கி ஆள்வது அவையோரின் திறமை!


அடக்கி ஆண்டால் போதுமா?

அடக்க வரின் அடங்க மறுப்பதும் உறுதியன்றோ!


துன்பங்களைத் தூக்கியெறியும் துணிச்சல்

தோல்விகளும் தோற்றுப் போகும் மனத் திடம்

அசராமல் அடுத்த அடி எடுத்து வைக்கும் மனவலிமை

உடைக்க முடியா நெஞ்சுரத்திற்கு உரங்களாய் 

இவையெல்லாமும் வேண்டுமன்றோ!


ஓ பாரதியின் பராசக்தி!


தடுமாறும் வேளை ஊன்றுகோலாய் 

தடம் மாறும் வேளை தடி கோலாய் 

தடைகளைத் தாண்டிட தாண்டுகோலாய்

சவால்களை சாதனைகளாக்கும் மந்திரக்கோலாய் 

தன்னுயிரை தானே கொல்லும் மடமை பூட்டும் திறவுகோலாய் 

கனவுகளை தூங்கவிடா தூண்டுகோலாய் 

திமிங்கலத்துக்கு தூண்டிலிடும் தூண்டில்கோலாய் 

வெற்றி சரித்திரம் எழுதும் எழுதுகோலாய் 

மொத்தத்தில் மனதை நல்லாட்சி செய்யும் உன் செங்கோலாய் மனதிலுறுதி வேண்டும்!


அற்ப விடயங்கள் முதல் அற்புத விடயங்கள் வரை

முற்றுப்புள்ளியிலிருந்து முதற்புள்ளிக்குப் பின் தள்ளப்பட்டாலும் 

மீண்டு மீண்டும் வலைபின்னும் சிலந்தி போல

பூஜ்ஜியத்தில் தொடங்கி இராஜ்ஜியம் உருவாக்க மனதில் உறுதி கொடு!


அளந்து அளந்து படியளக்காமல் 

அளவுகோல் தொலைத்து 

அணு அளவும் நொறுங்காத நெஞ்சுறுதி 

அறுதியின்றி மிகுதியாய் 

கிலோ கணக்கில் நீ தர வேண்டும்  

என அனைவருக்குமாய் வேண்டி 

தமிழ் வாழ்க !

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் வெல்க!

என்று வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி 

பாராட்டி அமர்கிறேன்.  நன்றி!



* சாய்கழல் சங்கீதா

Friday, July 25, 2025

நட்பு:

 நட்பு:


நட்பிற்குப் பாலமிட்டது கோப்பெருஞ்சோழன் பிசிராந்தை -நட்பு!


நட்பிற்கு உயிரோட்டமிட்டோர் பாரி, கபிலர்!


நட்பினுக்கு இலக்கியம் கண்டோர் அதியன், ஒளவை!


நண்பா! உன்னை உன்னிடம் பார்ப்பதைவிட உவமைகளில் அதிகம் உன்னைக் காண்கின்றேன்!


ஆதலின் நண்பா ! நமக்குள் உருவமே வேண்டாம்! அருவமாய் அமைந்து ஆளுவோம் உலகை! 

தமிழ் உலகை,,நாளை வாராய்!


..அக்ரி சா.இராஜா முகமது


****************

புராண, இதிகாசங்களில் கண்ட


"எடுக்கவோ கோர்க்கவோ" 

என்று கேட்ட 

துரியோதனன் கர்ணன் நட்பு.


பிடி அவல் கேட்ட கண்ணன் 

குசேலர் நட்பு. 


"மச்சான் வாடா பார்த்துக்கலாம்"

என்று தோள் கொடுக்கும்

இக்கால நட்பு.


நட்புக்கு என்றும் 

அழிவும் இல்லை 

முடிவும் இல்லை.


- முகம்மது சுலைமான்,


Thursday, July 24, 2025

அரிய தலமரங்கள் (கல்லாலமரம்)

 *அரிய தலமரங்கள்* தொடர்கிறது..

(தாவரவியல் விபரங்களுடன்

தரவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது)


 *02.கல்லாலமரம்*


Common names:

Indian rock fig,

Rock peepal and

Wavy-leaved fig tree.


Botanical name:

Ficus arnottiana


Syn:Ficus courtallensis

Ficus populeaster

Urostigma courtallense. 


Family:Moraceae


கல்லால மரம் என்பது விழுதுகள் இல்லாத  ஆலமரம் வகையை சார்ந்த  மிக அரியவகை மரமாகும்.


இந்த இனம் ஸ்காட்டிஷ் தாவரவியலாளர் ஜார்ஜ் அர்னோட் வாக்கர்-அர்னோட்டின் நினைவாக Ficus arnottiana என பெயரிடப்பட்டது .


கல்லால்,கல்அரசு,கொடிஅரசு,

சிவமரம் என வேறு பெயர்களும் தமிழில் கல்லாலமரத்திற்கு உண்டு.


குரு மூலிகை, லட்சுமி மூலிகை எனவும் அழைக்கப்படும் சிறப்பு இதற்கு உண்டு.


 *"அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்"* என இம்மரம் போற்றப்படுகிறது.


மனதை ஒருநிலை

படுத்தும் நிலையை

கல்லாலமரமும்,அதனடியில் தவமிருக்கும் தட்சிணாமூர்த்தி சிற்பமும் எடுத்துகாட்டுகின்றன.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் "பொய்யாமொழி விநாயகர்' ஆலயத்தின் 

தலமரமாக கல்லாலமரம் உள்ளது.இவ்வாலயத்தின் பின்புறம் மூன்று கல்லால மரங்கள் உள்ளன. 


திருவண்ணாமலையில் மலை உச்சியிலும் கல்லால மரம் உள்ளது. 


"கல்லத்தி "மரம்  வேலூரில் எழுந்தருளியிருக்கும் 

ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரரின் தல மரமும் ஆகும்.


"ஊர்த்துவ மூலமரம்” எனப்படும் இம்மரத்தின் வேர்ப்பகுதி வளைந்து மேல் நோக்கி வானத்தில் வேர்விட்டு இருக்கும். காண்பதற்கு அரிய காட்சி இது, வேர்ப்பகுதி மேல் நோக்கியும், இலைத் தழைகள் கீழ்நோக்கியும் அமைந்துள்ள அற்புத விருட்சங்கள் பல உண்டு. அவற்றுள் இந்த கல்லாலமரமும் ஒன்று.


 *பெயர்காரணம்* 


இதன் மரங்கள்

கல்போன்று உறுதியாக இருப்பதாலும்,

இதன் வேர்கள்

கல்லை துளைத்து வளர்வதாலோ அல்லது கல்லை நெகிழவைத்து கரைப்பதாலோ

கல்லாலமரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.


  *இலக்கியங்களில்* *கல்லாலமரம்* 


கல்லாலமரம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பாக முருகன் பற்றிய பாடல்களில்,முருகனை *'ஆலமர் செல்வன் புதல்வன்'* என போற்றப்படுகிறார். இலக்கியங்கள்

தட்சிணாமூர்த்தி கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதால், அவரை *"ஆலமர் செல்வன்* " என்று அழைக்கின்றன.


சிந்துவெளி நாகரிகத்திலும் மர வழிபாடும், கல்லாலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது போன்ற சித்தரிப்புகள் உள்ளன. 


மர வழிபாட்டில், கல்லாலமரம் அறிவு வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. 


 *கல்லாலமரத்தின்* *குணங்கள்* 


ஆதிகாலத்திலிருந்தே போதிமரம்போல,

சித்தர்களும்,முனிவர்களும் தவமிருந்து சித்திகள் பெற்ற மரம்,தியானம் செய்ய,மனதை ஒருநிலைப்படுத்த உகந்த உன்னதமரம்

இந்த கல்லால மரம்.


ஆலம்பழம் போன்ற இதன் பழங்கள் பறவைகள், வௌவால்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு ஒரு முக்கியமான உணவு ஆதாரமாக செயல்படுகின்றன.


 *மருத்துவ குணங்கள்* 


கல்லாலமரம் ஒரு மூலிகை மரமும் கூட.

இவை குளிர்ச்சியும்,உவர்ப்பு தன்மையும் கொண்டவை.


இதன் இலைகள், பால், பட்டை, வேர் போன்றவை பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.


கல்லாலமரத்தின் பால் புண்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும்.


வறண்ட பாறைகள் கொண்ட மலைச்சரிவுகளில் நம் மண்ணின் இம்மரங்களை நடவு செய்து பசுமை காடுகளை ஏற்படுத்திடலாம்..


 *அக்ரி சா.இராஜா முகமது

Saturday, July 19, 2025

*நிர்வாகக் குழு கூடுகை (3) விவரணம்

 *நிர்வாகக் குழு கூடுகை (3) விவரணம்*


20 ஜூலை 2025 அன்று மாலை 6 மணிக்கு விவேகானந்தா பயிலகத்தில் நமது மூன்றாம் நிர்வாகக் குழு கூடுகை நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் துவங்கிய கூட்டம் தனது நிரலான இரண்டாம் ஆண்டு விழாவிற்கான ஆயத்தப் பணிகள் மற்றும் குழுக்கள் அமைத்தல் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்தின் அடிப்படையில் :


1) *வரவேற்பு குழு* வில் பொறுப்பாளர் : அனிதா (குத்துவிளக்கு எண்ணெய் தெறி பன்னீர் சொம்பு கல்கண்டு இன்ன பிற) 


2) *வருகை பதிவேடு உணவு கூப்பன் வழங்குதல்* : மஞ்சுளா அண்ட் கோ 


3) *தொகுப்பாளினி மற்றும் உதவி:* மகாலட்சுமி,

சிவகாமி, 

ஸ்ரீவித்யா, அமுதவல்லி 


4) *அரங்க நிர்மாணக் குழு:* ஸ்ரீவி, சாய்ராம் தியாகராஜன் ஹரிஷ் நாகராஜ் 


5) *தேனீர் பிஸ்கட் தண்ணீர் வழங்குதல்:*   நாகராஜ், ஹரிஷ் & சுபாஷினி மற்றும் பிறர் 


6) *உணவு வழங்கல்:* நாகராஜ் ஹரிஷ் மல்லிகா மற்றும் பிறர் 


7) *எஸ் பி எம் ஐயா பிக்கப் & ட்ராப்:* லட்சுமி நாராயணன் 


8) *விருதுகள் புத்தகங்கள் வழங்குதல்* பொறுப்பாளர் :

ஸ்ரீவி & தியாகராஜன் உதவி : ஸ்ரீவித்யா & அமுதவல்லி


9) *வேன் பொறுப்பு:* மல்லிகா, ஸ்ரீவித்யா 


10) *டிஸ்போசபல் பைகள்:* நாகராஜன் (வாங்கி விட்டார்)


11) *பேனர் செய்தல் பொறுப்பு :* காமாட்சி (தனது சொந்த செலவில் செய்து விட்டார் )


12) *பேனர் ஸ்டாண்ட் பொறுப்பு:* தியாகராஜன் (வாங்கி விட்டார்) 


13) *பிஸ்கட் வாட்டர் பாட்டில் பொறுப்பு:* ஹரிஷ் 


14) *பாட் காஸ்ட் மடிக்கணினி மற்றும் பிற* - பொறுப்பு: ஸ்ரீவித்யா.


ஆகிய குழுக்கள் அமைக்கப் பட்டன. பொறுப்பாளர்கள் நியமிக்கப் பட்டனர்.


பேனர் செய்ய உதவியதோடு அதற்கான செலவை முழுமையாக  ஏற்றுக் கொண்ட காமாட்சி அவர்களுக்கு நமது நன்றிகள். 


அழைப்பிதழை வடிவமைத்துக் கொடுத்த ஹரிஷ் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களை தயார் செய்த அமுதவல்லி இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.


அதன் பின்னர், நமது தமிழ் சங்கத்தின் சார்பாக நமது நல சங்கத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் விவரங்களை தலைவர் பகிர்ந்து கொண்டார். பிற உறுப்பினர்களும் நமது நடவடிக்கை குறித்து மின்னஞ்சல் அனுப்புவதாக கூறியுள்ளனர். 


நன்றி உரை திரு வே. நாகராஜன் அவர்கள் வழங்கினார். 


நாட்டுப்பண் இசைக்கப் பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.


ஸ்ரீவி 

தலைவர்

கவிஞன்

 கவிஞன் என்பவன் இல்லாததை  கூட  கொண்டு வருவான்(ள்). 

இல்லாததை கூட 

நீக்குவான்...

சொற்களை கொண்டு வந்து

சொல்லோவியம் வரைவான்..

தேவையற்ற சொல்லென்று 

உளியில்லா சிற்பியாகி

எழுதுகோல் கொண்டே சொல்லோவியத்தை

உடைப்பான்!

சேர்ப்பான்!

உடைந்த கவிதைக்கு  உயிர் கொடுப்பான்..

கற்பனை சிறகு விரிப்பான்

கல்லுக்குள் கிணறு

காண்பான்

கற்பனையில்

கனலையும் விழுங்கிக்

களிப்பான்


ஏன் இப்படி?

எதற்கு?

எவ்வாறு?

எந்த வினாவுக்கும்

விடையளிக்க தேவையில்லா 

சுதந்திரமானவன் !

கவிஞன்!


- சங்கீதா

Wednesday, July 16, 2025

நினைவுகள்

 நினைவுகள்


நிகழ்கால மண்ணில்

நின்று கொண்டே

கடந்த கால

காலடிச் சுவடுகள் மேல்

பறந்து வருகிறேன்

மீண்டும் மீண்டும்..


- சாய்கழல் சங்கீதா

விதை

 *விதை*

முளைத்து வந்து 

விதைத்தவனை தேடினேன் 

தென்பட்டது ப்ளாட் விளம்பரம்!

- தியாகராஜன்

******************************

விளையும் பயிர் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது, புல்லைக் கூட விட்டு வைக்காத 

புல்லர்களால்!

பிளாட் என்றால் சதி என்று பொருள் கொள்ளலாம். 

பொருத்தமான விளம்பரம்தான்!


- மோகன்

*****************************

விளை நிலங்கள் 

விலை பொருள்கள் ஆனால்..


விழல் ஆகாதா நம் வாழ்வு?

தழலில் விழுந்த மெழுகாகாதா!


திருந்து நீ மனிதா..!

வருந்துவாய் திருந்தவில்லை எனில்..!!

- ஸ்ரீவி

******************


Monday, July 14, 2025

காகிதப் பூக்கள்

 காகிதப் பூக்கள்


வண்ண வண்ணப் பூக்கள்

மரத்தில் காய்க்கா பூக்கள்

மொய்க்கும் மனித ஈக்கள் ..


புன்னகை பூக்க 

வைக்கும்

புவியோரை மாய்க்க வைக்கும்


மதிக்க வைக்கும்

மிதிக்க வைக்கும்


புரளும் திரளும்..

ஏழைக்கு என்று அருளும்?




- சாய்கழல் சங்கீதா

பாட்டன்

 நான் பிறக்கும் முன்னரே 

பாட்டன்

மறைந்து விட்டதால்

அவரின் 

முதுகில் பயணம் 

செய்யக் கொடுப்பினை 

இல்லை.


ஆனால் தாத்தனுடன் 

விளையாட,

சண்டையிட 

என் இள வயதில் 

நேரம் இருந்தது.


கெண்டைக் கால் வரை 

உயர்த்திக் கட்டிய லுங்கி.

பருத்தியில் தைத்த ஜிப்பா.

தலையில் 'நீளளள' துண்டால்

சுற்றிக் கட்டிய உருமால்.


ஆறடி உயரத்துடன்

அவரின் உருவமே 

எங்களைச் சிறிது 

அச்சுறுத்தும்.


ஆனால் பலாப் பழம் 

போல் அவரின் 

வெளித் தோற்றம்தான் 

கரடுமுரடு.

உள்ளே அப்படி 

ஓர் இனிமை.


அவரை நாங்கள் அழைத்தது 

"நன்னத்தா".


வணிக நிமித்தமாக 

என் தந்தை அடிக்கடி 

வெளியூர் சென்றதால் 

நாங்கள் அனைவரும் 

தாத்தனின் 

அரவணைப்பில்.


எங்களுக்கு 

அனுமதிக்கப்பட்ட

திண்பண்ட தினப்படி

ஐந்து பைசாவைத் 

தினம் தந்தவர் 

எங்கள் தாத்தா.


தினமும் அவரிடம் 

"நன்னத்தா, 

நேற்றுக் காசு,

இன்றைக்குக் காசு,

நாளைக்குக்காசு 

என ஏமாற்றிப் 

பதினைந்து பைசா 

வாங்கி செலவு 

செய்தது.


தெரிந்தும் தெரியாதது 

போல்அவரும் 

எங்களுக்குக் 

கொடுத்து மகிழ்ந்தது.


ஐவேளைத் 

தொழுகையைத் 

தவற விடாதவர்.

அரபுத் தமிழ்@ 

நூல்களை 

எங்களுக்கு அறிமுகம் 

செய்தவர்.


சித்த மருத்துவம் தெரிந்தவர்.


அவரின் சித்தர் சூரணம் 

வயிற்று நோய்களுக்கு 

ஒரு அரு மருந்து.


சித்தர் பல்பொடி முன்

இக்கால டூத் பேஸ்ட்டுகள் 

நிற்க முடியாது.


மொத்தத்தில் அவர் எங்களுக்கு 

ஒரு நடமாடிய பல்கலைக் கழகம்.

என்றும் மறக்க முடியாத ஒரு

மாமனிதர்.


சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.

இன்று நானே ஒரு 

ஐந்து வயது 

பெண் குழந்தைக்கு 

பாட்டன்.


என்னால் அவளுக்கு 

நான் பெற்ற 

நினைவலைகளைத் 

தர முடியுமா?

தெரியவில்லை.


ஆனால் பாட்டன்/தாத்தனோடு 

வாழ மாதவம் செய்திருக்க

வேண்டும்.


எண்ணத்தில் இருந்த

தாத்தனின் நினைவுகளை

எழுத்தில் வடிக்கத் தூண்டிய

ஸ்ரீவி  ஐயா அவர்களுக்கு 

நன்றிகள் பல.


@ அரபுத்தமிழ்:

இன்று 'தங்லீஷ்' போல் 

அக்காலத்தில் தமிழை அரபு 

எழுத்துக்களில் எழுதிப் 

படித்து வந்தனர்.

என் இளமைக் கால நினைவுகள்:


நான் பள்ளியில் 

படிக்கும் போது, 

என் தந்தை

வணிகத்துடன்,

மனதிற்குப் பிடித்து

பார்த்த விவசாயம்.


எங்களின் நிலத்தில்,


ஒரு சிறு பகுதியில்

கட்டம் கட்டமாய்ப் 

பாத்தி கட்டி அதில் 

வழிய வழிய 

நீர் பாய்ச்சி,

விதை நெல்லை 

விதைத்தது.


பச்சைப் பசேலென

வளர்ந்த நாற்றைப்

பிடிங்கிக் கடல் போல்

காட்சியளித்த

வயல் வெளியில்

மறு நடவு செய்தது.


நடும் பெண்கள்

நாற்றுக் கட்டை 

பாதையில்

செல்வோரை 

மறித்துப் போட்டு 

அவர்களிடம் 

வெற்றிலை, பாக்குக்குப்

பணம் வாங்கியது.


முதிர்ந்த கதிர்களை 

'கறுக்கறுவா' கொண்டு

ஆட்கள் அறுத்துப் 

போட்டது.


அறுத்த நெற்கதிர்களைக்

களத்து மேட்டில் போட்டு

மாடு கட்டிப் போரடித்தது.


பிரிந்த வைக்கோலைப்

போராகக் குவித்தது.


அதன் மேல் ஏறி 

விளையாடி

உடம்பெல்லாம் 

அரிப்பை வாங்கிக்

கொண்டது.


நெல்லை மூட்டைகளாக

மாட்டு வண்டியில் ஏற்றி

வீட்டிற்குக் கொண்டு 

வந்து சேர்த்தது.


தோட்டத்து பம்பு செட்டில்

பீச்சியடிக்கும் நீரில் 

தலையைக் காட்டி

குளித்துக் களித்தது.


கிணற்றிலே விரால் 

மீன் குஞ்சுகளை 

விட்டு வளர்த்தது.


அவை வளர்ந்ததும் 

நீரை மொத்தமாக 

இரைத்து 

நிலத்துக்குப் பாய்ச்சி  

கிணற்றில் தவிட்டைக் 

கொட்டி மீன்களைப்

பழைய கொசு வலை 

கொண்டு பிடித்தது.


பம்பு செட்டைச் சுற்றி 

வளர்ந்திருந்த 

தென்னை மரங்களில் 

இளநீர் இறக்கிக்

குடித்தது.


என் வீட்டார் 

வெளியில் (outing) 

செல்லக்

கட்டுச் சோற்றுடன், 

குதிரை வண்டியில் 

தோட்டத்திற்குச் 

சென்று

மர நிழலில் 

ஜமக்காளம் விரித்து, 

சாப்பிட்டு, 

உடன் பிறந்தோருடன்

விளையாடி

ஒரு முழு நாளைக்

குதூகலமாகக் 

கழித்தது.


கிணற்று நீர்

உவராக மாறியதால் 

நஞ்சை, புஞ்சையாக மாற,

பயிர் நெல்லுக்கு மாறாக

பருத்திக்கு மாறியது.


இதன் சுவை

அனுபவித்தவர்களுக்கே 

புரியும்.


எல்லாமே 

இயந்திரமாகிப் 

போன இந்நாள் 

வாழ்க்கையில் 

பசுமரத்தாணி போல்

நெஞ்சில் பாய்ந்த அந்த

இளமைக்கால நினைவுகள் 

என்றுமே இனிமைதான்.


இன்று நெல் வயல்கள்

இப்படித்தான் 

இருக்குமென்று

புத்தகத்திலும், 

காணொளிகளிலும்

கண்டு தெரிந்து 

கொள்ளும்

இளைய தலைமுறை.


ஆனால் நம்மை அவர்கள் அழைக்கும் பெயர்

"பழங்கதை பேசும் பெருசு".


 முகம்மது சுலைமான்


Sunday, July 13, 2025

காணி நிலமும் பாரதியும்:-

 காணி நிலமும் பாரதியும்:-


காணி நிலம் வேண்டும்  பராசக்தி, காணி நிலம் வேண்டும் ,௮திலே பத்து பண்ணிரண்டு

தென்னை மரங்கள் வேண்டும் ௭ன்றான் பாரதி.ஆனால்   பராசக்தியோ   பாரா சக்தியாக இ௫ந்து விட்டாள்.


வ௫த்தம் தான்....


௮ண்ட சராசரத்துக்கும் ௮திபதியாம்  

க௫ணை கடல் கணபதியிடம்  ௮வன் கோரிக்கைகளை வைத்தி௫க்கலாமோ ௭ன்று தோன்றுகிறது.


இதோ ௭ன் கோரிக்கைகள் இங்கே........


௮ 

௮னைத்து மக்களுக்கும் ௮ன்றாடம் ௨ணவு கிடைக்க வேண்டும்.


ஆனந்தமான வாழ்க்கை ௮த்தனை மக்களும் வாழ வேண்டும்.


இரந்து வாழும் நிலை யா௫க்கும் வேண்டாம்.


ஈரெட்டு  வயதில் நல்ல  ௭திர்காலம் வேண்டும்.


௨லகில் ௭ங்கும் ௮மைதி நிலவிட வேண்டும்.


ஊனமற்ற குழந்தைகளே ௭ங்கும் ௭ன்றும் பிறந்திட  வேண்டும்.


௭ல்லார்க்கும் ௭ல்லாமும் கிடைத்திட வேண்டும்


ஏழை பணக்காரன் ௭ன்ற பேதம் இல்லா நிலை வேண்டும்.


ஐங்கரன் ௮௫ள் பெற்று ௮னைவ௫ம் வாழ வேண்டும்.


ஒன்றே குலம்  ஒ௫வனே தேவன் ௭ன்ற ௭ண்ணம் மனதில் வேண்டும்.


ஓசையில்லா காற்றாடி போல் சுகமாக அனைவ௫ம் வாழ வேண்டும்.


ஔவை பாட்டிக்கும் சிலை வைக்கும் ௮ற்புதம் நடக்க வேண்டும்.


   

   By   Ravi (BSNL) 














.

Friday, July 11, 2025

குடை

 உற்சவ மூர்த்தி 

உலா வரும்போது

ஊர்வலத்தில் குடை.


கொற்றவன் 

அரசவையிலோ 

வெண்கொற்றக் குடை.


முன் பாமரர்கள் கையிலோ 

பனையோலைக் குடை.


பின் மஸ்லின் துணியிலே 

பரந்து விரிந்த குடை.


பாவையருக்குப்

பூக்கள் வரைந்து

பல வண்ணங்களில்

அழகழகாய்க் குடை.


கையில் மடித்துப் பாங்காய்

பையில் வைக்கும் குடை.


வெயிலில் 

கடை விரிக்கும்

மாந்தருக்கோ 

விளம்பரத்தோடு குடை.


குடையே உன் 

பெருமையை

என் சொல்வேன்.


- முகம்மது சுலைமான்,


***************************

குடை

--------

மனிதனின்

கைப்பிடிக்குள் குடை...


மழை கண்டு

தோகை விரிக்கும்


வெயிலில் 

மலர்ந்து சிரிக்கும் 


ஒரு குடை கீழ்

என்றே

எத்தனை கதைகள் ..

எத்தனை துயர்கள்...

என்றாலும்

ஏதோ ஒரு

குடையின் கைப்பிடிக்குள்

சிக்கித் திண்டாடும்

மனிதன்...


-அமுதவல்லி

*********************

நான்தான் உன் குடை  கம்பி

 தம்பி  என் தங்க கம்பி 

 உயர்த்திப் பிடி என்னை நம்பி

 மழைநீர் போகும் உன் கால்  மட்டும் அலம்பி

 உன் தலை என்னிடம் பத்திரமாக உள்ளது அம்பி


- ஸ்ரீவித்யா


****************





Thursday, July 10, 2025

குடை!

 மழைக்கு அஞ்சியோருக்கு

அடைக்கலம் தந்து ஆசையாய் 

நனைந்தது குடை!


வெயிலுக்கு அஞ்சியோரின்

தோள்கள் மேலேறி 

வெளிச்சத்தை இரசித்தது

குடை!

------------------

நனைய வைக்கும் குடைகள் இரண்டாம்...

ஓட்டையான குடை

ஓட்டையாக்கப்பட்ட குடை( வானம்)..


மாயவன் பிடித்தது மலை குடை 

மலையைத் தூக்குமோ 

குண்டூசிக் குடை?

-----------------------

பறக்கவிட்டவள்  இங்கிருக்க  யார் முகவரியைத் தேடி அலைகிறது குடை?


- சாய்கழல் சங்கீதா


**********************

அருமை👍👍

குடைகள் பல விதம்

ஒவ்வொன்றும்   ஒரு

விதம்.


வெயிலோ மழையோ

அடைக்கலம் தரும் குடை.


சிறிய ஓட்டைகளுக்குப்

பொறுப்புத்துறப்பு அறிவிக்கும் குடை.


நாட்டை ஆண்ட பெருமன்னரின் ஆளுமைச்சின்னமும் ஒரு  வெண்கொற்றக் குடையே.


தெய்வ மூர்த்திகளும்

வீதி உலா வரும்போதும் அடைக்கலம் தருவதும் குடையே.


பல நடனங்களில் ஊன்றி(prop) ஆக பயன்படுத்தப்படுவதும்

குடையே.


 சுயமாக உணவை எடுத்து உண்ணும் 

மண விருந்துகளில் பல வகை உணவு வகைகளை வரிசைப்படுத்தி வைப்பதும் வண்ண வண்ண குடைகளின் கீழே.


முதியவர்கள் அவசரத்தில் கைத்தடிக்குப் பதிலாக

எடுத்துச்சென்றாலும்

முணுமுணுக்காமல்

ஊன்றுகோலாவதும்

ஒரு குடைதான் .


 வான் குடைப் பதாதிகளின் *உயிர் காப்பதும் குடையே.



இவ்வளவு பெருமைகள் இருப்பினும் கர்வம் இன்றி கதவின் பின்னே தொங்கும் குடை!


*. வான் குடைப்பதாதி- paratroopers


- மோகன்

*****************************

இயற்கையின் கொடை......

மிளகாய்க்கும்

குடை.....

😊 சாயி


****************************

வண்ண வண்ணக் குடைகளாயினும்..

"குடைபிடிப்பதே மாமூலாகிவிட்டால் " ..

இந்த 'கவரின்' நிழலே,  

நிரப்பிடுமே கறுப்பு கலரு..⚫💵

பின்பு மெல்லமெல்ல மாறிடுமே, 

 ஏழையின் கைசேர  வெள்ளைகலரு .. 💵


- இலாவண்யா

Tuesday, July 8, 2025

எருமை எனும் சித்தர் ..

 எருமை ..நிறம் கருமை..

அதன் .. வரமோ பொறுமை..


வெயிலோ , கொட்டும் மழையோ..

கலையாது, குட்டையிலதன் தவமே..

ஞானி என்றால் தகுமே ,

தர்மராஜனின் நம்பிக்கை வாகனமே..


போதிமரம் தேடவேண்டாம் நித்தம்..

குட்டையில் ஒரு புத்தர் ..

எருமை எனும் சித்தர் ..

வழிநடந்திட , தெளியும் நமசித்தம் ..


இலாவண்யா

Saturday, July 5, 2025

காக்கைப் பள்ளிக்கூடம்

 காக்கைப் பள்ளிக்கூடம் 


பேரன் வந்திருந்தான் பெங்களூரில் இருந்து 

   பெண் வயிற்றுப் பிள்ளை பெருமை பிடிபடாது


கூரை மிசை எதிர் வீட்டில் காக்கைகள் வரிசை 

   குழந்தையை ஈர்த்ததும் அதிசயமில்லை 


" ஆரை எதிர்பார்த்து அங்கு அத்தனை காகம்? " (பேரன்)

   அதற்கு நான் " அதுவா? காக்கைப் பள்ளிக்கூடம் " 


"சார் அதுவா? " கேட்க "ஆமாம் " என்றேன் 

   சற்றே தள்ளி ஒரு காகமும் கண்டேன் 


ஆத்திலே பண்ண சீடை பாட்டியும் தந்தா

   " அருமை " என, அந்தரத்தில் மிதந்தா 


நேத்து பொரிந்த குலாப்ஜாமுனும் வந்தது 

    " நேரிலை வேறு " என, நெகிழ்ந்த மனது

   

கூத்து முடிந்ததாய்க் காகங்கள் பறந்தன

   கொஞ்சம் நான்கைந்து தங்கி இருந்தன


" காத்துக் கிடக்கும் அவை ட்யூஷனுக்கா?" கேட்டான் 

   காலர் உயர்ந்தது " நானாம் அவன் பாட்டன்!" 


__. குத்தனூர் சேஷுதாஸ்

ஊடகங்களில் பற்றி எரியும் அண்மைச் செய்தி..

 ஊடகங்களில் பற்றி எரியும் அண்மைச் செய்தி..


பெற்றோர்களைப்

பற்றியிருந்தாள்...

வாழ்க்கை துணையாய்

ஒருவனை கைகாட்டி

கை பற்ற

சொன்னார்கள்..

பற்றோடு பற்றினாள்...  

கொடுமைகள் அவளைப் 

பற்றியது..

பொறுத்து போக சொன்னார்கள்..

பொறுத்தது போதும்

என வாழ்கையில் பற்றிழந்து பறந்துவிட்டாள்


பல காலம் வாழ்ந்திருந்து

பற்றறுத்து பற்றற்றவனைப் பற்றியிருந்தால் 

பரவாயில்லை..


பெற்றோரையும் சமுதாயத்தையும்

பற்றி யோசித்தவள்..

கல்வியைப் பற்றியிருக்கலாம்..

தனக்கென ஒரு வேலையைப் பற்றியிருக்கலாம்...

நல்ல நட்புகளைப்

பற்றியிருக்கலாம்..

கவிதைகளைப் பற்றியிருக்கலாம்

புத்தகங்களைப் பற்றியிருக்கலாம்

இசையைப் பற்றியிருக்கலாம்..

கொஞ்சம் சுயநலம் 

பற்றியிருக்கலாம்.


வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்?

இந்த வரிகளைப்

பற்றிக் கொண்டு

பொறுமை காத்து

வாழ்ந்திருக்கலாம்..


திருமணம் தாண்டி

பெண்கள் 

பற்றிக் கொள்ள 

ஒன்றுமேயில்லையா 

இந்தப் பரந்த உலகில்?


கை காட்டிப் புதூரில் 

பிறந்தவள்..

எழுதப்படாத 

திருத்தப்பட வேண்டிய

சமூகக் கோட்பாடுகளை

கை காட்டி சென்றிருக்கிறாள்..


அவள் ஆன்மாவேனும் 

அமைதியைப் பற்றட்டும்..


- சாய்கழல் சங்கீதா

மனமலையுமே திக்கு திசையற்று...

 மனமலையுமே திக்கு திசையற்று...

கடிவாளமிடு  எதிலேனும் கவனமுற்று ..


வீழும் ஒருநாள் மெய் - பொருளற்று...

மெய்ப்பொருள் விளக்கிடுமன்று அக்கொடுங்கூற்று..


மாயவலையது, உணர்ந்திடு சற்று..

பற்றிக்கொள் எதையேனும் பற்றற்று ...


பற்றியதில் மெய்மறந்து இன்புற்று ..

வலையில் சிக்காது - நீ சுற்று ..


உற்றவன் கழலடி பின்பற்று..

கடந்திடு கடலை தடயற்று..


என் - படைப்பென்று ஒதுக்காதே, சலிப்புற்று,.. 

இதுவே பொய்யாமொழியின் கூற்று.. ..


"பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் - 

பற்றுக பற்று விடற்கு"


- இலாவண்யா

******************


Wednesday, July 2, 2025

சாதாரணமான நாள்

 ஞாயிறு திங்கள்

செவ்வாய் என

நாள்களுக்கான

முத்திரைகளை உதறிவிட்டு

சூரியன் பூத்து

உதிரும் ஒரு சாதாரணமான நாள் எப்படி இருக்கும்???


- சாய்கழல் சங்கீதா

விடை தெரியும் வேளை...

 விடை தெரியும் வேளை...


விடை தெரியும் வேளை வினாத்தாள் மாறும்

   வெவ்வேறு வினாத்தாள் ஒவ்வொருவர் கையிலும் 


கடை விரித்து வருக! வருக!! என அழைக்கும்

   கருவாய்த் தொடங்கி மண்ணில் பிறக்க வைக்கும் 


இடையிலாளில் மயங்கி அமைதியது  தொலையும் 

   இமயமலையில் அதையே தேடச் செய்யும் 


வடை, பாயசத்தோடு திருமணமும் முடிக்கும்

   வாண்டு ஒன்று பிறக்கும், வாலாய் இருக்கும் 


சுடச்சுட காஃபியாய் சுவைக்கத் தூண்டும் 

   சொர்க்கமாய்த் தெரிந்தது சுமையாகும்


தடைகள் முன் நிறுத்தி தடுக்கி விழச் செய்யும் 

   தரணியில் சிலருக்கு அவை படிக்கட்டுகளாகும்


உடையில் ஒருவனை நாயகனாகக் காட்டும் 

   ஒருசிலர் கோவணதில் கோயிலும் கட்டும்


படையாய் உறவுகள் பார்த்துக் கொண்டிருக்கும் 

   பறக்கும் உயிர் எல்லோர் கண்ணிலும் மண் தூவும்



விடை தெரியும் வேளை வினாத்தாள் மாறும்..........


__. குத்தனூர் சேஷுதாஸ் 3/7/2025



***********************

வினாத்தாளுக்கு விடையளிக்க பயிற்சி எடுக்கலாம் என்றால்

பாடத்திட்டம்( syllabus)

கொடுக்கப்பட மாட்டாது.

பாடத்திட்டம் மாறியதும் தெரியாது..

கேள்விகளும் புரியாது..

சரியான விடைகளும் தெரியாது ..

போதாதென்று 

மேலே, கீழே, இடது, வலது என குறுக்கெழுத்துப் புதிர்கள் அங்குமிங்கும 

அலைய விடும் ..

வினாத்தாளில் சொடக்கு போட்டு 

" சுடோக்கு" கொடுக்கும் ..

(வாழ்க்கைக்)கணக்கு

என்றும் புரியாததால் 

எப்போதும் கணக்கில் "மக்கு!"

ஏதோ ஒன்றை விடையாய் அளித்த பின்பே பாடங்கள் கற்பிக்கப்படும்..

அனுபவப் பாடம்!


-சங்கீதா


Tuesday, July 1, 2025

துன்பமில்லா வாழ்விற்கு 4 வழிகள்....

 துன்பமில்லா வாழ்விற்கு  4 வழிகள்....


நேற்றைய துன்பங்களை மறந்து விடல்


இன்றைய துன்பங்களை

மிதித்து விடல்


நாளைய துன்பங்களை

மதிக்காமல் விடல்


மிக முக்கியமாக..


துன்பம் தருவோரை 

கண்டவுடன் மறைந்து விடல்.😁


- சாய்கழல் சங்கீதா

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...