Thursday, July 24, 2025

அரிய தலமரங்கள் (கல்லாலமரம்)

 *அரிய தலமரங்கள்* தொடர்கிறது..

(தாவரவியல் விபரங்களுடன்

தரவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளது)


 *02.கல்லாலமரம்*


Common names:

Indian rock fig,

Rock peepal and

Wavy-leaved fig tree.


Botanical name:

Ficus arnottiana


Syn:Ficus courtallensis

Ficus populeaster

Urostigma courtallense. 


Family:Moraceae


கல்லால மரம் என்பது விழுதுகள் இல்லாத  ஆலமரம் வகையை சார்ந்த  மிக அரியவகை மரமாகும்.


இந்த இனம் ஸ்காட்டிஷ் தாவரவியலாளர் ஜார்ஜ் அர்னோட் வாக்கர்-அர்னோட்டின் நினைவாக Ficus arnottiana என பெயரிடப்பட்டது .


கல்லால்,கல்அரசு,கொடிஅரசு,

சிவமரம் என வேறு பெயர்களும் தமிழில் கல்லாலமரத்திற்கு உண்டு.


குரு மூலிகை, லட்சுமி மூலிகை எனவும் அழைக்கப்படும் சிறப்பு இதற்கு உண்டு.


 *"அள்ள அள்ளக் குறையாத செல்வம் தரும் கல்லாலம்"* என இம்மரம் போற்றப்படுகிறது.


மனதை ஒருநிலை

படுத்தும் நிலையை

கல்லாலமரமும்,அதனடியில் தவமிருக்கும் தட்சிணாமூர்த்தி சிற்பமும் எடுத்துகாட்டுகின்றன.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் "பொய்யாமொழி விநாயகர்' ஆலயத்தின் 

தலமரமாக கல்லாலமரம் உள்ளது.இவ்வாலயத்தின் பின்புறம் மூன்று கல்லால மரங்கள் உள்ளன. 


திருவண்ணாமலையில் மலை உச்சியிலும் கல்லால மரம் உள்ளது. 


"கல்லத்தி "மரம்  வேலூரில் எழுந்தருளியிருக்கும் 

ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரரின் தல மரமும் ஆகும்.


"ஊர்த்துவ மூலமரம்” எனப்படும் இம்மரத்தின் வேர்ப்பகுதி வளைந்து மேல் நோக்கி வானத்தில் வேர்விட்டு இருக்கும். காண்பதற்கு அரிய காட்சி இது, வேர்ப்பகுதி மேல் நோக்கியும், இலைத் தழைகள் கீழ்நோக்கியும் அமைந்துள்ள அற்புத விருட்சங்கள் பல உண்டு. அவற்றுள் இந்த கல்லாலமரமும் ஒன்று.


 *பெயர்காரணம்* 


இதன் மரங்கள்

கல்போன்று உறுதியாக இருப்பதாலும்,

இதன் வேர்கள்

கல்லை துளைத்து வளர்வதாலோ அல்லது கல்லை நெகிழவைத்து கரைப்பதாலோ

கல்லாலமரம் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.


  *இலக்கியங்களில்* *கல்லாலமரம்* 


கல்லாலமரம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது, குறிப்பாக முருகன் பற்றிய பாடல்களில்,முருகனை *'ஆலமர் செல்வன் புதல்வன்'* என போற்றப்படுகிறார். இலக்கியங்கள்

தட்சிணாமூர்த்தி கல்லாலமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதால், அவரை *"ஆலமர் செல்வன்* " என்று அழைக்கின்றன.


சிந்துவெளி நாகரிகத்திலும் மர வழிபாடும், கல்லாலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருப்பது போன்ற சித்தரிப்புகள் உள்ளன. 


மர வழிபாட்டில், கல்லாலமரம் அறிவு வளர்ச்சியின் அடையாளமாக கருதப்படுகிறது. 


 *கல்லாலமரத்தின்* *குணங்கள்* 


ஆதிகாலத்திலிருந்தே போதிமரம்போல,

சித்தர்களும்,முனிவர்களும் தவமிருந்து சித்திகள் பெற்ற மரம்,தியானம் செய்ய,மனதை ஒருநிலைப்படுத்த உகந்த உன்னதமரம்

இந்த கல்லால மரம்.


ஆலம்பழம் போன்ற இதன் பழங்கள் பறவைகள், வௌவால்கள் மற்றும் பிற வனவிலங்குகளுக்கு ஒரு முக்கியமான உணவு ஆதாரமாக செயல்படுகின்றன.


 *மருத்துவ குணங்கள்* 


கல்லாலமரம் ஒரு மூலிகை மரமும் கூட.

இவை குளிர்ச்சியும்,உவர்ப்பு தன்மையும் கொண்டவை.


இதன் இலைகள், பால், பட்டை, வேர் போன்றவை பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகின்றன.


கல்லாலமரத்தின் பால் புண்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்தும்.


வறண்ட பாறைகள் கொண்ட மலைச்சரிவுகளில் நம் மண்ணின் இம்மரங்களை நடவு செய்து பசுமை காடுகளை ஏற்படுத்திடலாம்..


 *அக்ரி சா.இராஜா முகமது

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...