Monday, July 14, 2025

என் இளமைக் கால நினைவுகள்:


நான் பள்ளியில் 

படிக்கும் போது, 

என் தந்தை

வணிகத்துடன்,

மனதிற்குப் பிடித்து

பார்த்த விவசாயம்.


எங்களின் நிலத்தில்,


ஒரு சிறு பகுதியில்

கட்டம் கட்டமாய்ப் 

பாத்தி கட்டி அதில் 

வழிய வழிய 

நீர் பாய்ச்சி,

விதை நெல்லை 

விதைத்தது.


பச்சைப் பசேலென

வளர்ந்த நாற்றைப்

பிடிங்கிக் கடல் போல்

காட்சியளித்த

வயல் வெளியில்

மறு நடவு செய்தது.


நடும் பெண்கள்

நாற்றுக் கட்டை 

பாதையில்

செல்வோரை 

மறித்துப் போட்டு 

அவர்களிடம் 

வெற்றிலை, பாக்குக்குப்

பணம் வாங்கியது.


முதிர்ந்த கதிர்களை 

'கறுக்கறுவா' கொண்டு

ஆட்கள் அறுத்துப் 

போட்டது.


அறுத்த நெற்கதிர்களைக்

களத்து மேட்டில் போட்டு

மாடு கட்டிப் போரடித்தது.


பிரிந்த வைக்கோலைப்

போராகக் குவித்தது.


அதன் மேல் ஏறி 

விளையாடி

உடம்பெல்லாம் 

அரிப்பை வாங்கிக்

கொண்டது.


நெல்லை மூட்டைகளாக

மாட்டு வண்டியில் ஏற்றி

வீட்டிற்குக் கொண்டு 

வந்து சேர்த்தது.


தோட்டத்து பம்பு செட்டில்

பீச்சியடிக்கும் நீரில் 

தலையைக் காட்டி

குளித்துக் களித்தது.


கிணற்றிலே விரால் 

மீன் குஞ்சுகளை 

விட்டு வளர்த்தது.


அவை வளர்ந்ததும் 

நீரை மொத்தமாக 

இரைத்து 

நிலத்துக்குப் பாய்ச்சி  

கிணற்றில் தவிட்டைக் 

கொட்டி மீன்களைப்

பழைய கொசு வலை 

கொண்டு பிடித்தது.


பம்பு செட்டைச் சுற்றி 

வளர்ந்திருந்த 

தென்னை மரங்களில் 

இளநீர் இறக்கிக்

குடித்தது.


என் வீட்டார் 

வெளியில் (outing) 

செல்லக்

கட்டுச் சோற்றுடன், 

குதிரை வண்டியில் 

தோட்டத்திற்குச் 

சென்று

மர நிழலில் 

ஜமக்காளம் விரித்து, 

சாப்பிட்டு, 

உடன் பிறந்தோருடன்

விளையாடி

ஒரு முழு நாளைக்

குதூகலமாகக் 

கழித்தது.


கிணற்று நீர்

உவராக மாறியதால் 

நஞ்சை, புஞ்சையாக மாற,

பயிர் நெல்லுக்கு மாறாக

பருத்திக்கு மாறியது.


இதன் சுவை

அனுபவித்தவர்களுக்கே 

புரியும்.


எல்லாமே 

இயந்திரமாகிப் 

போன இந்நாள் 

வாழ்க்கையில் 

பசுமரத்தாணி போல்

நெஞ்சில் பாய்ந்த அந்த

இளமைக்கால நினைவுகள் 

என்றுமே இனிமைதான்.


இன்று நெல் வயல்கள்

இப்படித்தான் 

இருக்குமென்று

புத்தகத்திலும், 

காணொளிகளிலும்

கண்டு தெரிந்து 

கொள்ளும்

இளைய தலைமுறை.


ஆனால் நம்மை அவர்கள் அழைக்கும் பெயர்

"பழங்கதை பேசும் பெருசு".


 முகம்மது சுலைமான்


No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...