Monday, July 14, 2025

பாட்டன்

 நான் பிறக்கும் முன்னரே 

பாட்டன்

மறைந்து விட்டதால்

அவரின் 

முதுகில் பயணம் 

செய்யக் கொடுப்பினை 

இல்லை.


ஆனால் தாத்தனுடன் 

விளையாட,

சண்டையிட 

என் இள வயதில் 

நேரம் இருந்தது.


கெண்டைக் கால் வரை 

உயர்த்திக் கட்டிய லுங்கி.

பருத்தியில் தைத்த ஜிப்பா.

தலையில் 'நீளளள' துண்டால்

சுற்றிக் கட்டிய உருமால்.


ஆறடி உயரத்துடன்

அவரின் உருவமே 

எங்களைச் சிறிது 

அச்சுறுத்தும்.


ஆனால் பலாப் பழம் 

போல் அவரின் 

வெளித் தோற்றம்தான் 

கரடுமுரடு.

உள்ளே அப்படி 

ஓர் இனிமை.


அவரை நாங்கள் அழைத்தது 

"நன்னத்தா".


வணிக நிமித்தமாக 

என் தந்தை அடிக்கடி 

வெளியூர் சென்றதால் 

நாங்கள் அனைவரும் 

தாத்தனின் 

அரவணைப்பில்.


எங்களுக்கு 

அனுமதிக்கப்பட்ட

திண்பண்ட தினப்படி

ஐந்து பைசாவைத் 

தினம் தந்தவர் 

எங்கள் தாத்தா.


தினமும் அவரிடம் 

"நன்னத்தா, 

நேற்றுக் காசு,

இன்றைக்குக் காசு,

நாளைக்குக்காசு 

என ஏமாற்றிப் 

பதினைந்து பைசா 

வாங்கி செலவு 

செய்தது.


தெரிந்தும் தெரியாதது 

போல்அவரும் 

எங்களுக்குக் 

கொடுத்து மகிழ்ந்தது.


ஐவேளைத் 

தொழுகையைத் 

தவற விடாதவர்.

அரபுத் தமிழ்@ 

நூல்களை 

எங்களுக்கு அறிமுகம் 

செய்தவர்.


சித்த மருத்துவம் தெரிந்தவர்.


அவரின் சித்தர் சூரணம் 

வயிற்று நோய்களுக்கு 

ஒரு அரு மருந்து.


சித்தர் பல்பொடி முன்

இக்கால டூத் பேஸ்ட்டுகள் 

நிற்க முடியாது.


மொத்தத்தில் அவர் எங்களுக்கு 

ஒரு நடமாடிய பல்கலைக் கழகம்.

என்றும் மறக்க முடியாத ஒரு

மாமனிதர்.


சற்றே திரும்பிப் பார்க்கிறேன்.

இன்று நானே ஒரு 

ஐந்து வயது 

பெண் குழந்தைக்கு 

பாட்டன்.


என்னால் அவளுக்கு 

நான் பெற்ற 

நினைவலைகளைத் 

தர முடியுமா?

தெரியவில்லை.


ஆனால் பாட்டன்/தாத்தனோடு 

வாழ மாதவம் செய்திருக்க

வேண்டும்.


எண்ணத்தில் இருந்த

தாத்தனின் நினைவுகளை

எழுத்தில் வடிக்கத் தூண்டிய

ஸ்ரீவி  ஐயா அவர்களுக்கு 

நன்றிகள் பல.


@ அரபுத்தமிழ்:

இன்று 'தங்லீஷ்' போல் 

அக்காலத்தில் தமிழை அரபு 

எழுத்துக்களில் எழுதிப் 

படித்து வந்தனர்.

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...