கண் திறந்திட வேண்டும்
தமிழா
பிறமொழி பேச
தமிழ்மொழி கலவாது
தமிழ்மொழி பேச
பிறமொழி கலவை
ஏனோ?
இன்று
பேசும் வரியில்
தமிழ் பாதி
பிறமொழி மீதி
நாளை
பிறமொழி முக்கால்
தமிழ்மொழி கால்
அடுத்து??
கண் திறந்திட
வேண்டும் தமிழா
தமிழை நீ
காத்திட வேண்டும்
தமிழை நீ
வளர்த்திடவும் வேண்டும்.
பெண்ணே
பேசினால் வாயாடி
பேசாவிட்டால் ஊமை
சிரித்தால் பேதை
சிரிக்கவிட்டால் முசுடு
நித்தம் உன்னை
விமர்சிப்போர் ஆயிரம்
நினைவில் கொள்
வேடிக்கை பார்பவருக்கும்
விமர்சனம் செய்வோருக்கு.
சரித்திரத்தில் ஒரு
வரி கூட கிடையாது.
சரித்திரம் படிக்க அல்ல
சரித்திரம் படைக்க
பிறந்தவள் நீ
தடைகளை உடைக்க
பிறந்தவள் நீ
கண் திறந்திட
வேண்டும் பெண்ணே
சாதனைகள்
புரிந்திட வேண்டும்
பெண் கல்வி
கற்றிடவும் வேண்டும்
மனிதா
சாலையோரம் விபத்து
பாய்ந்தோடும் குருதி
குருதியை சுடச்சுட
படம் எடுக்கும்
ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்கும்
ஒரு கூட்டம்
உதவும் கரங்கள்
எங்கே
உருகும் உள்ளங்கள்
எங்கே
நினைவில் நிறுத்து
நாளை நமக்கும்
நிகழலாம் விபத்து
கண் திறந்திட
வேண்டும் மனிதா
பிறர் துயர்
துடைத்திட வேண்டும்
பிறர் வாழ
உதவிடவும் வேண்டும்
குழந்தைகளே
உண்ணும் வரமின்றி
பசியை பரிசாக்கி
மண்ணுக்கு உரமாகி
மாண்டவர்கள் பல கோடி
பசி இன்றியும்
பசிக்கு உணவின்றியும்
அழும் பிள்ளைகள்
பாரினில் பலருண்டு
கண் திறந்திட
வேண்டும் குழந்தைகளே
உணவினை
பகிர்ந்திட வேண்டும்
விவசாயம்
போற்றிடவும் வேண்டும்
சமூகமே
ஐந்து பெரிதா
ஆறு பெரிதா...?
ஐந்து என்பேன்
நான்
மதம் பிடித்து
பிளிரும் ஐந்தறிவு
களிரினும் கொடியது
மதம் பிடித்து
பிளிரும் ஆறறிவு
மானுடம்
மதிகெட்டு
மதம்கொண்டு
காணிக்கை கேட்பது
முடி என்றால் சரி
தலை என்றால்??
கண் திறந்திட
வேண்டும் சமூகமே
மதம் மறந்திட
வேண்டும்
மனிதம் போற்றிட
வேண்டும்
நாம்
கண் திறந்திட
வேண்டும் நாம்
அகக்கண் திறந்திட
வேண்டும்
குற்றம் களைந்திட
ஊழல் அகற்றிட
ஒற்றுமை ஓங்கிட
வேற்றுமை ஒழித்திட
பண்புடன் வளர்ந்திட
உயிர்ப்புடன் வாழ்ந்திட
மதிகொண்டு முயற்சிப்போம்
விதியென்று
இங்கு ஏதுமில்லை
கொண்டுபோகவும்
இங்கு ஏதுமில்லை
கொடுத்து போனால்
நமக்கு ஈடில்லை
கண் திறந்திடுவோம் நாம்
கண் திறந்திடுவோம்
நம்மில் மாற்றம்
கண்டு பாரதியே மீண்டும்
கண்திறந்திட வேண்டும்
அ .மலர்விழி
No comments:
Post a Comment