நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
தமிழார்வலர் அனைவருக்கும் வணக்கம்
எண்ணெண் கலைகள் அருள் என் தாய் சரஸ்வதி போற்றி !
விண்ணாய், மண்ணாய் பலவாய் விரி இயற்கை போற்றி !
புண்ணியமே நிறை எம் புனித பாரதமே போற்றி !
வண்ணத் தமிழே ! உன்னால் வாழ்கிறேன் போற்றி ! போற்றி!!
____________
யாருக்குக் கிட்டும் இனிய இத் தமிழ் மேடை
எனக்கும் வாய்த்தது, என்னே! தமிழின் கொடை
பாருக்குள்ளே நமது பாரதமே சிறந்தது
பாரதி வியந்தது இன்னுமாம் ஒன்று
நேரென வேறொன்று இல்லாத தமிழ் நமது
நினைக்கும் போதே தேனும் உள்ளே ஊறுது
போரில் அன்று அறம் சொன்னான் பார்த்தசாரதி
புவியில் பல எல்லார்க்கும் வேண்டினான் நம் பாரதி
________
ஒன்றல்ல இரண்டல்ல வேண்டியவை பலவாம்
ஒவ்வொன்றும் நற்கருத்து உள்ள நல் முத்தாம்
மனதில் உறுதி வேண்டும் அதுவும் ஒன்றாம்
மண் பயனுற வேண்டும் என்பதும் உண்டாம்
சின்னக் கவிஞனாம் என் கையிலும் ஒன்று
செப்ப வேண்டும் அதைக் கவிதையில் இன்று
நினைக்கும் போதே எனக்குப் புல்லரிக்கிறது
"நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்" அது
_______
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
நேரம் எனக்கிதற்கு மூன்றே நிமிடம்
விரும்பும் பொருளெல்லாம் நெருங்கினவாம்
விண்ணை முட்டும் மனிதன் தேவைகளாம்
வருந்தாமல், நோகாமல் எல்லாம் இன்று வேண்டும்
வாரிசுகள் வழிவழியாய் வசதியாக வாழணும்
விரைந்து சொல்வேன் இன்று விரும்பும் சில பொருளாம்
வேறெந்த உயிர்க்கும் இத்தனை வேண்டாவாம்
_______
கழுத்து கொள்ளாத தங்கம் காரிகை விருப்பம்
களவு போகா நிலை கழுத்து கேட்கும் இன்னும்
கொழுப்பது உடலில் குறைக்க வேண்டுவார்
தெருக்கோடி தான் பயிற்சிக் கூடம் வண்டி ஏறுவார்
பழுத்து கனிகள் எங்கும் குலுங்க வேண்டுவார்
பாரபட்சமின்றி வெட்டி மனைகள் வரைவார்
எழுத்து ,எண் இரு கண் எல்லோர்க்கும் வேண்டுவார்
ஏழைக்கு அக் கண்கள் எட்டாத தூரம் வைப்பார்
________
இரவில் என் கனவில் நம் பாரதியும் வந்தான்
" இதுவா நீர் வேண்டிய நெருங்கிய பொருள்? "_ இது நான்
கருகருமீசைக்காரன் கண்கள் சிவந்தன உடனே
" கடவுளிடம் நான் கேட்டது எல்லார்க்கும் பொதுவே
திருநாடாம் பாரதம் நம் இன்னொரு தாயாம்
திரண்டோம் நெருங்கிய விடுதலையும் பெற்றோம்
அரண்மனை வாழ்வு அனைவர்க்கும் வேண்டவில்லை
அரைவயிறு உணவாவது அன்றாடம் தேவை
குருவியும் குடும்பத்துடன் கூட்டில் வாழ்கிறது
குழந்தையுடன் மனிதன் வீதியிலா உறங்குவது?
பருத்தி ஆடைகள் சில உடல் மறைக்கப் போதும்
பட்டாடை எல்லார்க்கும் வேண்டவில்லை நானும்
பிரித்தாயும் கல்வியோ மிகமிக முக்கியம்
பெரிய வீட்டுக்கு மட்டுமா சாத்தியம் ?
உரிமை இது ஊரார் எல்லோர்க்கும் வேண்டும்
உயரும் நம் தேசம் காண உயிரும் வேண்டும்
வருத்தும் நோய்வந்து வாட்டும் அந்நேரம்
வறுமை குறிக்கிடாது தேவை மருத்துவம்
அருந்தும் நீர், சுற்றுச்சூழல் சிறந்ததாக வேண்டும்
அத்தனை பேருக்கும் வேலை அரசின் கடமையாகும்
பருந்தாய்ப் பறந்து, திரிய ஆசை எனக்கும்
பாகுபாடிலா பயணம் பாமரனுக்கும் வேணும்
புரிந்ததா நான் வேண்டிய நெருங்கின பொருள் ?" கேட்டான்
பொழுது புலர்ந்தது, என்னுள்ளும் புரிந்தது
_______
நெருங்கிய பொருள் எனக்கு இன்னும் சிறிது நேரம்
நிற்கிறார் தம் கவிதையோடு இவர்களும் பாவம்
எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
நன்றி நன்றி
__. குத்தனூர் சேஷுதாஸ் 27/7/2025
No comments:
Post a Comment