மனதிலுறுதி வேண்டும்!
கமழும் தமிழ் மணம் நுகரும் தமிழ் மனங்களுக்கு என் மனம் கமழ்ந்த காலை வணக்கம்!
மனதிலுறுதி வேண்டும்!
மனங்களை வெல்லும் மகாகவி
பார தீ யின் ஒரு அணல் பொறி என் தலைப்பு
அவல் பொறி மெல்லும் நானும் ஒரு கவி என கொண்டு வந்தேன் ஒரு படைப்பு
மனதிலுறுதி வேண்டும்
இம்மண்ணுலகில் மாண்புற வாழ்வதற்கே!
மலரைத் தாங்கும் மலர்த்தண்டைப் போல்
மனதைத் தாங்கும் மாயத் தண்டாய்
மனதிலுறுதி வேண்டும்
உளி தாங்கும் மனிதர்கள்
உலகத்தையே வெல்லுவர்!
உறுதியற்ற மனிதர்களோ
ஏதோ காரணம் சொல்லுவர்!
உறுதி பூண்ட இம்மனிதர்கள்
உங்கள் உள்ளங்களையும் அள்ளுவர்!
* மிதிவண்டி கேட்ட மகனுக்குக்காய் உழைக்கும் உழைப்பாளி
* முதலாளியாய் உயர உழைக்கும்
தொழிலாளி
* பாராட்டுகளின்றி படைத்துக் கொண்டே இருக்கும் படைப்பாளி
*அகராதியில் விடாமுயற்சிக்கு மாற்றாய் மாறும் மாற்றுத்திறனாளி
*இனிப்பை கையில் கொடுத்தாலும் வாய்க்கு பூட்டு போடும் சர்க்கரை நோயாளி..
இவர் நோய்க்கு எதிராளி!
*குருதிக்காய் காத்திருந்து கூந்தலை முடியாமலிருந்த பாஞ்சாலி
*வங்காளியாய் பிறந்த சுபாஷ் சந்திர போஸ் எனும் சுதந்திரப் போராளி
அடக்கியோரை அலற விட்டதால் பாரதிக்கு இவர் பங்காளி!
வைரம் பாய்ந்த இம்மனங்கள் எழுப்புவது
வைராக்கியம் எனும் ஓயாத ஓலி!
நோக்கம் எதுவாயினும்
குரங்கு மனதைக் கட்டிப்போட்டு
குறிக்கோள் கனியை எட்டிப் பிடிக்க
மனதிலுறுதி வேண்டும்
எனினும்...
பிடிக்க வேண்டியதை விரட்டிப் பிடிக்க
பிடிக்கக் கூடாததை விரட்டி அடிக்க
அறம் சார்ந்த அறிவும் வேண்டும்
அடங்காத மனமோ நம்மையே ஆளும்
மனக்குதிரைக்கு இட வேண்டும் கடிவாளம்
அலைபாய்வது மனதின் உரிமை
அடக்கி ஆள்வது அவையோரின் திறமை!
அடக்கி ஆண்டால் போதுமா?
அடக்க வரின் அடங்க மறுப்பதும் உறுதியன்றோ!
துன்பங்களைத் தூக்கியெறியும் துணிச்சல்
தோல்விகளும் தோற்றுப் போகும் மனத் திடம்
அசராமல் அடுத்த அடி எடுத்து வைக்கும் மனவலிமை
உடைக்க முடியா நெஞ்சுரத்திற்கு உரங்களாய்
இவையெல்லாமும் வேண்டுமன்றோ!
ஓ பாரதியின் பராசக்தி!
தடுமாறும் வேளை ஊன்றுகோலாய்
தடம் மாறும் வேளை தடி கோலாய்
தடைகளைத் தாண்டிட தாண்டுகோலாய்
சவால்களை சாதனைகளாக்கும் மந்திரக்கோலாய்
தன்னுயிரை தானே கொல்லும் மடமை பூட்டும் திறவுகோலாய்
கனவுகளை தூங்கவிடா தூண்டுகோலாய்
திமிங்கலத்துக்கு தூண்டிலிடும் தூண்டில்கோலாய்
வெற்றி சரித்திரம் எழுதும் எழுதுகோலாய்
மொத்தத்தில் மனதை நல்லாட்சி செய்யும் உன் செங்கோலாய் மனதிலுறுதி வேண்டும்!
அற்ப விடயங்கள் முதல் அற்புத விடயங்கள் வரை
முற்றுப்புள்ளியிலிருந்து முதற்புள்ளிக்குப் பின் தள்ளப்பட்டாலும்
மீண்டு மீண்டும் வலைபின்னும் சிலந்தி போல
பூஜ்ஜியத்தில் தொடங்கி இராஜ்ஜியம் உருவாக்க மனதில் உறுதி கொடு!
அளந்து அளந்து படியளக்காமல்
அளவுகோல் தொலைத்து
அணு அளவும் நொறுங்காத நெஞ்சுறுதி
அறுதியின்றி மிகுதியாய்
கிலோ கணக்கில் நீ தர வேண்டும்
என அனைவருக்குமாய் வேண்டி
தமிழ் வாழ்க !
மகாகவி பாரதி தமிழ்ச்சங்கம் வெல்க!
என்று வாழ்த்தி வாய்ப்புக்கு நன்றி
பாராட்டி அமர்கிறேன். நன்றி!
* சாய்கழல் சங்கீதா
No comments:
Post a Comment