Saturday, July 26, 2025

வாக்கினிலே இனிமை வேண்டும் (ஆண்டு விழா கவியரங்கம்)

 வாக்கினிலே இனிமை வேண்டும்

இ ச மோகன்


எத்திசையும் புகழ் மணக்கும் தமிழ்த்தாயின் சீரிளமைத்திறம் கண்டு அடி பணிந்தேன். 


இங்கு வருகை்தந்து எம்மைப்பெருமைப்படுத்தும் சிறப்பு விருந்தினருக்கும், அவையோருக்கும் என்தலை தாழ்ந்த வணக்கங்கள்.



சிறியேன் என்னையும் நாவில் தமிழ்த் தேனைத் தடவி அரங்கேற்றினாள் தமிழன்னை

தலைப்போ வாக்கினிலே இனிமை வேண்டும்!


வாக்கு என்பது மக்களுக்கு மட்டுமே , இறைவன் அளித்த வரம், மாக்களுக்கு அல்ல.

அதிலும் இனிமை கலந்தால் , அது வரம்மட்டும்அல்ல , வரப்பிரசாதம்.


இனிமையோடு கலந்த வாக்கு , பொன்மலர் வாசம் பெற்றது போலன்றோ!


மனத்தினிலேயும் வாக்கிலேயும்இனிமை உண்டாயின் மெய்யும்

நேர்வழி செல்லும், இலட்சியப்பாதையில் எதிர்படும்தடைகளத் தகர்த்து எறிந்து.


வாக்கின் அன்னை நாக்கு

வன்சொல்தவிர்த்து இனிய 

வாக்கு  நா கூற தவறுவோர்,

சோகாத்து சோர்வடைவர், சொல்லிழுக்கும் பட்டு.


வன்சொல் சுடும்; வடு ஆறாது.

இன்சொல்லோ,தொடும் உள்ளத்தை.


 காக்க காக்க நா காக்க

இல்லை எனின்

ஆறடி மனிதனை ஆறு அங்குல நா கீழே தள்ளும்.


நா என்ன துடைப்பமா மற்றவர்

குறைகளைப் பெருக்கித் தள்ள ?


வாக்கினிலேஇனிமை கொண்டால் , கேட்பவர்க்கு மயிற்பீலியால் வருடிய உணர்வுண்டாகாதா!


 உழைத்துக்களைத்த கணவருக்கு வாக்கினிலே ,  இனிமையுடன் இல்லக்கிழத்தி குளம்பி அளித்தால், தினமுமே காதலர் தினம்தானே!


போக்குவரத்து நெரிசலில்

வாக்கினிலே இனிமையுடன்

கேட்டால்  காவலர் சீட்டி அடித்து வழி விடுவாரே.


நீட் தேர்வில் தோல்வியுற்ற பிள்ளையை வாக்கினிலே இனிமை கொண்டு அரவணைத்தால்

தோல்வியே வெற்றிக்கு முதல்படி

என்றுணர்வார் வருங்கால மருத்துவர்!


கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் எதற்கு?


தண்டங்கள்!


 வாக்கினிலே இனிமை கொண்டு அமர்ந்து பேசினால், போர் மேகங்கள் விலகி கார்மேகங்களாக அமைதி மழை பொழியாதா!


உடலில் சர்க்கரை சேர்ப்பதை விட்டு வாக்கினிலே இனிமை கொண்டால் , உடலும் உள்ளமும்

நலம்பெறும்; உற்றமும் சுற்றமும்

கூடி இருந்து மகிழும்.


நாக்குக்கு நரம்பில்லை என்பர் ஆனால் வரம்பு வேண்டும்.

நாலும் பேசும், நாற்பதும் பேசும் நாக்கு இனிய மொழியே பேசினால் கேட்பவர் காதுகளில் இன்பத்தேன் பாயாதா!


மனதில் உறுதியும், நினைவில் நல்லதும் கொண்டு, வாக்கினிலே இனிமையும் அமைந்தால், நெருங்கின பொருள் கைப்படாதோ!- நிச்சயமாக,

என் மொழியல்ல, 

பாரதியின் பொன்மொழி!


- மோகன்

No comments:

Post a Comment

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் காணொளி

காணொளி

மகாகவி பாரதி தமிழ்ச்சங்கத்தின் youtube channel  சுட்டி :   youtube channel - பூர்வா பாரதி தமிழ்ச் சங்கம் காணொளிகளின் சுட்டி : மார்ச் 1, 2025...