கொசுறு கேட்கும் முன்....
வசதிகள் பல உள்ளதாம் பெரிய அங்காடி
வண்ண விளக்குகள், எங்கும் கண்ணாடி
தசை நோகும் கால்களில் பொருள் வாங்குவோம்
தவறாமல் விலை கேட்கும் ஒவ்வொரு கிராமும்
அடுத்து .....
பசியின் வாயடைக்க பாதையில் கடை விரிப்பார்
பச்சைக் காய்கறிகள், கிழங்குகள் விற்பார்
அசந்து ஒரு குழந்தை அங்கேயே உறங்கும்
அதன் பற்கள் அரை ப்ரட்டில் (bread) பதிந்திருக்கும்
விசும்புக் குடையே வெய்யிலும், மழையிலும்
விற்றால் தான் வீட்டில் வேகுமாம் சோறும்
மசியல் செய்ய சேனைக்கிழங்கு அங்கு வாங்குவோம்
மறக்காமல் விலை குறைத்து, கொசுறும் கேட்போம்
உசுரு முடியும் காலம் ஓலையும் வரும்
உயிர் சுமந்த உடலை உதறும் நேரம்
கொசுறு கேட்டு வாழ்நாளைக் கூட்ட முடியுமா ?
கொஞ்சம் சிந்தித்தால் கொசுறும் கேட்போமா ?
__. குத்தனூர் சேஷுதாஸ் 31/7/2025
-------------------------
*கொசுறு*
இது ஏதோ இலவசம் இல்லை.. .
இரந்து பெரும் யாசகம் இல்லை. . .
கடைக்கார அண்ணாச்சிக்கும்..
வாங்க வரும் சிறுவர்களுக்கும்
இடையிலான ஒரு அன்பின் வெளிப்பாடு...
அக்கால கடைக்காரர்களுக்கு
வாடிக்கையாளர்களுடன் இருந்த நல்லெண்ண அடிப்படையிலான உறவின் வெளிப்பாடு..
மாதாமாதம் வாங்கும் பல சரக்கில்
பட்டியலில் இல்லாத கல்கண்டு நிச்சயம் இருக்கும்..
கடைக்கு சாமான் வாங்க போனால் கை நிறைய பொட்டுக்கடலை நிச்சயம் கிடைக்கும்..
வாடிக்கையாளர் குழந்தையோடு வந்தால் ..
குழந்தை தின்ன தேன் மிட்டாய் கேட்காமலே கிடைக்கும்...
கொசுறு..
நல்லெண்ண உறவின் சின்னம்..
வணிக நோக்கில்லா அன்பின் அடையாளம்..
இதையெல்லாம் மீறி லாபமே குறிக்கோள் என பல சரக்கு கடை அண்ணாச்சி இருந்ததாக நினைவில்லை.
சாலையில் போகும் பள்ளி சிறுவன் கீழே விழுந்து அழுதால் அவனை கூப்பிட்டு மிட்டாய் தந்த செட்டியார் எங்கே...
குழந்தை விரும்பி கேட்டு பெற்றோர் வாங்கி தரா நிலையில், சாக்லேட் எடுத்து கையில் கொடுத்த நாட்டார் அண்ணாச்சி எங்கே
முகம் கொடுத்து பேசாத ...
புன்முறுவல் கூட பூக்காத...
இக்கால அங்காடி நிறுவனங்கள் எங்கே?
இதனை எல்லாம் இக்கால அங்காடியில் எதிர்பார்க்க முடியுமா?
பளபளக்கும் கண்ணாடிகள்..
மினுமினுக்கும் அலங்காரங்கள்..
மினுக்கி நிற்கும் மாலில் (mall)
அன்பும் கிடையாது..
புன் முறுவலும் கிடையாது.. அரவணைப்பும் கிடையாது.. நல்லெண்ணமும் கிடையாது..
ஆதலால் உலகத்தீரே கொசுறுவை இழிவாக நினைக்காதீர்..
-ஸ்ரீவி
***********************
அண்டங்காக்கைகள் தந்த கொசுறு!
சிறு வயது விளையாட்டு!
இரண்டு அண்டங்காக்கைகளைக்
கண்டால் இன்பம்..
ஒன்று குறைந்தால் துன்பம்..
நம்மைக் கண்ட அண்டங் காக்கைகளுக்கு
இன்பமா? துன்பமா?
யாரறிவார்???
பார்த்துவிட்டால்
தலைமுடி தொட்டுக்கொண்டே ஓடித் தொட்டு அடுத்தவருக்கு துன்பத்தைக் கடத்திவிட்டால்
துன்பம் நம்மைத் தொடுவதில்லை..
இன்பத்தைப் பரிசளிக்க
ஏனோ அந்த விளையாட்டுக்கு விருப்பமில்லை..
ஒரு நன்னாள் ...
இரு அண்டங்காக்கைகள்....
கண்டுவிட்டேன்.. கண்டுவிட்டேன்..
"இன்பத்திற்கு இரண்டு"
(*Two for joy, one for sorrow)
ஒன்றுக்கு இரண்டுமுறை சொல்லிவிட்டேன்.
அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம்!
அம்மா பூக்காரரிடம்
பூ வாங்கச் சொன்னாள்..
கிடைத்தது கொசுறாய்
ஒரு ஒற்றை ரோஜா!
பூக்காரரிடம்
இரு அண்டங் காக்கைகள் என்னிடம் சேர்க்கச் சொன்ன
ஒற்றை ரோஜா!
அண்டங்காக்கா கொண்டைக்காரியாய்
கூந்தலை அள்ளி முடித்திருந்த அம்மாவுக்குக் கொடுத்தேனா?
என் "ஜிட்டு"கள்
ஒன்றுக்குள் யாருக்கும் தெரியாமல் செருகி மறைத்தேனா?
நினைவில் இல்லை..
- சாய்கழல் சங்கீதா
*ஜிட்டு- சிறுமிகளுக்கான சிகை அலங்காரம்...
தலையின் இரு பக்கமும்..
****************
இளம் அம்மாவுக்கு கொசுறு..
மதிய உணவுடன்
அவள் பிள்ளை
மிச்சம் வைத்த
நெய்ச் சோறு!
- சாய்கழல் சங்கீதா
***********
-
No comments:
Post a Comment